Search This Blog

Thursday, 28 March 2019

சுளுந்தில் தீயை பற்ற வைத்த கன்னிவாடி அரண்மனை




               சுளுந்தில் தீயை பற்ற வைத்த கன்னிவாடி அரண்மனை


  • கன்னிவாடி அரண்மனை எனது ''சுளுந்தீ'' பெருங்கதைக்களத்தை தூக்கி நிறுத்திய இடம். மதுரை நாயக்கர் அரசின் படைத்தளம் இயங்கிய தளம். இதனால் நாயக்கர் அரசியலில் வைகை ஆற்றுக்கு வடக்கே தனி அதிகாரமையமாக கன்னிவாடி செயல்பட்டது.
  •  
  •             பிரிட்டீஷ் ஆட்சியை எதிர்த்த கட்டபொம்மன், ஊமத்துரை, மருது சகோதர்களுக்கு அடைக்களம் கொடுத்த குற்றத்திற்காக முதலில் காவுவாங்கப்பட்டது கன்னிவாடி பாளையப்பட்டு. இதன் சொத்துக்கள் அனைத்தையும் கையகப்படுத்திய பிரிட்டீஷ் அரசு, ஏசு சபையினருக்கு தானமாக வழங்கியது. அரண்மனையார் (ஜமீன்) குடியிருந்த அரண்மனையும் பொது ஏலத்திற்கு விட்டனர். இதனால் அரண்மனை இருந்தும் அதில் வசிக்க முடியாமல் தனது முன்னோர்கள் கட்டிய அங்காள பரமேஸ்வரி கோயிலில் தங்கி இருந்தார் கடைசி அரண்மனையாரான அப்பயநாயக்கர். அக்கோயிலும் ஏலம் எடுக்கப்பட்ட வரைபட எல்லையில் போனதால் அதையும் இழந்தார். ஏலம் எடுத்தவர்கள் அரண்மனையும் கோயிலையும் தரைமட்டமாக்கினார்கள். அதில் உள்ள அனைத்துக் கோப்புகளும் மண்ணோடு மண்ணாகிப்போனது.
  •  
  • மறைந்த முதல்வர் ம.கோ.இராமச்சந்த்திரன் (எம்.ஜி.ஆர்) அவர்கள் திராவிட முன்னேற்ற கழகத்தில் எம்.எல்.ஏவாக இருந்த காலத்தில் திண்டுக்கல் வந்தவர், அப்பயநாயக்கரின் கதையை தெரிந்து இவரை சந்தித்தித்துள்ளார். ''உங்களுக்கு நிதி அளிக்கவும் சுதந்தர போராட்ட தியாகிக்கான ஊதியம் வழங்கிட உதவுவதாக'' சொல்லியுள்ளார். இக்கருத்தை தனது நான் ஏன் பிறந்தேன் என்ற சுயசரிதை நூலில் பதிவிட்டுள்ளார். ம.கோ.இராவிடம் இதை மறுத்த அப்பயநாயக்கர் ''அரண்மனையார் கொடுத்து பழக்கப்பட்டவர்கள்  யாரிடமும் கை நீட்டி வாங்க மாட்டார்கள்'' எனச்சொல்ல ''உங்கள் கதையையாவது சொல்லுங்கள் சினிமாவாக எடுக்கிறேன். அதன் மூலம் கிடைக்கும் நிதியை முழுமையாக தங்களுக்கு வழங்குகிறேன்'' என்றும் கேட்டுள்ளார் ம.கோ.இரா. ''சினிமா வேண்டுமானால் எடுங்கள் நிதியை ஏழை மக்களுக்கு வழங்குங்கள்'' என்று சொல்லியுள்ளார் அப்பயநாயக்கர். இப்படிப்பட்ட குணம் கொண்டவரை சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த விகடன் இதழுக்காக பேட்டி எடுக்கப்போனேன். அந்தச்சந்திப்பு தான் ''சுளுந்தீ'' என்ற கதைக்கு நெருப்பு மூட்டியது.
  •  
  •             இருக்க இடமில்லாமல் கோவிலில் தங்கி இருந்தார். அன்றாட வயிற்றை கழுவ (ஜீவனம்) அடுத்தவர் கையேந்தாமல் தான் கற்ற சாதகம் (ஜோசியம்) மூலம் கிடைக்கும் வருமானத்தில் வயிற்றைக் கழுவினார். அவரிடம் ம.கோ.இரா உதவுவதாக சொன்னதை கேட்டவுடன் ''அரண்மனையார் என்பது தனிப்பட்ட அதிகார பதவி அல்ல மக்களின் தலைவர். மக்கள் சொத்துக்களை காப்பவன். இப்படித்தான் நான் அரண்மனை பட்டம் ஏற்பத்தற்கு முன்பு எனது வாத்தியார் வள்ளுவன் பெரிய கருப்பணன், புலவன் பெரிய குப்புச்சாமி (இவர் குறிப்பிடுவது இன்று பறையர் குலத்தினராக அரசு அடையாளப்படுத்தியுள்ளது என்பதை கூர்ந்து ஆய்வுக்குறியது). ஆகியோர் எனக்கு பாடம் நடத்தி சொல்லிக்கொடுத்தார்கள். மக்கள் சொத்தைக் காத்தவன் கஞ்சிக்கு இல்லாமல் செத்தான். இருக்க இடமில்லாமல் கிடக்கிறான் என்ற அவச்சொல், அவகீர்த்தியை நான் கையேந்தி வாங்குவதன் மூலம் எனது முன்னோர்களுக்கு வந்து விடும். இதனால் ம.கோ.இரா மட்டுமல்ல பிறர் செய்திட வந்த உதவியை மறுத்தேன். நான் 'மநு தர்மத்தை மதித்து அரசாட்சி செய்வேன்' என பட்டம் ஏற்றவன். எனது சிறுவயதிலே சொத்துக்கள் பெரும்பகுதியை பிரிட்டீஷார் கையப்படுத்தினார்கள். எனது முன்னோர்கள் பிரிட்டீஷாரை எதிர்த்தது இந்த மக்களுக்கு தெரியவில்லை என்பது அவர்கள் குற்றம் இல்லை'' என பேட்டிகொடுத்தார். 
  •  
  •           அவருக்கு நான் வாங்கிச்சென்ற பிஸ்கட் பாக்கெட்டை கொடுத்தேன். அதை வாங்க மறுத்து, கோவில் கிணற்றில் தண்ணீரை இறைத்து, ஒரு குவளையில் எடுத்து வந்து 'இதை மட்டுமே இந்த அரண்மனையார் கொடுக்கும் நிலையில் உள்ளேன்'' என நீட்டினார். இதுவே அவரின் தன்மானத்தின் அளவுகோள் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

