Search This Blog

Thursday 18 April 2019

நின்று ஒளிரும் நெருப்பு







 எழுத்தாளர்.முனைவர் பழ.அதியமான் இ.ஒ.ப (I.B.S)
கொடைக்கானல் பன்பலை
வானொலி நிலைய இயக்குனர்
                                                        




    

சுளுந்தீ
நின்று ஒளிரும் நெருப்பு

                                            
       நெருப்பும், சக்கரமும் மனிதகுல முன்னேற்றத்தின் தொடக்கப்புள்ளிகள். நெருப்பைப் பூவுலகத்திற்குத் திருடிக்கொண்டு வந்து சேர்த்த பிரமிதியாஸைத் தெய்வமாகக் கொண்டாடியது கிரேக்க மரபு. கைக்குள் அடங்கும் தீப்பெட்டியிலிருந்து அது புறப்பட்ட பின்னர், ஒளிரும் மின்சாரமாகப் பரவி விட்ட பின்னர், இன்றைய சூழலில் நெருப்பு பிரமிப்பு தரும் வஸ்து அல்ல. ஒரு காலத்தில் எண்ணெய்த்துணி கொண்டு தயாரிக்கப்பட்ட தீவட்டி, வெளிச்சம் கொடுத்தது. அதைத்தாங்கிய தடியர்களுடன் தீவட்டி பயன்பாட்டிற்கு வருவதற்கு முன் 'சுளுந்தீ' என்ற மரமே வெளிச்சம் தந்துள்ளது. 21ஆம் நூற்றாண்டிலும் மலையடிவார சில கிராமங்களில் சுளுந்தீ தடிகளே தீவட்டிக்குப் பதிலியாக இருக்கிறதாம். மழையிலும் நின்று ஒளிரும் நெருப்பு 'சுளுந்தீ'.

       சுடரும் நெருப்பான சுளுந்தீயைக்கொண்டு 18ஆம் நூற்றாண்டின் ஒரு காலப்பகுதியை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளார் எழுத்தாளர் முத்துநாகு. கடந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சஞ்சாரம் நாவலுக்கு அடுத்து அதிகம் விற்ற நாவல்களுள் சுளுந்தீ ஒன்று என எழுதியது தமிழ் இந்து.

 
        நாவிதர், பண்டிதர், மருத்துவர் எனப் பல்வேறு காரணப்பெயர்களால் அறியப்படும் பழஞ்சேவைச் சமூகத்தின் வாழ்நிலையை வாசகனுக்குப் பெருமிதம் தோன்ற விவரிக்கும் புனைவெழுத்து சுளுந்தீ. இந்நாவலை ''நாவிதர்களின் இனவரைவியல் பிரதி'' என்று மானிடவியலார் கருதுகின்றனர். அப்படி பாராட்டுவதனால் அல்புனைவாக இந்நாவலை யாரும் கருதிவிட வேண்டாம். அப்பாராட்டு உள்ளடக்கச் செறிவைக் குறித்த பாராட்டு.

திண்டுக்கல்-மதுரைச் சாலையில் அமைந்திருந்தது நாயக்கர் கால கன்னிவாடி அரண்மனை. அதைச்சார்ந்து நாவிதர், குடியான மக்கள் வாழ்க்கையைச் சித்திரிக்கிறது சுளுந்தீ. பண்ணைக்காடு, பன்றிமலை, வேடசந்தூர், கசவனம்பட்டி, பழநி, இராமேஸ்வரம் போன்ற பகுதிகளை வாசகர் மனக்கண்ணில் நிழலாட நிறுத்துகிறது நாவல்.  

