Search This Blog

Monday, 13 May 2019

''சுளுந்தீ'' அகழ்வாய்வில் கண்டறியப்பட்ட பிரதி - சா. தேவதாஸ்


                                                               சுளுந்தீ

                                              அகழ்வாய்வில் கண்டறியப்பட்ட பிரதி -
                         சா. தேவதாஸ் - சாகித்திய அகதாமி விருது பெற்ற பெரும் எழுத்தாளர்


                        

பேசும் புதிய சக்தி இதழில் மே 2019 இதழில் சுளுந்தீ குறித்த மதிப்புரை
''மகாபாரத்திலுள்ள நுட்பங்களையும் இரகசியங்களையும் வெளிப்படுத்தியவர் மாராத்திய தொல்லியாளர் ஐராவதி கார்வேவின் ஆய்வு போல் ஆய்வு செய்து நாவிதர் வாழ்வு சார்ந்து அரியதொரு புனைவை வரைந்துள்ள நூல்''

தமிழில் வரலாற்று நாவல்கள் என்றால் வருணனைகள் நிறைந்து கிளுகிளுப்பு அல்லது விவரணைகள நிறைந்து திகைப்பூட்டுபவை என்ற பிம்பத்தையே கொண்டிருக்கும். ஆனால் சமீபத்தில் வந்துள்ள எஸ்.செந்தில்குமாரின் காலகண்டம் (உயிர்மை வெளியீடு) புலியூர் முருகேசனின் படுகைத்தழல், இரா.முத்துநாகுவின் சுளுந்தீ (ஆதிப்பதிப்பகம்). இவைகள் வரலாற்றை புதுவாசிப்புச் செய்து அறியப்படாத தகவல்களை வெளிச்சப்படுத்தியுள்ளது. 

17ம் ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தக்கான சுல்தான்களிடம் விஜயநகர அரசு வீழ்ச்சியுற்றதும், அதன் தமிழகப்பகுதிகளை ஆண்ட விஜயநகரப் பிரதிநிதிகள் தங்களை மன்னர்களாக அறிவித்துக்கொண்டார்கள். அத்தகைய ஒரு பகுதிதான் கன்னிவாடியை தலைமையிடமாகக் கொண்ட பன்றிமலை பாளையப்பட்டு என்பது கொடைக்கானல், பழனி, வேடசந்தூர், நத்தம் வட்டாரத்தைக்கொண்டது. இந்த நிலப்பரப்பைத் துள்ளிதமாக வரைப்படமாக்கிக்கொண்டு அதில் உள்ள தாவரங்கள், விலங்குகள், வனங்கள், சொலவடைகள், பேச்சுவழக்குகள் என நிறைந்த செழுமையான பதிவு சுளுந்தீயில் உள்ளது. அதுவும் மன்னர், அரண்மனை சார்ந்த வரலாற்றை முன்னெடுத்துச் செல்லாமல் விளிம்புநிலை மக்கள் சார்ந்த வரலாற்றை விவரிக்கிறது. அப்படியே குலவிலக்கம் செய்யப்பட்ட மக்களின் பரிதவிப்பில் அக்கரை கொள்கிறது.

கதைக்களம் பின்னோக்கிய காலத்திற்கு வாசகனை இழுத்து சென்று, அன்றைய ஆட்சி மரபு ஆதிக்கம்,  மதஊடாட்டம், வஞ்சனை, சித்தமரபிலுள்ள பண்டுவ (மருத்துவ) செயல்பாடுகளை கண்முன்னே காட்டி அதிசய வைக்கிறது. மன்னர், குறுநில மன்னர், ஜமீன்தார்கள், முதுகுடிகள், புலம்பெயர்ந்தோர் என்று கலப்பாக வாழும் சமூகத்தில்தான் கதை பயணிக்கிறது. ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்கள் பூர்வகுடிகளின் நிலத்தையே சொந்த நிலமாக ஆக்கிக்கொண்டு படிமலர்ச்சி பெறுவதை எடுத்துக்காட்டுகிறது.

முடியாட்சி காலங்களிலும், பாளையப்பட்டுகளிலும் நாவிதர்கள், நாவிதத்துடன் மருத்துவத்தையும் அறிந்து குடியானவர்களிடமும், ஆட்சியாளர்களிடம் செல்வககு மிக்க வாழ்வு வாழ்ந்துள்ளனர். தீராத நோய்களையும் தன் மருத்துவத்தால் குண்பபடுத்தி அரண்மனை நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டனர். மன்னர்கள் நாவிதர்கள் மூலம் தங்களின் எதிரிகளாக கருதும் குறுநில மன்னர்கள் / ஜமீன்தார்களை பழி தீர்த்துக்கொள்வதற்கும் / எதிரிகளை அழிப்பதற்கும் இவர்களைப் பயன்படுத்தினார்கள். கண்மாய் / ஏரிப்பாசனத்தில் நீர்நிலைக்கு அருகில் உள்ள நிலத்தை மான்யமாக பெறுவதிலிருந்து, இறுதி சடங்களில் அரண்மனையிலிருது வரும் மரியாதை பெறும் வரை முக்கியமுள்ளவர்களாக விளங்கியிருக்கிறார்கள் நாவிதர்கள்.

