Search This Blog

Friday 28 June 2019

திமுகவில் தங்கதமிழ் செல்வன் வரவும் அஇஅதிமுகவின் எதிர்காலமும்... ..




                           திமுகவில் தங்கதமிழ் செல்வன் வரவும் அஇஅதிமுகவின் எதிர்காலமும்...



அஇஅதிமுகவின் முன்னால் தேனி மாவட்ட செயலாளராக, மாநிலங்களவை உறுப்பினராக, ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பிராக மும்முறை இருந்தவருமான  திரு.தங்கதமிழ்ச்செல்வனை அஇஅதிமுகவிற்குள், உள்ளே விடக்கூடாது என்பது அக்கட்சியின் கூட்டு முடிவு என்பதை விட மான்புமிகு துணைமுதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வத்தின் தனிப்பட்ட முடிவாகவே அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. வேறு வழியின்றி தன்னை நிலைநிறுத்திக்கொள்ள திரு.தங்கதமிழ்ச்செல்வன் திமுகவிற்குள் புகுந்தார் என்பதாக தெரிகிறது. ஆனால் இதுவுண்மையில்லை என்பது கொங்கு நாட்டிலிருந்து வரும் தகவல்கள் மெய்ப்பிக்கிறது.

அஇஅதிமுக துவங்கிய காலம் முதல் அக்கட்சியிக்கு வாக்கு வங்கியைத் தொடர்ந்து தக்கவைத்துள்ள பகுதி கொங்கு மண்டலம் மட்டுமே. அப்பகுதியில் கடந்த சட்டசபை தேர்தலில் அஇஅதிமுக வாக்கு விகிதாச்சாரத்தில் சரிவை துவங்கி, நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இதன் சரிவு நன்றாகவே வெளிப்பட்டது. இந்த சரிவு அஇதிமுகவின் வீழ்ச்சி என்பதை விட திமுகவின் கொள்கை இறுக்கம் என்றே சொல்ல முடிகிறது. திமுக 1980முதல் சரிவை சந்தித்தது. திரு. ஸ்டாலின் அக்கட்சியின் பொருளாராக இருந்த பொது அவரின் தனிப்பட்ட நடவடிக்கை அல்லது கொள்ளை சமரசத்தால் திமுக மீது கடும் கோபமான பகுதிகளில் ஒன்றான கொங்கு மண்டலத்தை அசைத்து விட்டது என்றே அரசியல் நோக்கர்களின் பார்வையாக உள்ளது.  திரு. ஸ்டாலின் அவர்களின் செயல்பாடு என்பதை விட 1967 முன்பிருந்த நீதிகட்சி தலைவர்களின் நீக்குப்போக்கு நடவடிக்கை என்ற பார்வையாகவும் உள்ளதாகவும் பார்க்கிறார்கள். இதனால் முன்னால் அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி போன்றவர்கள் திமுகவை விட்டு போனாலும் வந்த அவரை  மீண்டும் திமுக அரவணைத்து கொள்ளமுடிந்தது. 

இதே நிலைப்பட்டை மாநிலம் முழுவம் எடுக்க பலஅடித்தள வேலைகளை பெரும்முதலாளிகள் மூலமாக அரசர்கள் காலத்தைப்போல பட்டர்கள், குருக்கள் மூலமாக செய்து வந்தனர். இது பெரும் வெற்றியை திமுகவிற்கு நகர்த்தி கொடுத்துள்ளதாகத்தெரிகிறது. 

மதுரை மண்டலத்தைப்பொறுத்தவரை மறவர்கள் திமுவை தங்களது பரமஜூரியாகவே பார்க்க வைத்தது அவர்களின் கடந்த கால சட்ட திட்டங்களில், மய்யமானதான அனைவரும் அர்சகர் ஆகலாம், குல  + சாதி மறுப்பு அங்கீகார சட்டம், சமத்துவபுரம் இவைகளே. இந்த திட்டமும் பன்னாட்டு தாக்கத்தால் நீர்த்து விட்டது. இந்தப்பேச்சை கொள்கைவாதிகள் மட்டுமே பேசிக்கொள்கிறார்கள். இவர்களது பேச்சுகளும் பெரிதாக எடுபடாது என்பதை திமுகவின் தலைமை நன்கு அறிந்தே 'மக்களைத்ப்நாடி' திட்டத்தில் பல தரப்பான நெழிவுகளுடன் நடந்து கொண்டது அதன் தலைமை. 

ஊழலை பொறுத்தவரை மறைந்த பிரதமர் திருமதி இந்திராகாந்தி காலத்தில் பேசப்பட்டதை விட பன்மடங்கு பேசப்பட்ட ஊழல் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஊழல். இந்தக்குற்றச்சாட்டில் உண்மை தன்மையை விட அதை பேசியவர்கள் இயக்கமாக கொண்டு சென்ற குறிப்பாக பொதுவுடமை இயக்கத்தாராலே அவ்வூழல் மக்களிடம் செல்லாக்காசானது என்பது அவர்களின் பேச்சு + எழுத்துக்களிலே தெளிவுபெறுகிறது. இனி வரும் காலங்களில் ஊழலை பற்றி யார் பேசினாலும் சிரிப்பாக பார்க்க ஒவ்வொரு தனிமனிதனையும் உருமாற்றி விட்டார்கள் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஊழல்   குறித்து பேசியவர்கள். இதே போல் ஊழல் குற்றச்சாட்டு மெய்பிக்கப்பட்ட அஇஅதிமுகவின் தலைவியான மறைந்த செல்வி .ஜெயலலிதா மீது பத்திரிக்கைகளும் இதர அரசியல் கட்சி தலைவர்களும் கொண்டுள்ள அபிமானம் இந்தியாவில் எந்த கட்சி மீதும் ஏன் தனிநபர்கள் மீதும் ஊழல் குற்றச்சாடு சுமத்தினாலும் அடுத்த நொடியில் வேறு பேச்சு பேசவேண்டிய நிலையிலே பேசிவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இதனால் திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எடுபடாத நிலையிலே உள்ளது.  

