Search This Blog

Friday 29 January 2021

நூல் மதிப்புரை ; நூல்; தமிழரின் தாவர வழக்காறுகள்

 

நூலதிகாரம்

 

நூல்; தமிழரின் தாவர வழக்காறுகள்

ஆசிரியர்; பேராசிரியர்.முனைவர் ஆ.சிவசுப்பிரமணியன்

வெளியீடு; உயிர்

விலை; 210

 

பூமியில் மனிதனாக பரிணாமம் பெற்ற போது தன்னை தகவமைத்து, தற்காத்துக்கொள்ள கண்டுபிடித்த முதல் அறிவியல் மருத்துவமாகவே இருக்கும். அப்போது முதல் தலைமுறை தலைமுறையாக கடத்தி வரும் செய்திகளே வழக்காறுகள். பயன்பாட்டிற்கும் வழக்காறுக்கும் சிவில் - கிரிமினல் சட்டத்திற்கும் இருக்கும் நுண்ணிய இடைவெளி என்பார்கள். அந்த இடைவெளியை நிரப்பிட முயற்சி எடுத்த சிறு நூல் என்றே நூலாசிரியர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். 

வழக்காற்றியல் தளத்தில் பயணித்தால் பல நூறு பாகங்களாக தொகுக்க வேண்டிய நூல். அந்தளவிற்கு மானுட சமூகத்தில் வழக்காறுகள் குவிந்து கிடக்கிறது. இப்பணியை 'வரும்தலைமுறையினர்' செய்திடும் என்ற நம்பிக்கையில் தூண்டுதலுக்காக இந்த நூலை படைத்துள்ளார் நூலாசிரியர் என்றே எடுத்துக்கொள்ள முடிகிறது.

 

''‌வழக்காறு என்பது lore என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ஈடான தமிழ்ச் சொல். மரபுவழிச் செய்தி அல்லது வாய்மொழிப் பாரம்பரியத்தைக் குறித்து நிற்பது.   பயன்பாடு என்பதை இங்கு ஒரு வழக்காறானது  எவ்வகையான பயன்படுகிறது அல்லது பயன்படுத்தலைக் குறிப்பதாகக் கொள்ளலாம். இங்கு தாவரங்கள் குறித்த  மரபுவழிச் செய்திகள் எடுத்தாளப் பட்டுள்ளன. Plant Lore  என்பதன் தமிழாக்கமாக இது அமைந்துள்ளது.

பயன்பாடு என்பதை இங்கு இரண்டு வகையான பொருள் தருகிறது. ஒன்று ஒரு குறிப்பிட்ட வழக்காறுக்கென்று உரிய பயன்பாடு. (தாலாட்டு, ஒப்பாரி. ஒரு குறிப்பிட்ட வழக்காறை ஒரு குறிப்பிட்ட தனிமனிதன் அல்லது மனிதக் குழு /சமூகம் எவ்வாறு பயன்படுத்துகிறது  என்பதைக் குறிப்பது. (ஒரு தாவரத்தை உணவுக்காக மட்டுமே பயன்படுத்துவது. அழகுக்காக வளர்ப்பது. மருத்துவத்திற்கான பொருளாகப் பயன்படுத்துவது)''  - நூலாசிரியர் .

 

நொச்சி ஆவரை, எடுக்கு, எள், ஆமணக்கு, பருத்தி, தாவர எண்ணை என பதினொரு தலைப்புகளில் அதன் வழக்காறுகள் தொகுக்கப்பட்டுள்ளது.

நொச்சி என்றாலே வலி என்று பொருள். ''நொச்சிய மோந்து (நுகர்ந்தால்) பாத்தால் நோவு (நோய்) இல்லை' என்ற சொலவடை இன்றும் புழக்கத்தில் உள்ளது. அந்தளவிற்கு இதன் பயன்பாடு அதிகம். கிராமதெய்வங்களுக்கு பொட்டி தூக்கிப்போவார்கள். அதில் காதோலை கருகுமணி, பட்டுத்துணிகள், சில ஊர்களில் நகைகள் இருக்கும். இந்தப்பெட்டிகள் ஆண்டுக்கு ஒரு முறையே திறந்து பார்ப்பார்கள். இதில் நொச்சி இலையை போட்டு வைப்பார்கள். பூச்சி அதற்குள் தாக்காது, பூச்சான் பிடிக்காமல் இருக்கவும் என்ற பட்டறிவை மக்கள் அறிந்ததால் இதைச்செய்கிறார்கள். தலைவலி, உடல் வலிக்கு ஆவி பிடிப்பது இந்த இலையிலே. இதை விட முக்கியமானது கம்பளத்து நாயக்கர் சடங்கு சம்பிரதாய நிகழ்வில் இசைக்கப்படும் உறுமியை இசைக்க ஒருபக்கம் பயன்படும் குச்சி இந்தக்குச்சி என்ற செய்தியை நூலாசியரியர் பதிவிட்டுள்ளது அவரின் தேடுதலை காட்டுகிறது.

 


ஆவாரை ; ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ என்ற சொலவடைக்கு இடைக்காட்டார் செய்தியை பதிவிட்டுள்ளார். ''பெரும் பஞ்சம் வரப்போகிறது என்பதை முன்கூட்டியே அறிந்த இடைக்காட்டார் தான் வளர்த்த ஆடுகளுக்கு ஆவாரையை ஆட்டுக்கு கொடுத்துப்பழக்கி, கடல் நீரினை குடிக்க வைத்தார். இதனைக்கண்ட ஊரார் அவரை ஏசியபோது பஞ்சம் வந்தது. ஊரிலுள்ள ஆடுகளெல்லாம் செத்து மடிய இவரது ஆடுமட்டும் பிழைத்தது என்ற வழக்காறை முன்வைத்து அதன் மருத்துவப்பயன்பட்டை சொல்லியுள்ளார்.

 

தோலால் ஆன செருப்பு தைத்திடுவதற்கு முன்பு ஆவாரம் பட்டை தண்ணீரில் தோலிலை ஊறவைப்பார்கள். இதனால் தோல் பதப்படுத்தப் பயன்பட்ட உப்பும், மேல்தோலுக்கும் கீழ்தோலுக்கும் இடையில் உள்ள இடுக்கில் உள்ள கொழுப்பு இந்தத்தண்ணீரில் உள்ள வேதித்தன்மையால் கரைந்து விடுவதால் மிருதுவாகவும், தோலில் உள்ள வாடையும் நீக்கி விடும். இதனால் தோலினை நாய்கள் கடிக்காது என்ற செய்தி அருமை.

