Search This Blog

Friday 29 January 2021

நூல் மதிப்புரை ; நூல்; தமிழரின் தாவர வழக்காறுகள்

 

நூலதிகாரம்

 

நூல்; தமிழரின் தாவர வழக்காறுகள்

ஆசிரியர்; பேராசிரியர்.முனைவர் ஆ.சிவசுப்பிரமணியன்

வெளியீடு; உயிர்

விலை; 210

 

பூமியில் மனிதனாக பரிணாமம் பெற்ற போது தன்னை தகவமைத்து, தற்காத்துக்கொள்ள கண்டுபிடித்த முதல் அறிவியல் மருத்துவமாகவே இருக்கும். அப்போது முதல் தலைமுறை தலைமுறையாக கடத்தி வரும் செய்திகளே வழக்காறுகள். பயன்பாட்டிற்கும் வழக்காறுக்கும் சிவில் - கிரிமினல் சட்டத்திற்கும் இருக்கும் நுண்ணிய இடைவெளி என்பார்கள். அந்த இடைவெளியை நிரப்பிட முயற்சி எடுத்த சிறு நூல் என்றே நூலாசிரியர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். 

வழக்காற்றியல் தளத்தில் பயணித்தால் பல நூறு பாகங்களாக தொகுக்க வேண்டிய நூல். அந்தளவிற்கு மானுட சமூகத்தில் வழக்காறுகள் குவிந்து கிடக்கிறது. இப்பணியை 'வரும்தலைமுறையினர்' செய்திடும் என்ற நம்பிக்கையில் தூண்டுதலுக்காக இந்த நூலை படைத்துள்ளார் நூலாசிரியர் என்றே எடுத்துக்கொள்ள முடிகிறது.

 

''‌வழக்காறு என்பது lore என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ஈடான தமிழ்ச் சொல். மரபுவழிச் செய்தி அல்லது வாய்மொழிப் பாரம்பரியத்தைக் குறித்து நிற்பது.   பயன்பாடு என்பதை இங்கு ஒரு வழக்காறானது  எவ்வகையான பயன்படுகிறது அல்லது பயன்படுத்தலைக் குறிப்பதாகக் கொள்ளலாம். இங்கு தாவரங்கள் குறித்த  மரபுவழிச் செய்திகள் எடுத்தாளப் பட்டுள்ளன. Plant Lore  என்பதன் தமிழாக்கமாக இது அமைந்துள்ளது.

பயன்பாடு என்பதை இங்கு இரண்டு வகையான பொருள் தருகிறது. ஒன்று ஒரு குறிப்பிட்ட வழக்காறுக்கென்று உரிய பயன்பாடு. (தாலாட்டு, ஒப்பாரி. ஒரு குறிப்பிட்ட வழக்காறை ஒரு குறிப்பிட்ட தனிமனிதன் அல்லது மனிதக் குழு /சமூகம் எவ்வாறு பயன்படுத்துகிறது  என்பதைக் குறிப்பது. (ஒரு தாவரத்தை உணவுக்காக மட்டுமே பயன்படுத்துவது. அழகுக்காக வளர்ப்பது. மருத்துவத்திற்கான பொருளாகப் பயன்படுத்துவது)''  - நூலாசிரியர் .

 

நொச்சி ஆவரை, எடுக்கு, எள், ஆமணக்கு, பருத்தி, தாவர எண்ணை என பதினொரு தலைப்புகளில் அதன் வழக்காறுகள் தொகுக்கப்பட்டுள்ளது.