இதையெல்லாம் அறிந்து, தெளிந்த தொண்டு நிறுவனம் போல் செயல்படும் திமுகவின் தலைமை பலமான மாற்றுக்கட்சி தலைவர்களை வளைக்க பலவண்ணங்களில் செயல்பட்டு அடுத்த தேர்தலில் குறைந்த 200 ச.ம. உறுப்பினர் என்ற இலக்கை நோக்கி தனது பயணத்தை துவக்கி விட்டது. இப்பயணத்தை பெரும் கேடுகள் வந்து தடுத்தாலே தவிர மற்றவகையில் அதை நிறுத்த இயலாது என்று அடித்து சொல்லுகிறார்கள் அரசியல் நோக்கர்கள். இதன் நீட்சியாகவே திரு. தங்கத்தமிழ்செல்வன் திமுகவிற்கு போனார். திரு. செந்தில்பாலாஜிக்கு போலவே இவருக்கும் தேனி மாவட்ட செயலாளர் பதவி வழங்க இருக்கிறது என்று தெளிவாக விளக்குகிறார்கள் கட்சியின் உள்ளமைப்பிற்கு மூலையாக உள்ளவர்கள். 

அடுத்த இலக்கு திருநெல்வேலி, இராமநாதபுரச்சீமையும். அதற்கான பேச்சுவார்த்தைகள் ஒரு மடத்தின் தலைவர் மூலமாக அமெரிக்க நாட்டில் நடந்து முடிந்ததாம். இதன் வெளிப்பாடு மெல்ல மெல்ல வெளிவரலாம். 

அஇஅதிமுகவைப்பொறுத்தவரை முதலமைச்சரான திரு. பழனிச்சாமி கட்சியை தக்கவைக்க அவரது சாதிக்காரரும் சொந்தக்காரருமான ஒரு ஆளுனர் மற்றும் அட்ரணி சென்டல் மூலமாக நங்கூரமாக நிலைகொண்டுள்ளார். இவரது செல்வாக்கு கட்சியை தக்க வைக்க முடியுமா என இந்தியா அரசின் உளவு மற்றும் தொண்டு நிறுவன அரசியல் ஆய்வு நிறுவனங்கள் கொடுத்த ஆய்வறிக்கையில் முதல்வர் திரு. பழனிச்சாமிக்கு ஆரவாரமான மக்கள் பலமில்லை என்றாலும்  துணை முதல்வர்  திரு. ஓ. பன்னீசெல்வத்தை விட அதிகமாக இவருக்கு செல்வாக்கு இருப்பதாக தகவல் கொடுத்துள்ளார்கள். இந்த செல்வாக்கினை வைத்து  அவரை தொடர்ந்து ஆட்சியில் அமரவைத்து எம்.ஜி.ஆரின் இறுதி காலத்தில் மண்டைக்காட்டு கலவரம் மூலம் காலூண்றியது போல் மறுகாலூண்ற முடிவெடுத்துள்ளது ஆளும் பா.ஜ. இது எந்தளவுக்கு அவர்களுக்கு சாதகம் என்பதை விட அவர்களின் நோக்கு தமிழகத்தில் பண்பாட்டு தளத்தில் நுழைந்தால் தங்களது செல்வாக்கு அழிக்க முடியாத சக்தியாக அசுரபலத்துடன் நிலைத்திடும் என்ற கணக்கிலே கிராம பூசாரிகள் சங்கத்தில் துவங்கி, ஆருட மய்யங்களில் (ஜோசியம் சாதகம்) பெண்கள் அழகு நிலையம் வரை தங்களது கால்களை அகலப்பரப்புவதன் மூலம் இன்னும் பத்தாண்டுகளில் அவர்களின் இலக்கை எட்டி விடுவார்கள் என்பதை தெளிவுபடுகிறது. அப்போது அஇஅதிமுக என்ற அமைப்பை கபளிகரம் செய்வார்கள் என்பது அய்யமில்லை என்றே சொல்லுகிறார்கள் சமூகவரசியல் பார்வையாளர்கள். 

சேர் ஆட்டோவுக்கு அனுமதி மறுக்கும் அரசு தொலைகாட்சி நிறுவனம் நடத்த விண்ணப்பித்த மாயத்தில் ரிசர் வங்கியின் ஆலோசனையும் வங்கி கடனும் தனியார் முதலாளிகள் குறிப்பாக பண்யா +  பஜாஜ் குழுமத்தினர்கள் மூலம் குறைந்த வட்டியில் கடன் கொடுப்பதுடன் அவர்களின் நிறுவங்கள் விளம்பரமும் கொடுக்க 'கட்டாய'அறிவுரை வழங்கி வருகிறது ஆண்ட ஆளும் பா.ஜ. இதன் மூலம் நாடெங்கும் தங்களது கொள்கைகளை பண்பாட்டு தளத்தில் நிலைநிறுத்திடும் பணியில் வெற்றி கண்டுள்ளார்கள். இந்த வெற்றியை அரசியல் ரீதியாக தக்க வைக்க அவர்களுக்கு காலம் இடம் கொடுக்கும் என்பதில் கருத்து மாறுபாடு இருக்காது என விவாதிக்கிறார்கள் அரசியல் கள ஆய்வாளர்கள்.
இதைனை வைத்துப்பார்க்கும் போது திமுக என்ற அமைப்பு இருக்கும் ஆனால் அதுவும் 'நீர்கரைசலா'க தனது கொள்கைகளை அமுலாக்கம் செய்திடும் என்பதை வாக்கு அரசியலை நம்பியுள்ளவர்கள் எதிர்கொள்ள வேண்டும்.


