Search This Blog

Saturday 30 November 2019

நூலதிகாரம் நூல்; உலராக்கண்ணீர்


                                                                           நூலதிகாரம்


நூல்; உலராக்கண்ணீர்

ஆசிரியர்; ஜனகப்பியா

பதிப்பகம் ; புலம்

விலை;100

வணக்கம் நண்பர்களே தோழர்களே,

வட இந்தியாவில் உள்ள பழங்குடி மக்கள் மீது பிரிட்டீஷ் இந்தியா முதல் இன்றைய காலம் வரை, பழங்குடியினர் தீவிர பொதுவுடமை ஆதரவாளர்கள் என்று எளிதாக சொல்லி நம் மக்கள் மீது நமது இராணுவம் தொடுக்கும் போரும் அதன் எதிர்வினையாக அம்மக்கள் கையாளும் விதத்தை ''வணக்கம் பஸ்தார், இந்தியாவில் இயங்கும் தீவிரவாத இயங்கங்கள், காலனி ஆட்சியில் வேளாண்குடிகளின் எழுச்சி, போன்ற நூல்கள் அறிமுகப்படித்திருந்தாலும் இன்றைய நிலை குறித்த தகவல்களை எளிய நடையில் எழுதப்பட்ட நூல் 'உலராக்கண்ணீர்'

பழங்குடி மக்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கு தான் வளமான மண்ணும், தாது பொருள்களும் பூமிக்குள் இருக்கும் என்பதை பிரிட்டீஷ்காரன் கண்டு கொண்டு, பூமிக்கு அடியில் இருக்கும் பொருள்கள் அனைத்தும் அரசுக்கு சொந்தம் என்ற பிரிடீஷ் இராணியார் கொண்டு வந்த சட்டத்தை இன்றும் நடைமுறைப்படுத்தி அம்மக்களை வெளியேற்றி அங்கு சுரங்கம் அமைத்து, உலகத்தேவைக்கான கனிம வள கேந்திரமாக இந்தியாவை சுரண்டினான். அதன் தொடர்ச்சியாக இந்திய அரசு அதிபயங்கர வேகத்தில் சுரண்டுகிறது என்பதை ஆதரத்துடன் விளக்குகிறார் நூலாசிரியர். 

பழங்குடிமக்கள் ஏன் ஆயுதபாணிகளாக மாறுகிறார்கள். அவர்கள் ஏன் தீவிர பொதுவுடமை அமைப்பினருக்கு ஆதரவளிக்கிறார்கள். அல்லது அச்சூழல் ஏன் ஏற்படுகிறது என்பதை தெளிவு படுத்தியுள்ள ஆசிரியர், மக்களின் எழுச்சிகர போராட்டங்களை தீவிர பொதுவுடமை அமைப்புகள் தங்களது துப்பாக்கிக்கு கிடைத்த வெற்றியாக கொண்டுகிறது என்ற குற்றச்சாட்டையும் வைக்கிறார். 

வேந்தாந்தா,ஸிண்டால்,மிட்டல் போன்ற நிறுவனங்களுக்கு, பழங்குடியினர் வாழும் பல்லாயிரக்கணக்கான ஹெக்டர் நிலங்களை தானமாக வழங்கி அம்மக்களை அடிமைகளாக்கி வருகிறது இந்திய அரசு. ஆனால் இந்த மக்களுக்கு இன்று வரை மூன்று விழுக்காடு நிலத்தை மட்டுமே பட்டா வழங்கியுள்ளது. இந்த மக்களே மண்ணின் பூர்வீக குடிகள் என்பதை மறந்து

வளச்சி என்ற பெயரில் உலகத்தின் தேவைக்கும் இந்தியாவை உற்பத்தி கேந்திரமாக மாற்றுவது தான் நாட்டுப்பற்றா?, இலஞ்ச ஒழிப்புத்துறையில் கையும் களவுமாக பிடிபட்டு கிலோக்கணக்கில் தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்ட தேசாஸ் மன்னித்தது, சுவிஸ் வங்கியில் பல்லாயிரம் கோடி பதிக்கி வைத்ததுள்ளதை அறிந்த பின்பு நாம் சும்மா இருந்து வாக்கு ஜனநாயத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள நம்மை போகிற போக்கில் வைத்து வாசகனை நறுக்கென மண்டையில் கொட்டி சிந்திக்க வைக்கிறார்.

