Search This Blog

Friday 30 August 2019

சுளுந்தீ நாவல் ; வரலாற்றின் மீதான சிறப்பான பதிவுகளை தரவுகளின் அடிப்படையில் பேசுகிறது .

                                         சுளுந்தீ நாவல் மதிப்பீடு 
 M M Deen

சமீபத்தில் வந்த #பாக்சிங்ஹிட் நாவல் சுளுந்தீ என்றால் மிகையல்ல. இன்றைய நுட்பமான வாசகர்கள் கவனத்தில் நிற்கும் நாவல். அடர்த்தியான சொல்லாடல்களால் ஒரு காலகட்டத்தின் பன்முகத்தை அப்படி #ஏவி யாகப் (திரைக்குறும்படமாக) போட்டுக் காட்டுகிறார்.

#சுவெங்கடேசனின் #காவல்கோட்டம், #பூமணியின் #அஞ்ஞாடி வரிசையில் தன்னையும் நிலைநிறுத்திக் கொள்கிறது. உடைந்து போன நாயக்க ஜமீன்களின் மிச்சமான வாழ்க்கையை மையப்படுத்திப் பேசுகிறது. கன்னிவாடி ஜமீன் சிதிலமடைந்து கிடக்கிறது. அங்கு கடைசி வாரிசாக இருக்கும் #அய்யப்பநாயக்கரிடம் பேட்டி காணச்சென்ற போது அரும்பிய கதை என்கிறார் நாவலாசிரியர்.

#அழகுமுத்துக்கோன் வாழ்ந்த கட்டாலங்குளம் ஜமீனைப் பார்க்கச் சென்றது ஞாபகத்தில் வருகிறது. அந்த சிதிலமடைந்த அரண்மனையில் #சின்னச்சாமிசேர்வை ஜமீனின் கடைசி வாரிசு வாழ்ந்து வருகிறார். ஜமீனாக இருந்தற்கான அடையாளமாக ஒரு கொற்றக்குடை, சில துருப்பிடித்த வாள்கள், சில பாத்திரங்கள் டிரங் பெட்டிகள் மட்டுமே எஞ்சியிருந்தன.

#தொப, #முல்லை.ச. முருகன்,, நான் எனது இளவல் மேத்தா எனச்.சென்றோம். திரும்புகையில் எங்கள் கண்கள் கலங்கியது மட்டும்தான் மிச்சமாக இருந்தது. அது போலவே, இரு நூற்றாண்டுகளுக்கு முன்னான வாழ்வை அங்குலம் அங்குலமாக தீட்டி எழுத்தில் வடித்துள்ளார். இத்தனை அடர்த்தி அசாத்தியமானது. மிக அதிகமாக சித்த மருத்துவ குணபாடங்களை பேசுகிறது நாவல். எந்த இடத்திலும் வரலாற்றின் மேலான சிறப்பான பதிவுகளை தகுதியான தரவுகளின் அடிப்படையில் பேசுகிறார்.

பொடவு, கிணிங்கிட்டி, சாட்டல், குலவிலக்கம், புடம், மர்மஸ்தான சவரம், வாகட விபரம், குணபாட நூல்கள், என புதிய சங்கதிகளை விலாவாரியாகப் பேசுகிறார். முதன்முதலில் இட்டலியை ரெட்டிமார்கள் விற்றார்கள் என்பதில் வியப்பு இருப்பினும் இட்லி தமிழ் நிலத்தின் பண்டைய உணவு என்பது எனது எண்ணம். சொல்லியுள்ள விதம் சிறப்பாக உள்ளது. வண்டுகட்டி ஒற்றை இட்லி அவித்து சாப்பிடும் வழக்கம் குறித்து நானே அறிந்திருக்கிறேன்.

பண்டுவர்கள் குறித்து எனது நண்பர் சொல்லிய நெல்லை செய்திகள் நாவலில் இல்லை. அதுவும் சரியானதுதான். அவையெல்லாம் பிந்தைய காலத்து செய்திகள் தாம். நேற்று #பேராவேமாணிக்கம் அய்யாவுடன் பேசிய போது அவர் நாவிதர்கள் அனைத்து சடங்குளையும் முன்னின்று செய்தவர்கள். அவர்களுக்கு மரபான அனைத்து சடங்குகளிலும் முன்னுரிமை உண்டு என்றார். அதுவும் பிந்தைய கால நிகழ்வுகள்தான். ஆயினும் இந்த நாவல் தேனி மாவட்டத்தை அப்போதைய மதுரை மாவட்டத்தில் நிகழ்வன.

கன்னிவாடியைச் சுற்றியுள்ள அனைத்து கிராமங்களும் மலைகளும் ஆறுகளும், பொடங்குகளும், ஓடைகளும் மரங்களும், சீவசந்துகளும் நாவல் முழுக்க நிறைந்து இருக்கிறது. எது குறித்தும் அனைத்து விபரங்களையும் முன் வைக்கும் வேளையில் நாவல் ஆய்வேடாக மாறி விடுகிறது. மற்றபடி இப்படி ஒரு நாவலை அதுவும் முதல் நாவலாக எழுதியுள்ளமை அவரின் மேன்மைத்துவத்தை தெளிவாகக் கட்டியம் கூறுகிறது.

நாவலில் அந்தக் காலத்து சிரைத்த தலைகளைப் பற்றிப் பேசுவது கூட வியப்பாக இருக்கிறது. நீண்ட கால முயற்சி, வாசிப்பு, பயணம் என கடும் தவத்தோடு எழுதி இருக்கிறார். #பாலாகருப்பசாமி சொல்லியபடி பேசிக் கொண்டே போகலாம். அது நிறைவுராது. இந்த நாவல் தமிழ்ப் புதின வரலாற்றில் முக்கியமான நாவல். பெரும் விருதுகளையும், பட்டங்களையும் நாவலாசிரியருக்கு வாங்கிக் கொடுக்கும் என்று தீர்க்கமாக நம்புகிறேன்.
நன்றி நாவலை வாசிக்கத் தந்த பேரா. #கண்ணாகருப்பையா சார் அவர்களுக்கு.
வாழ்த்துக்கள் #இரா. #முத்துநாகு சார்.

நுலதிகாரம் ; சுளுந்தீ - அறிஞர் வேலுசாமி

          



               'சுளுந்தீ நாவல் - தமிழ் அன்னையின் “மணிமுடிக்கு ஒரு வைரம்'
                                                அறிஞர் பொ.வேலுசாமி




             




அண்மைக் காலத்தில் ( டிசம்பர் 2018 ) வெளிவந்து பலராலும் பேசப்படுகின்ற ”சுளுந்தீ” நாவல் இதுவரை வெளிவந்துள்ள தமிழ் நாவல்களின் வரிசையிலிருந்து பெரியளவில் வேறுபட்ட தன்மையுடையதாக உள்ளது. தமிழ் மரபிலிருந்து கிளைத்து எழுந்த நவீன படைப்பாக இந்நாவல் உருவாகியுள்ளது. இந்த நாவலுள் பேசப்படுகின்ற பல செய்திகள் புதுமையானவையாக உள்ளன. அதே நேரத்தில் அவைகள் அனைத்தும் தமிழ்ச் சமூகத்தில் காலம் காலமாக உள்ள விசயங்கள்தான். இத்தகைய விசயங்கள் எவையும் ஒரு படைப்பிற்குள் இதுவரை பேசப்படவில்லை. அப்படி ஒரு சிலரால் ஒரு சில விசயங்கள் பேசப்பட்டு இருந்தாலும் அது ஒரு ஆய்வாக வெளிவந்ததே தவிர ஒரு படைப்பாக உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


கடந்த காலங்களில் நாவிதர்களின் சமூக செயல்பாடுகளை ஒரு படைப்பிற்குள் அடைக்கிப் பேசுவதின் வழியாக அக்காலக்கட்டத்து தமிழ்ச் சமூகத்தில் வாழ்ந்த சாதிகளின் பல்வேறு முகப்பாவங்களை எழுத்தோவியமாகத் தீட்டிக் காட்டுகின்றது. நாவிதர்களின் வாழ்க்கை என்பது இவ்வளவு பரந்த தளத்தில் செயல்பட்டுள்ளதை இந்த நாவல்களில் வருகின்ற ராமன் என்ற பாத்திரத்தின் வழியாக ஆசிரியர் படைத்துக் காட்டுகின்றார். மிகவும் அற்புதமான மருத்துவ விளக்கங்கள் மட்டுமல்லாது நாவிதர்கள் எப்படி அன்றைய அரசாங்க சூழ்ச்சிகளில் கொலையாளிகளாக செயல்பட்டார்கள் என்ற அதிர்ச்சியான வரலாற்று உண்மையை தன்னுடைய கதைப் போக்கினூடாக நமக்கு உணர்த்துகின்றார். இப்படியாக நம் கவனத்தில் படாத பல்வேறுபட்ட முக்கியமான வழக்கங்கள் வாழ்க்கைப் போக்கில் செயல்பட்டு வந்ததை மிக அழகான படைப்பு மொழியில் வெளிபடுத்துக்கின்றார். ஒரு இடத்தில் கூட இப்படியான அதிசயமான செய்திகளை ஆசிரியர் கூற்றாக வைத்து படைப்பை சிதைக்கும் நிலை இந்த நூலில் இல்லை. கதைப் போக்கில் பாத்திரங்களின் உணர்ச்சியுடன் கலந்து இத்தகைய செயல்கள் கூட கதைப்பாத்திரம் ஒன்று போல படிப்பவர்களுக்குத் தோன்ற செய்யும் ஒரு படைப்புத் திறன் என்பது இந்த நாவலில் தொட்ட இடமெல்லாம் துலங்குகிறது. இந்த நாவலில் உலகின் மற்ற மொழிகளில் மொழிபெயர்த்தால் இதுவரை தமிழகம் பற்றி அறியாத அரிய பல விசயங்களைப் படைப்பினூடாக நுகர்ந்து இன்புறும் வாய்ப்பு அவர்களுக்குக் கிட்டும். தமிழக வரலாறு, பண்பாடு பற்றிய பல செய்திகளை மேல்நாட்டவர்கள் ஏற்கனவே ஏராளமாக எழுதிவிட்டார்கள். அவர்கள் கண்ணிலும் படாத பல்வேறு தமிழ்ச் சமூக நிகழ்வுகளை ஒரு படைப்பாக மாற்றி அதிசயம் புரிந்த ”சுளுந்தீ” வருங்காலத்தில் ஒரு தமிழ்ப் படைப்பாக சுடர்விட்டு ஒளிரும்.

Monday 26 August 2019

பிணத்தில் தொற்றியிருப்பது மநூ ஸ்மிருதியா? குல வெறியா ?


             

                      பிணத்தில் தொற்றியிருப்பது மநூ ஸ்மிருதியா?   குலவெறியா ?

                          ஈ.வெ. இரா. பெரியார் தோற்கிறாரா? இலெனின் எழுவாரா ?


                  வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள நாராயணபுரத்தை சேர்ந்த பட்டியல் குழுவை சேர்ந்தவர் பிணத்தை ஆதிக்க குடிகள் தெரு அல்லது பொதுப்பாதை ? வழியாக செல்ல தடை // இதே பிரச்சனையை முன்வைத்து 'குடிதாங்கி' என பட்டம் பெற்றார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் மருத்துவர் திரு. இராமதாசு. இது போன்ற பிரச்சனைகள் நேற்று இன்றல்ல பல்நெடு ஆண்டுகளாக நடந்து வந்துள்ளது. இந்த நிகழ்வினை வைத்து மூத்த எழுத்தாளர்கள் / பட்டியல் (தலித்) எழுத்தாளர்கள் / பொதுவுடமை எழுத்தாளர்கள் பலரும் 'இங்கதான் பெரியார் தோற்கிறார் / தோற்றார்' என எழுதினார்கள். 

