Search This Blog

Sunday 16 February 2020

பிணத்தில் தொற்றியிருப்பது மநூ ஸ்மிருதியா? அல்லது குலவெறியா ?


                                        பிணத்தில் தொற்றியிருப்பது மநூ ஸ்மிருதியா?  அல்லது குலவெறியா ?
                                                     ஈ.வெ. இரா. பெரியார் தோகிறாரா? இலெனின் எழுவாரா ?

                  வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள நாராயணபுரத்தை சேர்ந்த பட்டியல் குழுவை சேர்ந்தவர் பிணத்தை ஆதிக்க குடிகள் தெரு அல்லது பொதுப்பாதை ? வழியாக செல்ல தடை // இதே பிரச்சனையை முன்வைத்து 'குடிதாங்கி' என பட்டம் பெற்றார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் மருத்துவர் திரு. இராமதாசு. இது போன்ற பிரச்சனைகள் நேற்று இன்றல்ல பல்நெடு ஆண்டுகளாக நடந்து வந்துள்ளது. இந்த நிகழ்வினை வைத்து மூத்த எழுத்தாளர்கள் / பட்டியல் (தலித்) எழுத்தாளர்கள் / பொதுவுடமை எழுத்தாளர்கள் பலரும் 'இங்கதான் பெரியார் தோற்கிறார் / தோற்றார்' என எழுதினார்கள்.
                                    பிணத்தில் தொற்றியிருப்பது சாதியா ? அல்லது மநூஸ்மிருதியா?
                    தேனி மாவட்டம்  பெரியகுளம் வட்டச்சியர் (தாலுகா) எல்லையில் உள்ள தேவதானப்பட்டி. இங்குள்ள மூங்கிலாறு காமாட்சியம்மன் கோவில் 16ம் நூற்றாண்டில் நாயக்க அரசர்கள் காலத்தில் மநு தர்மத்தை கட்டிக்காக்கும் இடமாக இருந்துள்ளது. இந்தத் தேவதானப்பட்டியில் குடும்பமார் என்று மக்களால் அறியப்படும் பள்ளர் குலத்தினர் (சாதி) பிணத்தை வள்ளுவர் என மக்களால் அழைக்கப்படும் பறையர் குலத்தெருவில் தூக்கிச்செல்லக்கூடாது என எழுந்த பிரச்சனை, கலவரம் தீவைப்பு நடந்தது. இந்தப்பிரச்சனை 18ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட மன்னர் சொக்கநாதநாயக்கர்  முன் பேசப்பட்டு இரு சமூகமும் இராசியாக போகவேண்டும் என்றும் வள்ளுவர் தெருவில் பிணம் போகலாம் என செம்புபட்டையம் தீட்டி வழங்கப்பட்டுள்ளது (பார்க்க ; மதுரை நாயக்கர் செப்பேடுகள் தொகுதி)
இதே காலகட்டத்தை ஒட்டியே இராமநாதபுரம் அரச எல்லையான சிராவயல் மற்றும் கண்டரமாணிக்கம் பகுதியில் இடையர் குலத்தினர் மறவர் தெருவில் பிணம் தூக்கிச்செல்லக்கூடாது என்ற பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்ட செப்பேடுகள் வெளியிட்டப்பட்டுள்ளன (பார்க்க; சேதுபதிகள் செப்பேடு தொகுதி) .இது போன்று பல நிகழ்வுகள் வழக்காறுகளாக இன்றும் உள்ளதை மானுடவியல் அறிந்தவர்கள் தெரிந்த செய்தியே.
சொந்த குலத்தினர் பிணம் செல்லும் பாதையில் அடுத்த குலத்தினர் பிணம் போவதில் என்ன பிரச்சனை உள்ளது. இதை பொத்தாம் பொதுவாகப்பார்த்தால் நமக்கு குல ஆதிக்கம் மட்டுமே மேலோங்கி தெரிகிறது. ஆனால் அதற்குள் மநு ஸ்மிருதி அல்லது கிராம தெய்வ நம்பிக்கைகள் வெளிவராமல் புதைந்து முடநாற்றமெடுப்பதை நுகரமுடியும்.