      

      

Monday 17 June 2019

அரசியல்வாதிகாக வாழ்ந்து பாருங்கள் ,

                                                       எழுத்தாளர்களே
                             அரசியல்வாதிகாக வாழ்ந்து பாருங்கள் ,
                ************************************************************
''அரசியல் என்றாலே சாக்கடை, இதில் அரசியல் இருக்கிறது அரசியல் செய்கிறார்கள், அரசியலில் எல்லாம் சககசம், அரசியல்வாதியின்னா முன்னபின்ன இருப்பாங்க, அவர்களைக் கண்டும் காணாமல் போகனும்'' இப்படியாக அரசியலுக்கு அப்பாற்பட்டு நிற்பவர்களுடன் அரசியல் அமைப்பினரும் சேர்ந்து பேசத்துவங்கி பல்லாண்டுகளாகிவிட்டது. இதனால் அரசியல் என்பது திருட்டுதனத்திற்கு சொந்தமானது என்பதை மக்கள் உள்வாங்கி உலக மக்களின் வரலாறாகி, இன்று மரபுக்கூறுபோல் ஆகிவிட்டது. ஆனால் இந்தத்திருட்டு முதலாளித்துவத்தைக் கட்டிக்காக்க நம்முடன் வாழும், வாழ்ந்த அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் சகிப்பு தன்மையை கட்டிக்காத்தார்கள் என்பதே பொதுவாழ்வில் வாழும், வாழ்ந்த இந்த அரசியல்வாதிகளிடம் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்.
வளர்ந்த கட்சி என்றால் தலைவனை அவ்வளவு எளிதாக தொண்டர்கள் அனுகிட முடியாது. சாமானியத்தொண்டர்களுக்கு, ஒப்பந்தச்சாலை (பைபாஸ் ரோடு) முதலாளிகள் போல் அனுகுசாலை அமைத்துக்கொடுத்து அவர்களை அப்படியே ஓரம்கட்டி அரவணைத்துக் கொண்டுசெல்வார்கள். ஆனால் இதில் வளரும் கட்சியாக இருந்தால் இப்படி அனுகுசாலை அமைப்பது பெரும் சவாலானது. இருக்கும் இருந்தால் கட்சியின் பெரும்பான்மை தொண்டர்களாக இருப்பவர்கள் குடிகாரர்களாகவும் அல்லது குடிகார மனநிலயோடும், அப்பாவியாகவும் தலைவனுக்காக தன்னுரியை நீத்திட தயாரானவனாகவும் எளிதில் உணர்ச்சி பொங்க முடிவெடுப்பவனாகவும் இருப்பார்கள். இவர்களின் உணர்களை உள்வாங்கி அவர்களை அரவணைத்து அல்லது அரவணைப்பது போல் நடித்து அக்கூட்டத்தை கட்டிக்காத்து வளர்த்து அதை வாக்கு வங்கியாக்கிட எடுக்கும் முயற்சியிலே முழு சகிப்புத்தன்மையும் அவர்களின் வெற்றியும் இருக்கும். இதை நுட்பமாக நோக்கினால் மானகெட்ட பொழப்பாகவே புரிந்து கொள்ள முடியும். திராவிட இயக்கம் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் (the dravidiyan moment) எழுதிய பேராசியர் ஹார்டு கிராவேவ் (இவரது போஸ்ட் பி.ஹெச்.டியான நாடார் வரலாறு என்ற ஆய்வு, நூலாக தமிழிலும் வெளிவந்து. தற்போது பேராசியர் பக்தவச்சலப்பாரதி அவர்கள் அதை பிழையற்று மொழி பெயத்தும் புதிய பதிப்பு கண்டுள்ளது இந்தநூல்) அரசியல்வாதிகள் எப்படி தொண்டர்களை அனுகுகிறார்கள் என்பதை ஹார்டு கிராவேவ் திராவிட கழகத்தலைவர்களை ஒரு ஜாட்கா வண்டி ஓட்டுப்வரையும், உப்பு, கீரை விற்பவர்களையும் ஒப்பீடு செய்து அருமையாக விளக்கிச் சொல்லியிருப்பது திரு. விஜயகாந்த் அவர்களுக்கு இது தெரிந்திருந்தால் அவர் வெற்றி பெற்று இருப்பாரோ என்னவோ. ஹார்டு கிராவேவ்வின் ஆய்வின்படி துவாழ்வில் இருப்பவர்கள் பல இடங்களில் சுயமரியாதியயை இழக்கிறார்கள், அதை தாங்கிக்கொள்ளும் பக்குவத்தை மக்களிடமிருந்தே இந்தத் தலைவர்கள் பெற்றுள்ளார்கள் என்பதை விளக்குவார். 
இதே போல் பொதுமக்களை அன்றாட சந்தித்து அவர்களை இயக்குவதும் அவர்களால் இயங்கும் கடைநிலைப்பணியாளர்களான ஹோட்டல் சர்வர், பேரூந்து நடத்துனர், திருவிழாக்காலங்களில் கரகாட்டம், ராசாராணி ஆட்டம் ஆடுபவர்கள், இசைகலைஞர்கள், தற்போதைய நிலையிலிருந்து சொன்னால் கல்யாண வீட்டில் புகைபடம் எடுப்பவர்கள் இவர்களைப்போன்ற சேவைத்தொழில் செய்பவர்கள் அன்றாட அவர்கள் படும்பாட்டை கூர்ந்து பார்த்தால் மன அழுத்தற்கான (stress management) தீர்வை அவர்களிடமிருந்தே பெறலாம். ஆனால் இந்திய அரசும் முதலாளித்துவ சிந்தனையாளர்களும் கூட்டுச்சேர்ந்து சிரிப்புச்சிகிச்சை, மூச்சு பயிற்சி, தியானம் எனச்சொல்லி அதற்கும் புடை சிற்பங்களையும், கல்வெட்டுக் குறிப்புகளையும் எடுத்து நம்மை ஆட்டி வைக்கிறார்கள். இப்படி ஆட்டி வைப்பவர்களே ஆட்சியாளர்களாகவும் இருப்பதால் இடசாரி சிந்தனைகள் சமூகத்தில் இருக்கும் அடிப்படை நம்பிக்கையில் ஊடுருவி புதிய கோட்பாடு போல் நஞ்சை விதைக்கிறார்கள். இப்படிப்பட்ட நஞ்சர்களே சமூகத்தை குறைத்து மதிபிட்டு தங்கள் தற்போதுள்ள சமூகத்தை விட நாங்கள் மேம்பட்டவர்கள் எனக்காட்டியும் கொள்கிறார்கள் அல்லது சமூகத்தை கொல்கிறார்கள்.
சமூகத்தை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் அரசியல்வாதிகளைப்போல் குறைந்தபட்சம் கட்டுப்பட்டது போலாவது நடிக்கப் பழகவேண்டும். இல்லென்றால் சமூகத்தில் அறியப்படும் நபர்களான உங்களை இச்சமூகம் கட்டுப்படுத்தும் வேலையை செய்துவிடும் என்பதற்கு எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களின் செய்தியே சான்று. 
சமூகத்தில் அறியப்படும் நபர்கள் புகை, மது பழக்கத்தைக்கூட பொதுவெளியில் செய்திடும் போது அது பலவித சமூகப் பாதிப்புகளை விளைவிக்கும் என்பதற்கும் பல்லாயிரம் எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. தனி மனித ஒழுக்கத்திற்கு சட்டம் போட்டெல்லாம் தடுக்க இயலாது. இதற்கு மானுடத்தன்மையை வளர்த்துக்கொள்வதே சாலச்சிறந்தது. 
எனது வாழ்க்கையில் நடந்த இரண்டு பெரும் சம்பவங்களே இதற்குச்சான்று. 
சம்பவம் 01; 
நான் 1996 காலங்களில் தினமலரின் நிருபராக பணியாற்றிய போது தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் வேளாண்மை போல் பயிரிட்டிருந்த கஞ்சா செடிகளை மறைந்து இருந்து படங்களை எடுத்தேன். அதை 'அழிக்க முடியாத கஞ்சா மலை' என்ற வால்போஸ்டர் செய்தியாக தினமலர் நிறுவனம் வெளியிட்டது, இந்த செய்தியின் அடிப்படையில் போதை தடுப்புப்பிரிவு காவல்துறை, மய்ய அரசின் கஸ்டம்ஸ், உள்ளூர் காவல் துறை, வனத்துறை ஆகியோர் சுமார் ஒருமாத காலம் முகாம் அமைத்து கஞ்சாவை அழித்தார்கள். கஞ்சா பயிரிட்டிருந்த பலரும் அரசுத்துறையினருக்கு லஞ்சம் கொடுத்திருந்தனர். இருந்தபோதும் கஞ்சா அழிக்கப்பட்டு பலர் மீது வழக்கும் பாய்ந்தது. இதனால் மூன்று பெண்கள் இரண்டு ஆண்கள் பூச்சிக்கொள்ளி மருந்தைக் குடித்து உயிரை மாய்த்தார்கள். இதனால் வெகுண்ட வருசநாடு பகுதி மக்கள் கஞ்சா அழிப்பு மற்றும் உயிர் இழப்பிற்கு காரணம் நான் தான் எனக்கருதி என்னை கத்தியா குத்தித் தாக்கினார்கள். எனது டிவிஎஸ் 50 வண்டியை தீயிட்டு கொழுத்தினார்கள். சமூக அமைப்புமுறை அறிந்ததால் இது குறித்து நான் காவல்துறையில் புகார் கொடுக்கவில்லை என்பதை எனது நண்பர்கள் அறிவார்கள். 
சம்பவம் 2 // 2012ல் ஜூவியில் நிருபராக பணி செய்த போது திரு.டி.டிவி தினகரனை ஒ.பி.எஸ் தம்பியின் ஆதரவாளர்கள் செருப்பால் தாக்கினார்கள். இதை படம் பிடித்த போது எனது கேரமாவை பிடிங்கி நொறுக்கினார்கள் என்னையும் தாக்கினார்கள். இது குறித்தும் நான் புகார் செய்யவில்லை. புகார் செய்தால் என்ன நடந்து விடும் என்பதை அறிந்த நபர்கள் சாமானியர்கள் மீது புகார் கொடுக்கும் போது அவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதை அறிந்ததால் நான் வழக்கு தொடுக்கவில்லை. மிகச்சாதரணமான ஆளான நானே பொதுமக்கள் மீது அக்கரையோடு செயல்படும் போது நாடறிந்த நபர்கள் 'நயத்தக்க நாகரீகமாக' நடந்து கொள்வதே சாலச்சிறந்தது.