                                    பிணத்தில் தொற்றியிருப்பது சாதியா ? அல்லது மநூஸ்மிருதியா?
 
                    தேனி மாவட்டம்  பெரியகுளம் வட்டச்சியர் (தாலுகா) எல்லையில் உள்ள தேவதானப்பட்டி. இங்குள்ள மூங்கிலாறு காமாட்சியம்மன் கோவில் 16ம் நூற்றாண்டில் நாயக்க அரசர்கள் காலத்தில் மநு தர்மத்தை கட்டிக்காக்கும் இடமாக இருந்துள்ளது. இந்தத் தேவதானப்பட்டியில் குடும்பமார் என்று மக்களால் அறியப்படும் பள்ளர் குலத்தினர் (சாதி) பிணத்தை வள்ளுவர் என மக்களால் அழைக்கப்படும் பறையர் குலத்தெருவில் தூக்கிச்செல்லக்கூடாது என எழுந்த பிரச்சனை, கலவரம் தீவைப்பு நடந்தது. இந்தப்பிரச்சனை 18ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட மன்னர் சொக்கநாதநாயக்கர்  முன் பேசப்பட்டு இரு சமூகமும் இராசியாக போகவேண்டும் என்றும் வள்ளுவர் தெருவில் பிணம் போகலாம் என செம்புபட்டையம் தீட்டி வழங்கப்பட்டுள்ளது (பார்க்க ; மதுரை நாயக்கர் செப்பேடுகள் தொகுதி)
இதே காலகட்டத்தை ஒட்டியே இராமநாதபுரம் அரச எல்லையான சிராவயல் மற்றும் கண்டரமாணிக்கம் பகுதியில் இடையர் குலத்தினர் மறவர் தெருவில் பிணம் தூக்கிச்செல்லக்கூடாது என்ற பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்ட செப்பேடுகள் வெளியிட்டப்பட்டுள்ளன (பார்க்க; சேதுபதிகள் செப்பேடு தொகுதி) .இது போன்று பல நிகழ்வுகள் வழக்காறுகளாக இன்றும் உள்ளதை மானுடவியல் அறிந்தவர்கள் தெரிந்த செய்தியே.




சொந்த குலத்தினர் பிணம் செல்லும் பாதையில் அடுத்த குலத்தினர் பிணம் போவதில் என்ன பிரச்சனை உள்ளது. இதை பொத்தாம் பொதுவாகப்பார்த்தால் நமக்கு குல ஆதிக்கம் மட்டுமே மேலோங்கி தெரிகிறது. ஆனால் அதற்குள் மநு ஸ்மிருதி அல்லது கிராம தெய்வ நம்பிக்கைகள் வெளிவராமல் புதைந்து முடநாற்றமெடுப்பதை நுகரமுடியும். 

கிராமங்களில் மட்டுமல்ல படித்தவர்கள் வாழ்வதாகவும் நாகரீக மனிதர்கள் வாழும் இடம் என அறியப்படும் நகரத்திலும், குழந்தை பிறந்த வீட்டில் வருடம் திரும்பாமல் அல்லது முப்பது செல்லாமல் கை நனைக்க (சாப்பிட) தண்ணீர் குடிக்க மாட்டார்கள். அதே போல் சடங்கு என்று கிராமத்தில் அழைக்கப்படும் பூப்பெய்த பெண்கள் வீடுகளில் முப்பது செல்லாமல் தண்ணீர் குடிக்கவோ, சாப்பிடவோ மாட்டார்கள். இதையெல்லாம் தாண்டி இறந்தவர்கள் வீட்டில் கை நனைக்க மாட்டார்கள். இதைவிட கொடுமை கிராமத்து பூசாரிகள் சாமியாடிகள் ஊரில் யார் இறந்தாலும் இழவுக்கு போகமாட்டார். பிணம் தூக்கி வரும் போது அவர் கண்ணில் படக்கூடாது என்பதற்காக அவருக்கு இத்தனை மணிக்கு தூக்குகிறோம் என்ற தவவல் கொடுப்பார்கள். இது குறிப்பிட்ட குலத்தினருக்கும் மட்டும் உள்ள பழக்க வழக்கம் இல்லை அனைத்து குலங்களுக்கும் பொதுவானவை. இவையெல்லாம் எதற்காக? என்ற கேள்வி எழுகிறது.


'பிணத்தைத் தொடுவதில் துவங்குகிறது மருத்துவத்தின் வளர்ச்சி, பிணத்தின் முகத்தில் விழிக்கக்கூடாது என்பதில் துவங்குகிறது அறிவியலில் வீழ்ச்சி'' என பொதுவுடமை கருத்தியலின் முன்னோடி ஆய்வாளர் இந்திய சமூகங்களின் கூறுகளை ஆய்வெடுத்த தேவி பிரசாத் சட்டோபாத்யாயா 60 ஆண்டுகளுக்கு முன்பே எழுதியுள்ளது அவரது காலத்திற்குறியதல்ல. ஆண்டாண்டுகாலமாக விஞ்ஞானத்திற்கு எதிராக உள்ள கற்பானாவாதிகள் தங்களது பரப்புரையை மக்களின் உயிரில் அவர்களது உடமையில் வைத்து நம்பிக்கையை ஊட்டி வளர்த்து வந்துள்ளார்கள். அதன் வெளிப்பாடுதான்  'சாவு வீட்டில் நான் சாப்பிட மாட்டேன், சடங்கு வீட்டில் சாப்பிட்டால் தலைவலி விடாது' என்பது.

சாவு வீட்டில் பார்ப்பனரை அழைத்து பூசை செய்தால் கெட்ட ஆவிகள் போய்விடும் என்பதும் இறந்தவர்கள் ஆவி எந்த தொல்லையும் கொடுக்காது என்பதை நமக்குப் புகட்டி கட்டிக்காக்கப்படுகிறது.  இதை உடைத்தவர்களின் கணிசமான பங்கை வைத்தவன் தானே ஈ.வெ.இரா என்று அழைக்கப்படும் தந்தை பெரியார். இப்படியான் மூட முட நம்பிக்கையை உடைக்க நாம் என்ன பாடுபட்டோம் என்பதை விட இந்த நம்பிக்கையைக் கட்டிக்காக்கும் கூட்டத்திற்கு துணையாக பங்காற்றியவர்கள் யார்யாரெல்லாம் என்பதை அறிந்து அப்புறப்படுத்த வேண்டிய கடமையை நாம் தவறிவிட்டோம் என்பதை நாமே மறந்து பெரியார் அங்கே தோற்றார் இங்கே கவுந்தார் எழுதுவது என்ன மாதிரியான ஆய்வுகள்.

இறந்தவர்கள் உடலில் ஆவி தங்கி இருக்கும். அந்த ஆவி நல்ல ஆவியாக இருக்கவே இருக்காது என்பதால் செத்தவனை தூக்கிச்செல்லும் போது கடுகு, பொரி போன்றவற்றை சுடுகாடு அல்லது புதைகுழி வரை விதைத்து செல்லும் பழக்கம் உள்ளது. அந்த ஆவி இரவில் திரும்ப வருமாம். அப்படி வரும் போது அதிக கடுகு பொரி இருந்தால் பொறுக்கிக்கொண்டே வரும் போது விடிந்து விடுமாம். விடிந்து விட்டால் அந்த ஆவி தான் வாழ்ந்த வீட்டுக்கு வராதாம். இதனால் அதிக கடுகு போடுவது இன்னும் வழக்கமாக உள்ளது.

ஆவி நம்பிக்கை எந்த குலத்திற்கு தனி சொத்து அல்ல. பிணத்தை தூக்கிச்செல்வதால் ஆவி அந்த தெருவில் துர் மறணத்தை தரும் என்ற நம்பிக்கையில் விளைவாகவே முதலில் தடுக்கப்படுகிறது. அடுத்து குல ஆதிக்கம். 'பறையர், பள்ளர், மாதாரி குலத்தினரோ தங்களை விட கீழாவர்கள் என்பதால் அவர்கள் பிணம் நமது தெருவில் வரக்கூடாது' என்ற ஆதிக்கம் மேலோங்கும். இதில் கவனிக்கப்பட வேண்டியது ஆதிக்கம் என்பதை விட பயத்தின் வெளிப்பாடாக தற்காத்துக்கொள்ள எழுதுவது என்பதையும் கவனிக்க மறந்து விடவேண்டாம். 


மாதாரி (சக்கிலியர்) குலத்தினர் தெருவில் பள்ளர் குல பிணம் போனதை தடுத்த பதிவுகள் உள்ளன. வன்னியர் குல பிணம் ரெட்டியார் தெருவில் போனதை தடுக்கத்த பதிவுகள், மறவர் குல பிணம் நாயக்கர் தெருவில் போனதை தடுத்த பதிவுகள் உள்ளன. இதில் இருபிற்படுத்தப்பட்டோர்களுக்குள் என்பதால் அந்தப்பதிவுகள் புறந்தள்ளப்படுகிறது அல்லது பார்க்க மறுக்கப்படுகிறது. ஆனால் சாவு பிணம் என்பது ஆவி பயத்தால் என்பதை மட்டுமே தடுக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளுக்குள் உள்ளது அது குல ஆதிக்கமாக பண ஆதிக்கமாக அரசியல் ஆதிக்கமாக வெளிப்படுகிறது. 

                  பொதுவாக மனிதன் சரசரியாக 60 முதல் 70 வயது வாழ்ந்தால் போதுமென நினைக்கிறான். ஆனால் அதற்குள் நோயின் தாக்கம் அதிகரிக்காது வாழ்ந்தாலே போதுமானது என்பது எல்லோரும் பொதுவாக ஏற்றுக்க்கொண்ட நியதியாக கேட்க முடிகிறது. ஆனால் சாவு என்ற பயத்தை நாம் சுமந்து தலைமறை முறையாக நிற்பது எது?, நம்மிடம் கற்பிக்கப்பட்ட பிணம், ஆவி, பேய், பிசாசு என்ற மநுஸ்மிருதிகளும், கிராமக் கதைகளும், கிராம தேவதைகளின் பூசாரிகளும் அவர்கள் ஊட்டிய நம்பிக்கைகளும். இதை பொட்டியில் கட்டி காவல் காக்கும் தலைமை பீடங்கள் எது என்பதை புரிந்து கொண்டால் பெரியாரும், சிங்காரவேலரும், பூலேவும், அம்பேத்காரும் தோற்கவில்லை எனப்புரியும்.