கிராமங்களில் மட்டுமல்ல படித்தவர்கள் வாழ்வதாகவும் நாகரீக மனிதர்கள் வாழும் இடம் என அறியப்படும் நகரத்திலும், குழந்தை பிறந்த வீட்டில் வருடம் திரும்பாமல் அல்லது முப்பது செல்லாமல் கை நனைக்க (சாப்பிட) தண்ணீர் குடிக்க மாட்டார்கள். அதே போல் சடங்கு என்று கிராமத்தில் அழைக்கப்படும் பூப்பெய்த பெண்கள் வீடுகளில் முப்பது செல்லாமல் தண்ணீர் குடிக்கவோ, சாப்பிடவோ மாட்டார்கள். இதையெல்லாம் தாண்டி இறந்தவர்கள் வீட்டில் கை நனைக்க மாட்டார்கள். இதைவிட கொடுமை கிராமத்து பூசாரிகள் சாமியாடிகள் ஊரில் யார் இறந்தாலும் இழவுக்கு போகமாட்டார். பிணம் தூக்கி வரும் போது அவர் கண்ணில் படக்கூடாது என்பதற்காக அவருக்கு இத்தனை மணிக்கு தூக்குகிறோம் என்ற தவவல் கொடுப்பார்கள். இது குறிப்பிட்ட குலத்தினருக்கும் மட்டும் உள்ள பழக்க வழக்கம் இல்லை அனைத்து குலங்களுக்கும் பொதுவானவை. இவையெல்லாம் எதற்காக? என்ற கேள்வி எழுகிறது.
'பிணத்தைத் தொடுவதில் துவங்குகிறது மருத்துவத்தின் வளர்ச்சி, பிணத்தின் முகத்தில் விழிக்கக்கூடாது என்பதில் துவங்குகிறது அறிவியலில் வீழ்ச்சி'' என பொதுவுடமை கருத்தியலின் முன்னோடி ஆய்வாளர் இந்திய சமூகங்களின் கூறுகளை ஆய்வெடுத்த தேவி பிரசாத் சட்டோபாத்யாயா 60 ஆண்டுகளுக்கு முன்பே எழுதியுள்ளது அவரது காலத்திற்குறியதல்ல. ஆண்டாண்டுகாலமாக விஞ்ஞானத்திற்கு எதிராக உள்ள கற்பானாவாதிகள் தங்களது பரப்புரையை மக்களின் உயிரில் அவர்களது உடமையில் வைத்து நம்பிக்கையை ஊட்டி வளர்த்து வந்துள்ளார்கள். அதன் வெளிப்பாடுதான்  'சாவு வீட்டில் நான் சாப்பிட மாட்டேன், சடங்கு வீட்டில் சாப்பிட்டால் தலைவலி விடாது' என்பது.
சாவு வீட்டில் பார்ப்பனரை அழைத்து பூசை செய்தால் கெட்ட ஆவிகள் போய்விடும் என்பதும் இறந்தவர்கள் ஆவி எந்த தொல்லையும் கொடுக்காது என்பதை நமக்குப் புகட்டி கட்டிக்காக்கப்படுகிறது.  இதை உடைத்தவர்களின் கணிசமான பங்கை வைத்தவன் தானே ஈ.வெ.இரா என்று அழைக்கப்படும் தந்தை பெரியார். இப்படியான் மூட முட நம்பிக்கையை உடைக்க நாம் என்ன பாடுபட்டோம் என்பதை விட இந்த நம்பிக்கையைக் கட்டிக்காக்கும் கூட்டத்திற்கு துணையாக பங்காற்றியவர்கள் யார்யாரெல்லாம் என்பதை அறிந்து அப்புறப்படுத்த வேண்டிய கடமையை நாம் தவறிவிட்டோம் என்பதை நாமே மறந்து பெரியார் அங்கே தோற்றார் இங்கே கவுந்தார் எழுதுவது என்ன மாதிரியான ஆய்வுகள்.
இறந்தவர்கள் உடலில் ஆவி தங்கி இருக்கும். அந்த ஆவி நல்ல ஆவியாக இருக்கவே இருக்காது என்பதால் செத்தவனை தூக்கிச்செல்லும் போது கடுகு, பொரி போன்றவற்றை சுடுகாடு அல்லது புதைகுழி வரை விதைத்து செல்லும் பழக்கம் உள்ளது. அந்த ஆவி இரவில் திரும்ப வருமாம். அப்படி வரும் போது அதிக கடுகு பொரி இருந்தால் பொறுக்கிக்கொண்டே வரும் போது விடிந்து விடுமாம். விடிந்து விட்டால் அந்த ஆவி தான் வாழ்ந்த வீட்டுக்கு வராதாம். இதனால் அதிக கடுகு போடுவது இன்னும் வழக்கமாக உள்ளது.