நொச்சி என்றாலே வலி என்று பொருள். ''நொச்சிய மோந்து (நுகர்ந்தால்) பாத்தால் நோவு (நோய்) இல்லை' என்ற சொலவடை இன்றும் புழக்கத்தில் உள்ளது. அந்தளவிற்கு இதன் பயன்பாடு அதிகம். கிராமதெய்வங்களுக்கு பொட்டி தூக்கிப்போவார்கள். அதில் காதோலை கருகுமணி, பட்டுத்துணிகள், சில ஊர்களில் நகைகள் இருக்கும். இந்தப்பெட்டிகள் ஆண்டுக்கு ஒரு முறையே திறந்து பார்ப்பார்கள். இதில் நொச்சி இலையை போட்டு வைப்பார்கள். பூச்சி அதற்குள் தாக்காது, பூச்சான் பிடிக்காமல் இருக்கவும் என்ற பட்டறிவை மக்கள் அறிந்ததால் இதைச்செய்கிறார்கள். தலைவலி, உடல் வலிக்கு ஆவி பிடிப்பது இந்த இலையிலே. இதை விட முக்கியமானது கம்பளத்து நாயக்கர் சடங்கு சம்பிரதாய நிகழ்வில் இசைக்கப்படும் உறுமியை இசைக்க ஒருபக்கம் பயன்படும் குச்சி இந்தக்குச்சி என்ற செய்தியை நூலாசியரியர் பதிவிட்டுள்ளது அவரின் தேடுதலை காட்டுகிறது.

 


ஆவாரை ; ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ என்ற சொலவடைக்கு இடைக்காட்டார் செய்தியை பதிவிட்டுள்ளார். ''பெரும் பஞ்சம் வரப்போகிறது என்பதை முன்கூட்டியே அறிந்த இடைக்காட்டார் தான் வளர்த்த ஆடுகளுக்கு ஆவாரையை ஆட்டுக்கு கொடுத்துப்பழக்கி, கடல் நீரினை குடிக்க வைத்தார். இதனைக்கண்ட ஊரார் அவரை ஏசியபோது பஞ்சம் வந்தது. ஊரிலுள்ள ஆடுகளெல்லாம் செத்து மடிய இவரது ஆடுமட்டும் பிழைத்தது என்ற வழக்காறை முன்வைத்து அதன் மருத்துவப்பயன்பட்டை சொல்லியுள்ளார்.

 

தோலால் ஆன செருப்பு தைத்திடுவதற்கு முன்பு ஆவாரம் பட்டை தண்ணீரில் தோலிலை ஊறவைப்பார்கள். இதனால் தோல் பதப்படுத்தப் பயன்பட்ட உப்பும், மேல்தோலுக்கும் கீழ்தோலுக்கும் இடையில் உள்ள இடுக்கில் உள்ள கொழுப்பு இந்தத்தண்ணீரில் உள்ள வேதித்தன்மையால் கரைந்து விடுவதால் மிருதுவாகவும், தோலில் உள்ள வாடையும் நீக்கி விடும். இதனால் தோலினை நாய்கள் கடிக்காது என்ற செய்தி அருமை.

 

மஞ்சனத்தி; இருபது ஆண்டுகளுக்கு முன்பு இதன் இலையை தேயிலையுடன் கலப்படமாக கலப்படம் செய்ததை நான் ஜூவியில் செய்தியாக எழுதி வெளியானது. இது பெரும் மருத்துவக்குணம் கொண்டது என்பதை பீஹார் போன்ற வட மாநிலங்களில் இதன் இலையை கசாயமாக காய்ச்சி காய்ச்சலுக்கு குடிப்பதையும் குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர். கிராம தெய்வங்களுக்கு மிதியடியாகப் பயன்படும் பாதகொரடு மஞ்சனத்தி கட்டையில் செய்தவையே காணிக்கை செலுத்துவார்கள். உழவுக்கு பயன்படும் மேக்காலுக்கு இந்த மரத்தின் கட்டைகளை பயன்படுத்தக்காரணம் இம்மரம் செதில் அல்லது வராமல் இருக்கும் மாடுகளில் கழுத்தில் மேக்கால் தொடர்ந்து அழுத்தும் போது கீய்த்து விடாது என்பதால் விவசாயிகள் பயன்படுத்தினார்கள் என்ற செய்தி நுட்பமான செய்தி பாரட்டும்படியானது. 