மவோ பழங்குடி இனமக்கள் வீட்டிளே சாராயம் காய்ச்சி குடிக்கும் பழங்கம் கொண்டவர்கள். இச்சாராயத்தை தடைபொருளாக்கி அம்மக்களை குற்றவாளியாக்கியது பிரிட்டீஷ் இந்தியா. அதே வேலை இந்திய அரசும் செய்கிறது. மறைந்த பிரதரமர் நேரு அவர்கள் பிரதரமராக பதவி ஏற்றபோது பிரிட்டீஷ் இராணியில் ஒப்புதல் பெறாமல் இந்திய கொடியை ஏற்றிய செய்தியை பலரும் மறந்திருப்போம் அதை நினைவுபடுத்தி பழங்குடிமக்களுக்கு நேரு அவர்கள் கொடுத்த வாக்குறுதியை காங்கிரஸ் கட்சி தூக்கி ஏறிந்தது முதல் இந்திய பொதுவுடமை கட்சி (மார்சிஸ்ட்) பழங்குடி மக்களுக்கு செய்த பிழை குறித்து விரிவாக விவாதத்தை எடுத்து வைக்கிறது. 

பழங்குடி மக்கள் தங்களது குடும்ப மற்றும் கொடை விழக்களில் தங்களை வென்ற மன்னனின் அட்டுழியத்தை பாடலாக பாடி வருவது இன்றும் உள்ளது என்பது அம்மக்கள் எப்படி மரபு சார் வாழ்க்கையில் உள்ளனர் என்பதை தெளிவுபடுத்துகிறது நூல்.  பூஞ்சி பழங்குடி மக்கள் தங்களது எல்லை தாண்டி விறகு எடுப்பதில்லை. அப்படி விறகு எடுத்தால் ஊர் கட்டுப்பாட்டை மீறியதாக தெண்டம் வசூலிப்பார்கள்  போன்ற செய்திகள், மோவா மக்கள் வீட்டில் பேசுவது அவர்களது மோவா மொழி ஆனால் புழக்கத்தில் உள்ளது அந்த மாநிலமொழி, பாடத்திட்டத்திலோ இந்தி. இப்படியான மொழி சிக்கலால் பழங்குடி மக்கள் பள்ளிக்கு வந்தும் மொழி புரியாமல் இடைநிற்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதை அரசு கவனிக்கவில்லை என்பதை தனது களஆய்வில் தெளிவு படுத்துகிறார் நூலாசிரியர். 

மாகாபாரத்தம் ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என கால முடிவுக்கு வந்துள்ளது இந்திய வரலாற்றுக்கழகம். இந்த நூலில் குறிப்பிடும் ''பில்'' இனமக்கள் இன்னும் அப்படியே உள்ளனர் என்பதை தெள்ளதெளிவுபடுத்துகிறது நூல். நாயக் என்ற சொல் இந்த மக்களின் தலைவனாகவும் பூசாரியாகவும் இருக்கும் பெயர் என்பது நம்ம ஊர் வலாற்றோடு ஊடுறுவியுள்ளதை தெளிவுபடுத்துகிறது.

இந்தியாவிலே அதிக மக்கள் தொகை கொண்ட பழங்குடி சந்தாலா இனம். அவர்கள் வீரம் செறிந்தவர்கள். ஆங்கிலேயர்களை பல முறை சிறைப்படுத்தி விரட்டி அடித்துள்ளனர். அங்கிருந்த ஜமீன்தார்களிடம் வரி வசூல் செய்து ஆச்சி செய்தனர் இந்த மக்கள். பிரிட்டீஷாரை எதித்து கிளர்ச்சி செய்த முண்டா மக்கள் என்கிற பழங்குடி மக்களிடம்உள்ள வீர வரலாற்றை பறைசாட்டுகிறது. இப்படி இருந்தும் இவர்களை பிரிட்டீஷார் துப்பாக்கி இரவைகளால் ஒடுக்கப்பட்டு புலம் பெயர்ந்தாலும் இன்னும் தங்களது மொழியை பேணிகாத்து வருகிறார்கள் என்பதை நாம் உணரவேண்டும் என்பதற்காக நூலாசிரியர் பதிவு செய்துள்ளார் என்றே நோக்க தோணுகிறது.     

இந்த நூலினை வாசிக்கும் போதிலிருந்து ''ஆயிரம் காலம் அடிமையென்னாறாயே....' மக்கள் அதிகாரம் படகர் கோவன் அவர்களிடன் பாடல் மனதிற்குள்ளே ஓடிக்கொண்டே இருந்தது. அந்தளவுக்கு சமூகத்தின் மீது அக்கரையுடன் அவர்களின் வலியினை பதிவு செய்த நூல். வரும் காலம் இந்த மக்களின் கண்ணீர் காய்ந்திட வேண்டும் என்ற அக்கரையோடு நாமும் உணர்வு கொள்வோம். உறுதி ஏற்போம்.