       தனிமனிதனின் அந்தரங்கம் முழுவதையும் அறிந்தது நாவிதர் சமூகம். அடுத்த நாட்டு இளவரசனுக்கு மகளை மணம் முடிக்க தீர்மானிக்கு முன் இளவரசனைப் பார்த்து ' அரண்மனை நாவிதனை அனுப்பி வைப்பார் அரசர். இடைச்சவரம் செய்வதோடு ஆளை எடைபோட்டும் வருவார் மன்னனின் தூதுவர். பிரசவம் பார்க்கும் மருத்துவச்சியோ பெண்களை முழுதறிவார். ஆக ஆண், பெண் எனும் முழுச் சமூகத்தின் உடல்நிலை முழுமையும் அறிந்த சமூகமாக நாவிதர் சமூகம் இருந்தது.ஈரோடு கலிங்கராயன் கால்வாய் அருகமைந்த கல்வெட்டு, இராமநாதபுரத்தில் கிடைத்த உயில் ஓலை எனப் பல ஆதாரங்களைக் காட்டி அச்சமூகம்  உயர் பொருளாதார நிலையில் இருந்ததை நாவலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார். இந்த நாவல் குறிப்பிடும் 18ஆம் நூற்றாண்டல்ல அண்மைக் காலம் வரை அவர்கள் பொருளாதாரத்தில் உயர் நிலையில் இருந்தனர். 1950இல் மறைந்த பண்டித எஸ். எஸ். ஆனந்தம் வீட்டிற்கு விவேகானந்தர் வருகை புரிந்துள்ளார். தென் இந்திய நல உரிமைச்சங்கம் தோன்றுவதற்கு இவர் வீட்டில் நடந்த விவாதங்கள் துணை புரிந்துள்ளன. இச்சமூகத்தின் சரிவு சமீப காலத்தில் தான் நிகழ்ந்துள்ளது.
     
ஆபத்தான ஆயுதமான துப்பாக்கியை ஒரு குடிமகன் வைத்திருக்க இன்று அரசு அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்பது  நாம் அறிந்ததே. நாவித சமூகத்திடம் எந்த அனுமதிச் சீட்டும் இன்றி அபாயகர ஆயுதமான கத்தி தரப்பட்டிருந்தது. நம் கழுத்தையும், தலையையும், உயிர் நிலையையும்  அச்சமூகத்திடம் பயமின்றி ஏன் அலட்சியமாகக் கூட ஒப்படைத்திருந்தது சமூகம். முடி வெட்டும் போது பலரும் தூங்கி விழுந்திருப்போம். ஆம், அவ்வளவு நம்பிக்கை பெற்ற சமூகமாக அது விளங்கியது. இந்த நம்பிக்கை  இன்றும் கூட வீண் போகவில்லை. அதனால் தான் முகநூலில் வலம் வந்த 'வந்தால் வெட்டுவோம்' என்ற சலூன் கடை விளம்பரத்தைக் கோபப்படாமல் சிரித்து, ஆரவாரித்து பகிர்ந்தோம். இப்படியாக எந்த கருத்துக்கூறும் வாசகங்கள் இன்றியும் வாசகனைப் பெருமிதமாக உணர வைத்திருப்பதுதான் சுளுந்தீயின் எழுத்து வெற்றி.

நாவிதர்களின் பண்டுவம் என்ற நாட்டு மருத்துவத்திற்கு 'கந்தகம், பூதம் என்ற பாதரசம், வீரம், பூரம், தாளம்' போன்ற மருந்துகள் மிக முக்கியமானவை. [9:36 PM, 3/28/2019] Vaigai: கந்தகம் : sulphur தாளகம்: arisenit trisulphidum trisulphuret of arsenic, வீரம் : hydrargyrum subchloride, பூரம் : hydrargyrum perchloride corrosive sublimate, பாதரசம் : hydrargyrum ( mercury quick silver ) கல்மதம் : asbestos, லிங்கம்: red sulphate, மனோசிலை: arseni disulphidum bisulphuret of arsenic realgar ( or) red orpiment படிகாரம் : alumen alum, துருசு : cupri sulphas (r) cuprum sulphas r cupric sulphate இவற்றைக் கொண்டு வெடிபொருள் செய்யும்முறை கண்டுபிடிக்கப்பட்டதும், இதன் அபாயம் கருதி இம்மருந்துகளின் வைப்புரிமை அரசின் கட்டுப்பாட்டிற்குச் சென்றது. இதனால் இந்த மருந்துகள் மருத்துவப் பயன்பாட்டிலிருந்து மெல்ல,மெல்ல விலகியது. அலோபதி அந்த இடத்தை நிரப்பியது. இதனால் மண்ணின் மருத்துவ முறை நம்மை விட்டு மறைந்துபோனது. சுளுந்தீ கதையில் வரும் பன்றிமலைச் சாமியார், அறுந்த மூக்கை ஒட்ட வைக்கும் மூக்கு சேர்த்தல் முதலான மருத்துவக் குறிப்புகளை வெகு இயல்பாகச் சொல்லிச் செல்லுவதைப் படிக்கும் போது ஆச்சரியம் தொற்றிக்கொள்கிறது. கூடவே தமிழின் பெருமையான சித்தர் மரபு மருத்துவ முறைகளை எவ்வளவு இழந்திருக்கிறோம் என்று இழப்பின் வலி பின்னி எடுக்கிறது. இதற்கான ஆதார தகவல்களையெல்லாம் கொடைக்கானல் - செண்பகனூர் ஆவணக்காப்பகம் உள்ளிட்ட பல இடங்களில் தேடி எடுத்து புனைவாக்கியிருக்கிறார் சுளுந்தீ ஆசிரியர்.