 

உறுமியை இசைக்க ஒருபக்கம் பயன்படும் குச்சி இந்த மஞ்சனத்தி மரத்தால் ஆனது செய்தியை நூலாசியரியரின் தேடுதலை காட்டுகிறது. லிங்க செந்தூரம் என்ற மருத்து தயாரிக்க இதன் இலை பட்டையை அரைத்து பூச்சாகப்போட்டு புடம் போடுவார்கள். குண பாடம் என்ற வைத்திய நூலிலிருந்து குறிப்புகளை எல்லாம் தேடி தேடி கொடுத்துள்ளார்.

 

எருக்கு; இதை சிவநாதம் என்று சொல்லுவார்கள். இரசாயாண உரம் வந்த பின்னால் உரமாகப்பயன்பட்ட இதன் இலைகள் விவசாயிகளிடமிருந்து அன்னியப்பட்டு விட்டது. காலில் முள் குத்தி விட்டால் முள்ளினை பிடிங்கிய இடத்தில் இதன் பாலினை தொட்டு வைத்தால் புண், பட்டுவிடும். முள் இருந்தால் தோலினை மெலிதாகச் சீவிவிட்டு அதில் எருக்கம் பாலினை அடித்தால் முள்குற்றிய இடம் பழுத்து இருநாளில் முள் வெளியே வந்து விடும் வேதனை இருக்காது. அந்தளவிற்கு வேளாண்குடிகளுடன் ஒன்றியது எருக்கு. ''எருக்லைக் காசு எறிமழுசோச்சல் என்செய்வதெந்தை பிரானே'' என்ற கிராமத்து பாடலை பதிவிட்டுள்ளார்.  

இதில் வெள்ளெருக்கு என்பது கடவுள் தங்கும் இடமாக கருதுவதால் நகர்புற வீடுகளில் கூட இந்த செடியை வைத்திருப்பார்கள். வெள்ளெருக்கு வேர் சன்னிக்கான துணை மருந்து, அதன் பால் செந்தூரம் தயாரிக்கப்பயன்படும் துணை மருந்து.  கிராமங்களில் சண்டை வந்தால் ஏழு எருக்கு வைத்து அதில் எள் வைத்து தள்ளி விட்டு அவர்கள் உறவை முறிப்பது வழக்கொழிந்து விட்டாலும் உலாவரும் செய்தியே.

ஆமணக்கு; இது சங்ககாலத்திலிருந்து மக்களோடு இருக்கும் தாவரம். பச்சை பச்சையாக இருக்கும் பாவக்காயும் இல்லை, உள்ளே பருப்பு இருக்கும் அது தேங்காயும் இல்லை, உருக்கினால் நெய்வடியும் வெண்ணையும் அல்லை என்ற பழமொழியும் குறிப்பிட்டு இதன் தகவலை தொகுத்துள்ளார். பாண்டியர் கால பிரான்மலை சிவன் குடவரை கோயிலில் ஆமணக்கு விளைச்சளுக்கும் வரி வசூல் செய்த கல்வெட்டினை குறிப்பிட்டுள்ளதை பார்க்கும் போது மக்கள் பயன்பாட்டில் எவ்வள்வும் ஊடுருவி இருந்தது என்பதற்கு இதுவே சான்று. 

திருவிதாங்கூர் மன்னர் அரண்மனைக்கு நாஞ்சில் நாட்டிலிருந்து விளக்கெண்ணை இலவசமாக கொடுக்க மன்னர் உத்தரவிட்ட ஓலைச்சுவடி சான்றை குறிப்பிடுகிறார். இதில் நாம் அறிவது ஆமணக்கு வெப்பமண்டலக் (tropical) பகுதிகளிலே விளையும். திருவிதாங்கூர் ஈர்பதமுள்ள நாடு என்பதால் அங்கு இது விளையாது என்பதால் இங்கிருந்து கொடுக்க மன்னர் ஆணையிட்டுப்பார்கள் என நம்பலாம்.