 

மஞ்சனத்தி; இருபது ஆண்டுகளுக்கு முன்பு இதன் இலையை தேயிலையுடன் கலப்படமாக கலப்படம் செய்ததை நான் ஜூவியில் செய்தியாக எழுதி வெளியானது. இது பெரும் மருத்துவக்குணம் கொண்டது என்பதை பீஹார் போன்ற வட மாநிலங்களில் இதன் இலையை கசாயமாக காய்ச்சி காய்ச்சலுக்கு குடிப்பதையும் குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர். கிராம தெய்வங்களுக்கு மிதியடியாகப் பயன்படும் பாதகொரடு மஞ்சனத்தி கட்டையில் செய்தவையே காணிக்கை செலுத்துவார்கள். உழவுக்கு பயன்படும் மேக்காலுக்கு இந்த மரத்தின் கட்டைகளை பயன்படுத்தக்காரணம் இம்மரம் செதில் அல்லது வராமல் இருக்கும் மாடுகளில் கழுத்தில் மேக்கால் தொடர்ந்து அழுத்தும் போது கீய்த்து விடாது என்பதால் விவசாயிகள் பயன்படுத்தினார்கள் என்ற செய்தி நுட்பமான செய்தி பாரட்டும்படியானது. 

 

உறுமியை இசைக்க ஒருபக்கம் பயன்படும் குச்சி இந்த மஞ்சனத்தி மரத்தால் ஆனது செய்தியை நூலாசியரியரின் தேடுதலை காட்டுகிறது. லிங்க செந்தூரம் என்ற மருத்து தயாரிக்க இதன் இலை பட்டையை அரைத்து பூச்சாகப்போட்டு புடம் போடுவார்கள். குண பாடம் என்ற வைத்திய நூலிலிருந்து குறிப்புகளை எல்லாம் தேடி தேடி கொடுத்துள்ளார்.

 

எருக்கு; இதை சிவநாதம் என்று சொல்லுவார்கள். இரசாயாண உரம் வந்த பின்னால் உரமாகப்பயன்பட்ட இதன் இலைகள் விவசாயிகளிடமிருந்து அன்னியப்பட்டு விட்டது. காலில் முள் குத்தி விட்டால் முள்ளினை பிடிங்கிய இடத்தில் இதன் பாலினை தொட்டு வைத்தால் புண், பட்டுவிடும். முள் இருந்தால் தோலினை மெலிதாகச் சீவிவிட்டு அதில் எருக்கம் பாலினை அடித்தால் முள்குற்றிய இடம் பழுத்து இருநாளில் முள் வெளியே வந்து விடும் வேதனை இருக்காது. அந்தளவிற்கு வேளாண்குடிகளுடன் ஒன்றியது எருக்கு. ''எருக்லைக் காசு எறிமழுசோச்சல் என்செய்வதெந்தை பிரானே'' என்ற கிராமத்து பாடலை பதிவிட்டுள்ளார்.  

இதில் வெள்ளெருக்கு என்பது கடவுள் தங்கும் இடமாக கருதுவதால் நகர்புற வீடுகளில் கூட இந்த செடியை வைத்திருப்பார்கள். வெள்ளெருக்கு வேர் சன்னிக்கான துணை மருந்து, அதன் பால் செந்தூரம் தயாரிக்கப்பயன்படும் துணை மருந்து.  கிராமங்களில் சண்டை வந்தால் ஏழு எருக்கு வைத்து அதில் எள் வைத்து தள்ளி விட்டு அவர்கள் உறவை முறிப்பது வழக்கொழிந்து விட்டாலும் உலாவரும் செய்தியே.

ஆமணக்கு; இது சங்ககாலத்திலிருந்து மக்களோடு இருக்கும் தாவரம். பச்சை பச்சையாக இருக்கும் பாவக்காயும் இல்லை, உள்ளே பருப்பு இருக்கும் அது தேங்காயும் இல்லை, உருக்கினால் நெய்வடியும் வெண்ணையும் அல்லை என்ற பழமொழியும் குறிப்பிட்டு இதன் தகவலை தொகுத்துள்ளார். பாண்டியர் கால பிரான்மலை சிவன் குடவரை கோயிலில் ஆமணக்கு விளைச்சளுக்கும் வரி வசூல் செய்த கல்வெட்டினை குறிப்பிட்டுள்ளதை பார்க்கும் போது மக்கள் பயன்பாட்டில் எவ்வள்வும் ஊடுருவி இருந்தது என்பதற்கு இதுவே சான்று. 

திருவிதாங்கூர் மன்னர் அரண்மனைக்கு நாஞ்சில் நாட்டிலிருந்து விளக்கெண்ணை இலவசமாக கொடுக்க மன்னர் உத்தரவிட்ட ஓலைச்சுவடி சான்றை குறிப்பிடுகிறார். இதில் நாம் அறிவது ஆமணக்கு வெப்பமண்டலக் (tropical) பகுதிகளிலே விளையும். திருவிதாங்கூர் ஈர்பதமுள்ள நாடு என்பதால் அங்கு இது விளையாது என்பதால் இங்கிருந்து கொடுக்க மன்னர் ஆணையிட்டுப்பார்கள் என நம்பலாம்.

 இறப்பவர்களை எரிப்பதற்கு நன்றாக தீ நின்று எரிவதற்காக எரு அடுக்கும் போது இந்த முத்தினை தூவி விடுவார்கள்.    கட்டப்பொம்பன் பாஞ்சாலங்குறிச்சியை பிடித்த பிரிட்டீஷார் கோட்டையை இடித்து விட்டு ஆமணக்கு பயிரிட்டது, வண்டி மசகாகப்பயன்படுவது, பால் பீய்ச்சும் போது காம்புகளில் இதனை தடவி விட்டு பால் பீச்சுவதன் காரணம், மருத்துவகுணம் இவைகளை எடுத்துக்காட்டியுள்ளார்.

ஆமணக்கு முத்தினை வறுத்து அதை ஆட்டி அதன் பின்னர் கொதித்த தண்ணீரில் போட்டு வேகவைப்பார்கள். அந்த தண்ணீரில் எண்ணை மிதக்கும் அதனை மேலாக கரண்டியில் வழித்து எழுத்து அதை மீண்டும் காய்ச்சி அதில் உப்புக்கல் போட்டால் தான் விளக்கெண்ணை இதையே உணவிற்கு பயன்படுத்துவார்கள். பச்சையாக ஆட்டி எண்ணை எடுத்தால் விரைவில் கெட்டுவிடும் என்பது வேளாண்மைக்குடிகள் அறிந்த செய்தி. ஆமணக்கு செக்கு பட்டரைகள் இருந்ததாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார். தீவட்டிகளுக்கு பயன்படுத்திட பச்சை முத்தினை ஆட்டி இருப்பார்கள?. இது குறித்து ஆய்வு மேற்கொண்டால் தான் தெரியும். பச்சை முத்தினை அரைத்து கறிக்குழம்பில் சேர்க்கும் செய்தி இன்றும் கிராமங்களில் நடைமுறையில் உள்ளது. கறி, பருப்பு நன்றாக வேக ஒரு சொட்டு விளக்கெண்ணை ஊற்றுவார்கள்.

