Search This Blog

Wednesday 3 April 2019

நூலாயுதம் ; நூல் ; தமிழர் மானுடவியல்


                                                 
                                             நூலாயுதம்

 
நூல் ; தமிழர் மானுடவியல்
ஆசிரியர் ; பேராசிரியர், பக்தவச்சல பாரதி 
பதிப்பு ;அடையாளம் ; விலை; 270

                                             

                                         தமிழர் மானுடவியல்


                          நூல் வாசிப்பு, மண் நேசிப்பு, மக்களை நுகர்த்தலுமே மானுடவியல் என்பார்கள். இதை முழுமையாக கையாண்ட ஆசிரியால் எழுதப்பட்ட நூல். ஐரோப்பிய சமூகம், வடஇந்திய சமூகம், இலங்கை சமூகத்தோடு தமிழக மக்களின் பழக்க வழக்கங்களை ஒப்பீடு செய்த நூலாகவே இருக்கிறது. பல ஆயிரம் நூல்களை படித்து அதை தொகுத்து தமிழ் மற்றும் தெலுங்கு கன்னட சமூகத்தோடு ஒப்பீடு செய்துள்ளார் நூலாசிரியர். 

 நூலாசிரியருக்கு தனியாக அறிமுக உரை தேவையில்லை. தமிழக பழங்குடிகள், சாதியற்ற சமூகமும் சாதி சமூகமும் போன்ற சிறந்த நூல்களை எழுதியவர் மட்டும் அல்லாது இந்திய அளவில் மானுட அளவில் பேசப்படும் நபர்.

  தமிழர்களிடம் நிலவும் பாதபூசை வட புலப் பண்பாடு. கோமுட்டி என்ற தெலுங்கு பேசு செட்டியார் சமூகத்தினர் பெயர் காரணம் என்ன அவர்களிடன் புரதான வரலாறு சொல்லும் நூலான கன்யா புராணத்திலிருந்து தான் அவர்களது குலதெய்வமான கன்னிகா பரமேஸ்வரி வந்தது.
 


அண்ணன் முறை முறை வரும் பெண்களை திருமணம் முடிப்பவர்கள் பாகிஸ்தானில் உள்ள இசுலாமியர்களில் ஒரு பிரிவினரும், கும்பகோணத்தில் இருக்கும் சில பார்ப்பனர்களும், இந்துஸ்தானில் ஜாட் மக்களில் சில பிரிவிலும் இப்பழக்கம் இன்றும் உள்ளது என அதிசியத்தக்க தகவல் தருகிறது.
சமணத்தில் உள்ள பாலியல் வெறுப்பின் வெற்றியே சைவத்தின் வெற்றி. இதனாலே பிற்கால சமண வைணவ கோயில்களில் பாலியல் சிற்பங்கள் வந்தது என்பதை சான்றோடு விளக்குகிறார். கோயில்களில் உள்ள சிலைகள் சைவ சாமியாக இருந்தால் தென்புறமாகவும், உட்கார்ந்த நிலையிலும், இரைச்சியை வைத்து வழிபடும் சாமியாக இருந்தால் வடபுற காவல் தெய்வமாக, நின்ற நிலையிலும் இருக்கும் என்ற நுட்ப பார்வை ஆசிரியரின் அனுபவம் பலிச்சிடுகிறது. 

அனுலோமன், பிரதிலோமன், அந்தராளன், விராத்தியன் போன்ற குலப்பெயர்கள் குலக்கலப்பு நிகழ்வால் பிறக்கும் குழந்தைகளுக்கு வைக்கும் பெயர்கள். இன்றைய சமூகத்தில் கடைபிடிக்கப்படும் குல கூறுபாடுகள் எப்படி நிலைநிறுத்தப்பட்டது என்பதற்கு சமூக செயல்பாட்டவர்களுக்கு தெரிந்த அசைவு தரவுகளை எடுத்துக்காட்டுவதிலும் தனித்தன்மையாக உள்ளது நூல். சமற்கிருந்தத்தில் அம்பட்டன் என அழைக்கப்படும் நாவிதர்கள், பார்ப்பன ஆணுக்கு குலத்தை விட்டு நீக்கப்பட்ட பார்ப்பனப் பெண்ணுக்கும் பிறந்த ஆண் குழந்தையே என்ற மநுவில் (மநு தர்மநூல்) உள்ள தகவல்களை கையாண்டுள்ளதை பார்க்கும் போது பாரம்பரியமாக் உள்ள வைணவத்தளங்களில் நாவிதர்களுக்கு தனி மரியாதை (அந்தஸ்த்து) கொடுப்பதும், சமூக சங்களில் இது தானோ என நினைக்க வைக்கிறது.
தமிழகத்தில் கன்னடத்தை தாய்மொழியாகக்கொண்ட சமூகம் அனுப்ப கவுண்டர். இந்தக்குலத்தினர் தென் தமிழகத்தில் வெள்ளியங்கிரி, சிறுவாளை, மேலக்கோட்டை, மணியாட்சி போன்ற இடங்களில் ஜமீனாக இருந்தவர்கள். இவர்கள் தமிழகத்தில் பிற்பட்ட பிரிவில் உள்ளனர். ஆனால் கருநாடாகவில் ஒடுக்கப்பட்ட சமூகமாக என்ற தகவல். அதை போல் தமிழகத்தில் திராவிடன், பஞ்சமன் என்ற சொல் இன்று விவாதப்பொருளாக உள்ளது. இந்தப் பஞ்சமன் என்ற சொல் ஒடுக்கப்பட்டவர்களாக கருத்தப்படும் மக்களை சுட்டிக்காட்டியதில்லை. பார்ப்பனர்களில் இரைச்சி உண்பவர்களை பஞ்ச கௌடர் என்றும், சைவமாக இருப்பவர்களை பஞ்ச திராவிடர்  என்பதை சுட்டிக்காட்கிறார் ஆசிரியர். இதைப்பார்கும் போது நமது ஆயிரம் கேள்விகள் நமக்கு வருகிறது. அதே போல் தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்டவர்களாக அறியப்படும் சக்கிலியர் சமூகத்தினர் ஆந்திராவில் அதிகமுள்ளனர். இவர்களது மாதங்கி என்ற பெண் தெய்வ வழிபாட்டிற்கு செல்லும் பார்ப்பனர்கள் மாட்டுக்கறி உண்கிறார்கள் என்ற செய்தி பிரமிக்க வைக்கிறது. 