 இறப்பவர்களை எரிப்பதற்கு நன்றாக தீ நின்று எரிவதற்காக எரு அடுக்கும் போது இந்த முத்தினை தூவி விடுவார்கள்.    கட்டப்பொம்பன் பாஞ்சாலங்குறிச்சியை பிடித்த பிரிட்டீஷார் கோட்டையை இடித்து விட்டு ஆமணக்கு பயிரிட்டது, வண்டி மசகாகப்பயன்படுவது, பால் பீய்ச்சும் போது காம்புகளில் இதனை தடவி விட்டு பால் பீச்சுவதன் காரணம், மருத்துவகுணம் இவைகளை எடுத்துக்காட்டியுள்ளார்.

ஆமணக்கு முத்தினை வறுத்து அதை ஆட்டி அதன் பின்னர் கொதித்த தண்ணீரில் போட்டு வேகவைப்பார்கள். அந்த தண்ணீரில் எண்ணை மிதக்கும் அதனை மேலாக கரண்டியில் வழித்து எழுத்து அதை மீண்டும் காய்ச்சி அதில் உப்புக்கல் போட்டால் தான் விளக்கெண்ணை இதையே உணவிற்கு பயன்படுத்துவார்கள். பச்சையாக ஆட்டி எண்ணை எடுத்தால் விரைவில் கெட்டுவிடும் என்பது வேளாண்மைக்குடிகள் அறிந்த செய்தி. ஆமணக்கு செக்கு பட்டரைகள் இருந்ததாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார். தீவட்டிகளுக்கு பயன்படுத்திட பச்சை முத்தினை ஆட்டி இருப்பார்கள?. இது குறித்து ஆய்வு மேற்கொண்டால் தான் தெரியும். பச்சை முத்தினை அரைத்து கறிக்குழம்பில் சேர்க்கும் செய்தி இன்றும் கிராமங்களில் நடைமுறையில் உள்ளது. கறி, பருப்பு நன்றாக வேக ஒரு சொட்டு விளக்கெண்ணை ஊற்றுவார்கள்.

 

(சித்தாமணக்கு இதுவே வெடிமுத்து. இதுவே மருத்துவத்திற்கு பயன்படும். புற்று நோய்க்கான கூட்டு மருந்தில் செங்கத்தாரி எண்ணை தயாரிப்பில் சித்தாமணக்கு எண்ணையின் பங்கு அளப்பெரியது. தோட்டம் காட்டில் இதை விளையவைத்தால் வீடு விழங்காது என்ற நம்பிக்கை இன்றும் உள்ளது. இந்த வெடி முத்தையே கட்டப்பொம்மன் கோட்டையில் உழுது விதைத்ததாக அப்பகுதி மக்கள் இன்றும் கூறுகிறார்கள். )         

 

எள்; 'இதிலிருந்து எடுக்கும் எள்நெய் எண்ணெய் அதுவே நல்லெண்ணையாக வந்தது என்பதை குறிப்பிட்டு மருத்துவக்குறிப்பினை மநு தர்மத்தில் இது குறித்து உள்ள தகவல், செக்குகளை பார்ப்பனர்கள் பார்க்க மாட்டார்கள். ஆனால் தேவை கருதி கோயில் அருகில் செக் அமைக்க இசைந்துள்ளார்கள். கோயில்களுக்கு தீவட்டிக்கு எண்ணை கொடுக்க பணிக்கப்பட்ட கல்வெட்டு செய்திகள்,  எண்ணை கடன் கொடுக்க மறுப்பதன் காரணம். ஈன்ற மாட்டுக்கு எள் பிண்ணாக்கினை கொடுப்பது, வயதுக்கு வந்த பெண் குழந்தைகளுகுக் எள் கருப்பட்டி இடித்துக் கொடுப்பது  போன்ற செய்திகள் நூலாசிரியரின் வாசிப்பையும் அனுபவத்தை காட்டுகிறது. அனைத்து எண்ணைகளுக்கும் அதன் பெயரிலே இருக்க நல்லெண்ணை என எள் எண்ணையை ஏன் பெயர் வந்தது என்ற குறிப்பு நூலில் இல்லை.      