Friday 14 June 2019

தமிழக வரலாற்றியல் ஆய்வுகளில் பொ வேல்சாமி

Pothi

                         தமிழக வரலாற்றியல் ஆய்வுகளில் பொ வேல்சாமி 

                                      -(ஒரு வாசகனின் பார்வையில்.)

Wednesday 12 June 2019

மன்னர் ஆட்சியில் நிலம் யாருக்கு சொந்தம்


                                           மன்னர் ஆட்சியில் நிலம் யாருக்கு சொந்தம்

                                          *****************************************+


திரைப்பட இயக்குனரும் குறிப்பாக பறையர் குலத்தினருக்கான குரலாக அறியப்படும் திரு. இரஞ்சித் அவர்கள் சோழ மன்னன் ராசராசன் காலத்தில் 'ஏழை எளிய மக்களை அல்லது பறையர் குலத்தினர் நிலங்களைப் பறித்து விட்டான். அக்காலத்திலே பெண்அடிமைத்தனம் இருந்தது' என  அவர் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியதுடன் காவல் துறை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கூர்ந்து கவனிக்கத்தக்கது வழக்கு தொடுத்தவர்கள் சங்பரிவார்கள் என்பதே கவனப்படுகிறது.

முதலில் மன்னர் ஆட்சியில் நிலங்கள் மக்களுக்கானதாக இருந்ததா?

தமிழகத்தில் விஜயநகர ஆட்சி அமைவதற்கு முன்பே பாண்டிய மன்னர்கள் சோழர்களின் சம்மந்த வழி அரசாகிய வடவர் என்றும் வந்தேறிகள் என்றும் வசவுக்குள்ளாகும் ஹொய்சாளர் என்ற போசாள மன்னர்கள் உதவியுடனும், இலங்கை அரசர்களின் உதவியுடனும் சோழர்களை அழித்தொழிதார்கள்.  இது பொது ஆண்டு 13 - 14.5 வரை என கணக்கிடப்படுகிறது. அந்தக்காலகட்டத்தில் மதுரை, திருச்சி தற்போதைய புதுக்கோட்டை பகுதிகளில் தலைமையிடமாக கொண்டு பாண்டியர்கள் ஆட்சி செய்தார்கள். அப்போதே சோழர் ஆட்சி சிதறி விட்டது என்பது வரலாறு.  பாண்டியர்களுக்கு முன்பே சோழர்களை காடவர், ஹொய்சாளர் சிறிதளவு காக்கதேயர்கள் பிடித்து ஆண்டார்கள் என்பது வரலாறு. இந்த நிலையிலே பாண்டிய மன்னர்களின் வாரிசு சண்டையால் தில்லி சுல்தான் வரை பஞ்சாயத்து போய் அவர்களிடம் ஆட்சியை இழந்து அதை மீட்க விஜயநகரத்தார் காலில் விழுந்து அவர்களின் சூழ்ச்சியால் பாண்டியர் ஆட்சி தனக்கு தானே மூழ்கியது. 


