Search This Blog

Tuesday 7 March 2023

மலம் அள்ளும் தொழில் எப்படி வந்தது ? ஏன் வந்தது ? யார் கொண்டுவந்தார்கள்?

 

மலம் அள்ளும் தொழில் எப்படி வந்தது ? ஏன் வந்தது ? யார் கொண்டுவந்தார்கள்?

 

https://www.hindutamil.in/.../954712-how-did-you-come-to... 

            தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்  பரப்புரையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ‘அருந்ததியர் சமூகத்தை மையப்படுத்தி மலம் அள்ளும் தொழில் குறித்துப்பேசியதாக’ எழுந்த சர்ச்சை சமூக வளைதளங்களில் பெரும் விவாதப்பொருளாக மாறி அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

           சுகாதார துப்புரவு பணியில் மலம் அள்ளும் தொழில் எப்போது துவங்கியது?, குறிப்பிட்ட சமூகங்களை மட்டும் ஏன் இத்தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்? என்ற கேள்விக்கு விடை தேட வைத்துள்ளது இந்த விவாதம்.

 

        மன்னர், பாளையப்பட்டு, ஜமீன் காலத்தில் அரண்மனைகள் தனியாகவும் அல்லது ஊரில் மையப்பகுதியில் அமைந்து பட்டி, ஊர், சேரி, பட்டிணம், நகரம் என்ற அமைப்பில், சாதிவாரியாக தெரு அமைந்திருப்பதும் அதில் தற்போது பட்டியல் குழுக்களாக அறியப்படும் குலத்தினர் பொதுவாக வடபுறத்திலும் சில பகுதிகளில் மேல் புறத்திலும் வீடுகள் அமைந்த சான்றுகள் உள்ளன.

 

        ஆண்டாண்டுகாலமாக மனிதர்கள் கூடும் தின, வார, மாத சந்தை, ஆண்டுக்கு ஒரு முறை கோயில் திருவிழாக்களை மையமாக வைத்து மக்கள் பெரும்திரளாக கூடும் திருச்சந்தையில் கூட துப்புரவுப்பணியாளர்கள் குறித்த தரவுகள் கிடைக்கவில்லை. ஆனால் கோயிகளில் உழவாரப்பணிகளை திருக்கூட்டத்தார் செய்த சான்றுகளே கிடைக்கிறது.  

 


 

         ‘’வேளாண்மை உற்பத்திக்காக பணி அமர்த்தப்பட்ட குழுக்கள் வேளாண்மை நிலம் கைமாறும் போது நிலத்தில் பணி செய்து கொண்டுள்ள மக்களும் நிலத்துடன் விற்ற சான்றுகள் உள்ளன. இதை அடிமை விற்பனை என பேராசிரியர் காளிமுத்து, ஆ.சிவசுப்பிரமணியன் போன்றோர் பதிவிட்டுள்ளனர். ஆனால் அவர்கள் துப்புரவு மலம் அள்ளும் தொழிலில் ஈடுபட்ட சான்றேதும் குறிப்பிடவில்லை.

 


‘மழை பெய்தால் தெரியும் வறட்டாம் பீ நாத்தம்’ என்ற பழமொழி குறித்து விளக்கம் பெறுவதற்காக பேராசிரியர் தொ.பரமசிவம் அவர்களிடம் நான் விவாதித்த போது ‘பொதுவாக வெப்பமண்டலப்பகுதியில் மலத்தை தனியாக அள்ளுதல் இருக்காது. அரண்மை பெண்கள் மலம் கழித்திட ‘பீ மந்தை’ என்ற ஒன்று இருந்த வழக்காறு உள்ளது. அதில் கூட மலத்தை அள்ளிட ஆள்கள் இருந்த சான்றுகள் இல்லை. இது பிரிட்டீஷ்காரனின் தேவையால் உருவானது. பிரிட்டீஷார் கொண்டு வந்த சீனிசர்கரை ஆலைக்கு தேவையான கரும்பினை அதிக உற்பத்தி செய்திட உரத்திற்கு காய்ந்த மலத்தை அள்ளிட வைத்தார்கள். இதன் நீட்சி 1975 வரை நீடித்ததை நான் பார்த்துள்ளேன். ஆனாலும் இது குறித்த பெரிதான ஆய்வுகள் வரவில்லை’ எனச்சொன்னார்.

  

           டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியர் மீனா ராதகிருஷ்ணன் டிஸ்கானர்டு  பை கிஸ்டரி (Dishonoured by History: "Criminal Tribes" and British Colonial Policy 2010) என்ற ஆய்வு நூலில் ‘’ உப்பு விற்பனை வரி,உப்பு விற்பனை உரிமம் பெற கட்டணம் போன்ற சட்டத்தால் உப்பு வியாபாரம் செய்த குடிகள் கடுமையான பாதிப்பட்டனர். 1871ல் வட இந்தியாவில் கொண்டுவந்த குற்றப்பரம்பர சட்டம் இந்தியா முழுவதற்கும் 1911–14ல் நடைமுறைக்கு வந்தது. குற்றப்பரம்பரை வளையத்தில் சிக்கவைக்கப்பட்ட சாதியினர் அனைவரையும் ஒரு கொட்டடிக்குள் அடைத்து வைக்கப்பட்டனர். இவர்களில் யாரேனும் ஐந்து முறைக்கு மேல் திருட்டுக்குற்றத்தில் ஈடுபட்டால் கொட்டடியில் உள்ள கழிப்பறைய சுத்தம் செய்திடும்  தண்டணை வழங்கப்பட்டது. இப்படி தண்டணை பெற்றவர்களை முதல் வகுப்பு இரயில் பெட்டியில் மட்டும் அமைக்கப்பட்டிருந்த கழிப்பறைகளை சுத்தம் செய்திட பணிக்கப்பட்டனர்’’ என தனது ஆய்வேட்டில் குறிப்பிடும் இவர், குறவர் சமூகம் போன்ற சாதியினரை இப்பணிக்கு பயன்படுத்தியதாக குறிப்பிடுகிறார்.

