Search This Blog

Saturday 24 August 2019

பிறப்பால் நாவிதனான ராமன் மனதில் எரியும்தீ, 'சுளுந்தீ ' என புரிந்து கொள்கிறேன்.








                                        பிறப்பால் நாவிதனான ராமன் மனதில் எரியும்தீ, 'சுளுந்தீ ' 



"குளத்தில் பிடிக்காத மீன்பெருகும், கைபடாத முலை சிறுக்கும்" ( பக்கம் 97)

அரண்மனைக்கு ஆயுதம் பிடிக்கும் வம்சா வழியாக மாற வேண்டும் என்பதே உள்ளக்கிடக்கை. ஆயுதம் ஏந்துவது மூலம் அதிகாரம் கைக்கு வரவேண்டும். தலைமுறைகளைத் தாண்டி ஆட்சியாளனாக மாறுவோம் என்ற பார்வை ராமனுக்கு தீயாய் பற்றி எரிகிறது. கன்னிவாடி அதைச் சுற்றியுள்ள பன்றிமலை மதுரை திருச்சிராப்பள்ளி இராமேஸ்வரம் சேதுக்கரை எல்லைகளை களமாகக் கொண்டு இயங்குகிறது புதினம்.விஜய நகர சாம்ராஜ்யம் வீழ்ச்சியில் சிதறுண்டு, வந்த வேற்று மொழிக்காரர்கள் நாவிதர்களை வசமாக்கி ஆட்சிக்கு வருகிறார்கள் இதுதான் கமுக்கம்.

ஆட்சியை இழந்த பாண்டியர்களும் சமயம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இது அரசியல்.காடுகள் அழிக்கப்பட்டு வேளாண் நிலங்களாக மாற்றம் அடைவதால் ஏற்படும் சூழல் கேடுகளை கதை தொட்டுக் காட்டுகிறது. சரபோஜி மகாராஜாவுக்கு பின் ஆவணப்படுத்தப்பட்ட மருத்துவ குறிப்புகள் ஏராளமாக அச்சில் இருக்கும் காலத்தில் இந்த கதை நாவிதர்கள் சித்தர்கள் வழி பெற்ற மருத்துவ அறிவை தகவலாக தூவுகிறது. இரு மொழி பேசும் மக்கள் ராவுத்தர்கள் சுல்தான்கள் கிறிஸ்துவர்கள் என கலந்திருந்த ஒரு காலத்தை கதை நடக்கும் காலமாக முன்வைக்கிறது புதினம்.

கதாபாத்திரங்களில் காட்டு உயிர்கள் தாவரங்கள் மனிதர்கள் மட்டும் இல்லாமல் மாடு ஆடு என உழவுத் தொழிலை முன்னிறுத்தி அவைகளின் அரசியலாக தெய்வ நம்பிக்கைகள், கண்கட்டு வித்தை, குரளி வித்தை, தேவரடியார்கள், தாசிகள், ஒற்றர்கள், சாதிய ஏற்றத்தாழ்வு, குடி விளக்கம், போன்ற எல்லாவற்றுக்கும் அடிப்படையாக நெருப்பை சுட்டுகிறது இந்தக் கதை.
அன்றாட வாழ்வின் பயன்பாட்டில் இருந்த நெருப்பு பின்னர் அரசு கட்டுப்பாட்டிற்கு வருகிறது காரணம் பண்டுவம் பார்க்க தயாரிக்கப்பட்ட மருந்தில் இருந்து வெடிபொருள் தயாரிக்க முடியும் என்ற சூட்சுமத்தில் ராமன் என்ற நாவிதன் பண்டுவம் கற்று சித்தர் வழியில் பண்டுவன்ஆகிறான், மருந்து வெடிபொருள் ஆனபின்பு அன்றாடப் பயன்பாட்டில் நெருப்பும், பிணி தீர்க்கும் மருந்தும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு அரசாங்க கட்டுப்பாட்டில் வருகிறது.