பேராசிரியர்கள் சாதாசிவப்பண்டாரம், நீலகண்ட சாஸ்திரி, சாமிநாத சர்மா, சீனிவாச்சாரி கே.கே.பிள்ளை, பண்மொழிப்புலவர் அப்பாத்துரையார்,  டி.வி மகாலிங்கம், பேராசியர் வின்செண்ட் ஸ்மித், ஆய்வாளர் சார்லஸ் ஆலன் போன்ற போன்ற வரலாற்று ஆய்வாளர்கள் அறிஞர்கள் சோழர் வரலாற்றை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்கள். இவர்கள் இருக்க கல்வெட்டு ஆய்வாளர்களான அறிஞர்களான இராமச்சந்திரன், சாந்தலிங்கம், நாகசாமி , தமிழ் இலக்கியத்துடன் வரலாற்றை பொறுத்தாய்வு செய்த பார்த்த தமிழண்ணல் வரிசையில் புலவர் பொ.வேலுச்சாமி, பா.ஜெயக்குமார் போன்றவர்கள் சோழர் கால சமூக வரலாற்றை செப்பனே எழுதியுள்ளார்கள்.

இவர்களின் நூல்களில் தனிப்பட்ட நபர்களுக்கு நிலம் இருந்தற்கான சான்றுகள் மிகக்குறைவாகவே குறிப்பிட்டுள்ளனர். காவிரி படுகையில் அமைந்த சோழ மணலம் முழுக்க முழுக்க காவிரி ஆற்றை வடகரை தென்கரையாகப்பிரித்தே நிலங்களில் உற்பத்தி செய்துள்ளதை குறிப்பிட்டுள்ளனர்இக்கரைகளில் வைணவத்தளங்களை விட சைவத்தளங்களுக்கே பிரம்மதேயம், சதுர்வேதி மங்கலம், மங்கலம், குடிமங்கலம், அக்ரகாரம், பிராமணச்சேரி என நிலங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலமும் அவர்களுக்கு நிரந்தரமாக வைக்க அனுமதியில்லை என்பதை கல்வெட்டுகளில் குறிப்பு உள்ளதை அறிஞர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். இந்த நிலங்களில் உழுதிடும் உழுகுடிகள் குத்தகை கொடுப்பதை வைத்தே நில உழவடை தீர்மானிக்கப்படுவதாக இருந்தது என்பதற்கு ''குடிநீக்கம், குடி மூழ்கி'' என்ற சொற்கள் இருந்தது என ஆய்வாளர்கள் விளம்புகிறார்கள்.  ஆக நிலங்கள் அனைத்தும் மன்னன் அல்லது பொதுவுடமை என்றே  சொல்லமுடியும் நிலையிலே நில உடமை அமைப்பு இருந்ததைப் புரிந்து கொள்ள முடிகிறது. இதனால் தான் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்த விஜயநகர ஆட்சியாளர்கள் முதன் முதலில் நிர்மானித்த பாளையப்பட்டு முறை தஞ்சை மண்டலத்தில் உருவாக்கவில்லை. காரணம் அங்கு ஏற்கனவே பாளையபட்டு தன்மையுடன் மடங்கள் குறிப்பாக சைவ மடங்கள் செயல்பட்டு வந்தன என்பதை தெளிவாக சுட்டிக்காட்டுக்காட்டுகிறார் புலவர் பொ.வேலுச்சாமி தனது நிலம் சாதி கோவில் நூலில். இவர்களைப்போலவே பிரெஞ்சு ஆய்வாளர் திரு. ஸ்டீபன் அவர்கள் தனது ஆய்வு கட்டுரைகள் பலவற்றில் குறிப்பிடுகிறார்.  இதை வைத்துப்பார்க்கும் போது நிலங்களை குறிப்பிட்ட குலத்தினரிடமிருந்து அபகரிப்பது என்பது சிற்சில நடந்தேறி இருக்கலாமே தவிர மொத்தமாக நடந்தேறி இருக்குமா என்பது அய்யப்பாடாகவே உள்ளது. இது குறித்து இன்னும் ஆய்வுகள் தேவைப்படுகிறது.

விஜயநகர ஆட்சியின் போதே தில்லி சுல்தான் பிரதிநிதிகள் ஆட்சியும் அதனை அடுத்து போன்ஸ்லே அதாவது மாரட்டிய மன்னன் சிவாஜி ஆட்சியும் தஞ்சையில் வந்தது. பிரிட்டீஸ் ஆட்சியில் எப்படி இசுலாமியர், சீக்கிய படைப்பிரிவுகள் தனித்தனியாக இருந்ததோ அதைப்போலவே போன்ஸ்லே ஆட்சியில் பறையர் குலப்படைகள் இருந்ததை திரு. ஸ்டீபன் சான்றோடு பதிவிட்டுள்ளார். ஆக பறையர் குலத்தினர் வேளாண் குடிகள் என்பதை விட படைப்பிரிவினராக இருந்திருந்தனர். அல்லது சோழர் பிரதிநிதிகளை எதிர்க்க போன்ஸ்லே மன்னர்கள் இப்படி ஒரு படைப்பிரிவை உருவாக்கி இருக்கலாம், படை மறவர்களாக இருந்ததால் அல்லது வேறு ஏதாதது காரணம் இருக்கலாம் என ஸ்டீபன் தனது கருத்தை வைக்கிறார். 