 

(சித்தாமணக்கு இதுவே வெடிமுத்து. இதுவே மருத்துவத்திற்கு பயன்படும். புற்று நோய்க்கான கூட்டு மருந்தில் செங்கத்தாரி எண்ணை தயாரிப்பில் சித்தாமணக்கு எண்ணையின் பங்கு அளப்பெரியது. தோட்டம் காட்டில் இதை விளையவைத்தால் வீடு விழங்காது என்ற நம்பிக்கை இன்றும் உள்ளது. இந்த வெடி முத்தையே கட்டப்பொம்மன் கோட்டையில் உழுது விதைத்ததாக அப்பகுதி மக்கள் இன்றும் கூறுகிறார்கள். )         

 

எள்; 'இதிலிருந்து எடுக்கும் எள்நெய் எண்ணெய் அதுவே நல்லெண்ணையாக வந்தது என்பதை குறிப்பிட்டு மருத்துவக்குறிப்பினை மநு தர்மத்தில் இது குறித்து உள்ள தகவல், செக்குகளை பார்ப்பனர்கள் பார்க்க மாட்டார்கள். ஆனால் தேவை கருதி கோயில் அருகில் செக் அமைக்க இசைந்துள்ளார்கள். கோயில்களுக்கு தீவட்டிக்கு எண்ணை கொடுக்க பணிக்கப்பட்ட கல்வெட்டு செய்திகள்,  எண்ணை கடன் கொடுக்க மறுப்பதன் காரணம். ஈன்ற மாட்டுக்கு எள் பிண்ணாக்கினை கொடுப்பது, வயதுக்கு வந்த பெண் குழந்தைகளுகுக் எள் கருப்பட்டி இடித்துக் கொடுப்பது  போன்ற செய்திகள் நூலாசிரியரின் வாசிப்பையும் அனுபவத்தை காட்டுகிறது. அனைத்து எண்ணைகளுக்கும் அதன் பெயரிலே இருக்க நல்லெண்ணை என எள் எண்ணையை ஏன் பெயர் வந்தது என்ற குறிப்பு நூலில் இல்லை.      

 

செக்குகள் எந்த மரத்தில் செய்தார்கள் அதன் அமைப்பு. படம் விளக்கம் இவைகள் மெச்சும் தன்மையானது. இந்தியாவில் பிரிட்டீஷ் ஆட்சியில் நிலக்கடலை வந்தது. இதனால் நல்லெண்ணையும் விளக்கு எண்ணையும் அறியாத பொருளாக மாறிவிட்டது. செக்கு மாடுகள் அதில் ஒற்றை செக்குகள், சின்ன செக்குகள், செக்குகள் லிங்கம் ஆவுடையின் வடிவம் நந்தி மாடுகள், சைவத்திற்கும் எண்ணை செக்குகளுக்கும் உள்ள தொடர்பு, கோயிகளுக்கு விளக்கு எரிக்க, தீ பந்தம் எரிய எண்ணை கொடுத்த செக்கார்களை கோயில் விடாதது, செக்கார்கள் என்னென்ன பெயர்களில் அழைக்கப்பட்டார்கள். கோயில்களில் ஊனமுற்றோரே தீவட்டி பிடித்து வந்தனர் போன்ற தென்னிந்திய கோயில் சாசனச் செய்திகள். நிலக்கடலை வந்த வரலாற்றில் சிறு குறிப்பு, எண்ணை ஏற்றுமதிக்காக பாண்டிச்சேரிக்கு ரயில் பாதை அமைத்தது, கடல் வணிகம் என்பது மாவணிகம் போன்ற சொற்கள். பருத்தி சோழ பாண்டியர் நாயக்கர் பிரிட்டீஷ் ஆட்சியில் பங்கு. பருத்திப்பால் வந்த கதை அதன் பயன். மருத்துவப்பயன், எத்தனை வகைப்பருத்தி இருந்தது. இவைகுறித்த பழமொழிகள்  நில  அமைப்பு முறை, சாயம் காய்ச்சிட பயன்பட்ட பொருள்கள் படிப்பவர்களை திகட்டாது எளிய நடையில் எழுதியுள்ள நூல்.

 

வழக்காறுகள் நம்பிக்கைகளை சுமப்பவை. இந்த நம்பிக்கைகளை கடவுள் நம்பிக்கைகள் உருக்கொண்டுள்ளது. இந்திய துணைக்கண்டம் போன்ற பெரும் நிலப்பரப்பு கொண்ட  நாட்டில் சட்டங்களை நடைமுறைப்படுத்த நம்பிக்கையோடு சட்டங்களை கொண்டு சென்றால் அதை அழிக்க முடியாது என்பார்கள். அதைப்போல பல வழக்காறுகள் நம்பிக்கைகள் சுற்றியை வலம் வருகிறது. அவையில் உள்ள விஞ்ஞானம், ஏளனம் ஆவதால் புறம் தள்ளப்பட்டு விட்டது. அவைகளை மீட்க இயலுமா என்பது காலமே முடிவெடுக்கும். நூலாசிரியர் தனது உரையில் அருகம்புல்லினை மேலோட்டமாக சொல்லிக் கடந்திருப்பார். வெள்ளருகு, கொடியருகு, செவ்வருகு என்ற வகைகள் உண்டு. இவை அனைத்தும் மேக, பித்த நோய்கான மூலப்பொருள்கள். ஆன்மீகத்தலத்தில் மரங்கள், குத்து செடிகள் தலவிருச்சமாக இருக்கும். அவை அனைத்தும் மூலிகைகள் என்பது பண்டுவம் (வைத்தியம்) அறிந்தவர்களுக்கு தெரிந்த செய்தி. இது போன்ற நூல்கள் தமிழ் எழுத்துப்புலத்தில் வரவேண்டும் வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

 

இரா.முத்துநாகு

Monday 25 January 2021

''சிறந்த கதை''க்காக சுளுந்தீ பெற்ற விருதுகள் (Sulunthee novel Award)

 

 

 

           ''சிறந்த கதை''க்காக சுளுந்தீ பெற்ற விருதுகள்

           *****************************************************

 

1.வாசகர்களின் மதிப்புரைகள்,

02. கலை இலக்கிய பெருமன்ற விருது,

03.தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க விருது.

04. விகடன் விருது,

05.நியூஸ் 18 செய்தி நிறுவனத்தின் மகுடம் விருது,

06.ஹலோ.எப்.எம் தினத்தந்தியின் கீரிடம் விருது,

07.உலக தமிழ் பண்பாட்டு மையத்தின் (கோயம்புத்தூர்) சிறப்பு விருது உரூபா 50000 தொகை.