வெடி போர்க்கருவி ஆனபின்பு அதன்மேல் விதிக்கப்படும் கட்டுப்பாடு அதனால் உருவாகும் சூழல் என முற்பகுதி பேசும் கதை பிற்பகுதியில் ராமனின் நெஞ்சில் எரியும் நெருப்பு என்ற பிறப்பின் வழி தொழில் தொழில் வழி குளம் என்ற சாதி அரசியலை பேசுகிறது.நீர் ஆதாரமாக மழையையும் அதன்வழி பஞ்சத்தையும் பேசும் கதை அதுவரை இயற்கையோடு இயந்து பயணிக்கிறது போலவே தண்ணீரை பூமியில் கிணறு வெட்டி எடுக்கப்படும் அத்தியாயம் முதல் செயற்கையான செயல்பாடுகளுக்கு மாறிப் போவதாக புனைவு அழகாக எடுத்துரைக்கிறது.

மானுட வாழ்வியலில் செயற்கைத் தன்மை வரும் இடமாக இயற்கைக்கு எதிராக மனிதன் விஞ்ஞானத்தின் மூலம் மெய்ஞானத்தை புறக்கணித்து செயலாற்ற முனையும் அரசியலை அதன் தாக்கங்களை பேசி தற்கால சூழலுக்கு பொருந்தும் படியான கருத்துகளை விவரிக்கிறார் ஆசிரியர்.
கதைக்கு கர்ணபரம்பரைக் கதைகள் கைகொடுக்கின்றன, கர்ணபரம்பரைக் கதைகளுக்கு ஆதாரமாக மற்றொரு கதையை புனைந்திருக்கிறார் கதைசொல்லி.

கதையாக இருக்கிறதா, கட்டுரையாக இருக்கிறதா, இவை இரண்டுக்கும் நடுவாந்திரமாக இருக்கிறதா, என்றாள் கட்டுரைகளுக்கு ஆதாரங்கள் அனுமானங்கள் குறுக்கு வெட்டு பார்வை அதிலிருந்து கிடைக்கும் அபிப்பிராயம் கட்டுரையாளரின் கருத்து இவை அதன் கட்டுமானம். கதைக்கு எதுவும் தேவையில்லை எதை வேண்டுமானாலும் சொல்லலாம் கேட்பவனின் சுவாரஸ்யத்தில் சொல்பவனின் கதை சொல்லும் பாங்கில் இருக்கிறது கதை.கதைக்கும் புனைவுக்கும் என்ன வேறுபாடு என்று பார்த்தால் அதன் செய்நேர்த்தியே வேறுபாடு. கற்பனை மொழியோடு கலந்து மொழிக்குரிய இலக்கணத்தோடு எழுதப்படும் வடிவ நேர்த்தி நாவல் என வகை பிரிக்கலாம் இது அடிப்படை இதை மீறவும் உடைக்கவும் நவீனம் பயன்படுகிறது. ஒரு என்னத்தை மன ஓட்டத்தை சிந்தித்து முன்வைக்க அல்லது வெளிப்படுத்த பல கருவிகள் உண்டு. உடல் மொழி,வாய்ப்பாட்டு, சமிஞ்சைகள், ஆட்டம் என உடலை கருவியாகக் கொண்டு வெளிப்படுத்தலாம். சித்திரம் பழகி வெளிப்படுத்துவோரும் உண்டு .

கவிபாட மொழி துணை நிற்கிறது. மொழிக்கு இலக்கணம் இருக்கிறது. இலக்கணம் மொழியின் வழி வெளிப்படும் வெளிப்பாடுகளை வகை பிரிக்கிறது. வகைப் பாட்டுக்குள் வராத புதிய யுக்தி அல்லது முறையை நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழ் உரைநடை என உள்வாங்கியது.உரைநடைத் தமிழில் நாவல் வகைமை பிரதாப முதலியார் சரித்திரம் துவங்கி இன்றுவரை பலராலும் புதிது புதிதான வடிவம் மாற்றத்தையும் சிந்தனா பொருளையும் உட்கொண்டு தன்னை புதுப்பித்துக்கொண்டே வந்திருப்பது நாம் அறிந்ததே.