                                                                                 சிலை
                   கடவுள் அதன் நம்பிக்கைகள் என்பது குறியீடாக விளங்குபவை சிலைகள். இந்தச் சிலைகளுக்கு வலிமையையும் அதனுள் கருஉருக்கொள்ளுதலை உருவாக்கிட, பொதுவெளியில் பூசை செய்திடும் உரிமையை பொதுஆண்டுக்கு பின் (கி.பி) 2 அல்லது மூன்றாம் நூற்றாண்டிலே ப்பிராமணர்கள் பெற்றதற்கான சான்றுகள் உள்ளது (கவனிக்க; பேராசியரிகள் டி.டி.கோசாம்பி கே.எல்.பாஸ்யம் மற்றும் ரொமிலா தர்பார் ஆகியோரின் இந்திய வரலாறு) . இப்படியாக ஒருபக்கம் சிலைகளுக்கு உயிர் கொடுக்கும் விதமே இன்று குடமுழுக்காக கோயில்களில் அன்றாட நடக்கும் எட்டு ஆறு மற்றும் ஒரு கால பூசையாக, கிராமங்களில் ஆண்டுக்கு ஒரு முறைமுறையும் அல்லது அவ்வப்போது நடக்கும் காவு பூசை அல்லது கொடை விழாக்கள் என்பதை கவனத்தில் கொள்க.

                  இதன் தாக்கமே கொள்கைக்காக போராடி மாண்ட & இறந்த தலைவர்கள் உருவங்களை சிலையாக வைத்து அவர்கள் கொள்கைகளை கடைபிடிக்க நாம் கூடி பரப்புத்து சுளுரை ஏற்கிறோம். அந்தச்சிலைகள் கோவில்களில் இருக்கும் சிலைகளைப்போல் வரலாற்றை சுமந்து இருப்பவை என்பது யாவரும் அறிந்ததே. 


                 ஐரோப்பிய கண்டத்திலும் மத்திய ஆசிய நாடுகளில் புரட்சியாளன் இலெனின் சிலைகள் நிறுவப்பட்டது. அவைகள் கடந்த சில ஆண்டுகளாக தகர்க்கப்பட்டு வருவது கொள்கைகளை நாம் மக்களிடம் கொண்டு சென்று அவர்களை திணித்து விட்டோமோ ? என்ற பார்வையிருந்தாலும், தனியார்மயத்தன்மையை கட்டிக்காக்கும் உலக முதலாளிகளின் கூட்டமைப்பாக விளங்கும் தனியார் வங்கியான உலக வங்கி, நமது ஊர் காளி சிலையின் கரங்களைப்போல் பல நூறாயிரமாக உலக முழுவதும் பரப்பி சுழன்று சுற்றி வருகிறது.

                  உலத்தில் பல மொழி இனங்கள் இருந்தாலும் முதலாளித்துவ தத்துவத்தின்படி அனைவருக்கும் ஒரே மாதிரியான பொருள்களை மட்டுமே உற்பத்தி செய்வார்கள். இதில் அந்தந்த நாட்டு மக்கள் படிக்கும் அல்லது புரிந்து கொள்வதற்கு ஏதுவாக  'லேபிள்' மட்டுமே மாறியிருக்கும். இதுவும் அவர்களுக்கு சிரமம் என்பதால் ஆளும் அரசுகள் ஒற்றை மொழியைத் திணிப்பார்கள். அதன் தாக்கமே இந்தி இந்தியா என்பதும் மேலை ஐரோப்பிய நாடுகளில் இது போன்ற ஒற்றை மொழிக்கொள்கைகள் உள்ளன என்பதை கவனத்தில் நாம் கொள்ள வேண்டும். 

                   வரலாற்று தலைவர்கள் சிலை சிதைப்பு / நாகரீக குறைப்பாடாக நடப்பது என்பதை ஒரு குலத்தின் கோபம் என்று மட்டும் பார்ப்பதில் நமது கவனச்சிதைவு துவங்குறது. நமது கவனம் இப்படியாக சிதைய வேண்டும் என்பதற்காகவே ஆளும் அரசுகள் இப்படியான வேலைகளுக்கு ஆள்களை வைத்து நடத்தும். 

         எளிய எடுத்துக்காட்டாக சொன்னால் தங்களுக்கு தாங்களே வெடி வைத்துக்கொள்வதும் அதை காவல் துறை பிடித்து அடையாளப்படுத்தியும் அதே நிலை தொடர்வதுமே. இதனை பாரதீய ஜனதா கட்சிக்கானதாக மட்டும் பார்க்க இயலவில்லை. அனைத்து குல அமைப்புக்குள்ளும் அரசியல் கட்சியினர் கூலிப்படை வைத்திருப்பதைப் போல் குல அமைப்புகளும் வைத்துள்ளது என்பதை விட அவர்கள் அப்படி வைத்து செயல்பட வேண்டும் என்பதே உலக முதலாளிகளின் கூட்டமைப்பான உலக வங்கியின் கட்டளை. இதை இந்தியாவில் இயங்கும் மய்ய உளவுப்பிரிவு அலுவர்கள் ஒசையில்லாமல் செய்து வருகிறார்கள். இவர்கள் இப்படி செய்வதன் இலக்கு என்ன ? கூர்ந்து கேட்கப்படவேண்டிய கேள்வி.

                 ஐரோப்பியாவின் பல பகுதிகளை ரோமன் கத்தோலிக்க திருச்சபையான வாடிகன் நகரம் ஆண்டது. அதே போல் புராட்டாஸ்டண்ட் தலைமை ஐரோப்பிய நாட்டில் தோன்றினாலும் அதன் தலைமைக்காவலனாக இங்கிலாந்து இருந்தது. இந்த புராட்டாஸ்டண்ட் மற்றும் ஜெசூட் சபை பாதிரிகளின் வழிகாட்டுதலிலே வரத்தகம் செயல்பட்டது. அதுதான் கிழக்கு இந்தியன் கம்பெனி மேற்கு இந்தியன் கம்பெனி ஆக மொத்தத்தில் அது  கம்பெனி . இந்த கம்பெனி இந்தியா முழுக்க ஆட்சியை தக்கவைத்த பின் அதற்கு பெயர் பிரிட்டீஷ் அரசு என பெயர் மாற்றியது. இந்த பிரிட்டீஷாருக்கு உலகமே அடங்கிய போது இந்தியாவில் மட்டுமே முதல் எதிர்ப்புக்குரல் துவங்கியது. இதை கணகட்சிதாக பிடித்து வைத்திருக்கிறது இந்திய உளவுப்பிரிவு. 

                 இந்திய முதலாளிகளுக்கு எந்த பங்கமும் வந்துவிடக்கூடாது மக்கள் கூட்டமாக சேர்ந்தால் விவாதிப்பார்கள். இதனால் இந்தியா நிலப்பரப்பில் விரிந்து ஆழப்பரவியுள்ள குல அமைப்புகளை (சாதி) வாக்கு அரசியல் பாதைக்கு இழுத்து வருவார்கள். இவர்களின் நியாயமான வாதம் பிற்படுத்தப்பட்டோர் மட்டுமே அரசியல் அதிகாரத்தில் உள்ளார்கள். ஏற்கனவே பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார கூட்டமைப்பு போல் பட்டியல் குலத்தினரின் பொருளாதாரத்தை மேம்படுத்த எங்களுக்குள் ஒற்றுமை வேண்டும் என்பதே. இதை இவர்கள் தனித்த கூட்டமைப்பால் பெறமுடியுமா என்பது ஆய்வுக்குறியது? . இதனால் இந்த குழுவினரை எளிதாக பிரிக்க முடியும். இப்படிப்பிரிப்பதால் பொதுவுடமை சிந்தாந்தம் என்பது பின்னால் தள்ளப்படும். 

               எளிய எடுத்துக்காட்டாக சொன்னால் 'பொதுவுடமை கட்சிக்குள் பட்டியல் குலத்தினருக்கு உரிய பங்காக பதவிகள் கொடுக்கப்படவில்லை' என பொதுவெளியிலிருந்து பேசி பொதுவுடமை சித்தாந்தத்தையே கேலி பேசுவார்கள். இதன் மூலம் அவர்கள் ஒன்றிணைந்து சாதனை படைக்கிறார்களோ இல்லையோ பொதுவுடமை என்ற கோட்பாடு கேலிகேளிக்கைக்கு உள்ளாகும். இது போலவே திராவிடம் என்பது கோட்பாடானதா இல்லையா? என்பது தனி விவாதம். ஆனால் அதைக் கேலிகேளிக்கை செய்வதன் மூலம் முதலாளித்துவ சிந்தனைக்கு தூபம் போடும் பணியை இவர்கள் செய்து முடித்து வருகிறார்கள் அல்லது அந்த முதலாளிகள் இட்ட கட்டளையை இவர்கள் செய்து முடிக்க முயல்கிறார்கள் என்றே பொருள் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. 

                இப்படி குல குழுக்கள் ஒருங்கிணைப்பும் அல்லது குலத்தலைவர்களின் செல்வாக்கு குறையும் போது தலைவர்கள் சிலைகள் சிதைக்கப்படும். அந்த சிலைகள் குலத்தலைவர்களாக பார்க்கப்படுவார்கள் என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. இதை வைத்துப்பார்க்கும் போது இனி திரு. அம்பேத்கார், திரு. முத்துராமலிங்கத்தேவர், இமானுவேல் குடும்பனார் சிலைகள் உடைவதை பார்த்துதான் ஆகவேண்டும்.
  

Tuesday 20 August 2019

வாசிப்பு



                                        
                                                                              வாசிப்பு 

                                             “பொருள் மரபிலாப் பொய்மொழியானும்”

– சீனிவாசன் நடராஜன்  Srinivasan Natarajan




 ஒரு நூற்றாண்டில் நாம் இருக்கிறோம் என்று நினைக்கும்பொழுதே கையால் எட்டிப் பிடித்துவிடக் கூடிய தூரம்தானே என்று நினைத்துக்கொண்டேன். வாசிப்புப் பழக்கம் அப்பாவின் அலமாரியிலிருந்து கிடைத்த ’கண்ணன் இதழ்’களிலிருந்து தொடங்கி, மு.வ வரை தொடர்ந்தது. வீட்டிற்கு வரும் தினமணி வழியாக நானும் பாட்டியும் வாசிப்பைத் தொடருவோம். அப்பாவின் திராவிட இயக்கக் கொள்கைப் பிடிப்பின் காரணமாகத் தினந்தோரும் வாசிப்பதற்கு ஒரு பத்திரிகையைத் தருவார். அப்படித்தான் ’திராவிட நாடு’ அறிமுகமானது.
 
               தபால் நிலையத்தில் தலைமைத் தபால்காரராக இருந்தவர் எனக்குச் சில சிறுகதைத் தொகுப்புகளைப் படிக்கக் கொடுப்பார். நான் சேமிப்புக் கணக்கு வைத்திருந்ததால் அவரைத் தினந்தோறும் சந்தித்து வந்தேன். வாரந்தோறும் புத்தகங்களை மாற்றிக்கொள்வேன். எதிர்த்த கட்டிடத்தில் இயங்கி வந்த, தொலைபேசி நிலையத்தில் பணிபுரிந்த ஹேமா அக்காவும் கதைப் புத்தகங்களைப் படிக்கக் கொடுத்திருக்கிறார்.

                  தேவன், கல்கி, லெஷ்மி, ஜெயகாந்தன், சாவி என்று பயணப்பட்டுக் கொண்டிருந்த எனக்குக் காலச்சுவடின் இதழ் ஒன்று படிக்கக் கிடைத்தது. என்னுடைய வாசிப்பில் மிகுந்த மனக் குழப்பத்தை உண்டு செய்த நிகழ்வு அது. பின்னர் சுபமங்களா, இந்தியா டுடே இலக்கிய மலர் என்றெல்லாம் வாசிக்கத் துவங்கிவிட்டேன். சிறுகதைகளைப் பொருத்த வரை ஜானகிராமனை மட்டுமே எனக்குத் தெரியும். பின்னர் 1989-வாக்கில் சென்னைக்கு வந்தபோது என்னுடைய வாசிப்பனுபவம் பரந்து விரிந்தது. சுபமங்களா அதில் முக்கியப் பங்கு வகித்தது. 