 


 


 

 

Saturday 23 January 2021

நூல் மதிப்புரை இந்திய மக்கள் பழக்க வழகங்கள் + சடங்குள் - நிறுவனம்

                                                              நூலதிகாரம்

-------------------------------------------------------------------------------------------------------------------------------

நூல்; இந்திய மக்கள் பழக்க வழகங்கள்சடங்குள் - நிறுவனம்

                                                         *Hindu manars and customs & Cerminoy* 

ஆசிரியர்; அபேதுபே

மொழிபெயர்ப்பு ஆசிரியர் ; வி.என்.இராகவன்

விலை; 260

பதிப்பு; அலைகள்

************************************************************************************


''பரந்து விரிந்து நாடுகளில் அரசானால் சட்ட ஒழுங்கை காக்க இயலாது சட்டங்களை நம்பிக்கையாக்கினால் அவை ஆண்டாண்டுகாலத்திற்கு நிலைத்து நிற்கும்'' முத்தாய்பாக துவங்குகிறது இந்த நூல்.

                   

                      இந்து மதம் அது தொடர்பான விளக்கம் இன்றைய நிலையில் நாம் எப்படி இருக்கிறோம். இந்து மதத்தின் தாக்கத்தின் விளைவு. குலம் (சாதி) தோன்ற காரணம் என்னவாக இருக்கலாம்?. நம்மிடம் உள்ள பழக்க வழக்கங்கள் எதார்தமானவையா அல்ல ஏற்படுத்தப்பட்டதா? திணித்தது என்றால் யார் ?. இப்படியான கேள்விகளுக்கு 1743ல் கிறித்தவ பாதிரியாராக தென் தமிழகம் வந்து சுமார் 40 ஆண்டுகள் தங்கிய அபே துபே ஜெர்மன் மொழியில் எழுதிய *Hindu manars and customs & Cerminoy* என்ற நூலை 1984ல் ஆங்கிலத்தில் வந்தது. அதை 2008 வாக்கில் அலைகள் வெளியீட்டகம் வி.என். ராகவன் மூலம் சிறப்பாக மொழி பெயர்த்து அறிஞர் வீ.அரசு அவர்கள் மதிப்புரையுடனும் 1800 காலங்களில் தமிழ் இலக்கியத்தை மொழி பெயர்த்த ஜி.யு .போப் அவர்களின் அணி துறையில் இந்திய மக்கள் பழக்க வழக்கங்கள் சடங்குகள் நிறுவனங்கள் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளனர்.

 

                   ''தென்னகத்தில் உப்பு காய்ச்சியவர்கள் குறவர்கள் அவர்கள் வியாபாரியாக இருந்தனர். சாதிகள் இந்தியாவில் மட்டும் இல்லை ஏதென்ஸ் நாட்டிலும் நம்ம நாடு போல் இருக்கிறது, நமது நாட்டில் குலத்தொழில் இருந்தது போல் எகிப்த்தில் இன்றும் தொடர்கிறது. சாதியை கட்டமைப்பது குடும்பங்களே. சர்வ வல்லமை படைத்த அரசு மக்களை ஒடுக்கும் போது அதை எதிக்க குழு தேவைப்படுகிறது. அந்த குழுக்களே சாதிய அமைப்பாக உள்ளது. (இன்றும் அரசியல் கட்சிகள் போராடாத விசயத்தை குலக்குழுக்கள் போராடுகிறது என்பதை அன்றே தெளிவாக சொல்லியுள்ளாரோ).

   


              இந்துக்களின் பெருமையை பறைசாட்டும் பத்து புராணங்களையும் (விஷ்ணு, பத்ம ராமயாண மகாபாரத, நான்கு வேதம் ஆனந்த புராணம்.....) படித்து அதை ஐரோப்பி இலக்கியங்களுடனும் அந்த மக்களின் நம்பிக்கைகளுடனும் ஒப்பிட்டு இந்த நூலை தயாரித்துள்ளார். பெருந்தெயவ வழிபாடு சிறுதெய்வ வழிபாடு பழக்கம் என்பதெல்லாம் இல்லை. பெரும்பாலான பழக்கங்கள் பார்ப்பர்கள் மூலமே மலையாள, கன்னட, தெலுகு, தமிழ் குடிகளுக்கு வந்துள்ளது என்பதை மாவு, சாணி, மண்ணில் பிள்ளையார் பிடிப்பது, பொங்கல் வைப்பது ஏன் அதில் நெய் ஊற்றி சமைப்பது முதல், பெண்கள் மாதவிடாய் ஆனால் வீட்டிற்கு வெளியிலோ அல்லது தனியாக தங்க வைக்கும் பழக்கம், இலையில் சாப்பிடுவது, காளான், கிழங்குகளை பார்ப்பனர்கள் ஏன் சாப்பிடுவது இல்லை. இவர்களைப்போலவே யூதர்களும் சாப்பிடுவதில்லை. இந்துக்கள் *ஓம்* என சொல்லுவது போல் யூதர்கள், *ஜெகவோ* என சொல்லும் பழக்கம் ஏன் இந்த பழக்கங்கள் மேல்குடிகளாக அடையாளப்படும் பார்ப்பனர்களிடமே வந்தது என்பதை தனது கள மற்றும் படிப்பு மூலம் தரவுகளோடு நிறுவியுள்ளார்.

 

              அக்ரகாரங்கள் என்பவை பார்ப்பனர் குடியிருப்பு மட்டும் அல்ல பார்னர்களுக்கு அரசர்கள் வழங்கிய நிலத்துடன் சேர்ந்த குடியிருப்பு,  ஏன் அக்ரகாரங்கள் உருவாக்கப்பட்டன. அவை பக்திக்காக மட்டும் அல்ல சமூக பழக்க வழக்கங்களை பார்பனர்கள் மூலம் பரப்பிட அரசர்கள் அக்ரகாரங்களை உருவாக்கினார்கள் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.

 

         வீட்டில் சாணி மொழுக மட்டுமே பல குலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. சுண்ணாம்பு அடித்தால் அரச குற்றமாக இருந்தது என்ற பதிவு இன்று சாணிக்கும் மாட்டுகும் சண்டை போடுபவர்களை என்ன வென்று சொல்லுவது. இதில் எருமை மாட்டுக்கும் எதிர்ப்பு கிளம்பியது அதை விட கொடுமை.