பல உதாரணங்களை நம்மால் நாவல் புதுமைக்கு காட்ட முடியும்.

இங்கு சுளுந்தீ கட்டுரையாக எழுதப்பட்டு கதையாக மாற்ற பெற்ற கதையும் கட்டுரையும் அல்லாத ஒன்றாக நான் படித்ததில் என் அனுபவத்தில் தெரிகிறது. எங்கெல்லாம் கதையாக மாற வேண்டுமோ அங்கெல்லாம் ஒரு வரியில் கடந்து போகும் கதைசொல்லி கதைக்கு தேவை இல்லாத விவரங்களை பக்கம் பக்கமாக எழுதுகிறார். சரபோஜி காலத்து புத்தகங்கள் புடம் போடுவது, பஸ்பம் செய்வது, லேகியம் செய்வது, கசாயம் காய்ச்சுவது, பத்தியம், விரதம், விஷமுறிவு, மருந்து சுத்தி, என்ன பலவற்றை படங்களோடு இன்றும் விற்பனைக்கு கிடைக்கும் நாளில் கதை சொல்லிக் கொடுக்கும் விவரங்கள் பதிவாக வேண்டியதன் அவசியம் நானறியேன். சுளுந்தி கால குழப்பத்தை சரியாக கையாளாமல் படிப்பவனுக்கு அதன் ஆண்டு கதையில்வரும் கதாபாத்திரங்களின் வயது அவர்களுடைய பரம்பரை எல்லாம் இது கதைதான் என்றபோதிலும் கதையை கதையாகக் கூட நம்ப முடியாமல் போய் விடுகிறது.
பிறப்பால் நாவிதன் ஆக பிறந்த ராமன் கதாபாத்திரத்திற்கு முதலில் குதிரை கிடைக்கிறது பின்னர் கை தண்டமும் கிடைக்கிறது அதைத்தொடர்ந்து ஒரு இடத்தில் வெண்கொற்றக்குடை மரியாதை கிடைக்கிறது இதையும் தாண்டி அரண்மனையார் ராமனைப் பார்த்து ' நீங்கள் 'என்ற சொல்லை பயன்படுத்துகிறார் இந்த இடம் இன்னும் அழுத்தமாக சொல்லப்பட்டிருந்தால் இந்த கதைக்கு ஒரு மையம் கிடைத்திருக்கும் இது கதையாகவும் மாறியிருக்கும் என நினைக்கிறேன். எல்லை கல் நடுவதில் இருக்கும் நுட்பத்தை அழகாக சொல்கிறார் கதைசொல்லி. அதுபோல ஈ, எரும்பு, பாம்பு, கெவுளி, ஆந்தை, யானை, புலி, முயல், மான், காட்டு மாடு, பூம்பூம்மாடு,வளர்ப்புமாடு, என எல்லா ஜீவராசிகளையும் சரியாக பயன்படுத்தி கதையை நேர்த்தியாக நகர்த்துகிறார் ஆசிரியர்.

பொண்ணு மாப்பிள்ளைகல், பட்டி வீரன் கதை, மாடன் கதை என பல கர்ணபரம்பரைக் கதைகளை இந்த கதைக்குள் பொருத்தி கதை சொல்கிறார் கதைசொல்லி.கதையில் ஆனந்தா வருடம் பஞ்சம் வருவதை சொல்லி பல ஆண்டுகள் பஞ்சத்தில் மக்கள் பட்ட துன்பத்தை விவரிக்கிறார் .

பஞ்சகாலத்தில் தண்ணீர் இல்லாமல் உணவு இல்லாமல் மக்கள் எப்படி எல்லாம் துன்பப் பட்டார்கள் எனச் சொல்லிச் செல்லும் சுளுந்தீ, சைவ மடம், கிறிஸ்தவ பாதிரிமார் அவர்களின் செயல்பாடு அதன்வழி மக்களை சமாதானப்படுத்துவது என ராஜதந்திர நடவடிக்கைகளை புனைவாக எழுதியிருப்பது படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது.