இச்சிறுகதை நூற்றாண்டில் நாம் என்னுடைய ரசனையின் வழி நின்று மூன்று விதமான பாதைகளில் தமிழ்ச் சிறுகதைகளை ஆராய்ந்து பார்க்கலாம் எனத் தோன்றியது. தமிழ் இலக்கியத்தில் உரைநடையின் பங்கும் அதில் சிறுகதைகளுக்கான இடமும், நீண்ட நெடிய தமிழ் கதை மரபிற்கும் சிறுகதைக்கும் உள்ள வளர்ச்சி அல்லது வேறுபாடும், படைப்பாளிகளின் படைப்புத் திறனும் மொழிக்கான பங்களிப்பும் சிறுகதைகளின் இன்றைய நிலையும் தாக்கமும்.

                        இவ்வாறு வகுத்துக்கொண்டு இம்மாபெரும் சமுத்திரத்தில் நீந்திக் கரை சேர பல வரலாற்று ஆதாரங்களையும் படைப்பாளிகளையும் கல்வியாளர்களையும் என்னுடன் இணைத்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன். இக்கொள்கைகளுக்கு ஏதுவாக சுந்தர.ராமசாமியையும், பா. மதிவாணனையும், ஞானக்கூத்தனையும் துணைகொண்டு ஆய்ந்து பார்க்கலாம். முதல் கதை எனக் குறிப்பிடப்படும் வீரமாமுனிவரின் ’பரமாத்ம குரு கதை’ – 1822, அல்லது சிட்டி சிவபாத சுந்தரத்தின் வழி நின்று முத்துக்குட்டி ஐயரின் கதை – 1775, பாரதியின் கதை எனத் தொடர்ந்து வ.வே.சு ஐயரின் ‘குளத்தங்கரை அரசமரம்’ வழியாக நாம் பயணப்படலாம். சிறுகதைக்கும் கதைக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா? அப்படியிருந்தால் அதைச் சுந்தர ராமசாமியின் வார்த்தைகளில் சொல்லிப் பார்க்கலாம். 

“கதைக்கு அடிப்படை ஒத்திசைவு என்றால், சிறுகதைக்கு அடிப்படை முரண்.” - (மனக்குகை ஓவியம்,*466) தமிழில் உரைநடையின் பிறப்பை ஆராய்ந்தபோது பா. மதிவாணனின் இந்தக் கூற்று கண்ணில் பட்டது.

                   “பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முந்தைய தமிழ் வழக்கில் உரைநடை மிகக் குறைவு”
“இருபதாம் நூற்றாண்டில் உரைநடை எல்லாத் துறைகளிலும் பாய்ச்சல் வேகத்தில் பரவியதோடு படைப்பிலக்கிய ஊடகமாகவும் தன்னை நிலைநாட்டிக் கொண்டுவிட்டது.” –  தமிழ்நவீனமயமாக்கம் தமிழ் மொழியின் வளர்ச்சியை அல்லது இன்றைய நிலையைக் குறித்த பார்வையை ஒதுக்கிவிட்டு நம்மால் சிறுகதை வடிவங்களைப் பற்றிப் பேச இயலாது. ஆகவே, ஞானக்கூத்தனின் இந்தக் கூற்றை முன் வைக்கிறேன். இந்தத் தலைமுறை எழுத்தாளர்களின் நோக்கம் தமிழிலும் ஆங்கிலம் போலவே கட்டுரைகளும் சிறுகதைகளும் நாவல்களும் எழுதமுடியும் எனத் தங்களுக்கும் உலகுக்கும் ஒருசேர மெய்ப்பிப்பதுதான் என்று தெரிகிறது.” – (தமிழ் நவீனமயமாக்கம் *121) இப்படிச் சொல்லும் ஞானக்கூத்தன் தமிழ் உரைநடையின் துவக்கமென்று ஆங்கிலேயர்களுக்காக எளிய தமிழ் இலக்கண நூலொன்று 1852-ல் எழுதப்பட்டதுதான் என்று சொல்லுகிறார். தொடர்ந்து மணிக்கொடி இதழ் தொடங்கப்பட்ட நோக்கத்தை முன்னிறுத்தி 1930-களில் தமிழ் மொழியில் சிறுகதைகளுக்கான களத்தை விவரிக்கிறார். சி.சு.செல்லப்பாவின் கூற்றுப்படி பாரதியைச் சிறுகதையின் முன்னோடி என்று சொல்ல இயலாது. அவர் எழுதியது கதை என்கிற வகைமை. ஆக, நாம் க. நா. சுவை அளவுகோலாகக் கொண்டு வ.வே.சு ஐயரைத் தமிழ்ச் சிறுகதையின் முன்னோடியாகக் கொண்டு இந்நூற்றாண்டின் சிறுகதைகளைப் பகுத்துப் பார்க்கலாம்.

                         தமிழ்ச் சிறுகதையின் வடிவத்தைச் செய்து பார்த்தவர்களைக் கணக்கிட்டால் அது 140 என்கிற இலக்கத்தைத் தாண்டிச் செல்கிறது. ஒரு பட்டியலுக்காகப் புதுமைப்பித்தன், மௌனி, லா.ச. ரா, தி.ஜானகிராமன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், வண்ணநிலவன், பூமணி, கு. அழகிரிசாமி, ஜெயகாந்தன் என்று எடுத்துக்கொள்வோமேயானால் 30 ஆண்டுகளுக்கு முன்பே இப்பட்டியல் தேங்கி விடுவதை உணர்ந்து மேலும் விஸ்தரிக்க எத்தனித்தபோது கோணங்கி, ஜெயமோகன், தமிழ்ச்செல்வன், அம்பை என்று நீண்டாலும் என் சமகாலத்தில் லூசிஃபர் ஜே வயலட், ஷோபா சக்தியையும் இணைத்துக்கொள்கிறேன்.

                  சிறுகதைகளின் வடிவம், கோட்பாடு, அழகியல், வளர்ச்சி போன்றவற்றை ஆராய்ந்து பார்க்கலாம் என்று என்ணியபோது ஒருசில கதைகள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. அவ்வாறு என் உடனடி நினைவில் நிழலாடும் தலைப்புகளான சுந்தர ராமசாமியின் “ரத்னாபாயின் ஆங்கிலம்”, பாமாவின் “பொன்னுத்தாயி”, பா. செயப்பிரகாசத்தின் “அம்பலக்காரர் வீடு”, கந்தர்வனின் “கொம்பன்”, அழகிய பெரியவனின் “பூவரசம் பிப்பீ ஊதல்”, இமையத்தின் “மண்பாரம்”, ஆ. மாதவைய்யாவின் “கண்ணன் தூது”, கு.ப.ராவின் “ஆற்றாமை”, கு. அழகிரிசாமியின் “ராஜா வந்திருக்கிறார்”, பிச்சமூர்த்தியின் “மாங்காய்த் தலை”, தி. ஜானகிராமனின் “காண்டாமணி”, மௌனியின் “பிரபஞ்ச கானம்”, பிரமிளின் “இலங்காபுரி ராஜா” போன்ற தலைப்புகள் என் நினைவுக்கு வந்தன. சற்றே இந்த நூற்றாண்டின் கதைகளை அலசிப் பார்க்கலாம் என்று தள்ளியவையும் இவையே.

                  சிறுகதைகள் பேசும் அரசியலாகக் காந்தீயக்கொள்கை, பெண்ணியம், திராவிடம், தலித்தியம், அழகியல் போன்றவைகளைப் பொருத்திப் பார்க்கலாம். அவ்வாறே வட்டார வழக்கில் கவனம் செலுத்திய கி. ராஜநாராயணன், மேலாண்மை பொன்னுசாமி, பா.செயப்பிரகாசம் போன்றவர்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு விவாதிக்க முயல்கிறேன். வெங்கட் சாமினாதன் ஒரு கட்டுரையில் முத்துக்குட்டி ஐயர் 1775-ல் சிவன் ராத்திரி அன்று, சிவகங்கை அரசருக்கு சொன்ன வாய்மொழிக் கதையை பின்னர் சிட்டி இலங்கையில் ஒரு பழைய புத்தகக் கடையில் அச்சு வடிவில் கண்டெடுத்தார் எனப் பதிவு செய்கிறார். பெருமாள்முருகன் இச்செய்தியை கு.ப.ரா முழுத் தொகுப்புக்கு எழுதிய பதிப்புரையில் உறுதிபடுத்துகிறார். ரவிகுல முத்துவடுகநாத பெரிய உடையா தேவர் சிவகங்கை மன்னராக இருந்த காலத்தில் இக்கதை சொல்லப்பட்டதாகத் தெரிய வருகிறது. இச்செய்தியில் பல சந்தேகங்கள் இருந்தபோதும் இதை நாம் ஒரு தகவலுக்காகப் பதிவு செய்துவிட்டு மேலே நகர்கிறோம்.

                             மாலனின் உரையிலிருந்து ’தமிழின் முதல் சிறுகதை எது?’ என்ற கேள்விக்கு மாலன் குறிப்பிடும் பாரதியை முன்னிறுத்தும் போக்கையும் இங்கு விரிவாகப் பேசவேண்டியிருக்கிறது. 1905-ல் பாரதி - ஷெல்லி தாஸ் என்ற புனைப்பெயரில் சக்கரவர்த்தினியில் ‘துளசீ பாயி என்ற ரஜபுத்திர கன்னிகையின் சரித்திரம்’ என்ற புனைவை ஐந்து இதழ்களில் பதினோரு பக்கங்களில் எழுதியிருக்கிறார் என்று பதிவு செய்கிறார். வ.வே.சு ஐயரின் ’குளத்தங்கரை அரசமரம்’தான் முதல் சிறுகதை என்று வாதிடுவோரும் உண்டு. 

                             இதன் தொடர்ச்சியாக தொல்காப்பியத்தில் “பொருளோடு புணர்ந்த நகை மொழி” எனக் குறிப்பிடப்படும் ஓர் உரைநடை வகை சிறுகதைக்கு வேண்டிய அத்தனை அடிப்படைகளையும் கொண்டிருப்பதாக வாதிடுவோரும் உண்டு. பஞ்சதந்திரக் கதைகள், விக்கிரமாதித்யன் கதைகள், மதனகாமராஜன் கதைகள், அரேபிய இரவுகள், தெனாலிராமன் கதை போன்றவை வீரமாமுனிவரின் பரமார்த்தகுரு கதை, அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார் இயற்றிய விநோத ரசமஞ்சரி போன்றவைகளை நாம் எப்படிக் கதைகள் என்று வகைமை படுத்துகிறோமோ அதேபோல இவைகள் சிறுகதை இலக்கணத்திற்குப் பொருந்தியவை அல்ல என்றும் சொல்லுவதால், பாரதியையும் நாம் கதைக்கும் சிறுகதைக்கும் இடைப்பட்டவராகவே பார்க்க முடிகிறது. பாரதியின் 'ஸ்வர்ண குமாரி, திண்டிம சாஸ்திரி' போன்றவை இப்படித்தான். மறைமலை அடிகளின் ’கோகிலாம்பாள் கடிதங்கள்’ கடித வடிவில் கூறப்பட்ட கதையாகும். முழுப் புத்தகத்தையும் வாசித்தால் ஒரு நாவலாகவும் மாறுவதைக் காணலாம். 