பண்டுவம், மருத்துவம் பார்ப்பவன் பண்டுவன். பண்டுவன் பண்டிதனாக மாற்றம் பெருகிற மொழியில் மருத்துவம் அறிந்த நாவிதனே முதலான பண்டிதன். பண்டிதனாலும் நாவிதன் விலக்கப்பட்டு மேட்டுகுடியினர் சுவிகரித்துக் கொள்கிறார்கள். சதிரின் இடத்தில் பரதநாட்டியம் அமர்ந்து கொண்டாலும் தேவதாசியர்களை விலக்கி விட்டு மேட்டுக்குடியினர் நர்த்தகியர் ஆகியதும் போலவே பண்டுவம் இவர்கள் கையை விட்டு போய் இன்று சவரம் செய்துவதற்கும், ஈமச்சடங்கு செய்வதற்கு மட்டும் சமூகத்தின் பயன்பாட்டில் உள்ளனர்.

குலத்தால் நாவிதனாகப் பிறந்தாலும் குருவால் பண்டுவம் கற்று சித்துவேலைகளைத் தேர்ந்தும், தனித்துவத்துடன் திகலும் இராமன், தனது மகனை அரண்மனை படை வீரனாக்கிட முடியவில்லை. வஞ்சகத்தால் மகனை இழக்க நேரிடுகிறது. நாவிதன் மகன் நாவிதனாக இருக்க வேண்டுமே தவிர, படைவீரனாக முடியாது என்ற சமூகக் கட்டுப்பாடுகளும், அரண்மனை நியதிகளும் தடுக்கிறது.

இதனை எதிக்கவும் அநீதியை அழிக்கவும் ஏற்பட்டது தான் இந்த சுளுந்தீ. சுளுந்து என்னும் காட்டுமரம் வெளிச்சம் தருவதாக வெளிச்சம் பாய்ச்சுவதாக விளங்குகிறது. பின்னர் தீப்பந்தமாகிறது.

இதுபோல சித்த மருத்துவத்துல் பயன்பட்ட கந்தகம், உப்பு, குங்குலியம், துத்தம், வீரம் பூரம், தாளகம் போன்றவை கையெறி குண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
கந்தகம் : sulphur,
தாளகம்: arisenit trisulphidum trisulphuret of arsenic,
வீரம் : hydrargyrum subchloride,
பூரம் hydrargyrum perchloride corrosive sublimate,
பாதரசம் : hydrargyrum  mercury quick silver 
கல்மதம் : asbestos,
லிங்கம்: red sulphate,
மனோசிலை: arseni disulphidum bisulphuret of arsenic realgar or red orpiment,
படிகாரம் : alumen alum ,
துருசு : cupri sulphas அல்லது cuprum sulphas or cupric sulphate.

 இதன் காரணமாக வெடிமருந்துக்கு பயன்படும் அடிப்படைப் பொருள்கள் தடை செய்யப்பட்டன. வெடியாகப் பயன்படுத்தும் தொழில் நுட்பம் 1952 இல் கண்டறியப்பட்டு 1660களில் உலகம் முழுவதும் பரவியது. நாயக்க அரசால் அதிகாரம் இழந்த பாண்டிய அரசப்பிரதிநிதிகள் பண்டுவ மருந்தினை வெடியாக பயன்படுத்தி அரசை எதித்தனர். பண்டுவர்களிடமிருந்து பாண்டிய பிரதிநிதிகளுக்கு வெடிமருந்து கிடைப்பதை அறிந்த நாயக்கர் அரசு, பண்டுவர் பலரையும் கொலை செய்தது. உயிருக்குப் பயந்த பண்டுவர்கள் பண்டுவ ஏடுகளை நாயக்க அரசில் அதிகாரப்பீடத்திலிருந்த பார்ப்பனர்களிடம் கொடுத்து உயிர் தப்பினர். இதனால் பண்டுவத்தில் செந்தூர மரபு மங்கியது. நாயக்கர் அரசை தொடர்ந்து பிரிட்டீஷார் அரண்மனையாரின் வெடிப்படையை தடைசெய்து வெடிமருந்துச் சட்டத்தைக் கடுமையாக்கினார்கள். நாயக்கர் அரசால் பண்டுவம் மறையும் தருவாயில் இருந்த போது, பிரிட்டீஷாரால் அலோபதி மருத்துவத்தை அறிமுகம் செய்தனர்.