Friday 8 November 2019

மெக்லாயா (Macaulay) கல்வி முறை எதிர்ப்பவர்களுக்கு;


                                         மெக்லாயா (Macaulay) கல்வி முறை எதிர்ப்பவர்களுக்கு;

நூல் அறிமுகம் சுளுந்தீ

     
     
     

     
                                          
நூல் அறிமுகம்

                                                   சுளுந்தீ      Ramasubramanian Subbiah
     
     
    “கணவனை இழந்த கைம்பெண்கள் தைமாத முதல் நாளன்று குலதெய்வத்திற்கு முன்பு, ஊர் நாட்டாமை, சாமியாடி, கோடாங்கி சாட்சியாக நிற்க, ‘ உத்தமி சத்தியம் செய்திட வேண்டும்’” (பக். 355) என்ன ஒரு கொடுமை?/

    நூல் அறிமுகம்
    சுளுந்தீ - ( இரா.முத்துநாகு)
    இரா.முத்துநாகு எழுதியிருக்கும் ‘சுளுந்தீ’ நாவல்பற்றி பல நண்பர்கள் முகநூலில் பதிவிட்டு, பாராட்டி பரபரப்பை ஏற்படுத்திவந்தாலும், அந்த நாவலை வாங்கி என்னை வாசிக்கத் தூண்டியதற்குப் பின்னால் வேறு ஒரு பண்பாட்டு நிகழ்வும் இருந்தது.



    எங்கள் ஊர்களில் தைப்பொங்கல் போலவே மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்ட மற்றொரு தமிழர் திருநாள் ‘திருக்கார்த்திகை’.
    கார்த்திகை மாதம் வரும் திருக்கார்த்தியல் அன்று மரக்கதவுகளைக் கழுவித் துடைத்து பச்சரிசிமாவும், மஞ்சளும் சேர்த்து , நீரில் கரைத்து, அதில் பெண்கள் வலது கையை முக்கி, கதவுகளில் ஐந்து விரல்களும் தெரியும் விதத்தில் பதிப்பார்கள் (மஞ்சள் காப்பு என்று பெயர்.) ஒரு வரிசையில் மூன்று என்னும் கணக்கில், மேலும் கீழுமாக மூன்று வரிசைகளில் அப்படிப் பதிப்பார்கள்.



    இளம் பனங்குருத்தோலையைக் கொண்டுவந்து, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அவற்றிற்குள் சேர்த்துவைத்திருக்கும் அரிசி மாவை வைத்து, கொதிக்கும் நீரில் அவித்து எடுப்பார்கள். அதற்கு ‘ஓலைக் கொளுக்கட்டை’ என்று பெயர். (சிலர் பூவரசு இலைகளில், இலைக்கொளுக்கட்டையாக அவிப்பார்கள்). மாலை மயங்கும் நேரத்தில் சாமிக்குப்படைத்து, அதன்பிறகு தின்பதற்குத் தருவார்கள்.

    கார்த்திகை மாதம் முழுவதும் அத்தனை வீடுகளிலும் தெருவாசலில் உள்ள இரண்டு மாடக்குழிகளிலும், இரவு அகல் விளக்குகள் எரிந்துகொண்டிருக்கும். திருக்கார்த்தியல் அன்று வீடு முழுவதும் மட்டுமல்லாமல் வீதியெங்கும் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டிருக்கும். அதுதான் தமிழனின் பண்டையப் பண்பாட்டுத் ‘தீபஒளி’ திருநாள்.

    ஒவ்வொரு ஊரிலும் கோயில் வாசலில், பகல் பிரிந்து இரவு வந்ததும் ‘சொக்கப்பனை’ கொளுத்துவார்கள். முழுப்பனையைத் துண்டாக்கி, நட்டு அதனைச்சுற்றி பனை மட்டைகளாலும், புளிய விளார்களாலும் கூண்டுபோல் அமைத்து, அதற்குமேல் காய்ந்த பனை ஓலைகளை மேய்ந்து ‘சொக்கப்பனை’ கட்டுவார்கள். எனக்குத் தெரிந்து கடந்த 50, 60 ஆண்டுகளாக, பொத்தைகளிலும் (குன்றுகள்) மலைகளிலும் வளர்ந்திருக்கும் சுக்குநாறிப்புல்லில் (மஞ்சம் புல்) வளர்ந்து காய்ந்திருக்கும் நீண்ட குச்சிகளை ஒடித்து, ஒன்றுசேர்த்து, கட்டுகளாகக் கட்டி, ‘சுளுந்து’ என்று கொளுத்தி மகிழ்கிறார்கள். அந்த சுழுந்தைக் கொளுத்திக்கொண்டு, அனைவரும் கோயிலுக்குச் சென்று சொக்கப்பனையைக் கொளுத்துவார்கள். இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கும் திருக்கார்த்தியல் அன்று ‘சுளுந்து’ கொளுத்தும் பழக்கம்தான் என்னை, ‘சுளுந்தீ’ நாவல்பக்கம் இயல்பாகவே இழுத்துச் சென்றது.