ஆவி நம்பிக்கை எந்த குலத்திற்கு தனி சொத்து அல்ல. பிணத்தை தூக்கிச்செல்வதால் ஆவி அந்த தெருவில் துர் மறணத்தை தரும் என்ற நம்பிக்கையில் விளைவாகவே முதலில் தடுக்கப்படுகிறது. அடுத்து குல ஆதிக்கம். 'பறையர், பள்ளர், மாதாரி குலத்தினரோ தங்களை விட கீழாவர்கள் என்பதால் அவர்கள் பிணம் நமது தெருவில் வரக்கூடாது' என்ற ஆதிக்கம் மேலோங்கும். இதில் கவனிக்கப்பட வேண்டியது ஆதிக்கம் என்பதை விட பயத்தின் வெளிப்பாடாக தற்காத்துக்கொள்ள எழுதுவது என்பதையும் கவனிக்க மறந்து விடவேண்டாம்.
மாதாரி (சக்கிலியர்) குலத்தினர் தெருவில் பள்ளர் குல பிணம் போனதை தடுத்த பதிவுகள் உள்ளன. வன்னியர் குல பிணம் ரெட்டியார் தெருவில் போனதை தடுக்கத்த பதிவுகள், மறவர் குல பிணம் நாயக்கர் தெருவில் போனதை தடுத்த பதிவுகள் உள்ளன. இதில் இருபிற்படுத்தப்பட்டோர்களுக்குள் என்பதால் அந்தப்பதிவுகள் புறந்தள்ளப்படுகிறது அல்லது பார்க்க மறுக்கப்படுகிறது. ஆனால் சாவு பிணம் என்பது ஆவி பயத்தால் என்பதை மட்டுமே தடுக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளுக்குள் உள்ளது அது குல ஆதிக்கமாக பண ஆதிக்கமாக அரசியல் ஆதிக்கமாக வெளிப்படுகிறது.
                  பொதுவாக மனிதன் சரசரியாக 60 முதல் 70 வயது வாழ்ந்தால் போதுமென நினைக்கிறான். ஆனால் அதற்குள் நோயின் தாக்கம் அதிகரிக்காது வாழ்ந்தாலே போதுமானது என்பது எல்லோரும் பொதுவாக ஏற்றுக்க்கொண்ட நியதியாக கேட்க முடிகிறது. ஆனால் சாவு என்ற பயத்தை நாம் சுமந்து தலைமறை முறையாக நிற்பது எது?, நம்மிடம் கற்பிக்கப்பட்ட பிணம், ஆவி, பேய், பிசாசு என்ற மநுஸ்மிருதிகளும், கிராமக் கதைகளும், கிராம தேவதைகளின் பூசாரிகளும் அவர்கள் ஊட்டிய நம்பிக்கைகளும். இதை பொட்டியில் கட்டி காவல் காக்கும் தலைமை பீடங்கள் எது என்பதை புரிந்து கொண்டால் பெரியாரும், சிங்காரவேலரும், பூலேவும், அம்பேத்காரும் தோற்கவில்லை எனப்புரியும்.
                                                                                 சிலை
                   கடவுள் அதன் நம்பிக்கைகள் என்பது குறியீடாக விளங்குபவை சிலைகள். இந்தச் சிலைகளுக்கு வலிமையையும் அதனுள் கருஉருக்கொள்ளுதலை உருவாக்கிட, பொதுவெளியில் பூசை செய்திடும் உரிமையை பொதுஆண்டுக்கு பின் (கி.பி) 2 அல்லது மூன்றாம் நூற்றாண்டிலே ப்பிராமணர்கள் பெற்றதற்கான சான்றுகள் உள்ளது (கவனிக்க; பேராசியரிகள் டி.டி.கோசாம்பி கே.எல்.பாஸ்யம் மற்றும் ரொமிலா தர்பார் ஆகியோரின் இந்திய வரலாறு) . இப்படியாக ஒருபக்கம் சிலைகளுக்கு உயிர் கொடுக்கும் விதமே இன்று குடமுழுக்காக கோயில்களில் அன்றாட நடக்கும் எட்டு ஆறு மற்றும் ஒரு கால பூசையாக, கிராமங்களில் ஆண்டுக்கு ஒரு முறைமுறையும் அல்லது அவ்வப்போது நடக்கும் காவு பூசை அல்லது கொடை விழாக்கள் என்பதை கவனத்தில் கொள்க.