ஒரு காலகட்டம் வரை சித்தர்கள், ஆன்மிகம் சார்ந்து மருத்துவத்தை வழங்கி, அதிகார வெளிக்கு வெளியே இயங்கினார்கள், முந்தைய சமணத்துறவிகள் போல. சித்தர்களுக்கு முன்னோடிகள் சமணத்துறவிகள். ஆனால் இங்கு மதமாற்றம் செய்ய வந்த கிறித்தவம், அரசனை, அதிகாரத்தை அனுசரித்து இயங்க வேண்டியக் கட்டாயத்தால், மக்களுக்கு எதிராக உளவு பார்த்து, அநீதிக்கு துணை போனது.

கோயில் காணிக்கை கூட பூசாரியின் சாதி சார்ந்தது என்பதை ஓரிடத்தில் பட்டவர்த்தம் செய்கிறது இந்த நூல். ''பிராமணன் பூசாரியாக இருந்தால் கோயிலுக்கு நஞ்சை நிலமும், பசுவும் காணிக்கை கொடுக்கச் சொல்லுவான். ஆசாரி பூசாரியாக இருந்தால் அருவால், சூலம் அடித்து வைக்கச் சொல்லுவான். இடையன் பூசாரியாக இருந்தால் கிடா வெட்டச் சொல்லுவான். குசவன் பூசாரியாக இருந்தால் தீச்சட்டி, மதல, சுடாத மண்ணில் சாமி சிலை செஞ்சு ஆற்றில் கறைக்கச்சொல்லுவான். இல்லையென்றால் சிலையை கல்லால் அடித்து உடைக்கச் சொல்லுவான். பூப்பண்டாரம் பூசாரியாக இருந்தால் சாமிக்கு மாலை கட்டிப்போடச் சொல்லுவான்.  செக்கான் பூசாரியாக இருந்தால் கோயிலுக்கு எண்ணைத் தீபம் ஏற்றச்சொல்லுவான்.'' எனப்பதிவிட்டுள்ளது இன்றைய சமூகத்திற்கு பொருத்தமாக உள்ளது.

அரண்மனை நிலைத்தை குத்தைக்கு விட்டால் அந்த நிலத்திலே ஏற்கனவே உழவடை செய்தக் குடியானவனைச் சேர்த்து குத்தகைக்கு விடுவார்கள் என்ற நடைமுறையினை வாசகனுக்கு நினைவுபடுத்துகிறார் முத்துநாகு.

கொடுமையான பஞ்சம் இதுவரை சொல்லப்படாதது ஆனந்தா வருடப்பஞ்சம். அதை வெளிப்படுத்தியுள்ளது இந்த நூல்.

'கழுத உதையினை கழுததானே தாங்கனும், பூ மணக்கும், பூ முடைந்த கை முட நாற்றமெடுக்கும், எறும்புக்கு எலும்புருக்கி நோய் வந்தால் என்ன செய்யும், வெட்டிக்கெட்டது வேம்பு, வெட்டாமல் கெட்டது புளியும் பூவரசும், உனக்கு ஈரலில் பித்தா எழும்பில பித்தா போன்ற சொலவடைகள் மொழியின் வளத்தைக் காட்டுகிறது. கூவசாத்திரச் செய்தி நம்மை வியப்பூட்டுகிறது.

செய்தியாளராக இருபத்தி எட்டுக்காலம் பணியாற்றிய முத்துநாகு சரளமான தனது எடுத்துரைப்பில் ஒரு காலகட்டத்தின் மொழியை, சமூகத்தை, வளத்தை, பஞ்சத்தை, அதிகாரத்தை, மக்களின் வழக்குகளை அவர்கள் பேசிய கதைகளை அடுக்கிப் புலப்படுத்தியுள்ளார்.

மகாபாரத்திலுள்ள நுட்பங்களையும் இரகசியங்களையும் வெளிப்படுத்தியவர் மாராத்திய தொல்லியாளர் ஐராவதி கார்வேவின் ஆய்வு போல் நாவிதர் வாழ்வு சார்ந்து ஆய்வு செய்து அரியதொரு புனைவரை வரைந்துள்ள நூல் இது என்றால் மிகையாது.

''தனிநபர்களிடம் பைத்திய நிலை அரிது. ஆனால் குழுக்களிலும், கட்சிகளிலும், தேசங்களிலும், சகாப்தங்களிலும் அதுவே விதி'' என்னும் நீட்சே வாசகம் இந்த நாவலெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.   


    

No comments:

Post a Comment

முரசுப்பறையர்; வரலாறு, சமூகம், பண்பாடு

  நூலதிகாரம் நூல் முரசுப்பறையர்; வரலாறு, சமூகம், பண்பாடு ஆசிரியர் ; தி. சுப்பிரமணியன் வெளியீடு ; அடையாளம்   ‘முந்தி பிறந்தவன் நா...