    தீவெட்டி என்பது, மரக்குச்சியின் நுனியில் துணியைச்சுற்றி, அதில் எண்ணை வார்த்து எரியவிடுவது. இந்த நாவலில் குறிப்பிடப்படும் ‘சுளுந்தீ’, காட்டில் வளரும் ஒருவகை மரம். எண்ணைச்சத்து இருப்பதால் பச்சையாகவே எரியக்கூடியது. அதனால் அந்த மரத்தைச் சுளுந்தீ மரம் என்று அழைத்திருக்கிறார்கள்.

    “மரங்க விளைஞ்ச பின்னால்தான் வைரம்பாயும். ஆனால் சுளுந்தீ மரம் மட்டும் பூமியை விட்டு வெளியேறி தழைக்கும்போதே வைரமா வெளியேறும். கெண்டைக்கால் அளவுக்கு மேல் பருக்காது. மலை அடிவாரமும், உச்சியும் இல்லாத இடைப்பட்ட எடத்தில், காக்காப்பொன் தாதுமண்ணுள்ள நெலத்தில் மட்டும் முளைக்கும். வருசக்கணக்காக மழை இல்லேண்ணாலும் கழுமரம்போல உசுர உள்ளே வச்சுக்கிட்டே இருந்து, மழபெஞ்ச ரெண்டாம் நாள் தழைக்கும். இந்தக்குச்சியில் எண்ணச்சத்து இருக்குறதுனால பச்சைமரமே எரியும்” (பக். 139-140)

    தலைப்பு ‘சுளுந்தீ’ என்று இருந்தாலும், அது பற்றிய தரவுகள் நாவலில் பல இடங்களில் விரவிக்கிடந்தாலும், விஜயநகர நாயக்கராட்சியில், ‘கன்னிவாடி’ பாளையத்தின் ஆளுகைக்குட்பட்ட பன்றிமலையைச் சுற்றியுள்ள (இன்றைய கொடைக்கானல்) நிலப்பரப்பில் வாழ்ந்த மக்களை, அவர்கள் பட்ட துன்பங்களை, துயரங்களை, பஞ்சத்தை, பசியை, அரசியல் சதுரங்கத்தில் கொத்துக்கொத்தாக வெட்டப்பட்ட அடித்தட்டு மக்களை, குலநீக்கம் போன்ற கொடிய பழக்கங்களை, மருத்துவ நுணுக்கங்களை, எழுவுச்சடங்குகளை, விளைநிலங்களை, ஜீவசந்துகளை, மல்யுத்தத்தை, இன்னும் இதுபோன்ற பலவற்றையும் ராமன் பண்டுவன் என்னும் அரச நாவிதனை மையமாக வைத்துப் பெரும்பகுதி கதையை நகர்த்தி, இறுதிப்பகுதியில் குதிரையில் அடங்காத்திமிருடன் (செருக்குடன்) திரியும், ராமனின் மகனான செங்குளத்து மாடனைக் கதைநாயகனாக வைத்து, ஒரு துப்பறியும் நாவலுக்குண்டான பரபரப்போடுக் கதையை நகர்த்தி முடிக்கிறார், நூலாசிரியர். இரா.முத்துநாகு.

    18-ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக்கர் காலத்தில் இருந்த 72 பாளையங்களில் ஒன்றான ‘கன்னிவாடி’ அரண்மனையையும், கன்னிவாடி பாளையத்திற்குட்பட்ட நிலப்பரப்பையும், அதில் வாழ்ந்த மக்களையும் கொண்டு கதை பின்னப்பட்டுள்ளது. என்றாலும், வடக்கே செஞ்சி, தெற்கே கல்லிடைக்குரிச்சி, கிழக்கே ராமேஸ்வரம் வரையிலும் கதைக்களம் பரந்து விரிந்து செல்கிறது.

    இந்நூல் ஒரு புனைவிலக்கியம் என்னும் உணர்வு, அதன் இறுதிப்பகுதியில்தான் நமக்கு ஏற்படுகிறது. அதுவரை, இதனை ஒரு முழுமையான மருத்துவ நூல் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு ஏராளமான மருத்துவக்குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. அவற்றை மட்டும் தொகுத்தாலே, அது ஒரு மருத்துவ நூலாகிவிடும். அதற்காகவே, சித்தர் பாத்திரத்தை, ஆசிரியர் உருவாக்கியிருக்கிறார் என்று நம்பலாம்.
    இது ஒரு அரசியல் வரலாற்று நூல் என்றும் சொல்லலாம். நாவலின் மைய இழையே, அரச பீடங்களின் அரசியல்தான். அதனால் நாவல் முழுவதுமே அன்றைய அரசியல் பேசப்படுகிறது. குறிப்பாக, அன்றைய விஜயநகரப் பாளையக்காரர்களின் ஆதிக்கத்தின் கீழ் தமிழ்மக்கள் பட்ட துன்பங்களை நூலாசிரியர் அப்படியே பதிவு செய்கிறார்.