                பஞ்சாமிருதம் (அ. மாதவைய்யாவின் பத்திரிகை), லட்சுமி, ஆனந்த போதினி, ஆனந்த விகடன், பிசங்க விகடன், கல்கி, மணிக்கொடி, பொன்னி, கலைமகள், வசந்தம், அமுதசுரபி, சக்தி, சிந்தனை, மஞ்சரி, கலைக்கதிர், குமுதம், காதல், அஜந்தா, சுதேசமித்திரன் – வாரப் பதிப்பு, தினமணி கதிர், வீர கேசரி, ஈழ கேசரி, தினகரன் முதலிய பத்திரிகைகள் அக்காலத்தில் சிறுகதைகளைப் பெரிதும் வளர்த்து வந்ததாக நாம் சிதம்பரனாத செட்டியாரின் புத்தகத்திலிருந்து அறிந்துகொள்கிறோம். சுத்தானந்த பாரதியின் கலிமாவின் கதை இஸ்லாமியப் பெண் ஓர் இந்துவை மணந்துகொள்வதைப் படம்பிடித்துக் காட்டுகிறது. அன்னாதுரையின் கதையான ’பேரன் பெங்களூரில்…’ விதவைப் பெண் சூத்திரரை மணக்கும் புரட்சியைச் செய்கிறது. அதேபோல புதுமைப்பித்தனுடைய ’வழி’ கதை விதவையின் ஆற்றாமையைப் பேசுகிறது. இப்படி அக்காலத்தில் சமூக நடைமுறையாக இருந்த அவலங்களைப் பேசும் கதைகள் எழுதப்பட்டன. குறிப்பாக தீண்டாமை ஒழிப்பு, விதவை மறுமணம், கலப்புத் திருமணம் போன்றவைகள் பிரதானமாகக் கையாளப்பட்ட உள்ளடக்கங்கள் ஆகும். 

                   சிறுகதை வடிவத்தைப் பெரிதும் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தியவர்களாக மு. கருணாநிதி, சி. என். அன்னாதுரை, ஏ.எஸ்.பி ஐயர், சுத்தானந்த பாரதியார் போன்றவர்களைச் சொல்லலாம். மு. வரதராசன் இதிலிருந்து வேறுபடுகிறார். மு. வவின் கதைகள் சற்று இலக்கிய மனம் வீசுபவையாக இருக்கும். 

                  சிறுகதைகள் நூற்றாண்டை வைத்து ஆராயும்போது அவைகள் பிரசுரமான இதழ்களைப் பற்றியும் பேச வேண்டிய கட்டாயம் இருக்கிறது. மேலே நாம் ஒரு பட்டியலையும் கொடுத்திருக்கிறோம். அப்படித் தேசபக்தன், நவசக்தி, கலைமகள், ஊழியன் போன்ற பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருந்தபோதே கே. சீனிவாசன், பி.எஸ். சொக்கலிங்கம், வ. ராமசாமி என்கிற வ. ரா போன்ற சுதந்திரப் போரில் பங்குகொண்டவர்களால் துவக்கப்பட்டு 1933ல் வெளியான மணிக்கொடி இதழ். இதை இங்குச் சொல்லக் காரணம் மணிக்கொடியில் வெளிவந்த கதைகளைத்தான் நாம் உள்ளடக்கத்திலும் வடிவத்திலும் சிறுகதை என எடுத்துக்கொள்கிறோம். வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்தகுரு கதைகளையோ அல்லது மாதவைய்யா எழுதிய சில கதைகளையோ விடுத்து நாம் வ.வே.சு. ஐயரைத்தான் குறிப்பாக, ’குளத்தங்கரை அரசமரம்’ கதையைத்தான் எடுத்துக்கொண்டு சிறுகதை நூற்றாண்டு கொண்டாடுவதற்கு காரணம் இந்தியாவில் சிறுகதை வடிவத்தைக் கொண்டுவந்த தாகூரின் தாக்கத்தில் பாரதி சிலவற்றை மொழிபெயர்த்திருக்கிறார். 

              பின்னர் பாரதி நேர்படவே சில கதைகளையும் எழுதி இருக்கிறார். எனினும் இவைகளை நாம் கா. சிவத்தம்பி வழிநின்று சிறுகதையாக ஏற்றுக்கொள்ளவில்லை. அதுபோலவே கல்கி, ஆசிரியராக இருந்து வெளிவந்த விகடன் பத்திரிகை போன்ற பத்திரிகைகளுக்கான எழுத்தையும் நாம் புறந்தள்ளுகிறோம். மணிக்கொடிக்குப் பின்பு சி.சு. செல்லப்பா, க. நா. சு, பிச்சமூர்த்தி இணைந்து கொண்டுவந்த எழுத்து இதழையும் (1959-1970), சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் எழுதிவந்த சரஸ்வதி, சாந்தி பத்திரிகைகளையும் நாம் சிறுகதைகளுக்கான முன்னோடி இதழ்களாகச் சுட்டலாம். இதே காலகட்டத்தில்தான் சூறாவளி, சந்திரோதயம், ஞானரதம், முன்றில், கணையாழி போன்ற இதழ்களும், தாமரை, சாந்தி, செம்மலர் என நீளும் பட்டியல் இன்றைய காலச்சுவடு வரை வந்து நிற்கிறது. இப்படி தமிழ் உரைநடை காலத்தையும் அதன் வளர்ச்சியில் உருவான வடிவமான சிறுகதைகளையும் அவ்வடிவத்திற்கு முக்கியத்துவம் தந்த இதழ்களையும் குறுக்கு வெட்டாக ஆராயலாம்.

                      ‘குளத்தங்கரை அரசமரம்’ ஒரு வங்க மொழிக் கதையின் தழுவல் எனவும், 1914-ஆம் ஆண்டு கல்கத்தாவிலிருந்து வெளிவந்த மார்டன் ரிவ்யூ இதழில் ’தி ஸ்டோரி ஆஃப் த ரிவர் ஸ்டேர்’ என்ற தலைப்பில் தாகூரின் கதை மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது. இக்கால வரிசையில் வ.வே.சு ஐயரின் கதையானது 1915-ல் விவேக போதினியில் வெளிவருகிறது. இதுவே இக்கதை தழுவல் என்று வாதிடுவதற்கு ஆதாரமாகப் பார்க்கப்படுகிறது. 

1881-ஆம் ஆண்டு பிறந்த வ.வே.சு ஐயர் பி.ஏ பட்டம் பெற்ற பின்னர் ப்ளீடர் தேர்வில் தேர்ச்சி பெறுகிறார். வழக்கறிஞராகத் தொழில் செய்கிறார். பின் லண்டனில் 1907-ல் பாரிஸ்டர் படிப்பில் சேருகிறார். அங்கு இந்தியா ஹவுஸ் என்னும் விடுதியில் சேர்ந்து சாவர்க்கருடனான நட்பின் காரணமாக இந்திய தேசிய புரட்சி வீரராக மாறுகிறார். பாரிஸ்டர் பட்டத்தைத் துறந்து இந்திய விடுதலை சிந்தனையில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளுகிறார். லண்டனில் 1908-ல் ஆங்கிலத்தில் கம்ப ராமாயணச் சொற்பொழிவை நிகழ்த்துகிறார். இந்தியா இதழில் எழுதத் தொடங்கிய வ.வே.சு ஐயரின் 1918-ல் வெளிவந்த ஒரு கட்டுரைதான் கவிதை குறித்த விமர்சனத் துறைக்கு ஓர் ஆரம்பம் என சி.சு செல்லப்பா சுட்டிக்காட்டுகிறார். 


                      புதுச்சேரியில் 1914-ல் துவக்கப்பட்ட கம்ப நிலையம் என்னும் அவருடைய பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ”மங்கையர்கரசியின் காதல் முதலிய கதைகள்” என்னும் நூலில் வெளிவந்த கதைகளைத்தான் நாம் தமிழ்ச் சிறுகதைகள் என அடையாளப்படுத்துகிறோம். 1917-இல்தான் அப்புத்தகம் முதற் பதிப்பாக வெளிவருகிறது. ஐந்து சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பாகும். அத்தொகுப்பில் இருந்த ’குளத்தங்கரை அரசமரம்’தான் தமிழின் முதல் சிறுகதை. இங்கு நாம் பின்னர் பேசப்போகும் பதிப்பு, தொகுப்பு, படைப்பு குறித்த விவாதத்திற்காக ஐயரின் இம்முயற்சிகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம. ’பொருள் மரபிலாப் பொய்மொழியானும் பொருளோடு புணர்ந்தநகை மொழியானும்’என உண்மையில்லாத பொய்யான கதையைப் புனைகதை என்றும் உண்மை கலந்த வேடிக்கையான பேச்சை நகைமொழி என்பதற்கும் உரை சொல்லுகிறார்கள்.
                 
                    தொல்காப்பியர் கூறும் இக்கதை மரபு பின்னர் சிறுகதைக்கான இலக்கணமாக மாறும்பொழுது விரைவாகப் படித்து முடிக்கக்கூடிய விதத்தில் வடிவம் இருக்க வேண்டும் என்று மாறுகிறது. வாய்மொழியாகவே இருந்துவந்த தமிழ்க் கதை மரபு, அச்சு இயந்திரத்தின் பயன்பாட்டிற்குப் பின் முதன்முதலில் பரமார்த்த குரு கதைதான் (1822-ல் முத்துசாமிப் பிள்ளை என்பவரால் அச்சிடப்பட்டு) வெளிவருகிறது. எழுதியவர் வீரமா முனிவர். நாம் முன்பே சொன்னதுபோல வீராசாமி செட்டியாரின் விநோத ரசமஞ்சரி (1855), வ.வே.சு ஐயரின் குளத்தங்கரை அரசமரம், செல்வ கேசவராய முதலியாரின் அபினவ கதைகள் தொகுப்பு, மாதவைய்யாவின் குசிகர் குட்டிக் கதைகள், பாரதி மொழிபெயர்த்த தாகூரின் 11 சிறுகதைகள், புதுமைப்பித்தனின் கதைகள், மௌனி என்று வளர்ந்து வருகிறது. இதில் திராவிட பூர்வகலா கதைகளையும் சேர்த்துக்கொள்ளலாம். தமிழில் அச்சு வடிவம் படிக்கும் பழக்கத்தையும் பரவலாக்கத் தொடங்கிய காலம் அது.

                         1850 முதல் இன்று வரையிலான காலத்தில் சதாசிவம் பிள்ளை எழுதி வெளியிட்ட ’நன்னெறி கதா சங்கிரகம்’ என்ற நூல் கதைக்கான அடிப்படையைக் கொண்டிருந்தது. பின்பு, வினோத ரசமஞ்சரி, விவேக சிந்தாமணி போன்றவைகளும் கதைகளை வெளியிட்டன. ஆ. மாதவையாவும், பி. ஆர். ராஜம் ஐயரும் எழுதி வந்தார்கள். பின்னர் விவேக போதினி 1908-இல் வெளிவந்தது. அந்தக் காலகட்டத்திலேயே அம்மணி அம்மா என்ற பெண் எழுத்தாளரும் எழுதிவந்தார்.