                  இதன் தாக்கமே கொள்கைக்காக போராடி மாண்ட & இறந்த தலைவர்கள் உருவங்களை சிலையாக வைத்து அவர்கள் கொள்கைகளை கடைபிடிக்க நாம் கூடி பரப்புத்து சுளுரை ஏற்கிறோம். அந்தச்சிலைகள் கோவில்களில் இருக்கும் சிலைகளைப்போல் வரலாற்றை சுமந்து இருப்பவை என்பது யாவரும் அறிந்ததே.
                 ஐரோப்பிய கண்டத்திலும் மத்திய ஆசிய நாடுகளில் புரட்சியாளன் இலெனின் சிலைகள் நிறுவப்பட்டது. அவைகள் கடந்த சில ஆண்டுகளாக தகர்க்கப்பட்டு வருவது கொள்கைகளை நாம் மக்களிடம் கொண்டு சென்று அவர்களை திணித்து விட்டோமோ ? என்ற பார்வையிருந்தாலும், தனியார்மயத்தன்மையை கட்டிக்காக்கும் உலக முதலாளிகளின் கூட்டமைப்பாக விளங்கும் தனியார் வங்கியான உலக வங்கி, நமது ஊர் காளி சிலையின் கரங்களைப்போல் பல நூறாயிரமாக உலக முழுவதும் பரப்பி சுழன்று சுற்றி வருகிறது.
                  உலத்தில் பல மொழி இனங்கள் இருந்தாலும் முதலாளித்துவ தத்துவத்தின்படி அனைவருக்கும் ஒரே மாதிரியான பொருள்களை மட்டுமே உற்பத்தி செய்வார்கள். இதில் அந்தந்த நாட்டு மக்கள் படிக்கும் அல்லது புரிந்து கொள்வதற்கு ஏதுவாக  'லேபிள்' மட்டுமே மாறியிருக்கும். இதுவும் அவர்களுக்கு சிரமம் என்பதால் ஆளும் அரசுகள் ஒற்றை மொழியைத் திணிப்பார்கள். அதன் தாக்கமே இந்தி இந்தியா என்பதும் மேலை ஐரோப்பிய நாடுகளில் இது போன்ற ஒற்றை மொழிக்கொள்கைகள் உள்ளன என்பதை கவனத்தில் நாம் கொள்ள வேண்டும்.
                   வரலாற்று தலைவர்கள் சிலை சிதைப்பு / நாகரீக குறைப்பாடாக நடப்பது என்பதை ஒரு குலத்தின் கோபம் என்று மட்டும் பார்ப்பதில் நமது கவனச்சிதைவு துவங்குறது. நமது கவனம் இப்படியாக சிதைய வேண்டும் என்பதற்காகவே ஆளும் அரசுகள் இப்படியான வேலைகளுக்கு ஆள்களை வைத்து நடத்தும்.
         எளிய எடுத்துக்காட்டாக சொன்னால் தங்களுக்கு தாங்களே வெடி வைத்துக்கொள்வதும் அதை காவல் துறை பிடித்து அடையாளப்படுத்தியும் அதே நிலை தொடர்வதுமே. இதனை பாரதீய ஜனதா கட்சிக்கானதாக மட்டும் பார்க்க இயலவில்லை. அனைத்து குல அமைப்புக்குள்ளும் அரசியல் கட்சியினர் கூலிப்படை வைத்திருப்பதைப் போல் குல அமைப்புகளும் வைத்துள்ளது என்பதை விட அவர்கள் அப்படி வைத்து செயல்பட வேண்டும் என்பதே உலக முதலாளிகளின் கூட்டமைப்பான உலக வங்கியின் கட்டளை. இதை இந்தியாவில் இயங்கும் மய்ய உளவுப்பிரிவு அலுவர்கள் ஒசையில்லாமல் செய்து வருகிறார்கள். இவர்கள் இப்படி செய்வதன் இலக்கு என்ன ? கூர்ந்து கேட்கப்படவேண்டிய கேள்வி.