    “நஞ்சைப் பாசனமுள்ள ஊர்களிலிருந்த குடியானவங்களை குலப்பழி சுமத்தி, குலநீக்கம் செய்து, விஜயநகரக்குடிகளைக் குடியமர்த்தி வந்தனர்.” (பக். 64)

    “வருசத்துக்கு ஒருபோகம் தப்பாமல் விளையும் நஞ்சை, புஞ்சை நெலங்களை, தமிழ்க்குடியானவங்களிடமிருந்துக் கைப்பத்த ஆகாத போகாத காரணம்காட்டி குலவிலக்கு செய்றாங்க” (பக் 137)

    “குலவிலக்கானவங்க பஞ்சத்தச் சமாளிக்க மலையோரமுள்ள தரைக்காட்டில் குடியேறி வல்லை வெட்டி வெள்ளாண்மை செய்யுறாங்க. அந்த நெலத்தை அரண்மனைக்கு வேண்டப்பட்ட தெலுங்கு பேசும் சனங்க, குடிப்படை ஒத்தாசையுடன் விரட்டிவிட்டுக் கைப்பத்திட்டாங்க” (பக் 158)”

    “எங்கள எல்லாம் குலநீக்கம் செஞ்சதாச்சொல்லி, நஞ்சை நெலத்த கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலுக்குத் தானம் செய்ததாகச் சொன்னார்கள். ஆனால், அந்த நெலத்த பூராவும் புதுசா இங்க குடிவைச்ச வடுக சனங்க உழவடை செய்யிறாங்க” (பக். 173)

    “மழ குறைவாப் பேஞ்சுது. அரண்மனை விதித்த வரியோ அதிகம். நாங்க கொடுக்குறத வாங்கிட்டுப்போங்கண்ணு திட்டவட்டமாகச் சொல்லியிருக்கான் இடமலக்குடி கட்டகாமக் குடும்பன். இதனால அவன குலநீக்கம் செஞ்சு, நஞ்ச நெலங்கள சாஸ்திரிக் கோட்டையில் இருக்கிற பிராமணர்களுக்கு மானியமாகக் கொடுத்தாங்க. (பக். 103)

    “பாண்டிய அரசப்படையில் நாவிதன், செம்மான், தச்சன், ஏகாளி, ஏன் குசவன் குலத்தினர்கூட போர் வீரர்களாக இருந்த வரலாறு இருக்கு. நம்ம ஆட்சியில அந்தந்த குலத்தினர் அவங்கவங்கக் குலத்தொழில மட்டும் செய்யக் கட்டாயப்படுத்திட்டோம்” (பக்.393) என்று கன்னிவாடி அரண்மனையாரிடம், குலக்குரு சொல்கிறார். எந்த குலமாக இருந்தாலும், வீரனுக்குள்ள தகுதி, திறமை, விருப்பம் இருந்தால், ஒருவன் படைவீரனாக மாறமுடியும் என்பது நாயக்கர்கள் காலத்திற்கு முன்பான பாண்டிய மன்னர்கள் காலத்தில் வழக்கமாக இருந்திருக்கிறது என்னும் வரலாற்று உண்மை நமக்குப் புரிகிறது.

    “பாண்டியப்படையிலிருந்த சாணார்கள் பனங்கருப்பட்டி, உப்பில் செஞ்ச சுளுந்தீயப் போர் ஆயுதமாக வச்சிருந்தாங்க. இதனால கருப்பட்டி, உப்பு எடுக்கத் தடைபோட்டாங்க..” (பக். 215)

    தமிழ்க்குடியில், பிறந்த மூன்றாவது அல்லது ஐந்தாவது நாளிலேயே பெண்பிள்ளைகளுக்கு மருத்துவச்சியால் காதுவளர்க்கும் பணி தொடங்கியிருக்கிறது ! அப்படிக் காதுவளர்த்தத் தமிழ்ப் பெண்பிள்ளைகள் வயதுக்கு வந்தபிறகு, தண்டட்டி, சவடு அணிந்திருக்கிறார்கள்.

    “தமிழ் பேசுற குலத்துக்காரங்க மட்டும்தான் காது வளர்ப்பாங்க. காப்பிளி, அலுப்ப, குறும்ப, கம்பளம், கவரா, பொண்ணுக காது வளக்க மாட்டாங்க.” (பக்.78).