                       பெரிய எழுத்துக் கதைகளான அல்லி அரசானி மாலை, புலந்திரன் கதை, வீர அபிமன்யூ, மயில் ராவணன் கதை, சத கண்ட ராவணன் கதை, நல்லத்தங்காள் கதை, ஹரிச்சந்திரன் கதை, சித்திர புத்திர நாயனார் கதை, பெரிய எழுத்து ’கொக்கோகம்’, ஏழு கன்னிமார் கதை, 32 பதுமை கதை போன்றவை தமிழில் புழக்கத்திலிருந்த நாட்டுப்புறக் கதைப் பாடல்களிலிருந்தும் புராணக் கதைகளிலிருந்தும் கதைகளாக அச்சுக்கு வந்தன. அந்தப் புத்தகங்களே தற்காலத்தில் பெரியகதைகளேன அறியப்படுவது போல் ஐய்யரின் கதைகளுக்கும் இப்பெரிய எழுத்துக் கதைகளுக்கும் இடைப்பட்ட கதைகளாக கதாசிரியர்களாக இவர்களைப் பட்டியலிடலாம். இப்பட்டியலானது இத்தொகுதியில் நூற்றாண்டு சிறுகதை பயணத்தில் ஒரு செய்தியாக மட்டுமே இருக்கும். விடுபடல்களைத் தவிர்ப்பதற்காகத் தரப்படுகிறது.

                   ’1902-ல் சபாபதி முதலியாரின் பன்னிரு நீதிக்கதை வெளிவந்தது. இராமாநுஜலு நாயுடுவின், ‘ஆசையின் முடிவு’ என்ற சிறுகதை 1910-ம் ஆண்டு வெளியானது. 1911-ல் கா. நமச்சிவாய முதலியார் அவர்கள் தாம் கேள்விப்பட்ட கதைகளோடு புனைந்துரையாகச் சில கதைகளையும் எழுதி, ‘புலவர் வறுமை’ என்னும் பெயரால் வெளியிட்டார். வி. பகவந்தராவ் அவர்கள் 1912-ல் ஐந்து சிறுகதைகளின் தொகுதியாக, ‘ஐங்கதைக் கொத்து’ என்னும் நூலை வெளியிட்டார். செவிவழிக்கதைகளும் புனைந்துரைக் கதைகளுமாகப் பத்துக் கதைகளடங்கிய ‘விநோதக் கூற்றுகள்’ என்னும் சிறுகதை நூலை, கா. நமச்சிவாய முதலியார் அவர்கள் இயற்றி, 1913-ல் பதிப்பித்தனர். ஜே.எஸ். வைத்திய நாதய்யர் அவர்கள், ‘வினோத விகடசிந்தாமணி’ என்னும் பெயருடன் எண்பத்தைந்து சிறுகதைகள் அமைந்த நூலொன்றை 1914-ல் வெளியிட்டார். தாண்டவராய முதலியார் அவர்கள், எண்பத்தொரு கதைகளைத் தொகுத்து, கதாமஞ்சரி என்னும் பெயருடன் 1915- வெளியிட்டார்.’
                (இப்பட்டியல் தமிழ்ச் சிறுகதை திறனாய்வு – தோற்றமும் வளர்ச்சியும் - அ.மாதவி, முனைவர் பட்ட ஆய்விற்காகப் புதுவை பல்கலைக் கழகத்திற்கு சமர்ப்பித்த ஆய்வேட்டிலிருந்து, 1999) உலகில் அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் சிறுகதைக்கென பெரிய வரலாறே உண்டு. குறிப்பாக எட்கர் ஆலென்போ, ஓ ஹென்றி, மாப்பசான், செக்காவ், ஜேம்ஸ் ஜாய்ஸ் போன்ற பலரைக் குறிப்பிடலாம். இங்கும் நமக்கு மொழியாக்கச் சிறுகதைகள் தொடர்ந்து வாசிக்கக் கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது. தற்காலத்தில் தெலுங்கு மொழியிலிருந்தும் கன்னடத்திலிருந்தும் மலையாளத்திலிருந்தும் என்று பல இந்திய மொழிச் சிறுகதைகள் தமிழில் வாசிக்கக் கிடைக்கின்றன. சிறுகதைகளுக்கென்றே பல குழுக்களும் இயங்கி வருகின்றன.
 
                    இப்படித் தமிழ் சிறுகதை வரலாற்றை ஆராய்ந்துகொண்டு போகும் வழியில் ஒரு நீண்ட பெயர்ப் பட்டியலைத் தருகிறேன். இப்படியலைத் தொடர்ந்து அவர்களின் கதைகளையும் கால வரிசைப்படுத்தி ஆராய்ந்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.
 
                          சிறுகதைகளின் வடிவம், கோட்பாடு, அழகியல் போன்றவற்றை அரசியல், கலை, சமூகம், வரலாறு, மொழி, பிரச்சாரம் போன்றவற்றோடு பொருத்தி அதில் விளையும் போக்குகளை அல்லது தாக்கங்களைப் பேசினால் மொழிக்கான இவ்வடிவத்தின் பங்களிப்பைச் சோதித்துத் தெரிந்துகொள்ளலாம் என நினைக்கிறேன்.

                   இவ்வடிவத்தில் இயங்கும் எழுத்தாளர்களின் ஒரு சிறிய பட்டியல் உங்களுக்காக, அகர வரிசையிலோ, கால வரிசையிலோ இல்லாமல் நினைவிலிருந்து கொடுக்க முற்படுகிறேன். பாரதி, வ. வே. சுப்பிரமணியம் ஐயர், அசோகமித்திரன், சா. கந்தசாமி, சி.சு. செல்லப்பா, மௌனி, மா. அரங்கநாதன், நகுலன், சம்பத், ந. பிச்சமூர்த்தி, க. நா. சுப்ரமண்யம், சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், இந்திரா பார்த்தசாரதி, கி.ராஜநாராயணன், பூமணி, பா. செயப்பிரகாசம், அகிலன், நா. பார்த்தசாரதி, ர. சு. நல்லபெருமாள், ஜி. நாகராஜன், தி. ஜானகிராமன், சிதம்பர சுப்ரமணியன், கு. அழகிரிசாமி, சுந்தர ராமசாமி, கு.ப. ராஜகோபாலன், ஆதவன், வண்ணதாசன், சூடாமணி, கந்தர்வன், மேலாண்மை பொன்னுசாமி, சு. சமுத்திரம், ராசேந்திர சோழன், ராஜம் கிருஷ்ணன், சுப்ரபாரதிமணியன், பிரபஞ்சன், நாஞ்சில் நாடன், சார்வாகன், அழகிய பெரியவன், இமையம், சோ. தர்மன், சிவகாமி, பாமா, வே. ஸ்ரீராம், பா. வெங்கடேசன், ப்ரேம் ரமேஷ், கோணங்கி, சுகுமாரன், திலீப்குமார், சு. வேணுகோபால், ஜே. பி. சாணக்யா, யுவன் சந்திரசேகர், அம்பை, ஜெயமோகன், வண்ணநிலவன், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், தமிழ்ச்செல்வன், லா. ச. ராமாமிருதம், சுரேஷ்குமார இந்திரஜித், எம்.வி. வெங்கட்ராமன், தொ. மு.சி. ரகுநாதன், சே. கணேசலிங்கம் (இலங்கை), எஸ். பொன்னுதுரை (இலங்கை), வ. ஐ. ராசரத்தினம் (இலங்கை), அ. முத்துலிங்கம் (இலங்கை), பாவண்ணன், கிருத்திகா, காவேரி, திலகவதி, வாஸந்தி, பெருமாள்முருகன், கரிச்சான் குஞ்சு, தஞ்சை ப்ரகாஷ், விமலாதித்த மாமல்லன், வை. மு. கோதைநாயகி, சந்திரா, வமு கோமு, பாஸ்கர் சக்தி, இலச்சுமண பெருமாள், இரா. முருகன், தமயந்தி, லட்சுமி சரவணகுமார், கீரனூர் ஜகீர்ராஜா, மீரான் மைதின், விஷால் ராஜா, தோப்பில் முகமது மீரான், சுயம்பு லிங்கம், சோபா சக்தி, சிவகுமார் முத்தைய்யா, குணா கந்தசாமி, குமார் அம்பாயிரம், திருச்செந்தாழை, எஸ். செந்தில்குமார், பி.எஸ். ராமைய்யா, ப்ரமிள், ந. முத்துசாமி, அ. மாதவன், கிருஷ்ணன் நம்பி, மாலன் நாராயணன், உமா வரதராஜன் (இலங்கை) எஃபர்ட் சச்சிதானந்தம், கோபி கிருஷ்ணன், வேல ராமமூர்த்தி, பாதசாரி, உமா மகேஸ்வரி, யூமா வாசுகி, அ. மாதவைய்யா, எம்.எஸ். கல்யாண சுந்தரம், வல்லிக்கண்ணன், சு. சமுத்திரம், அ. ஏசுராசா, விக்கிரமாதித்யன், பொ. கருணாகரமூர்த்தி, கண்மணி குணசேகரன், தேவன், பேரரிஞர் அண்ணா, மு. கருணாநிதி, பாரதிதாசன், மு. வ, புவியரசு, நீல பத்மநாபன், ம. ராசேந்திரன், சு. தமிழ்ச்செல்வி, அபிலாஷ், சல்மா, விட்டல் ராவ், காரல் மார்க்ஸ், அதிஷா, போகன் ஷங்கர், க. சீ. சிவகுமார், தமிழ்மகன், பாலு சத்யா, தேவி பாரதி, அழகிய சிங்கர், கால பைரவன், சுப்ரமண்யராஜூ .

                                  மாலனின் உரையைப் படித்தபோது இத்தகவல் எனக்கு முக்கியம் எனப் பட்டது. ”மணிக்கொடி இதழின் நிறுவனர்களில் ஒருவரான கு. சீனிவாசன் பம்பாயிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த ’சன்’ ஆங்கிலப் பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் 29-04-1934 தேதியிட்ட மணிக்கொடியில் வெளிடப்பட்டது. அக்கட்டுரைதான் தமிழில் சிறுகதை எழுதும் முறையையும் அதன் கொள்கைகளையும் முதன்முதலில் விளக்கி ஒரு புதிய விழிப்பைத் தமிழ் எழுத்தாளர்களுக்குக் கொடுத்ததாக சிட்டியையும் சிவபாத சுந்தரத்தையும் மேற்கோள்காட்டிச் செல்லுகிறார்”.

                     சுந்தர ராமசாமி, புதுமைப்பித்தனைப் பற்றிச் சொல்லும்போது பாரதிக்கு ஆக்கப்பூர்வமான, ஆரோக்கியமான, நேர்மையான விமர்சனத்தை முன்வைத்தவர் என்கிறார். தொடர்ந்து க. நா. சுப்ரமண்யம் புதுமைப்பித்தனின் மொத்தப் படைப்புகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பேசியிருக்கிறார். க. நா. சு, புதுமைப்பித்தனின் சமகாலத்தைச் சேர்ந்த படைப்பாளிகளின் சிறுகதைகளையும் ஆராய்ந்து புதுமைப்பித்தனை ஆகச் சிறந்த சிறுகதை எழுத்தாளர் என்று கூறுகிறார். க. நா.சு புதுமைப்பித்தனைப் போல் தமிழில் இந்நூற்றாண்டில் வேறொருவருக்கு இடமில்லை என்றும் சொல்லுகிறார். கு.ப. ராவை இலக்கியத் திறன் கொண்டவராகவும் புதுமைப்பித்தனை மேதமை கொண்டவராகவும் க. நா. சு மதிப்பிடுகிறார். இத்தகவல்களை சு. ரா பதிவு செய்கிறார்.