அடுத்து செஞ்சியை ஒட்டியுள்ள பகுதிகளில் பாணர் என்ற பிரிவு ஆட்சியில் இருந்ததற்கான சான்றுகள் பல நூறு கிடைக்கிறது, இவர்கள் பறையர் குலத்தினராக இருக்கலாம் என ஆய்வாளர்கள் சொல்லுகிறார்கள். இவர்கள் ஏன் ஆட்சி அதிகாரத்தை இழந்தார்கள் என்பதை திரு. இராஞ்சித் போன்றவர்களும், ஆய்வாளர்களுமே விளக்க வேண்டும். அரசு என்பது உற்பத்தி முறையை பெருக்க என்னென்ன வழிமுறைகள் இருக்கோ அனைத்தையும் செய்தாக வேண்டும் என்பதே உற்பத்தி விதி. இந்த விதியில் கூடுதலாக மீறல்கள் நடந்திருக்கும் சில இடங்களில் குறைவாக நடந்திருக்கும். மீறல் கூடும் போது அண்டை நாட்டு படையெடுப்பிற்கு மக்கள் உதவியிருப்பார்கள் இப்படி உதவியதாலே பல சாம்ராஸ்சியங்கள் ஆண்ட இடங்களுக்கு போக்கு வழி கூட இருக்கிறது என்பது நிகழ்கால வரலாறு. 

வரலாற்றை படிக்கும் போது தான் புதிய வரலாறு படைக்க முடியும். படிப்பதிலே குறைபாடும் அதை கொண்டு செல்வதில் பேராபத்தும் இருக்கும் போது புரட்சிக்கு பதிலாக புழுதிதான் பறக்கும் அதை திரைத்துறையினர் செய்து வருகிறார்கள். காரணம் இவர்கள் முதலாளிகள் கைப்பாவைகள் என்பதை நாடு அறிவும்.
 

பெண்கள்

பிரிட்டீஷ் ஆட்சியின் முடிந்த பின்னர் தான் தேவதாசி முறை முழுமையாக முடிவுக்கு வருகிறது. அதுவரை  தேவதாசி முறை என்பது சமூக மரபாக இருந்துள்ளது. இந்துஸ்தானிலிருந்து தக்கானம் அதாவது தமிழகத்தின் புதுக்கோட்டை அருகில் உள்ள குடுமியான்மலையில் மிகப்பெரிய நாட்டியப்பள்ளியிருந்ததாக கல்வெட்டு ஆய்வாளர் திரு. சாந்தலிங்கம் தனது குடுமியான்மலை நூலில் குறிப்பிடுகிறார்.  அதே போல் பிரிட்டீஷ் ஆய்வாளராகன இ.கிளமெண்ட் என்ற ஆய்வாளர் இந்தியக்கோவிகளை ஆய்வு செய்து அனைத்து கோயில்களிலும் தேவதாசிகள் ஆடல்கலையில் வல்லவர்களாகவும் ஆசிரியர்களாகவும் திருமறை அறிந்தவர்களாகவும்  இருக்கிறார்கள் என்பதை 1889ல் எழுதிய இந்திய சிற்பக்கலையில் நாட்டியம் என்ற நூலில் குறிப்பிடுகிறார். பிரிட்டீஷ் இந்தியாவில் தொல்லியல் துறையில் பணி செய்த கோபிநாத் ராவ் என்ற அறிஞர் எழுதிய இந்திய கோயில் சிற்பங்களும் நாட்டியமும் என்ற மூன்று வாலியூம் நூலில் சிலப்பதிகாரம் முன்பிருந்தே நாட்டியம் இருந்துள்ளது. இது கூத்து மற்றும் சதிராட்டமாகவும் மக்கள் கலையாகவும் இருந்துள்ளது என குறிப்பிடுகிறார். பேராசிரியர் சன்னாசி மற்றும் ஆ.சு போன்றவர்கள் தேவதாசிகள் பணி செய்திடும் கோயில் சிவ ஆலமாக இருந்தால் சூலமும் வைணவ ஆலயமாக இருந்தால் சங்கு சக்கரமும் மார்பு கால்களில் அச்சுபதித்துள்ள மரபு இருந்ததை சான்றுரைத்து அடிமை முறை இருந்தது என்பதை சாடுகிறார்கள். 

பேராசிரியர் அழகர்சாமி தனது ஆய்வு நூலில் தேவதாசிகளின் ஆளுமையையும், அவர்கள் இந்த நாட்டிற்கு செய்த தொண்டு குறித்து குறிப்பிட்டுள்ளார். பாண்டிச்சேரி அரசின் சின்னமே தேவதாசியை குறிப்பிடுவதாக ஆய்வாளர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளதை வைத்துப்பார்கும் போது சதிராட்ட மரபு என்ற பரதநாட்டியம் கலைவளர்ப்பிற்காகவும் கலைக்கானதாகவே இருந்துள்ளது. அதில் குறைபாடுகள் இருந்துள்ளது ஆய்வுதானே தானே முற்றிலும் பிழையானதாக கருத முடியுமா எனத்தெரியவில்லை. பிழையானதென்றால் அன்றைய கலைக்கூடாராமன கோயில்களைப்போலவே இன்றைய திரைத்துறையில் பெண்ணகள் உள்ளனர் அல்லது பெண்களை வைத்து சதிராட்டாமாக ஆடுகிறார்கள் என்பதை மறுக்க இயலுமா என்பது அவர்களுக்கே வெளிச்சம். 

முடிவுரை

திரு.இரஞ்சித் அவர்கள் மீது  வழக்கு தொடுத்தவர்களும் சகித்த அகதாமி விருது எழுத்தாளர் பேராசிரியர் பெருமாள் முருகன் மீது வழக்கு தொடுத்தவர்களும் ஒரே அமைப்பினரே. இதில்உள்குத்து இருப்பதாகவே விபரம் அறிந்தவர்கள் சொல்லுகிறார்கள். காலம் வெளிச்சத்திற்கு கொண்டு வரும் எதிர்பார்ப்போம்.