    “தமிழ்க்குலங்களைத் தவிர மற்றவங்க ஏன் காது வளக்குறதில்ல, தமிழ் ஜனங்களுக்கும் மத்தவங்களுக்கும் அடையாளம்காண இப்படியான உத்தரவா இருக்குமோ?” (பக். 78)

    “வடவர்கள் தமிழ் மண்ணில் ஆதிக்கத்தை நிலைநிறுத்தியதற்கான சான்றுகள் இல்லை. ஆனால், வடுகர்கள் தங்கள் ஆதிக்கத்தை இம்மண்ணில் நிலைநிறுத்தியதற்கான சான்றுகள் உள்ளன” என்று வேதசகாயகுமார் தனது ‘ நவீன வாசிப்பில் செவ்வியல் இலக்கியம்’ என்னும் நூலில் குறிப்பிடுவது, சுளுந்தீ நாவல் பதிவுசெய்யும் மேற்கூறிய அரசியல் தரவுகளோடுப் பொருந்திப்போகிறது.

    “இந்தத் தண்ணித்தருமத்துல குடியானவன் மொகத்துல நாங்க முழிக்கக்கூடாது. கிணத்துக்கு வடபுறத்தில் படல் கட்டி வச்சிருப்பாங்க. இந்தப்படலில் மூங்கித் தூம்பு சொருகியிருக்கும். ‘சாமி’ ன்னு எங்கள மாதிரி ஆளுங்க குரல்கொடுத்தா, குலநீக்கமானவங்கத் தண்ணி கேட்கிறானூங்கன்னுட்டு புரிஞ்சு தூம்பில் தண்ணி ஊத்துவாங்க. .பசிக்குதுண்ணு சொன்னா கூழ மொட்டத்தண்ணியாக் கரைச்சு நீராகாரம்போல் ஊத்துவாங்க. தண்ணியோ கூழோ குடிச்சிட்டு, ‘போதும் சாமின்னு’ சொல்லிட்டு யாரு மொகத்திலும் முழிக்காமப்போகணும். இதுக்குப் பேருதான் தருமம்” (பக். 123)

    ‘குலநீக்கம்’ ஆனவர்கள் மீண்டும் குலத்தில் சேர்வது, குலநீக்கத்தை விடவும் கொடூரமானது. இடுப்பளவு வெட்டப்பட்ட ஒன்பது குழிகளில் நிறைந்திருக்கும் சாணிக்கரைசலில் முங்கி எழவேண்டும். அதில் பாதிப்பேர் இறந்துவிடுவதுண்டு. தப்பித்தவர்கள் குளித்துவிட்டு வந்து வரிசையா நிக்கிற பட்டக்காரங்க ஒவ்வொருத்தர் காலுல விழுந்து வணங்கவேண்டும். பட்டக்காரங்கக் கையில் வச்சிருக்கும் செருப்பால காலில் விழுந்தவன் தலையில அடிப்பாங்க. அதன்பிறகே அந்த நபர் குலத்தில் சேர்க்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார். (பக். 72)

    “ஆணுக்கும், பெண்ணுக்கும் இடைச்சவரம் செய்வது பற்றியும், மரணமடைந்த ஆண், பெண் சடலங்களுக்கு ஏன் சவரம் செய்யப்படுகிறது என்பது பற்றியும், ஒவ்வொரு சாதிக்கும் செய்யவேண்டிய எழவுக்கட்டுகள் பற்றியும் ராமன் தனது மகன் மாடனுக்கு விளக்கிக் கூறுவதானப் பக்கங்கள், (281-293) நாவலில் வரும் காத்திரமானப் பகுதியாகும்.

    “இங்கப் பாருடா, மனுசனுக்கு நோய் தாக்கி வெளியில் தெரியும் மொத எடம் ஆணுக்குத் தண்டு, பெண்ணுக்கு யோனி…….ஊருமெச்ச வாழ்ந்தவன் புழுத்துச் செத்தா, அவன் வாழ்ந்த காலத்தில் கட்டிக்காத்த பெரும அழிஞ்சிரும். இதுக்காகத்தான் செத்தவனின் பொஞ்சாதியக்கூடப் பாக்கவிடாமல், பொணத்துக்கு மொகம் , இடைச்சவரம் செஞ்சு, குளிப்பாட்டி, சாத்திவச்சு நாடிக்கட்டுப் போட்ட பின்னால், சொந்தக்காரங்களப் பொணத்தத் தொட்டுஅழுங்கன்னு நாம அனுமதிக்கிறோம்.” (பக். 281)