மக்களின் இன குழுவுக்குள் நடக்கும் களவு கொலை சூது என மானுட நுட்பங்களை அதன் வேர் காரணங்களோடு ஆராய்கிறது சுளுந்தீ.

தண்ணீர் மேல் நடப்பது, காற்றில் பறப்பது, தேங்காயை உடைக்காமல் இரண்டாகப் பிறப்பது என சித்து வேலைகளை விஞ்ஞானமாக காட்டியிருப்பது இன்றைக்கும் மக்கள் விடுபடாமல் மூட நம்பிக்கைகளில் உழல்கிறார்கள் என்ற ஆதங்கத்தில் தான் என நினைக்கிறேன்.

மாடு வளர்ப்பு, குதிரை வளர்ப்பு என இரண்டுக்குமான தேவையையும் அதன் அரசியலையும் கதைசொல்லி விவரமாக சொல்லி இருப்பதன் மூலம் எப்பொழுதும் எல்லா காலத்திலும் ஆளும் வர்க்கம் தனியாகவும் குடிமக்கள் தனியாகவும் இருவேறு பிரிவுகளாக தத்தமது அரசியலோடு இருப்பதை வாசகனுக்கு உணர்த்தவே என படிக்கும் பொழுது நினைத்தேன்.

பக்கம் 218 க்குப் பிறகு கிணறு வெட்டப்படுகிறது அதன்வழி செயற்கையாக விவசாயமும் செயற்கையாக மக்களின் வாழ்வும் மாறிப்போகிறது உணவு கூடங்கள் வருவதை இதற்கான குறியீடாக பயன்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.

புற்றுக் கோயில்கள் எப்படி உருவானது என்பதிலிருந்து இன்றைய மக்களின் நம்பிக்கைகள் பலவும்,பழக்க வழக்கங்களும் உருவான விதத்தை போகிற போக்கில் கதையாகச் சொல்லிச் செல்கிறார், பூசணிக்காயை திருடினால் குஷ்டம் உண்டாகும் என்ற இன்றைய நம்பிக்கைக்கு கூட ஒரு கதையை அழகாக சொல்வதிலிருந்து இதை புரிந்து கொள்ளலாம். சித்து வேலை என்பது ஒரு அறிவியல் தான் அல்லது ஒரு தந்திரம் அல்லது ஒரு கண்கட்டு வித்தை என்பதை சொல்லுவதன் மூலம் முற்போக்கான வாழ்வியல் முறைக்கு மக்கள் வரவேண்டும் என ஆசிரியர் நினைத்திருக்கலாம், ஆசிரியர் நினைப்பதை கதை வழி புரிந்துகொள்ள முடிகிறது.

அரண்மனையில் பெண் சேவகர்கள் இருந்ததைப் பதிவு செய்யும் கதை பால் அரசியல் நீர் அரசியல், நெருப்பு அரசியல்,மண் அரசியல், நம்பிக்கை வழிபாட்டு அரசியல், மொழி அரசியல் அதன்வழி சாதி அரசியல் தொழில் வழி அரசியல் என பல்வேறு விதமான மானுட அரசியலை விரிவாக கதையாக விரிக்கிறார் கதாசிரியர்.

புகையிலை அதன் பயன்பாடு ஆண்மை பெருக்கம் என இன்றும் கொடிகட்டிப் பறக்கும் ரகசிய வியாபாரத்தின் நுட்பத்தை கதையாகச் சொல்லுகிறார்.சுளுந்தீ பற்றி எழுதுவதற்கு எவ்வளவோ தகவல்கள் இருக்கத்தான் செய்கின்றன, தகவல்கள் முன்பே நாம் வெவ்வேறு வாசிப்பின் மூலம் தெரிந்து வைத்திருப்பவை தான் என்றாலும் ஒரு கதையின் வழி படிப்பதில் சுவாரசியம் இருக்கத்தான் செய்கிறது. எத்தனையோ கதைகளை நாம் படித்திருந்தாலும் ஒரு காலகட்டத்தின் தொன்மை வரலாற்றை எடுத்துக்கொண்டு சொல்லப்படும் கதைகளுக்கு ஒரு ஈர்ப்பு இருக்கிறது.