Tuesday 11 June 2019

சௌபா என்ற சமூக வரலாறு


                                    




                                                சௌபா என்ற சமூக வரலாறு
                                       **************************************
         பத்திரிக்கை வாசிப்பாளர்களுக்கு சௌபா, என்ற பெயரைக் கேட்டவுடன் ஜூவியில் தொடராக வந்த 'சீவலப்பேரி பாண்டி' என்ற கதையே நினைவுக்கு வரும். சௌபா ஒரு சாமானிய வேளாண் உழுகுடி குலத்தில் பிறந்து தனது எழுத்து வல்லமையால் 1985 கால கட்டத்தில் விகடன் பத்திரிக்கையில் மாணவ நிருபராக உள்ளே புகுந்து தனது இடத்தைத் தக்க வைத்தவன்.

விஸ்காஸ் என்ற பன்னாட்டு நிறுவனம், டானிரி இந்தியா என்ற பெயரில் மைய அரசு மலைகளில் மரங்களை வெட்ட, மரம் வளர்க்க அனுமதி பெற்றது. இவர்கள் இலங்கையிலிருந்து நாடு திரும்பியவர்களை (ரீ- பேட்டியாட்ஸ்) வைத்து கொடைக்கானல் மலையில் மர வளப்பும், மரம் வெட்டும் தொழிலை செய்தனர். காலப்போக்கில் இந்த நிறுவனம் இந்த மக்களை கொத்தடிமைகளாகக் கையாண்டது. இதை கண்டறிந்து இந்த மக்களை விகடன் நிறுவன உதவியோடு வெளியேற்றி இவர்களுக்கு நிலம் கிடைக்க வழிவகை செய்தான் சௌபா. அந்த இடமே இன்றைய குண்டுப்படியும், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள எல்லைப்பட்டி கிராமமும். 

விகடனில் இவன் எழுதிய முக்கியமான செய்தி சாயல்குடி ஜமீன்தாரைத் தவிர மற்றவர்கள் தரையிலே உட்கார்ந்து முகச்சவரம் செய்ய வேண்டும் என்ற சமூக சட்டத்தை அம்பலப்படுதியது. அடுத்து சிசுக்கொலை இந்தச் செய்தியை எல்லோரும் பெரிதாக சொல்லுவார்கள். இந்த செய்தியை மைய அரசே சொல்லி பிரபலப்படுத்தியது என்றே ஆய்வாளர்கள் சொல்லுகிறார்கள். காரணம் அந்த கால கட்டத்தில் பொதுவுடமை சிந்தனையாளர்களும், தமிழ் தேசிய சிந்தனையாளர்களும் முளைத்தனர். இவர்களை அரசு எந்திரம் ஒடுக்கி அழித்தது. இந்த செய்தி முதன்மை பெறக் கூடாது என்பதற்காக சிசுக்கொலை என்ற ஆயுதத்தை கையில் எடுத்து மக்களை மடைமாற்றம் செய்தது அரசு. இருப்பினும் இந்த செய்தியும் சௌபாவுக்கு பெரும் புகழை கொடுத்தது. 

இந்த சூழலில் விகடன் முதலாளி திரு. பாலசுப்பிரமணியம் அவர்கள், மதுரை அருகில் நிலம் வாங்கினார். அந்த நிலத்தை தனது மாணவ நிருபரான சௌபா பெயரிலே வாங்கியதே சிறப்பு. அதனைக் கவனித்து விகடன் நிருபராக இருந்த சௌபா எழுத்துப் பணியிலிருந்து விடுபட்டு விகடனின் பத்திரிக்கை முகவராக வலம் வந்தார். அந்த காலத்திலே இவருக்கு உதவிய நண்பர்கள் நட்பும், அதன் வழியில் ஏற்பட்ட காதல் திருமணமும் நடந்தது. 

இக் காதல் மனைவியின் சொந்த ஊர் அருகில் சீவலப்பேரி பாண்டி என்பவரின் வாழ்வை ஜுவியில் தொடராக எழுதினான் செளபா. இது இவனுக்கு பெரும் புகழையும் பெரும் நட்பையும் தேடிக் கொடுத்தது.

சீவலப்பேரி பாண்டி திரைப்படத்தை தெலுங்கு மொழியில் இவரது அனுமதியில்லாமல் வெளியிட்டனர். இதை விகடன் நிறுவனமே வழக்கு நடத்தி அன்றைய காலத்தில் சுமார் 5 லட்சம் சன்மானமாக பெற்றுகொடுத்தது. இந்த தொகையை மூலதானமாக வைத்து சிறுமலை அடிவாரத்தில் சுமார் 15 ஏக்கார் பரப்பளவில் காடு வாங்கி அதில் மரங்களை நட்டு தனது வாசத்தைத் துவங்கினான் சௌபா.

விகடன் நிறுவனம் இவரை முழுமையாக கலட்டி விட்டது. தனது உயரிய நண்பர்கள் உதவியோடு பத்திரிக்கையாளராக சமூக பார்வையாளராக வலம் வந்த சௌபாவை ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தினார்கள் உயர் காவல் துறை அலுவர்கள். 2001 தேர்தலில் சௌபாவை, ஜெய தொலைகாட்சி நிறுவனம் முழுமையான இவனது மூலையைப் பயன்படுத்தியது. 2001 தேர்தல் வெற்றிக்கு இவரது கமுக்க (விடுதலைபுலிகளுக்கு திமுக சதி வேலை செய்ததாகவும், வேதாரயத்தில் விவசாயி தற்கொலைக்கும் திமுகவே காரணம் என்ற தேர்தல் விளம்பர படம், அதே போல் காயித ஓடம் கடலை மேலே மூவரும் போவோம் என்ற கருணாநிதி அவரது மனைவிகள் ஓடத்தில் போவது போன்று கட்சி அமைக்கப்பட்ட கேலி சித்திர வேலைப்பாடு படம் இவரின் மூலையே. இவனை நம்பிய செல்வி - ஜெயலலிதா ஜெய தொலைக்காட்சியில் பணி செய்யாத பணியாளராக நியமித்து மாதந்தரமாக 50000 வழங்கினார். இந்த சம்பளத்திற்கு 'இன்று' என்ற தொகுப்பு இவரை இன்னும் ஜெய நிறுவனத்தில் முதலாளி நிலையில் இருந்த தினகரனுக்கு நெருக்கத்தை கொண்டு சென்றது. இதனை முழுமையாக பயன்படுத்திய சௌபா தென் மாவட்டங்களில் வேட்பாளர் தேர்வு செய்தது இவரே என்பது அவரை அறிந்த நண்பர்கள் அறிவார்கள். இதன் ஏற்கனவே விகடன் மூலம் கிடைத்த திரைவுலக நண்பர்களை வைத்து படம் எடுக்க அல்லது படத்திற்கு கதை கரு மாற்றம் உள்பட பணிகளை செய்து வந்ததுடன் அதிமுக அரசின் அறிவிக்கப்படாதா மாநிலம் தழுவிய பி.ஆர்.ஓவாக வலம் வந்தார். இதானால் இவருக்கு பல கோடிகள் கிடைத்தது. கடைசியாக நடந்த ஆர்.கே நகர் தொகுதியில் ஆளும் கட்சியை தோற்றகடித்த 'உசசாரய்யா உசாரு' என்ற பாடலை ஒளிப்பதிவு செய்து திகனரனுக்கு வெற்றியை ஈட்டிக்கொடுத்தார் என்பது அவரை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும்.