    ஆணுக்கு நாவிதனும், பெண்ணுக்கு அவன் பொஞ்சாதி மருத்துவச்சியும் ‘இடைச்சவரம்’ செய்வது வழக்கமாக இருந்திருக்கிறது. அதன்காரணமாக மகனுக்கு ஒரு விளக்கம் சொல்கிறான், ராமன். “பிறவியில் தண்டு சிறுத்தவன், விதப்பை மச்சு, தண்டுமட்டும் நீண்டவன் இவங்களுக்குப் பிள்ளைப்பேறு இருக்காது. ஆனாலும் நாம ரசிச்சு செஞ்ச மீசையை முறுக்கிவிட்டு, வாரிசுகளைக் கைகளில் புடிச்சு வரிஞ்சுகட்டி நிப்பாங்க ! இதப்பத்தி நாம பொஞ்சாதிக்கிட்டகூட வாய்தவறிக்கூடச் சொல்லக்கூடாதுன்னு சவரக்கத்தி மேல சத்தியம் வாங்கிட்டுத்தான் கையில கத்தியக் கொடுப்பாங்க.” (பக். 282)

    “சேர வம்சாவழியில கலியாணம் முடிக்காத பொம்புள செத்துப்போனா, அந்தப் பொணத்தப் புணர்ந்து புதைப்பது வழக்கும். இப்படிப் புணர்வதற்காகச் சுடுகாட்டின் வடபக்கம் மறவான மேடு அமச்சுருப்பாங்க. அந்த எடத்துக்குப் பேரு ‘வெங்கம் மேடு’. பொணத்தோடு புணர்பவணுக்கு ‘ வெங்கப்பய’ ன்னு பேரு” (பக். 132)

    “கணவனை இழந்த கைம்பெண்கள் தைமாத முதல் நாளன்று குலதெய்வத்திற்கு முன்பு, ஊர் நாட்டாமை, சாமியாடி, கோடாங்கி சாட்சியாக நிற்க, ‘ உத்தமி சத்தியம் செய்திட வேண்டும்’” (பக். 355) என்ன ஒரு கொடுமை?

    “ மல்லாக்க மிதந்தா ஆம்பளப்பொணம்” (174)
    “மூத்திரம் பேஞ்ச எடத்துல நாற்றெமெடுத்தா ஆம்பள மூத்திரம்; நாத்தமில்லேன்னா பொம்பள மூத்திரமெனத் தெரிஞ்சுக்கோ” (பக். 253)
    “செந்தூரம் அஞ்சு தலமுறைக்குக் கெடாது” (பக். 82)
    “ஆவாரம் பூக்கலன்னா சாவோரப் பாக்கலாம்ன்னு சொலவடை இருக்கு” (பக். 108)
    “பங்குனியில் பகல் வெள்ளம்போனா பன்னெண்டு வருசத்துக்குப் பஞ்சம்” (பக். 108)

    “அதுவா, அதுக்குப் பேரு இட்டிலியாம். வடக்குத் தேசத்திலிருந்து நம்ம அரண்மனை எல்லைக்குப் புதுசா வந்த ரெட்டி குலத்தினர் எவாரம் செய்யுறாங்க.” (பக்.325) ( இட்லி தமிழ் உணவில்லையா? )

    எல்லா ஊர்களின் வடக்கெல்லையிலும் மாரியம்மன் கோயில்கள் இருந்திருக்கின்றன. அனைத்து மாரியம்மன் கோயில்களின் முன்புறமும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கும் அக்னிக்குண்டங்கள் இருந்திருக்கின்றன. அந்தக்காலங்களில், விறகடுப்பு என்பதால், மக்கள் அடுப்புப் பற்றவைக்க மாரியம்மன் கோயில் அக்னிக்குண்டத்திலிருந்தே ‘கங்கு’ அள்ளிச் சென்றிருக்கின்றனர். கங்கு அள்ளிவிட்டு, அக்னிக்குண்டத்தில் சுளுந்தீக்குச்சிகளை போட்டுச் சென்றிருக்கின்றனர்.

    அந்த அக்னிக்குண்டத்தை அகற்றிவிட்டு, சுளுந்தீக்குச்சிகளையும் மக்கள் பயன்படுத்தத் தடைவிதித்திருக்கின்றனர். அதற்குப்பதிலாக, குடிப்படைத்தலைவர்கள் வீட்டில் தீ அணையாமல் எரிய ஒரு வீரன் நியமிக்கப்பட்டிருக்கிறான். அவன் பெயர் ‘ தீக்கொளுத்தி’ அவனிடம்தான், மக்கள் அடுப்பு மூட்ட, செத்தவருக்குக் கொள்ளிவைக்க கங்கு பெறவேண்டும். அவனுக்கு நஞ்சை மற்றும் புஞ்சையில் விளையும் தானியங்களை மானியமாகக் கொடுக்கவேண்டும். (பக்.154)