    திருமணமாகாத பெண் இறந்து விட்டால் அவளைக் கன்னிகழித்துப் புதைப்பது 16,18ஆம் நூற்றாண்டின் வழக்கமாக இருந்திருக்கிறது. இடுகாட்டிற்கு அருகில் இதற்காகப் பயன்படும் மேடான பகுதி வெங்கமேடு என்றழைக்கப்பட்டிருக்கிறது. கன்னிகழிக்கும் ஆண்கள் வெங்கம்பயல் எனப்பட்டனர். பிணம் தழுஇய செயலின் கேவலம் கருதி வெங்கம்பய வசைச் சொல்லானது. இப்படி ஒரு சொல் அல்ல பச்சநாவி, ஈத்தரப்பய, சிலாரடிக்குது, அவட்சவட்ட போன்ற பல சொற்களின் வரலாற்றுக் காரணங்களை இந்நாவலில் படித்துக்கொள்ள முடியும்.

பஞ்சகாலத்தில் புளியங்கொட்டையை அவித்து சாப்பிட்டு பசியாறினார்கள் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நம் தாத்தாக்கள். பசியை நீக்கி தெம்பையும், உயிர் பலத்தையும் தரும் புளியங்கொட்டையானது பஞ்சத்திற்குக் கிடைக்கட்டுமே என்று சாலை ஓரங்களில் புளியமரங்களை ராணி மங்கம்மாள் நட்டு வைத்தார். சாலையோர புளிய மரங்கள் அசோக மன்னன் பெயரோடு ராணி மங்கம்மாள் பெயரையும் காற்றில் எழுதிவைத்திருந்தது, சுளுந்தீயின் வெளிச்சத்தில் தான் கண்ணில் பட்டது.

    கிணறு வெட்ட பூதம் கிளம்புவது, காது வளர்த்தல் போன்ற தமிழ்ச் சமூக வழக்குகள் பலவற்றின் விவரங்கள் இந்நாவலில்  போகிற போக்கில் சொல்லப்பட்டுள்ளன. இந்த நாவலைத் தமிழகம் அறியுமாறு விளக்க வேண்டுமானால் தொ.பரசிவன் ஒரு நாவலை எழுதினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது எனலாம். சுவாரஸ்யமும், அறியப்படாத தகவல்களும் ஒன்றையொன்று விஞ்சுகின்றன.
        
அதிகம் தெரியவராத செய்தி குலநீக்கம் பற்றியது. இது அதிர்ச்சியும் கவலையும் தந்த தகவல். சாதிகளாகப் பிரித்து வைக்கப்பட்ட சமூகத்தை அப்படி அப்படியே இறுக்கக் கட்டிக்காத்து தொடர வைப்பது குலமரபு பேணல். மரபை மீறியவர்களை ஏகத்திற்கு குலநீக்கம் செய்துள்ளது பழஞ்சமூகம். சமூக பிரஷ்டம் செய்யப்பட்ட அவர்கள் ஊருக்குப் புறம்பே மலைகளில் தஞ்சமடைந்தார்கள். அவர்களுக்குள் பீறிக்கிளம்பும் அதிகார எதிர்ப்பைச் சாதகமாகப் பதிந்துள்ளது சுளுந்தீ. இன்றைய நிகழ் சமூகத்தில் குலநீக்கச் செயல்பாடுகள் இல்லை என்று சொல்லி விடலாம். மாறாக உயிர் நீக்கம் செயல்படுகிறது. இதற்கு அது மேல். குலநீக்கத்திலாவது உயிர் வாழ அனுமதிக்கும் இரக்கம் உள்ளீடாக இருந்து தொலைத்தது.