                 ஐரோப்பியாவின் பல பகுதிகளை ரோமன் கத்தோலிக்க திருச்சபையான வாடிகன் நகரம் ஆண்டது. அதே போல் புராட்டாஸ்டண்ட் தலைமை ஐரோப்பிய நாட்டில் தோன்றினாலும் அதன் தலைமைக்காவலனாக இங்கிலாந்து இருந்தது. இந்த புராட்டாஸ்டண்ட் மற்றும் ஜெசூட் சபை பாதிரிகளின் வழிகாட்டுதலிலே வரத்தகம் செயல்பட்டது. அதுதான் கிழக்கு இந்தியன் கம்பெனி மேற்கு இந்தியன் கம்பெனி ஆக மொத்தத்தில் அது  கம்பெனி . இந்த கம்பெனி இந்தியா முழுக்க ஆட்சியை தக்கவைத்த பின் அதற்கு பெயர் பிரிட்டீஷ் அரசு என பெயர் மாற்றியது. இந்த பிரிட்டீஷாருக்கு உலகமே அடங்கிய போது இந்தியாவில் மட்டுமே முதல் எதிர்ப்புக்குரல் துவங்கியது. இதை கணகட்சிதாக பிடித்து வைத்திருக்கிறது இந்திய உளவுப்பிரிவு.
                 இந்திய முதலாளிகளுக்கு எந்த பங்கமும் வந்துவிடக்கூடாது மக்கள் கூட்டமாக சேர்ந்தால் விவாதிப்பார்கள். இதனால் இந்தியா நிலப்பரப்பில் விரிந்து ஆழப்பரவியுள்ள குல அமைப்புகளை (சாதி) வாக்கு அரசியல் பாதைக்கு இழுத்து வருவார்கள். இவர்களின் நியாயமான வாதம் பிற்படுத்தப்பட்டோர் மட்டுமே அரசியல் அதிகாரத்தில் உள்ளார்கள். ஏற்கனவே பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார கூட்டமைப்பு போல் பட்டியல் குலத்தினரின் பொருளாதாரத்தை மேம்படுத்த எங்களுக்குள் ஒற்றுமை வேண்டும் என்பதே. இதை இவர்கள் தனித்த கூட்டமைப்பால் பெறமுடியுமா என்பது ஆய்வுக்குறியது? . இதனால் இந்த குழுவினரை எளிதாக பிரிக்க முடியும். இப்படிப்பிரிப்பதால் பொதுவுடமை சிந்தாந்தம் என்பது பின்னால் தள்ளப்படும்.
               எளிய எடுத்துக்காட்டாக சொன்னால் 'பொதுவுடமை கட்சிக்குள் பட்டியல் குலத்தினருக்கு உரிய பங்காக பதவிகள் கொடுக்கப்படவில்லை' என பொதுவெளியிலிருந்து பேசி பொதுவுடமை சித்தாந்தத்தையே கேலி பேசுவார்கள். இதன் மூலம் அவர்கள் ஒன்றிணைந்து சாதனை படைக்கிறார்களோ இல்லையோ பொதுவுடமை என்ற கோட்பாடு கேலிகேளிக்கைக்கு உள்ளாகும். இது போலவே திராவிடம் என்பது கோட்பாடானதா இல்லையா? என்பது தனி விவாதம். ஆனால் அதைக் கேலிகேளிக்கை செய்வதன் மூலம் முதலாளித்துவ சிந்தனைக்கு தூபம் போடும் பணியை இவர்கள் செய்து முடித்து வருகிறார்கள் அல்லது அந்த முதலாளிகள் இட்ட கட்டளையை இவர்கள் செய்து முடிக்க முயல்கிறார்கள் என்றே பொருள் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது.
                இப்படி குல குழுக்கள் ஒருங்கிணைப்பும் அல்லது குலத்தலைவர்களின் செல்வாக்கு குறையும் போது தலைவர்கள் சிலைகள் சிதைக்கப்படும். அந்த சிலைகள் குலத்தலைவர்களாக பார்க்கப்படுவார்கள் என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. இதை வைத்துப்பார்க்கும் போது இனி திரு. அம்பேத்கார், திரு. முத்துராமலிங்கத்தேவர், இமானுவேல் குடும்பனார் போன்றவர்களின் சிலைகள் உடைவதை பார்த்துதான் ஆகவேண்டும்.
 

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...