சிறு தெய்வ வழிபாடுகள் தான் நிறுவனமாக்கப்பாடும்போது பெருந்தெய்வ வழிபாடாகிறது என்பதற்கு தீப்பாச்சம்மன், அக்கினியாத்தா போன்ற கோவிகளை எடுத்துக்காட்டாக வைத்து தொ.பரமசிவன் போன்ற மானுடவியல் அறிஞர்களை திகைக்க வைக்கிறார். அதேபோல் வைணவத்தளமான அழகர் கோவில் பழமுதிர் சோலை என்று சிலப்பதிகாரத்தில் உள்ள குறிப்பை சுட்டிக்காட்டும் ஆசிரியர், வைணவர்கள் கூட்டம் கூட்டமாக மக்களிடம் பிரச்சாரம் செய்தனர் அவர்கள் சீரங்கம், (ஸ்ரீரங்கம்) திருவேங்கடம் (திருப்பதி), சீரங்கப்பட்டினம் போன்ற இடங்களில் பயிற்சி பெற்று அங்கிருந்து கிளம்பி பிரச்சாரம் செய்தனர் என்ற பழமையான இலக்கிய சான்றுகளை காட்டி வாசர்களை மிரட்டுகிறது இந்த நூல். இதை வைத்துப்பார்க்கும் போது சாதிய குல அடையாளத்தை கட்டமைக்க நம்மை ஆண்ட மன்னர்களை விட இந்த அடியார்கள் கூட்டம் ஓய்வறியாது பணி செய்து கட்டமைத்துள்ளது. இதை உடைக்க நாம் எத்தனை ஆண்டுகள் ஓய்வில்லாமல் வேலை செய்ய வேண்டும் என்பதை நாம் உள்வாங்கிக்கொண்டு சாதி ஒழிப்பில் அக்காரை காட்டாத அரசியல் கட்சிகள் என குற்றம் சொல்லுவதை ஒதுக்கித்தள்ளிட சிந்திக்க வைக்கிறது இந்நூல். 

இசுலாமியர்களின் குலக்குறியீட்டில் தண்டின் நுனித்தோலினை அறுத்துக்கொள்ளும் சுன்னத்தும் ஒன்று. இவர்களைப்போன்றே எண்டென்பு, சாம்பியா நாட்டு மக்கள் சுன்னத் செய்கிறார்கள். இவர்கள் இசுலாமியரோ கிறித்தவர்களோ இல்லை பழங்குடி மக்கள் என்ற செய்தி வியப்பை ஏற்படுத்துகிறது.    
தமிழர்கள் வைக்கும் பொங்கல் வைக்கும் பானை, எழவு வீட்டில் சாணியும், மங்கல நாளில் மஞ்சளும் தெளிப்பதற்கான தொன்ம காரணங்களிய மக்கள் சொல்லும் காரணத்தை படிக்கும் போது நம்மை பிரமிக்க வைக்கிறது. பெண், குழந்தைப் பருவத்தில் முடியை திருத்தாமல் வைத்திருப்பது பருவம் அடைந்த பின் ரெட்டை சடை, திருமணத்திற்கு பின் அள்ளி முடிவாள். இப்படி அள்ளி முடியும் போதே அவள் குடும்ப விவகாரங்களில் தலையிடும் தன்மையைப் பெறுகிறாள் என்பதை நுட்பமாக பார்த்து எழுதியுள்ள ஆசிரியர், அனைத்து துறைகளிலும் பயணத்தை துவக்கிய பெண்கள் தான் அணியும் தாலி செய்திடும் துறையில் நுழையவில்லையே என்ற ஆதங்கத்தை கொட்டி தனது பெண் உரிமை போராளியாக சமூகத்தை கேள்வி எழுப்புகிறார். 

கடைசியாக இந்தியாவிலே அதிக சாதியுள்ள மாநிலம் ஆந்திராவும் தமிழகமும் என பதிவிட்டு   (மொத்தம் 364) தனது வருத்தத்தை பதிவிட்டுள்ளார்.
மானுடவியல் தொடர்பாக தனித்தனி நூல்களாக படித்தவர்கள் ஒரு நூலாக படிக்கக்கிடைக்காத என்ற குறையை ''தமிழர் மானுடவியல்'' என்ற நூல்  நீக்கியுள்ளது என நம்பலாம்.   
 

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...