 

             இந்து மதத்தில் வைணவம், சைவமும் சண்டையிட்டாலும் இரண்டும் சூரியனை மையப்பட்டு ஒன்றாகி விடுகிறது என்பதை தெளிவுற கூறும் இந்த நூல் பார்ப்பன பழக்க வழக்கங்களை எதிர்த்த கவிஞர்களில் வள்ளுவன், பட்டினத்துப்பிள்ளை (பட்டினத்தார்) தெலுங்கு தத்துவ கவிஞர் வேமனா (இவரின் சீடராக அறிவித்து கொண்டவர் தான் பெரியாரையும் காந்தியத்தையும் ஏற்றுக்கொண்ட ஆந்திர சீர்திருத்தவாதி கோரா) போன்றர்கள் கவிதையை அடையாளப்படுத்துகிறார் அபே துபே. அதேபோல் ஐரோப்பியர்கள் வருகைக்கும் முன்பு வரை இலக்கியங்கள் கவிதை நடையிலே இருந்தது என்பதை நமக்கு சொல்லாமல்  சொல்லுகிறார். ஐரோப்பியர் வருகைக்கு பின்னரே வசன நடையில் இலக்கியம் பிறந்தது என்ற தகவல் சிறப்பு.

 

          திருவிதாங்கூர் (கேரளா) சமசுதானத்தில் சாணார்கள் மட்டுமே மேலாடை அணிய தடை என சட்டம் இருந்ததாகவே நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் அங்கு பார்பனர்கள் உள்பட அனைவருமே மேலாடையில்லாமல் இருந்தனர் என்பதை தெளிவுபடுத்துகிறார்.

 

            இறந்தவர்களுக்கு மாரட்டிப்பது கூலிக்கு அமர்த்தி அழும் பழக்கம் தென் இந்தியா முழுவதும் இருந்தது. இப்பழக்கம் ரோமானியாவில் இருக்கிறது என்பதை உலக பழக்கம் வழக்கங்களை திராவிட பகுதியோடு ஒப்பிட்டுள்ளார். இந்துக்கள் பெண்களை அடிமையாக நடத்துவதாகவே கருதும் நூல் ஆசிரியர் ஆர்மேனிய நாட்டிலும் பெண்களை இந்துக்கள் போலவே நடத்துகிறார்கள் என ஒப்பீடு செய்துள்ளார். பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என மநு நூலும், பத்மபுராணமும் சொல்லுவது போல் அர்மேனிய நாட்டு இலக்கிங்கள் சொல்லுகின்றவாம்.

 

            உடன்கட்டை ஏறும் பழக்கம் இந்தியாவில் மட்டும் இல்லை *கிஸ்டோயஸ்*, *தைரேசியா*, *வெணஸ்*, *ஜெருளி*, *ஸ்காண்டிநேவியா* போன்ற நாடுகளில் இருந்தது. இந்தியாவில் இசுலாமியர்கள் ஆண்ட பகுதியில் தடை சட்டம் போட்ட பின்னரே இந்த நாடுகளில் தடை போட்டார்கள். கிரேக்கதில் இன்னிஸ் *நெருப்பு* கடவுளாக வணக்குங்குவதில் போல் இந்துக்கள் நெருப்பை வணங்குகிறார்கள். மொட்டை போட்டு கடவுளுக்கு காணிக்கை செழுத்துவது போல் 200 ஆண்டுகளுக்கு முன்பு நகமும் காணிக்கை செழுத்தப்பட்டது என்ற வியப்பான செய்தி. பட்டக்கல், பதாமியில் (வட கருநாடாகவில் புலிகேசி ஆண்டபகுதி) உள்ள கோயிலில் சிலைவடிவமாக செதுக்கி சொல்லப்பட்ட பஞ்சதந்திர கதைகள் உலகம் முழுவதும் இங்கிருந்தான் பரவியது என்பதற்கான காலங்களை அறுதியிட்டு பதிவிட்டுள்ளார்.

 

            சிறந்த எழுத்தாளன் உண்மையை வெளிக்கொண்டு வர சிரமப்படவேண்டிவரும் என்பார்கள் அதை இந்த நூல் நிறுவியதாக தெரிகிறது. மானுடவியல் குறித்து படிக்க விரும்புபவர்கள் படித்திட வேண்டிய நூலாகவே பார்க்கிறேன். 

 

Wednesday 13 January 2021

நூல் மதிப்புரை ; தென்னிந்திய கிராம தெய்வங்கள்


 

 

 

                                         நூலதிகாரம்

 


நூல்; தென்னிந்திய கிராம தெய்வங்கள்   

*******************************************

ஆசிரியர்; ஏசு சபை பாதிரியார் ஒயிட்ஹெட் ஹென்றி  

தமிழிலில்; வானதி

வெளியீடு ; சந்தியா பதிப்பகம்

விலை ; 160


 

''மதங்கள் என்ற சொல்லால் அறியப்படும் தத்துவ கோட்பாடுகளை மானுடத்திற்கு கற்பிக்க தோன்றியவை. ஆசிவகம், பாசுபதம், சமணம்., பவுத்தம், சைவம், வைணவம் இப்படியாக உலகத்திலே அதிக தத்துவங்களை தோன்றிய மண் இந்திய துணைக்கண்டத்தில் மட்டுமே. இந்தியாவில் இறை நம்பிக்கையில் உள்ள பகுதி தென் இந்தியா கிராமங்கள். அதில் தமிழகத்தின் தென்னகம் என்பதே கூடுதல் கவனப்படுத்தி ஆய்வுகள் செய்திட வேண்டியதாக உள்ளது.'' என்பதை நூலாசிரியர் பாதிரியார் ஒயிட்ஹெட் ஹென்றி  நூலின் துவக்க உரையிலே பதிவிட்டுள்ளார் .

 

 

''கடவுளின் பெயரால்'' என ஏசு சபையினர் சொல்லுவதைப்போல நமது கிராமங்களில் ''நான் பீடி சீகரட், சாராயம், கள் குடிக்கமாட்டேன். இது சாமி குத்தமாகிடும், எங்க குலசாமிக்கு ஆகாது'', 'பறையர், நாவிதர், ஏகாலி, கள்ளர், பள்ளர், ஆசாரி ஊருக்குள் சாமி தங்க விடாது, ஏன் பஞ்சாய்த்து தலைவராக இருக்கக்கூடாது, மஞ்சு விரட்டில் பறையர் மாடு அணைந்தால் சாமி குற்றமாகிடும். அந்த ஊரும் எங்க ஊரும், அவங்க வீடும் எங்க வீடும் தண்ணீர் புண்ணி புழங்கமாட்டோம், அதை மீறி நடந்தால் குலசாமி குற்றமாகிவிடும்' இப்படியாக ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு சாதியை நீக்கி வைக்க காரணங்களை அனைத்தும் கிராம தெய்வங்கள் வழியாக கட்டமைக்கப்பட்டிருக்கும். இருப்பினும் இன்று பட்டியல் சாதியினராகக்கருத்தப்படும் பெரும்பாலான சாதியினர் பூசகர்களை கொண்ட பகுதி இந்தியாவாக இருந்தாலும், இன்னும் நடைமுறையில் உள்ள பகுதி தென் தமிழகமே என்றால் மிகையான சொல் அல்ல.