                  1934-ல் இருந்து 1948 வரை பதினான்கு ஆண்டுகள் புதுமைப்பித்தன் தமிழ்ச் சூழலில் சிறுகதை பரப்பில் இயங்கியிருக்கிறார். 99 சிறுகதைகள் கண்டுபிடிக்கப்பட்டு முழுத் தொகுப்பாக நமக்குப் படிக்கக் கிடைக்கிறது. நாம் முன்பே சொன்னபடி 29-04-1934-ல் மணிக்கொடியில் வெளிவந்த கட்டுரைக்கும் புதுமைப்பித்தனின் முதல் கதைக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. ஓர் ஆண்டிலேயே புதுமைப்பித்தன் நாற்பதுக்கும் மேற்பட்ட கதைகளை எழுதியிருப்பதாக சலபதி பட்டியலிடுகிறார். நாம் சிறுகதைகளின் இன்றைய நிலைப்பாட்டை, வடிவ சோதனைகளை, சமகால அழகியலை, புதுமைப்பித்தனின் முதல் கதையான “ஆற்றங்கரை பிள்ளையார்” தொடங்கி ஆராய்வதற்கு இச்செய்திகள் ஆதாரமாய் இருக்கின்றன.
புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ. விருதாச்சலம். பிறப்பு: 25-04-1906, திருப்பா திரிப்புலியூர். 1931-ல் பி.ஏ பட்டம் பெற்றார். புதுமைப்பித்தனுக்கு 34 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் முதல் சிறுகதையை எழுதியவராக நாம் ஒப்புக்கொள்ளும் வ.வே.சு ஐயர் பி.ஏ பட்டம் பெறுகிறார். அதுபோலவே 1917-ல் வெளிவந்த ஐயரின் முதல் சிறுகதைக்கும் புதுமைப்பித்தனின் 22-04-1934 ல் வெளிவந்த முதல் சிறுகதைக்குமான இடைவெளி ஏறக்குறைய 17 ஆண்டுகள். நம்முடைய விவாதத்தில் ஐயரையும் பாரதியையும் தொடர்ச்சியாக எழுதியவர்களையும் மணிக்கொடியில் வந்த கட்டுரையின் தேதிக்கு முந்தையவர்களாக அனுகி தமிழ்ச் சிறுகதையின் முதல் வடிவ மாற்றமென புதுமைப்பித்தனை நிறுவவே இச்செய்திகள் நமக்குப் பயன்படுகின்றன. தொடர்ச்சியாக புதுமைப்பித்தனின் கதைக் களத்திற்குள் பயணிப்போம்.

          புதுமைப்பித்தனின் “கவந்தனும் காமனும்” என்ற கதையில் சென்னை என்று பதிப்பித்திருக்கிறார்கள். அல்லது புதுமைப்பித்தன் சென்னை என்றே அழைக்கிறாரா என்ற ஐயம் எழுகிறது. இக்கதை மணிக்கொடியில் பிரசுரம் ஆகியிருக்கிறது. வருடம் 1934. மூன்று விதமாக இக்கதையை நான் அனுகுகிறேன். ஒன்று, ஒரு நகரின் காட்சிப் பதிவு. இரண்டு, மனித செய்கைகளுக்கு நியாயம் கற்பித்தல். மூன்று, இதன் வழியாக விமர்சித்தல் அல்லது வசைபாடல். ட்ராம் வண்டியையும் அதீத வெளிச்சமாய் இருக்கும் மாநகரையும் மாதம் முப்பது ரூபாய் சம்பளத் தொகையையும் 34-ஆம் வருடத்தின் பதிவாக எடுத்துக்கொள்கிறேன். தெருவோரம் நடக்கும் விபச்சாரத்திற்கு அவர்களுடைய வயிற்றுப்பாடுதான் காரணம் என்று அவர்கள் பக்கம் நின்று கொள்கிறார். படாடோபமாக இருப்பவர்களை விமர்சிக்கிறார். இந்நிலைக்கு அவர்களின் சுரண்டலே காரணம் என வடிவம் ஒரு அனுபவக் குறிப்பாகத் துவங்கி சம்பவங்களைக் காட்சிப்படுத்தி கடைசி வரியில் திருப்பு முனையை வைத்து ஒரு சிறுகதையாக்குகிறார். ஆக, சுந்தரராமசாமி சொல்லுவதைப்போல பி.எஸ். ராமைய்யாவுடன் நடந்துபோகும்போது பார்த்தவற்றைக் கதையாக்கி இருக்கிறார். மகாமாசானம், பொன்னகரம் எனப் பல கதைகளையும் இதுபோல நாம் பேச முடியும்.
 
பெருமாள்முருகன் கு.ப.ராவின் முழுத்தொகுப்பிற்காக எழுதிய மதிப்புரையில் பல்வேறு செய்திகளை நமக்காகத் தந்திருக்கிறார். அவைகளை ஒவ்வொன்றாக நம் கட்டுரையில் ஆங்காங்கே பொருத்திப் பார்ப்போம்.

                     கனகாம்பரம் இரண்டாம் பதிப்பின் பதிப்புரையில் (1944) இச்செய்தி இடம் பெற்றிருக்கிறது. ’முதல் பதிப்பு வெளிவந்த காலம் வேறு; இந்தக் காலம் வேறு. அப்பொழுது சிறுகதை, பத்திரிகைச் சரக்காக மட்டும் இருந்தது. இன்று புதுத் தமிழ் இலக்கிய வகையாக இருக்கிறது. அன்று என இச்செய்தியில் குறிப்பதை நாம் கு. ப. ராவின் முதல் தொகுதி வெளிவந்த காலத்தையும் நாற்பத்து நான்காம் ஆண்டுக்கு முன்பிருந்த காலத்தையும் எடுத்துக்கொள்ளலாம். இன்று என இச்செய்தி குறிப்பதை கு.ப.ராவின் மறைவிற்குப் பின் இரண்டாம் பதிப்பு வெளிவந்த நாற்பத்தி நான்காம் ஆண்டிலிருந்து எடுத்துக்கொள்ளலாம். (கு. ப. ரா சிறுகதைகள், பக்கம்: 563 – காலச்சுவடு வெளியீடு) இதுவரை நாம் பேசி வந்ததற்கு மாறான ஒரு கோணத்தை இச்செய்தி நமக்குத் தருகிறது. வ. வே. சு ஐயர், பாரதி காலந்தொட்டு வந்த கதைகளையோ மணிக்கொடி காலத்தில் (1934)இருந்து நாற்பத்து நாலு வரை வெளிவந்த சிறுகதைகளின் காலத்தையோ நாம் சமூகத்தால் தமிழ் இலக்கிய வகைமையுள் உரைநடையில் சிறுகதைக்கான இடம் இருந்ததாகக் கொள்ள முடியாது. நமக்குக் கிடைத்திருக்கும் இவ்வாதாரத்திலிருந்து தமிழ் இலக்கிய வகைமையுள் சிறுகதைக்கான ஓர் இடம் கிடைக்கப்பெற்ற ஆண்டாக 1944-ஐ எடுத்துக் கொண்டால், அதில் கு.ப.ராவின் கதைகளையும் அவர்தம் தொகுப்பையும் முன்னிறுத்தி விவாதிக்கலாம்.

                     வ.வே.சு ஐயரும் மாதவைய்யரும் 1925-க்குள் மறைந்துவிட்டதால் 1934-வரை பெரிதாக சிறுகதைகள் பிரசுரமானதாகத் தெரியவில்லை. இதற்கு செல்லப்பா ஒரு காரணத்தைக் கண்டுபிடிக்கிறார். இருபத்து ஐந்திலிருந்து முப்பத்தி இரண்டு என்பது சுதந்திரப் போராட்டம் வலுப்பெற்றிருந்த காலம் எனவும் எல்லா சக்திகளும் ஒருமுகப்பட்டு நின்றதால் இலக்கியம் சற்று பின்தங்கி இருந்ததாகச் சொல்லுகிறார். (தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது, பக்கம் 22)
செல்லப்பா ஒரு கருத்தைப் பதிவு செய்கிறார். சுதந்திரப் போராட்டக் காலத்தில் கல்கியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த விகடன் நகைச்சுவையைத் தன் அடிமூச்சாகக் கொண்டு போராட்டக் காலத்தின் அரசியலில் தீவிரம் காட்டாமல் இருந்ததாகவும், அதோடு சிறுகதைகளைப் பிரசுரித்ததாகவும் பதிவு செய்கிறார்.

                   செல்லப்பா தன்னுடைய தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது புத்தகத்தில் அக்காலச் சிறுகதைகளின் போக்கைப் பற்றி விரிவாக எழுதுகிறார். அதில் ‘பொதுத்தன்மையிலும் ஒரு தனித்தன்மை, தனித்தன்மையிலும் ஒரு பொதுத்தன்மையை வெளிக்காட்டும் ஒரு சிறுகதையாளர் கோஷ்டியை உண்டாக்கி ஒரு புதிய போக்கை, விகடன் போக்குக்கு எதிரான போக்கை, வ.வே.சு.வின் கலை வழியில் சிறுகதையில் உண்டாக்கினார் ராமைய்யா.’
அவர் சொல்லும் இப்போக்கில் தங்களை ஐக்கியப்படுத்திக்கொண்ட எழுத்தாளர்களாக வ.ரா, ந. பிச்சமூர்த்தி, கு.ப.ரா, பெ.கோ. சுந்தர்ராஜன் (சிட்டி), கி. ரா, பி.எம். கண்ணன், செல்லப்பா ஆகியோரைச் சொல்லிச் செல்கிறார்.

                      இந்நிகழ்வு 1930களில் நடக்கிறது. இதைத்தான் நாம் பத்திரிகை சரக்கென்றும் 1944-ல் இலக்கிய வகைமைக்குள் வரும் போக்கென்றும் கணித்து இரு பிரிவுகளாக்கி கு.ப.ராவின் படைப்புகளை முன்னிருத்தி ஆராய்ந்து பார்க்கலாம் என்று எண்ணுகிறோம்.
கு.ப.ரா 1902 ஜனவரியில் பிறந்தார். 1918-ல் இண்டர்மீடியேட், திருச்சி. கும்பகோணம் அரசு கல்லூரியில் 1921-ல் பி.ஏ பட்டம் பெற்றார். 1944-ஆம் ஆண்டு ஏப்ரல் 27-ஆம் நாள் காலமானார். முதல் சிறுகதை ’சுதந்திர சங்கு (23-03-1934)’ இதழில் பிரசுரம் ஆனது. 91 சிறுகதைகளைத் தன் வாழ்நாளில் எழுதியிருக்கிறார்.

                          ஞானக்கூத்தன், கு.ப.ராவைப் பற்றிச் சொல்லும்பொழுது சில செய்திகளை எழுதுகிறார். வ.வே.சு ஐயரின் குளத்தங்கரை அரசமரம் கதைதான் முதன்முதலில் செந்தமிழைக் கைவிட்டு பேச்சு மொழியைக் கையாண்டதாக குறிப்பிட்டு அதற்கு ஆதாரமாக ஐயரின் முன்னுரையைச் சுட்டுகிறார். (பக்கம் 18 – உடைந்த மனோரதங்கள்)
மக்கள் சார்ந்த இலக்கியமும் நவீன இலக்கியமும் ஒன்றிணைந்து சாதாரண மக்கள் சார்ந்தே இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக ஞானக்கூத்தன் இக்கதையையே முதன்மையானது என முன்மொழிகிறார்.