 

செக்குகள் எந்த மரத்தில் செய்தார்கள் அதன் அமைப்பு. படம் விளக்கம் இவைகள் மெச்சும் தன்மையானது. இந்தியாவில் பிரிட்டீஷ் ஆட்சியில் நிலக்கடலை வந்தது. இதனால் நல்லெண்ணையும் விளக்கு எண்ணையும் அறியாத பொருளாக மாறிவிட்டது. செக்கு மாடுகள் அதில் ஒற்றை செக்குகள், சின்ன செக்குகள், செக்குகள் லிங்கம் ஆவுடையின் வடிவம் நந்தி மாடுகள், சைவத்திற்கும் எண்ணை செக்குகளுக்கும் உள்ள தொடர்பு, கோயிகளுக்கு விளக்கு எரிக்க, தீ பந்தம் எரிய எண்ணை கொடுத்த செக்கார்களை கோயில் விடாதது, செக்கார்கள் என்னென்ன பெயர்களில் அழைக்கப்பட்டார்கள். கோயில்களில் ஊனமுற்றோரே தீவட்டி பிடித்து வந்தனர் போன்ற தென்னிந்திய கோயில் சாசனச் செய்திகள். நிலக்கடலை வந்த வரலாற்றில் சிறு குறிப்பு, எண்ணை ஏற்றுமதிக்காக பாண்டிச்சேரிக்கு ரயில் பாதை அமைத்தது, கடல் வணிகம் என்பது மாவணிகம் போன்ற சொற்கள். பருத்தி சோழ பாண்டியர் நாயக்கர் பிரிட்டீஷ் ஆட்சியில் பங்கு. பருத்திப்பால் வந்த கதை அதன் பயன். மருத்துவப்பயன், எத்தனை வகைப்பருத்தி இருந்தது. இவைகுறித்த பழமொழிகள்  நில  அமைப்பு முறை, சாயம் காய்ச்சிட பயன்பட்ட பொருள்கள் படிப்பவர்களை திகட்டாது எளிய நடையில் எழுதியுள்ள நூல்.

 

வழக்காறுகள் நம்பிக்கைகளை சுமப்பவை. இந்த நம்பிக்கைகளை கடவுள் நம்பிக்கைகள் உருக்கொண்டுள்ளது. இந்திய துணைக்கண்டம் போன்ற பெரும் நிலப்பரப்பு கொண்ட  நாட்டில் சட்டங்களை நடைமுறைப்படுத்த நம்பிக்கையோடு சட்டங்களை கொண்டு சென்றால் அதை அழிக்க முடியாது என்பார்கள். அதைப்போல பல வழக்காறுகள் நம்பிக்கைகள் சுற்றியை வலம் வருகிறது. அவையில் உள்ள விஞ்ஞானம், ஏளனம் ஆவதால் புறம் தள்ளப்பட்டு விட்டது. அவைகளை மீட்க இயலுமா என்பது காலமே முடிவெடுக்கும். நூலாசிரியர் தனது உரையில் அருகம்புல்லினை மேலோட்டமாக சொல்லிக் கடந்திருப்பார். வெள்ளருகு, கொடியருகு, செவ்வருகு என்ற வகைகள் உண்டு. இவை அனைத்தும் மேக, பித்த நோய்கான மூலப்பொருள்கள். ஆன்மீகத்தலத்தில் மரங்கள், குத்து செடிகள் தலவிருச்சமாக இருக்கும். அவை அனைத்தும் மூலிகைகள் என்பது பண்டுவம் (வைத்தியம்) அறிந்தவர்களுக்கு தெரிந்த செய்தி. இது போன்ற நூல்கள் தமிழ் எழுத்துப்புலத்தில் வரவேண்டும் வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

 

இரா.முத்துநாகு

2 comments:

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...