 

''சாதிய அடுக்கு முறையில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பது இருந்தாலும், அரசு சட்டங்களை விட குல தெய்வ சட்டங்கள் இந்திய கிராமங்களை ஆண்டு கொண்டே இருக்கிறது. கிராமங்களில் எளிய சாதியாகக் கருதப்படும், வண்ணார், குயவன், ஆசாரி, பள்ளர், பறையர், சக்கிலியர் பூசாரியாக இருப்பது சமூக ஒற்றுமையைக் காட்டுவது. பறையர் ஒருவரால் கிராம தெய்வங்களுக்கு வெட்டப்படும் இந்த ஆடுகளின் இரத்தமும், சேர்வைக்காரர் சாதியை சேர்ந்த பூசாரியால் ஒரு மண் பானையில் சேகரிக்கப்படுகிறது. இதை காப்புக்காரன் என்ற ஊர் காவல்காரன் இந்த இரத்தத்தை எல்லாம் சாதத்துடன் சேர்த்து சாமிக்கு படைக்கிறார். திருச்சி அருகே உள்ள புள்ளம்பாடியில் பறையர் சமூகத்தை சேர்ந்தவர் கிடா வெட்டுவார். நமக்கான சபையினரை உருவாக்கிட வேண்டும் என முனைப்பு காட்டிய போது தடையாக இருப்பது சிவ நெறியோ, வைணவ கோட்பாடோ இல்லை. இந்த கிராம தெய்வங்கள்'' என்று கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களான இராணுவ அதிகாரிகள் நியமித்த ஏசு சபை பாதிரிமார்கள் கொடுத்த அறிக்கை. இதற்கு மாற்றாக என்ன செய்திடலாம் யோசித்தவர்கள் முதலில் கிராம தெய்வங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென முடிவெடுத்தார்கள். அதன்படி ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டவர்தான் ஏசு சபை மாபெரும் பாதிரியார் ஒயிட்ஹெட் ஹென்றி.  இதை நூல் நூலிடையாக குறிப்பிடாமல் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து எழுதியுள்ள ஜெசூட் பாதிரிமார்களான அபே- துபே, இராபர்ட் டி.நோபிளி போன்றவர்களின் பெருத்த அய்வு குறிப்புகளின் அடிப்படையிலே மேற்குறிப்பிட்டுள்ள பகுதியை எழுதியுள்ளேன்.

  ''கிராம தெய்வங்கள் மூலம் இந்துமதம் வேறூண்ற முடியாது என்பதை அறிந்த கலைஞர் கலைஞர்கள் அவர்கள் கிராம பூசாரிகள் சங்கத்தை துவக்க இந்து முன்னனி இராமகோபலனை தூண்டிவிட்டார்'' என்ற பேச்சும் உண்டு. இது எந்தளவிற்கு மெய்த்தன்மை உடைய செய்தி என்பதை உறுதிபடுத்த முடியவில்லை.

 கிராம தெய்வங்கள் வழிபடடும் மக்கள் சிவனையும் விஷ்னுவையும் சேர்த்து வழிபடுகிறார்கள்

********************************************************************************************

 ''நாம் இன்று இந்து மதம் என்று அழைக்கும் மதமானது, மிக நுண்ணிய தத்துவ ஆராய்ச்சிகள் முதல் மிக எளிமையான இயற்கை வழிபாடு வரை கொண்ட ஒரு மதமாகும். அதே போல திராவிடர்களின் ஆதிமதமானது பிராமணர்களின் தாக்கத்தால் பெரிதும் மாறிவிட்டது. பெரும்பாலான நகர்வாசிகளும், கிராமத்தவர்களும் இன்று தங்கள் கிராம தெய்வங்களையும், பிராமண தெய்வங்களையும் ஒருசேர வழிபடுபவர்களாக இருக்கின்றனர். மலை, காடுகளில் வாழும் சில ஆதிவாசிகள் இன்னமும் இந்த பிராமண தாக்கம் இல்லாமல் இருந்தாலும், பெரும்பாலானவர்கள் தங்கள் கிராம தெய்வங்களுடன் சிவனையும் விஷ்ணுவையும் சேர்ந்தே வணங்குகின்றனர். சீனாவில் எப்படி கன்பூசியஸும் தாவோவும் வேறு மதங்களாக பார்க்கப்படாமல் ஒரே மதத்தின் இரு பிரிவுகளாக பார்க்கப் படுகின்றனதோ அது போலவே இதுவும்'' என நூலின் இரண்டாவது அத்தியாங்களில் இந்துமயமான கோட்பாட்டை உலகளவில் உள்ளதோடு ஒப்பீடு செய்துள்ளது.

 கிராம தெய்வ வழிபாட்டின் முக்கிய கூறுகள்

**********************************************

 ''சிவனும் விஷ்ணுவும் இயற்கையின் சக்தியின் வடிவங்கள். சிவன் அழிவின் சக்தியாகவும், மரணத்தின் வழியே கிடைக்கும் வாழ்வின் வடிவாக இருக்கிறார். விஷ்ணு காத்தலின் சக்தியாகவும் , மோட்சம் அடைவதற்கான வழியாகவும் இருக்கிறார். இந்த கடவுள்கள் பிரபஞ்ச சக்தியின் வடிவங்களாக இருக்கிறார்கள். கிராம தெய்வங்களோ கிராம வாழ்வின் அடையாளங்கள். அவர்கள் பிரபஞ்ச சக்திகளோடு அல்லாமல் கிராம வாழ்வின் நிதர்சனங்களான காலரா, பெரியம்மை, கால்நடை நோய்களுடன் தொடர்புடையவர்கள்.''  இதை தமிழர்களின் தொன்மம் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆய்வறிஞர் தொ.பரமசிவன் பேசும் போதெல்லாம் சொல்லி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கிராம தெய்வங்கள் வாழ்வியல் நிதர்சம் காப்பவை

**************************************************

வன்முறையாலோ, இயற்கையாக இல்லாமலோ இறந்து போனவர்கள், பெரும் சக்தி உடையவர்களாய் கருதப்பட்டவர்கள், சில இடங்களில் குற்றம் புரிந்தவர்கள் கூட, அவர்கள் ஆண்களோ, பெண்களோ, சிறுவர்களோ , சிறுமிகளோ வழிபடப்படுகின்றனர். இந்தக்கடவுள்கள் பல நூற்றாண்டுகளாய் வழிபடப்பட்டு வந்தாலும் , இதில் சிலர் சமீப காலங்களை சேர்ந்தவர்கள். சிலர் கொலை இயற்கையாக இறக்காதவர்கள் சக்தி உடையவர்களாக கருதப்படக் காரணம் அவர்களின் நினைவுகள் அதிகம் பெண்கள் பிள்ளைப்பேற்றின் போது இறந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

 பிள்ளைப் பேறின் போது இறந்தவர்களுக்கு சுமைதாங்கிக்கல் என்ற நினைவுக்கல் காரணம் என்பதை ஆய்வு செய்தலில் நுணுக்கமான செய்தி, ''பேறுகாலத்தில் இறப்பது என்பது வம்சம் விருத்தி அடையாமல் போய் விடும் நிகழ்வு. இந்த நிகழ்வு தொடராமல் இருக்க இறந்தவர் வரும் சந்ததியினரை காக்க தெய்வமாக நடுகல் நடுவது. அத்துடன் பேறுகாலம் பார்க்கும் மருத்துவச்சி இவரது இறப்பிற்கு ஒரு காரணம் என்பதை குறிக்கும் குறியீடு எங்கிறார்கள்.  