                  ஐயர் மறைந்த எட்டாண்டுகளுக்குப் பிறகு கு.ப.ராஜகோபாலன் எழுத வருகிறார். மேலை நாடுகளில் 1809-ல் நிகோலாய் கொகோல் போன்றவர்களை ஐயருக்கு முன்பாகவே ஐரோப்பிய மொழிகளில் மிகச் சிறந்த சிறுகதைகளை எழுதியவர்களாக ஒரு பட்டியலை ஞானக்கூத்தன் தருகிறார்.

                     மேற்சொன்ன செய்திகளிலிருந்து, நமக்கு கு.ப.ராஜகோபாலனுக்கும் வ.வே.சு ஐயருக்கும் முன்பாக சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன் இவ்வடிவம் மேலை நாடுகளில் கையாளப்பட்டுவிட்டது என்று தெரிய வருகிறது. 1853 கால கட்டத்திலேயே ஹெர்மன் மெல்வின் எழுதிய சிறுகதைகள் வெளிவந்திருப்பதைச் சொல்லி உலகில் இவ்வடிவம் தோன்றிய அறுபதாண்டுகளுக்குப் பின்னரே தமிழில் கையாளப்படுவதை நாம் அறிந்துகொள்ள வழி வகுக்கிறார் ஞானக்கூத்தன்.
 
                              ’எந்த ஒரு கலையும் அதற்கு மக்களிடம் டிமாண்ட் இருப்பதால்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. பத்திரிகைகள் சிறுகதைகளை வெளியிடவில்லையென்றால் சிறுகதைகளை யார் எழுதப் போகிறார்கள்?’ என்றார் சாமர்செட் மாம். (பக்கம் 27, உடைந்த மனோரதங்கள்)
ஓ ஹென்றி, கதைகளுக்கு கரு (Plot) மிகவும் தேவை என்றும், சிறுகதைகளுக்குத் தொடக்கமும் முடிவும் இருக்கக் கூடாதென்று செக்காவும் பேசிவந்த காலத்தில்தான் பத்திரிகைக் கதைகள் என்றும் தீவிரக் கதைகள் என்றும் ஆங்கில மொழியில் பாகுபட்டன. இக்கூற்றைத் தொடர்ந்தே நாமும் மணிக்கொடி எழுத்தாளர்கள் என்றும் வெகுசன எழுத்தாளர்கள் என்றும் இரண்டு பிரிவுகளை ஒரு புரிதலுக்காக உருவாக்குகிறோம். இதற்கு பி. எஸ். ராமைய்யா மட்டுமே விதிவிலக்கு. (‘விகடத்துவமே, அதாவது பொழுதுபோக்கும் மகிழ்ச்சியும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட அன்றைய விகடனுக்கு இவர்கள் ஒத்துவந்திருக்க மாட்டார்கள்’ – பக்கம் 27 உடைந்த மனோரதங்கள்) கு.ப.ரா இப்படித்தான் இலக்கிய தீவிர சிறுகதை எழுத்துக்கு முன்னிலைப் படுகிறார். இந்தப் பின்னனியில் நாம் கு.ப.ராவின் கதைகளை வாசித்துப் பார்க்கலாம்.

                          1930-களிலிருந்தே தமிழிலக்கிய வரலாறுகள் எழுதப்பட்டு வருகிறது. கா.சு. பிள்ளை தமிழிலக்கிய வரலாற்று நூலின் உள்ளடக்கத்தில் நவீன இலக்கிய படைப்புகளின் வரலாற்றைக் கூறுவதற்காகத் ‘தற்காலம்’ என்னும் உட்பிரிவை அமைக்கிறார்.
1962-ல் எம். ஆர். அடைக்கலசாமி தனது ‘தமிழிலக்கிய வரலாறு’ என்ற நூலில் ’கிருஸ்துவ தமிழ்த்தொண்டு’ என்ற தலைப்பில் தமிழில் முதல் சிறுகதையாக ’வீரமா முனிவரின் பரமார்த்த குரு கதை’யை அறிமுகம் செய்கிறார். பின்னர் சி. பாலசுப்ரமண்யம் தமிழில் சிறுகதை வளர்ச்சி என்ற தலைப்பில் வ.வே.சு ஐயர் முதல் ந.பா வரை குறிப்பிடுகிறார்.
இலக்கியத்தில் மரபிலக்கியம் எனவும் நவீன இலக்கியம் எனவும் பிரித்துப் பேசுவதற்கு ’தற்காலம்’ என்று க.சு பிள்ளையும் ’இக்காலம்’ என்று சி. பால சுப்ரமண்யமும் ‘புதுமைக் காலம்’ என தெ.பொ.மீ போன்றோர் சுட்டிக்காட்டுகின்றனர்.
 
                    நவீன இலக்கிய வகைக்கென்று ஒரு வரலாற்று நூலை ஏ.வி.சுப்ரமண்ய ஐய்யர் 1933-ல் ’தற்காலத் தமிழ் இலக்கியம்’ என்று முயற்சி செய்து பார்க்கிறார்.
1960-க்குப் பிறகு தமிழில் சிறுகதைகளுக்கான தனித்த இலக்கண இலக்கிய வரலாற்று நூல்கள் எழுதப்பட்டு வெளியிடப்படுகிறது. குறிப்பாக க.சிவதம்பி, சி.சு.செல்லப்பா, சிட்டி, சிவபாதசுந்தரம் போன்றோர்களின் பங்களிப்புகள் குறிப்பிட வேண்டியவை. வல்லிக்கண்ணனின் ’உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும்’ நூலையும் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். 1967-ல் வெளிவந்த க.சிவதம்பியின் ’தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற நூலையே முதல் நூலாகச் சொல்லுகிறார்கள்.

                         1960-களில் கட்டுரைகளாக எழுதப்பட்டு 1974-ல் சி.சு.செல்லப்பா தொகுத்த ‘தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது’ நூலை நாம் இங்கே குறிப்பிட வேண்டும். 1979-ல் வெளியிடப்பட்ட வேதசகாயகுமாரின் ‘தமிழ்ச் சிறுகதை வரலாறு’ என்ற நூல் ‘விடியல், வெய்யில், இளமாலை’ என்று மூன்று பிரிவுகளைக் கொண்டு அறுபதுகள் வரையிலான சிறுகதை வரலாற்றைப் பேசுகிறது. 1980-களில் எழுதப்பட்ட ’தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும்’ என்ற நூல் சிட்டியும் சிவபாதசுந்தரமும் இணைந்து எழுதியது. 1850-களிலிருந்து 1925 வரையிலான சிறுகதைக் காலத்தையும் 1926 லிருந்து 1945 வரை ஒரு காலத்தையும், 1946 லிருந்து 1960 வரை ஒரு காலத்தையும், 1961 லிருந்து 1978 வரையிலான காலத்தையும் சேர்த்து நான்கு பிரிவுகளாக அனுகியுள்ளார்கள். முறையே பின்புலமும் கொள்கைகளும், சாதனையும் சோதனையும், பரப்பும் பரிசோதனையும், புதிய பரிமாணங்கள் ஆகியனவாகும். இவ்வாறு தமிழ் சிறுகதைகளைப் பற்றிய முழுமையான பார்வைகளைப் பெறுவதற்கு இந்நூல்களை நாம் பரிசீலிக்கலாம். ஆனபோதும் மௌனியின் கதைகளை ஆராய்வதற்கு இவைகள் போதுமானவைகளாக இருக்குமா என்பது என் ஐயப்பாடு.
                   ஆக, நாம் சிறுகதை குறித்து வெளிவந்த கட்டுரைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். இவற்றின் முன்னோடியாக 1955-ல் ஆங்கிலக் கட்டுரை ஒன்றை சிறுகதைகள் குறித்து சிதம்பரநாதன் செட்டியார் ‘தமிழ் கல்ச்சர்’ என்ற இதழில் ஆங்கிலத்தில் எழுதி வெளியிடுகிறார். 1907-ல் பிறந்த மௌனி, 1936 முதல் எழுதி வந்தார். 1936-ல் மணிக்கொடியில் வெளியான ‘ஏன்?’ கதைதான் அவரின் முதல் சிறுகதை.
மௌனியைப் பற்றி பிரமிள், “மௌனியின் இலக்கிய முன்னோடிகள் என்று, தமிழில் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லிவிட முடியாது.” – (தமிழ் நவீனத்துவம் – பிரமிள் * 177)
பிரமிளின் கூற்றுப்படி சிறுகதைகளாக மௌனியின் கதைகள் தனித்து நிற்பவையே. மௌனியின் கதைகளில் “மனக்கோலம்” எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஓர் ஆணின் பரிதவிப்பை இத்துனை ஆழமாக யாராலும் சொல்லிவிட இயலாது.

                               “ஒருக்கால் நான் சாய்ந்தபோது வந்து போய்விட்டாளோ! இல்லை, அவளால் முடியாது. எல்லோருடைய தூக்கத்திலும் வருபவள், நான் தூங்கும்போதா வருவாள்… என்னைத் தட்டி எழுப்பாமலா போய்விடுவாள்’.” – (மௌனியின் படைப்புகள் முழுத்தொகுப்பு *147)
இக்கதையின் அழகியல் இயற்கையை மன விசாரங்களோடு ஒப்பிட்டு வருணித்துச் செல்லுவதில் இருக்கிறது. ஒரு கட்டத்தில் பழகிப்போய்விட்ட மரபுகளின் உறவுகளை உடைத்தெரிய முற்படும் அக அமைப்பை இயற்கையோடு ஒப்பிட்டு மீண்டும் பழமையின் பிடிக்குள் நெளித்து விடுபடும் அகத்தைப் பாதுகாப்பவனாகவே அல்லது உடைத்தெரிய மனம் இல்லாதவனாகவே சித்திரித்திருப்பதில் இருக்கிறது. இதுவே மௌனியின் அரசியலாகவும் கொள்ளலாம். தாய், தந்தையர் இறந்துபோனால் மட்டுமே ஆண் கதாப்பாத்திரம் அலைந்து திரியும் என்கிற கதையாடலை மௌனி தவிர்த்திருக்கலாம் என்று கூட எனக்குத் தோன்றுவதுண்டு. ஆனால், அவ்வரிகள்தான் அவனுடைய மன எழுச்சிக்குச் சொல்லப்பட்ட நியாயமாக மௌனி கருதியிருக்கலாம்.

                                  முத்துக்குட்டி ஐயர் தொடங்கி பாரதி வரையிலும், வ.வே.சு ஐயர் தொடங்கி இன்றைய கதை சொல்லிகள் வரை நாம் தெரிந்துகொள்ள மேலும் பயணிக்கவேண்டி இருக்கிறது. இதைப் போன்ற பத்து அத்தியாயங்களையாவது கடந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். மௌனியைப் பற்றியும் கு.ப.ராவைப் பற்றியும் பிற சிறுகதை ஆசிரியர்களைப் பற்றியும் சிறுகதைகளின் போக்குகள் தாக்கம் வடிவம் உள்ளடக்கம் போன்றவற்றையெல்லாம் விரிவாகத் தொடர்ந்து பேசுவோம்.
Top of Form

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...