    “சாமிக்கு வேண்டுதல் என்பதெல்லாம் பூசாரியின் குலத்தொழிலும் சம்பந்தப்பட்டது. பிராமணன் பூசாரியா இருந்தா கோயிலுக்கு நஞ்ச நெலமும், பசுவும் காணிக்கையாகக் கொடுக்கச் சொல்வான்; ஆசாரி பூசாரி என்றால், அருவா, சூலம் அடித்துவைக்கச் சொல்லுவான், குசவன் தீச்சட்டி, மதல, சுடாத மண்ணுல சில செஞ்சு ஆத்துல கரைக்கச்சொல்லுவான் அல்லது உடைக்கச் சொல்லுவான், இடையன் கெடா வெட்டச்சொல்லுவான், பூப்பண்டாரம் , சாமிக்கு மாலகட்டிப் போடச்சொல்லுவான்.” (பக். 365) இப்படி, நாவல் முழுவதும் கணக்கிலடங்கா தகவல்களும், தரவுகளும் நிறைந்திருக்கின்றன.
    அன்றைய காலகட்டத்தில், நாயக்க மன்னர்களின் தயவோடு பிரச்சாரம் செய்ய அனுமதிபெற்று ஊழியம் செய்யவந்த கிருத்துவப் பாதிரிகளும்கூட(ஏசு சபையினரும்) , மன்னருக்கு உளவு வேலைப் பார்த்திருப்பதாக அறிந்துகொள்ளமுடிகிறது.

    “மதுரையில் நடந்த திருச்சபைக் கூட்டத்தில் ஆலோசித்தப் பாதிரியார், ‘ நமக்கு நாயக்கர் அரசு ஆதரவா இருக்கு. சனங்க அரசுக்கு எதிரா சிந்திப்பதை தடுக்க முனைப்பாகப் பிரச்சாரம் செய்யுங்க” (பக். 120)
    பாளையக்காரர்களுக்குள் நடந்த அரசியல் போட்டியில் பல நாவிதர்கள் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர். . ‘ அரசாங்கக் கமுக்கம்’ என்ற பெயரில், நாவிதர்களின் சவரக்கத்திகளுக்குப் பல பாளையக்காரர்கள் பலியாகியிருக்கின்றனர். போர்க்களத்தில் வீரர்களின் வாள் செய்யமுடியாததை, சவர மாடத்தில் நாவிதர்களின் சவரக்கத்தி செய்துமுடித்திருக்கிறது. நாவிதர்களும், ‘கமுக்கமாக’ கொத்தாகக் கொலைசெய்யப்பட்டிருக்கின்றனர்.

    இந்த நூலில், அரண்மனையாராக, தளபதியாக, சித்தராக, பண்டுவன் ராமனாக, அவனது மகன் செங்குளத்து மாடனாக, கொன்றிமாயனாக, வங்காரனாக, , வெடிவைக்கும் ஆசாரியாக, இருபிறவியாக, வல்லத்தாரையாக, அனந்தவல்லியாக, குடிகளாக, குலநீக்கம் செய்யப்பட்டவர்களாக, இன்னும் பலவாக அவதாரம் எடுக்கும் வித்தையை நம் கண்முன் நிகழ்த்திக்காட்டுகிறார், இரா. முத்துநாகு.
    குதிரைமீது சவாரிசெய்யும் நாவிதன் ராமனும் அவனது மனைவியும் நம் கண்னைவிட்டு (கருத்தைவிட்டும்) அகலாமல் நிற்கின்றனர். ஒரு நாவிதக் குடும்பத்தை மையமாக வைத்து, இப்படி ஒரு காத்திரமான நூலைப் படைத்ததற்கு அதன் ஆசிரியர் இரா. முத்துநாகுவை எத்தனைப் பாராட்டினாலும் தகும்.

    தாவிச்சென்று (skip) வாசிக்காமல், அனைத்து வரிகளையும் வாசிக்கும் வகையில், செறிவான தரவுகளைக்கொண்ட இந்நூலை, வாங்கி வாசிக்கவேண்டும் என்பதோடு, எதிர்காலத்தில் இது ஒரு வரலாற்று ஆவணமாகத் திகழும் என்றும் நம்பலாம்..


    (காக்கை இதழில் எனது கட்டுரையில், 'சுளுந்தீ' என்பதற்குப் பதிலாக, ' சுழுந்தீ' என்று வந்திருப்பதற்கு என்னுடைய கவனக்குறைவே காரணம் என்பதால் அதற்காக வருந்துகிறேன்)

    நூல் விபரம்
    சுளுந்தீ
    ஆசிரியர் : இரா. முத்துநாகு
    ஆதி பதிப்பகம், பவித்திரம், திருவண்ணாமலை
    பக்கங்கள் 4
    80
    விலை ரூ 450
    தொடர்பு எண் 9994880005
    காக்கை நவம்பர் 2019.


ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...