       குலநீக்கமும் குற்றங்கடிதலின் ஒருவகை தான். இந்தவகைத் தண்டனைகள் ஈரக்குலையை நடுங்கச் செய்கின்றன. தவறு செய்தவர்களைக் குன்றின் மேல் சங்கிலியால் கட்டி உயிருடன் தலைகீழாகத் தொங்கவிட்டுக் கழுகுகளுக்கு இரையாக்கியுள்ளனர். உயிர் இழக்கும் தருணத்தில் தங்களை யாரும் காப்பாற்ற மாட்டார்களா என்றெழுப்பும் அவர்களது அபயக்குரல் ஊர் காற்றில் கலக்கும். அது மக்களுக்கு உயிர் பயத்தை அளிக்கும். மேலாதிக்கம் தன் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளும்.

        யதார்த்தச் சித்திரிப்பாகவே சுளுந்தீ சொல்லப்பட்டிருந்தாலும் எழுதப்படாத அதன் சமகால விமர்சனத்தைக் கூரிய வாசகன் உணரத்தவற மாட்டான். கதையின் நாயகன் இராமபண்டுவனுக்குக் குதிரையே கிடைத்திருந்தாலும் ஊருக்குள் வரும் போது அதில் ஏறி பயணிக்க முடியாது. மேல்சமூகம் அதை விரும்பாது அதனால் அனுமதிக்காது. இதனால் ஊருக்குள் நுழையும் போது குதிரையிலிருந்து இறங்கி கயிற்றைப்பிடித்துக் கொண்டு அந்த நான்கு கால் விலங்குடன் இரண்டு கால் அடிமை விலங்கும் நடந்து தான் ஊருக்குள் செல்லும். சென்னையிலிருந்து சொந்த கிராமத்திற்குச் சுடிதாரில் போகும் தோழி ஒருத்தி ரயில் நிலையத்தில் உடை மாற்றி பாவாடை தாவணிக்குள் புகுந்து தான் ஊருக்குள் நுழைவாராம். கொஞ்ச நாள் முந்தி கேள்விப்பட்ட செய்தி. இதற்கும் ஒரு பெரும் பாடகரின் தங்கை அவர்

       இராமபண்டுவன் மகன் மாடனோ ஊருக்குள் குதிரையில் போனான். வீரனாகவும் இருந்தான். அரச படைகளுக்கு வீரர்கள் தேவை இருந்தும், மேல்சமூகம் அவனைப் போர்ப் படையில் சேர்க்கவில்லை. அவனது மரபான தொழிலையே அவன் மீது திணித்தது. அவன் மீறினான். மீறியவன் எப்படிச் செத்திருப்பான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ரயில் பாதைகள் இல்லாத காலத்தில் இன்னொரு வீரனால் அவன் முறைதவறி விதத்தில் கொல்லப்பட்டான். பழைய வரலாற்றை மட்டும்தான் சுளுந்தீ சொல்லுகிறது. மற்றவற்றை வாசகன் படித்துச் செல்ல முடியும். நிகழ் காலத்தை நினைவூட்டியபடி இறந்த காலத்தைச் சொல்லும் நாவல் சுளுந்தீ.

      நாவலைப் படிக்கும் போது தொடர்புடைய சமூகத்தவர்களுக்குச் சுய சாதி அபிமானம் தோன்றக்கூடும். அது எந்த வகையிலும் மூச்சுதிணறும், பழைய கட்டிற்குள் நம்மை நுழைத்து விடக்கூடாது. இந்த எச்சரிக்கை இன்றைய தேவையாக இருப்பது நம் அவமானம்.

   மறைக்கப்பட்ட மானுட வரலாறு (பேராசிரியர் .முத்தையா) என்றும் 18ஆம் நூற்றாண்டினை மிக நுட்பமாக விவாதிக்கும் ஆகச்சிறந்த தமிழ்த் தேசிய சமூக வரலாற்றுக் களஞ்சியம் என்றும் எழுத்தாளர் ரெங்கையா முருகன் சுளுந்தீயை விவரிப்பது குறைந்த பாராட்டுகளே. தமிழ்ச் சமூகம் இந்த நாவலை விரும்பும், கைவிடாது ஏனெனில் தமிழ்ச் சமூகம் முட்டாள்களால் மட்டும் ஆனதல்ல.
                                          ~

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...