  •             கோபமாக இருந்தவர், நம்மை அழைத்து அரண்மனை அருகில் உள்ள ஒரு மாடத்தைக்காட்டி இது என்னவெனக்கேட்டார். சிறுகோவில் போல் தெரிந்ததால் 'கோவில்' என்றோம். ''கோவில் இல்லை அரண்மனையார்களின் சவரம் செய்திடும் நாவித மாடம்'' எனச் சொல்ல விக்கிப்போனோம். நாவிதம் செய்திடவே மாடம் அமைத்து வாழ்ந்த எனக்கு யாரிடமாவது கை நீட்ட மனம் வருமா ? என, எதிர் கேள்வி வைத்தார். நம்மிடம் அவருக்கான பதில் இல்லாமல் மௌனமானோம். 





  • ஆனந்த விகடன் பத்திரிக்கை மூலம் கிடைத்த அவரின் நட்பில் சுளுந்தீ பெருங்கதைக்களத்தில் நான் சேகரித்த தகவல்களை அவ்வப்போது சொல்லி பதில் கேட்டேன். (நான் அவரைச் சந்திக்க துவங்கிய போது அவருக்கு எழுபத்தி ஒன்பது வயது ) மறுப்பதை மறுத்து, பல அரண்மனை ரகசியங்களை மறுக்காமல் சொல்லி, அரண்மனையாருக்கு நாவிதர்களின் பங்கு என்ன என்னபதை சொல்லி உதவினார்.
  •  
  • சுளுந்தீ 2018 டிசம்பரில் அச்சேறுவதற்கு முன் முன்வடிவத்தை (டம்மி) எடுத்துக்கொண்டு அவரைச் சந்திக்க அவரின் உறவினரும் சில்வார்பட்டி நாட்டாமையும் பேராசியர் முனைவர் மனோகரனுடன் போனேன். அவரால் என்னை முழுமையாக நினைவுபடுத்தி அசைபோட முடியவில்லை. நான், அவரை, அரண்மனையை எடுத்த படங்களை அவருக்கு கொடுத்த பின்பு ஓரளவுக்கு நினைவு வந்தது. நூல் வந்த பின்னால் அவரிடம் கொடுக்கலாம் முடிவு செய்திருந்தோம். ஆனால் அவர் 14.02.2019 அன்று மாலை மறைந்து விட்டார்.
  •  
  •  
  • அவருக்கு மரியாதை செழுத்தி விட்டு, சுளுந்தீ நாவலை 'தளுகை''யாக அவரது உடலில் வைத்தோம். அட்டைப்படத்தில் அரண்மனையின் படத்தைப் பார்த்த அவரது உறவினர்கள் ''வாழ்ந்த இடம் சுவடு இல்லாமல் போனது' எனத் தெலுங்கில் சொல்லி அழுத அழுகையை நம் காதுகளில் வலியாக ஒலித்தது.அவரின் நினைவுகளோடு கிளம்பினோம்.

1 comment:

  1. கதையின் விதை கண்டெடுக்கப்பட்ட இடம் வினோதமானது.ஆனால் அதன் பின்னணி வரலாற்றுத் தரவுகளை தேடிக் கூட்டி தந்த உழைப்பு மலைக்க வைக்கிறது.

    ReplyDelete

முரசுப்பறையர்; வரலாறு, சமூகம், பண்பாடு

  நூலதிகாரம் நூல் முரசுப்பறையர்; வரலாறு, சமூகம், பண்பாடு ஆசிரியர் ; தி. சுப்பிரமணியன் வெளியீடு ; அடையாளம்   ‘முந்தி பிறந்தவன் நா...