 நல்ல பாம்பினை கிராமத்தில் அடிப்பதில்லை ஏன்.

*******************************************************

ஒரு இராஜ நாகம் காசர்கோடு பகுதியில் உள்ள பள்ளி வகுப்பறைகளுக்கு வந்து செல்லும். யாரும் அதைக் கொல்வதற்கு முயல்வதில்லை. மாறாக அதற்கு தினமும் பால் வைக்கப்படுகிறது. பல நகரங்களிலும், கிராமங்களிலும் பெரிய மரங்களின் கீழே நாகங்களின் சிலைகள் - இரு நாகங்கள் பிணைந்து இருப்பது போன்று உள்ளவை உள்ளது. இதன் தன்மை பொருள் சரியாக பிடிபடவில்லை'' என குறிப்பிடுகிறது நூல்.

 இன்றும் கிராமங்களில் பல குடும்பத்தினர் நல்ல பாம்பினை அடிக்கமாட்டார்கள் என்பது ஆய்விற்குறியது. இத்துடன் பாசுபதநாதர் கை தண்டையிலும், சிவன் கழுத்திலும், பெருமாள் படுக்கையாகவும், சணம அல்லது ஆசீக படுக்கையிலும் நல்ல பாம்பு குறியீடு இருப்பது ஆய்விற்குறியதுடன் நம்மஊர் பாம்பாட்டிகளும் ஆய்விற்குறியவர்களே.

 மதுரையில் மட்டுமல்ல வட தமிழகத்திலும் மீனாட்சியும் மதுரை வீரனும்

**************************************************************************

''தேவனாம்பட்டினத்தில் (கடலூர்) உள்ள மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்றிருந்தேன். கடலோரத்தில் உள்ள மணல்திட்டு ஒன்றில் இந்த கோயில் உள்ளது. இங்கே கட்டடம் என்று எதுவும் இல்லை. 20க்கு 12 அடியில் ஒரு இடத்தில் மூன்று பக்கங்களிலும் களிமண் சிற்பங்கள் இருக்கின்றன. கடலை நோக்கிய மேற்குப்புறத்தில் எந்த சிற்பமும் இல்லை. கோயிலின் கிழக்குப்புறத்தில் கடலை நோக்கியபடி இரண்டு களிமண் சிற்பங்கள், ஆணும் பெண்ணும், பழைய பூமாலைகளை அணிந்தவாறு நடுவில் அமர்ந்திருக்கிறார்கள். இந்த சிலைகள் ஒரு அடி உயரத்தில் இருக்கின்றன. இவர்களுக்கு இரு புறமும் ஏழு கன்னியர்களின் களிமண் சிற்பங்கள் உள்ளன. இவர்களுக்கு முன்னும் பின்னும் இவர்களுக்கு பாதுகாவலாகவும், இவர்களின் துணையாகவும் பல ஆண்களின் சிற்பங்களும் இருக்கின்றன. ஒவ்வொரு கன்னியரின் சிற்பங்களின் அருகே ஒரு பெரிய மீன் பெரிய கண்களோடு, தன் வாயைத் திறந்தபடி இருக்கிறது. இந்த மீன்களின் மேலும் ஒரு ஆண், பெண் சிற்பங்கள் இருக்கின்றன. இந்த கோயிலின் பூசாரி, இந்த பெண்தான் மீனாட்சி என்றும், ஆணின் பெயர் மதுரைவீரன் என்றும் கூறினார். இந்த மீன்களின் அருகிலும் ஆண் பாதுகாவர்களின் சிற்பங்கள் உள்ளன. கோயிலின் வடக்கு மற்றும் கடலூர் அருகில் தேவனாம்பட்டியில் மீனாட்சி , மதுரை வீரனுக்கு கோயில் உள்ளது. மீனாட்சியும், மதுரை வீரனும் அமர்ந்திருக்கும் இந்த மீனின் பெயரை உள்ளை என்று கோயிலில் இருந்தவர்கள் கூறினர். தென்னாற்காட்டு மாவட்ட நீதிமன்றத்தில் இருக்கும் மொழிபெயர்ப்பாளர் என்னிடம் இந்த மீனின் பெயரை *உள்ளான்* என்று கூறினார். இவைகளெல்லாம் இன்னும் நமது ஆய்வாளர் தோண்டி துருவி ஆய்வு செய்திட வேண்டியவை என்பதை மறுக்க இயலாது.

 

வழிபாட்டு மரபு - கோயில்கள் , சின்னங்கள் , பூசாரிகள் , திருவிழாக்கள்

***********************************************************************

 நூலின் பத்தாவது அத்தியாத்தில் ''காலரா அம்மன் என்ற தெய்வம் வண்ணானின் அன்னையாக கருதப்படுகிறாள். எனவே ஊர் வண்ணான் பூசாரியாக இருக்கிறார். மகனாலேயே அன்னையின் கோபத்தைத் தணிக்க முடியும் என்பது நம்பிக்கை. கலாரா வண்ணர்களின் தெய்வம். இதனால் வண்ணார்களே அந்த வீட்டிற்கு சென்று வேப்ப இலை வைத்து துணிகளை எடுத்து வருகிறான். அவன் வேப்பிலை வைத்தால் இறப்பு நடக்காது என்பது நம்பிக்கை. பத்து ஆண்டுகள் வரை அம்மனுக்கு கூல் காய்ச்சிடும் இடம் ஊரில் உள்ள வண்ணார் வீடுகளே. இந்த சங்கிலி எங்கு அறுந்தது என்பதை சாதிய மேலாதிக்கவாதிகளுக்கே வெளிச்சம். இருப்பினும் இந்த சம்பிரதாயங்கள் நாயக்கர் ஆட்சியின் போது வந்தது என்ற ஆய்வினை புறம் தள்ளிவிட முடியவில்லை.