 

 

ஆனால் மதுரை மேனுவல் நூலினை 1860ல் எழுதிய ஜெ.ஹெச். நெல்சன் குறவர் குடிகள் உப்பு விற்பனையுடன் வெடியுப்பு தயாரித்து வியாபாரம் செய்தனர் என்று பதிவிட்டுள்ளார். 1911 வெளியான பிரான்சிஸ் எழுதிய மதுரை மேனுவல் நூல் மேல்குறிப்பிட்ட குலத்தினரை திருடர்கள் என்றும் சில குழுக்களை அடிமைத்தொழில் தலைமுறை தலைமுறையாக செய்து வருவதாக பதிவிட்டுள்ளார்.

                 

           கிழக்கு இந்தியன் கம்பெனி இந்தியா முழுவதிலும் 1801ல் பாளையப்பட்டுகளிடம் இருந்த நீதி, இராணுவத்தை தடை செய்து, வெடி ஆயுத தடைசட்டம் கொண்டு வந்தனர்.. பாளையப்பட்டு படைகளில் வெடிப்படை வீரர்களாகவும் வெடி தயாரிப்பவர்களாக இருந்தவர்கள் அருந்ததியர், குறவர், காலாடி, பிறமலைகள்ளர், வலையர் போன்ற குழுக்கள் என்பதற்கு இன்றும் சான்று எச்சமாக கொங்கு மண்டலம் மதுரை மண்டல கோயில் திருவிழாக்களில் வெடி வெடிக்கும் உரிமை இவர்களிடம் உள்ளதை கள ஆய்வில் தெரிந்து கொள்ளலாம்.

 

            ‘1801 சட்டத்தின் படி வெடிப்படை வீரர்களை பாளையப்பட்டு தலைவர்கள் கைவிட வேண்டிய சட்ட நெருக்கடியால் படை வீரர்களை பிரிட்டீஷார் எளிதாக சட்ட வளையத்திற்குள் கொண்டுவந்து நகராட்சி துப்புரவு தொழிலுக்கும், இராணுவ குடியிருப்பு, இரயிவே குடியிருப்பு, தேயிலை எஸ்டேட்டுகளில் பிரிட்டீஷார் குடியிருப்புகளில் மலம் அள்ளும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனாலும் குற்றப்பரம்பரை சட்டத்தில் இருந்த அனைத்து சாதியினரையும் துப்புரவு தொழிலுக்கு கொண்டு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது’’.

 

 ‘’இந்தியாவில் ஏற்கனவே சமூக சட்ட நடைமுறையில் இருந்த மனுதர்ம அடிப்படையில் சாதி தோற்ற புனித கதைகளை சான்றாக வைத்து குறிப்பிட்ட சாதிகளை இப்பணிக்கு கொண்டு வந்தனர்’’ என குறிப்பிடுகிறார்’ நார்த்தன் யுனிவர்சிட்டியிலிருந்து தமிழகத்தில் இரட்சன்ய சேனையும் குற்றப்பரம்பரை சட்டமும் என்ற தலைப்பில் ஆய்வு செய்த எமிலி.ஏ.பெர்ரி என்ற ஆய்வாளர். (the salvation army; criminal cartakers 1882-1914) Emily.A.Berry,Northearten university).

         1896ல் பல்லாண்டுகள் குறவர் சாதியினருடன் தங்கி ஆய்வு ஆய்வு செய்த டபியூ.ஜெ.ஹச் (w.j.Hatch) என்ற ஜெசூட் பாதிரியார் (the land pirates in india) அறிக்கையில் (நூலான வந்துள்ளது) உப்பு சட்ட நெருக்கடி  காரணமாக தொழில் இழந்த குழுவினர் வயிற்றுப்பிழைப்பிற்காக திருட்டு குற்றம் செய்திடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதற்கு முன்பு உப்பு, கருவேப்பிலை, இஞ்சி, கூடை முடைதல், அரசர்களுக்கும், படை வீரர்களுக்கும் சாராயம் காய்ச்சி கொடுத்தல், சிறுதானிய வியாபாரம் செய்தவர்கள் தொழிலை விட்டு சாலை கொள்ளையர்களாக உள்ளனர் என பதிவிட்டுள்ளார்.

           மெட்ராஸ் மாகாண காவல் துறை தலைவராக 1904ல் இருந்த பாப்பு நாயுடு தனது அறிக்கையில் (நூல்)  (railway thives) தென் இந்தியா முழுவதிலும் இருந்த குறவர் சாதியினரை இரயில்வே கொள்ளையர்கள் எனக்குறிப்பிடுகிறார்.

          இப்படியாக பிரிட்டீஷ் ஆட்சியில் தொழில் வர்த்தகத்தை சில குழுக்களுக்காக கொடுத்து தமிழகத்தில் வியாபார குடிகளாகவும் போர் குடிகளாகவும் போர் துணைக்குடிகளாகளாக இருந்த சாதியினரை மலம் அள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர் என்பதே வரலாறு.

 

1 comment:

  1. சிறப்பான கட்டுரை! ஆய்வும் தக்க சான்றுகளும் உங்கள் எழுத்தின் பலம். சுளுந்தீ நாவலோடு பொருந்தி பொகிறவாரு இந்த விடயம் இருக்கிறது.

    ReplyDelete

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...