சுளுந் தீ அப்படியான ஒரு கதையே.
புனைவு - கட்டுக்கதை
தமிழில் உரைநடை வடிவம் பெற்ற பிறகு செவி வழி கதைகள் அச்சில் ஏறின.மரம், மண், வானம், வனம், மழை, மனிதன், உயிர், உலகம், உணவு, உழவன், ஊழ்.வார்த்தைகளின் பின்னணியில் விரியும் காட்சிகளை திருகி கற்பனை வழியே நம்பிக்கைகளை, பிரச்சாரங்களை, எண்ண ஓட்டங்களை, அறிவுக்கூர்மையை, மொழிப்புலமை யை, கலைநயத்தை, கடந்தகால வரலாற்றை, வரலாற்றை போன்ற புனைவை சொல்லியும் எழுதியும் வருகிறார்கள்.மேற்சொன்னவற்றில் ஊழ் என்ற வார்த்தை அந்தரத்தில் கண்ணில் படாத நம்பிக்கை அல்லது நம்பிக்கை அற்ற வாதங்களால் பகுப்பாய்வுக்கு பயன்படுகிறது.இதில் ஊழ் என்ற சொல் தந்திரத்தை அல்லது சூத்திரத்தை புனைகதை புனையும் புனைவா லருக்கு கதை சொல்லும்நம்பிக்கையை கொடுக்கிறது. பிரதேசத்திற்குப் பிரதேசம் மாறுபடும் நம்பிக்கைகளால் கதைகள் பிறக்கிறது. கட்டுக்கதைகள் எப்படி வகைப்படுத்தப்படுகின்றன என்ற நுட்பத்திற்கு போகாமல்,
புனைவின் மொழிக்கு ஆதாரம் தேவையா என்ற கேள்விக்கு ஆதாரமாக இருக்கக்கூடிய தற்கால ஆவணங்களுக்கு புனைவின் வழி ஆதாரம் தேடினால் அதுவே கட்டுக்கதை என்ற வகைப்பாட்டில் வைக்கலாம் என நினைக்கிறேன்.
ஆதாரம்

பலவிதம் அதில் ஒன்று செவி வழி கதைகள் அல்லது கர்ணபரம்பரைக் கதைகள் இந்தக் கதைகளுக்கு ஒரு கதையை ஆதாரமாகக் காட்டினால் அல்லது ஆதாரம் இருப்பது போல் புனைந்து எழுதினால் தற்காலத்தில் வரலாறு என திரித்து புரிந்துகொள்ளும் இயல்பை எப்படி கையாள்வது. மேற்சொன்ன வகைகளுக்கு கை விளக்காக எடுத்துக்காட்ட சுளுந்தீ என்ற புனைவு பயன்படுகிறது. படித்துப் பாருங்கள் நண்பர்களோடு உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டே பேசும் பேச்சுக்கு இணையான தகவல்களும் கர்ண பரம்பரைக் கதைகளும் அரசியலும் கேட்ட நிறைவு கிடைக்கும்.
ஆசிரியருக்கு
என்
வாழ்த்துக்கள்.
-சீனிவாசன் நடராஜன்.
சுளுந்தீ;நாவல்
ஆசிரியர்-இரா.முத்துநாகு
பதிப்பகம்-ஆதி,பக்கம்-472
விலை- 450.

2 comments:

  1. அருமையான விமர்சனம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Srinivasan Natarajan

    ReplyDelete
  2. இந்த நாவலை கேள்விப்பட்டிருக்கிறேன். படிக்க வேண்டும் என்ற ஆவலை இந்த விமர்சனம் உருவாக்குகிறது.

    ReplyDelete

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...