இந்த நிலையில் தனது மனைவியுடன் பிரிந்து இருந்தாலும் மகனை திரைத்துறை நட்சத்திரமாக்க முயற்சித்தார். அதன் விளைவு தான் அவன் கொலையாளியாக வலம் வந்ததும் இவரை கொலையாளி சூழலுக்கு தள்ளியதுமே. சௌபா 54 ஆண்டு கால வாழ்க்கையில் அவர் தன்னைத்தானே கொலையாண்டார் என்றே சொல்ல வேண்டும்.

நான்கு தினக்கு முன்பு தேவேந்திர குல வேளாளர் அமைப்பு செயல்பாட்டாளர் டாக்டர் சிவமணி 'சௌபா மிகவும் மோசமான இருக்கிறார்' எனச்சொன்னார். மனதளவில் சௌபாவை சந்திக்கக்கூடாது என இருந்த எனக்கு அவரை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. மதுரை ராசாசி மருத்துவமனைக்கு இரவில் போய் வார்டு எண் 202ல் பார்த்தேன். சௌபா சிரித்தார்.
 
அவரிடன் 'அண்ணே நீ மரணத்தைத் தழுகொண்டிருக்கிறேன்ணே' என மனதில் பட்டதை பட்டென சொன்னேன். அதற்கும் சிரித்தார். இருவரும் மௌனத்தாலே பேசினோம். எனது மனதிற்குள் நான் யாதவர் கல்லூரியில் படிக்கும் (1985 - 1988) போது சந்திக்க வேண்டும் என முயற்சித்து சந்திக்க இயலாமல் போனது, 1992 மூத்த எழுத்தாளரும் அப்போதியய ஜூவி நிருபராக இருந்த எனது மதிப்பிற்குறிய அய்யா ஜே.வி நாதன் மூலமாக அறிமுகக் கடிதம் கொண்டு வந்து வடக்குமாசி வீதி சந்திப்பில் அவரது இல்லத்தில் சந்தித்தேன். அதன் பின்னர் நான் விகடனின் எழுதிய கட்டுரைகளுக்காக அவர் என்னை விமர்சிப்பதும், பாரட்டுவதுமாக தொடர்ந்த நட்பு, 'எனது சிசுக்கொலை செய்தியை விட உன்னோட 'பிள்ளைகள் கையால் பெற்றோர் பரலோகம்' என்ற முதியோர் கொலைச் செய்தி படுபிரபலம் எனப்பாராட்டியதில் நெருக்கம் கூடியது. கம்பளத்து நாயக்கர் ஆடும் தேவராட்டத்தில் கையில் துண்டு இருப்பதற்கு பதிலாக கத்தி வைத்து ஆடினால் இன்னும் அந்த ஆட்டத்திற்காக சிறப்பு கூடும் என சொல்ல அதை செயல்வடிவம் ஆக்கினான் சௌபா. இந்த நெருக்கம் ஒவ்வொரு குலத்திற்குள்ளிருக்கும் பெருமைகளை குறும்படமாக்க ஆக்கிட முயற்சித்து ஆலோசித்தது போன்ற நினைவுகள் என்னை முழுமையாக ஊமையாக்கியது. (இதுவே எனது சுளுந்தீ நாவின் அடிநாதம்) அவரது தோட்டத்திற்கு போகும் போதெல்லாம், அவர் குடித்துக்கொண்டு 'டே தம்பி நீ குடிக்கலேன்னா நல்லவன் என நினைக்காதே, குடிக்கிற நாங்களெல்லாம் கெட்டவன்னு நெனைக்காதடா'  என்ற அவருடனாக உரையாடல் நினைவுகள் என்னை கல்லாக்கியது. நான் எதற்கும் அழுகத்தெரியாவதன் என்பதால் கல்லாக மனதுடனே நினைவுகளில் இருந்தேன். இதற்கு மேல் பேசிட ஒன்றும் இல்லை என முடிவெடுத்து 'நான் விடை பெறுகிறேன்ணே' என்றேன். அதற்கும் மெல்லிதாக சிரித்தார். 'இந்தக் குற்றச்சாட்டிலும் நாம் மரணிக்காவிட்டால் சமூக குற்றவாளி பட்டியலில் சேர்க்கபடுவோம்ன்ணே'' என்றேன். அதற்கு அவர் மௌனமாகச் சிரித்தபடி என்னைப்பார்த்தார்.

'கொலையை நீ செய்யாவிட்டாலும், செய்தாலும் நான் உன்னை ஏற்கிறேன்' என்றேன் என்றேன். 'நீ பாசக்காரண்டா' எனச்சொன்னார். அதற்குமேல் பேச விடாமல் வார்டனாக இருந்த காவலர்கள் 'போகலாம்' என கண் அசைத்தார்கள். நான் அங்கிருந்து விடை பெற்றேன். இரண்டு தினங்களில் விடைபெற்றான் சௌபா.

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...