 சூலம் ( தெலுங்கில் ஈட்டி என்று பொருள் )

************************************************

ஈட்டி = தெலுங்கு // தமிழ் - சூலாயுதம். தமிழர் கடவுள் கையில் வேல்கம்பும்  சூலாயுதமும், தெலுங்கு சாமிகள் கையில ஈட்டியும் இருக்கும் என்ற நுண்ணிய செய்தியை பதிவிட்டுள்ளார்.

 ஊர் அமைக்கும் முறை

************************

 தெலுங்கு நாட்டில் ஒரு கிராமத்தை தோற்றுவிக்கும் போது நடுவில் நடப்படும் 'பொத்துராயீ ' என்றழைக்கப்படும். கிராமத்தை தோற்றுவிக்கும் முன் பெத்துராயி என்ற கல் ஊண்டப்படும். என்பதை குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர். கிராமங்களில் புதிதாக குடியிருப்பு உருவானதை முப்பது ஆண்டுகளுக்கு முன் பார்த்துள்ளேன். ஊர் மத்தியில் கல் ஊடுவார்கள் கல்லினை ஊண்டுபவர் பூசாரி, ஆசாரி, வள்ளுவனும் (பறையர்). இவர்கள் வாண் சாத்திரத்தை கணக்கிட்டு மின்னல் இடி தாக்காமல் இருக்கும் இடம் என்பதை அறிந்த பின்பே கல் நடுவதாக சொன்னார்கள். பளியர், காணிகள் குடியிருக்கப்போகும் இடத்தில் மோந்து பார்த்து கடவுள் நடமாட்டம் இருப்பதாக நம்பிய பின்னே குடியேறுவார்கள் என்பது ஆய்வில் கண்ட உண்மை.

 இரத்தப்பலி

******************

இரத்தத்தை சேர்த்துக் கொள்வது ஆப்பிரிக்காவின் கருப்பர் இன மக்களிடம், நட்பின் அடையாளமாக காணப்படுகிறது. மம்பெட்டு மக்கள் , தங்கள் கைகளில் சிறு வெட்டுக்கள் போட்டுக் கொண்டு , ஒருவர் மாற்றி ஒருவர் அந்த ரத்தத்தை குடிக்கிறார்கள். உன்யோர நாட்டில் அந்த ரத்தத்தில் காபி கொட்டைகளை நனைத்து சாப்பிடுகிறார்கள். சண்டெ மக்கள் , இரண்டு சிறு கத்திகளால் ஒருவரின் ரத்தத்தை எடுத்து இன்னொருவரின் வெட்டுக்காயத்தில் தடவுகின்றனர். காங்கோ மக்களிடம் இது போன்ற ஒரு சடங்கில் பங்கு பெற்ற திரு. வார்ட் கூறுகிறார் " முதலில் எங்கள் வலது கையின் , முட்டிக்கு கீழே , தசையில் ஒரு சிறு வெட்டுக்காயம் ஏற்படுத்தப்பட்டது. அதில் வந்த ரத்தத்தின் மேல் சடங்கை நடத்துபவர் கொஞ்சம் சுண்ணாம்பும் , பொட்டசும் தடவி , நாங்கள் இருவரும் இனி ரத்த பந்தம் உள்ளவர்கள் என்று கூறி, இருவர் கைகளையும் ரத்தம் வரும் இடத்தில , சேர்த்து உரசுகிறார். அத்துடன் நாங்கள் ரத்த பந்தமுள்ள சகோதரர்கள் என்றும் , எங்கள் நலன் எங்கள் ரத்தம் போல் என்கிறார்கள். நமது  ஊரில் இரத்தப்பலி கொடுப்பது குறித்த ஆய்வுகள் இன்னும் மேம்பாடாக இல்லை என்பது இந்த நூலின் மூலம் புலப்படுகிறது.

 முடிவாக குறிப்பு;

********************

கிறிஸ்துவ மதம் இந்த கிராமங்களில் வளர வேண்டும் எனில் இந்த வழிபாடுகளை நாம் எதிர்கொள்ள வேண்டும். தெலுங்கு நாட்டில் கிறிஸ்துவ மதத்தை தழுவிய தீண்டாமை சாதியினர் தங்கள் ஊரின் கோயிலை இடித்ததும் நடந்தது. மதமாற்றங்களை  மதமாற்றத்தை தடுப்பது கிராம தெய்வ நம்பிக்கைகளே என பதிவிட்டுள்ள நூலாசிரியர் ''தீண்டாமை சாதியினர் ஒரு காலத்தில் பிராமணர்களுடன் சமத்துவத்திற்கு போராடினார்கள் என்று தெரிகிறது. பெரும் திரளான சூத்திர மக்கள் இந்த வழிபாடுகளில் ஈடுபடுவது, எப்படி பாமர மக்களும் பூசாரிகளாக முடியும் என்பதை காட்டுகிறது. இருண்ட இடத்தில் ஒரு சிறு விளக்கு போல, இந்த விழாக்கள் சமத்துவத்தை போதிக்கின்றன. நீண்ட பல நூற்றாண்டுகளின் சாதிய அடக்குமுறைகளுக்கு பின்னும் தீண்டத்தகாதவர்கள் எப்படி பூசாரிகளாவோ (அ) கிடாவெட்டும் (அ) கோயில் பணியாளர்களாவோ இருக்கிறார்கள். ? இது ஆய்விற்குறியதே. என தனது ஆய்வறிக்கையை அனுப்பியுள்ளதை நாம் மீண்டும் ஆய்விற்குற்படுத்தினால் பல சாதிய சங்கங்களும் அதன் அரசியல் எழுச்சியும் கேள்விகளுக்கு உள்ளாகும் போது பல மெய்த்தன்மைகள் வெளிவரும். வரவேண்டும். இந்தியா சாதியால் கட்டமைக்கப்பட்ட நாடு இதில் சாதிய ஒற்றுமை முதல் தேவை. அதனை சீர்செய்திட முதலில் துவக்க வேண்டிய இடம் பண்பாட்டு தளமாக இருக்கும் என நாட்டார் ஆய்வுப்புலத்தில் ஆய்வில் இருந்த மறைந்த பேராசிரியர் தொ.பரமசிவன், ஆய்வில் உள்ள பக்தவச்சலபாரதி, அ.க.பெருமாள், ஓ.முத்தையா, சிற்பி பாலசுப்பிரமணியன் போன்ற அறிஞர்கள்  வழிவுறுத்துவதை சமூக செயபாட்டு இயக்கங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுமோ எனத்தோன்றுகிறது.  

ஒன்னரை ஆண்டுகள் கழித்தாவது சிறந்த நல்ல நூலினை மொழி பெயர்த்த வானதி அவர்களுக்கும், நூலினை வெளியிட்ட சந்தியா பதிப்பகத்தாரும் பாரட்டுக்குறியவர்களே.  

 

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...