Search This Blog

Friday 30 August 2019

நுலதிகாரம் ; சுளுந்தீ - அறிஞர் வேலுசாமி

          



               'சுளுந்தீ நாவல் - தமிழ் அன்னையின் “மணிமுடிக்கு ஒரு வைரம்'
                                                அறிஞர் பொ.வேலுசாமி




             




அண்மைக் காலத்தில் ( டிசம்பர் 2018 ) வெளிவந்து பலராலும் பேசப்படுகின்ற ”சுளுந்தீ” நாவல் இதுவரை வெளிவந்துள்ள தமிழ் நாவல்களின் வரிசையிலிருந்து பெரியளவில் வேறுபட்ட தன்மையுடையதாக உள்ளது. தமிழ் மரபிலிருந்து கிளைத்து எழுந்த நவீன படைப்பாக இந்நாவல் உருவாகியுள்ளது. இந்த நாவலுள் பேசப்படுகின்ற பல செய்திகள் புதுமையானவையாக உள்ளன. அதே நேரத்தில் அவைகள் அனைத்தும் தமிழ்ச் சமூகத்தில் காலம் காலமாக உள்ள விசயங்கள்தான். இத்தகைய விசயங்கள் எவையும் ஒரு படைப்பிற்குள் இதுவரை பேசப்படவில்லை. அப்படி ஒரு சிலரால் ஒரு சில விசயங்கள் பேசப்பட்டு இருந்தாலும் அது ஒரு ஆய்வாக வெளிவந்ததே தவிர ஒரு படைப்பாக உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


கடந்த காலங்களில் நாவிதர்களின் சமூக செயல்பாடுகளை ஒரு படைப்பிற்குள் அடைக்கிப் பேசுவதின் வழியாக அக்காலக்கட்டத்து தமிழ்ச் சமூகத்தில் வாழ்ந்த சாதிகளின் பல்வேறு முகப்பாவங்களை எழுத்தோவியமாகத் தீட்டிக் காட்டுகின்றது. நாவிதர்களின் வாழ்க்கை என்பது இவ்வளவு பரந்த தளத்தில் செயல்பட்டுள்ளதை இந்த நாவல்களில் வருகின்ற ராமன் என்ற பாத்திரத்தின் வழியாக ஆசிரியர் படைத்துக் காட்டுகின்றார். மிகவும் அற்புதமான மருத்துவ விளக்கங்கள் மட்டுமல்லாது நாவிதர்கள் எப்படி அன்றைய அரசாங்க சூழ்ச்சிகளில் கொலையாளிகளாக செயல்பட்டார்கள் என்ற அதிர்ச்சியான வரலாற்று உண்மையை தன்னுடைய கதைப் போக்கினூடாக நமக்கு உணர்த்துகின்றார். இப்படியாக நம் கவனத்தில் படாத பல்வேறுபட்ட முக்கியமான வழக்கங்கள் வாழ்க்கைப் போக்கில் செயல்பட்டு வந்ததை மிக அழகான படைப்பு மொழியில் வெளிபடுத்துக்கின்றார். ஒரு இடத்தில் கூட இப்படியான அதிசயமான செய்திகளை ஆசிரியர் கூற்றாக வைத்து படைப்பை சிதைக்கும் நிலை இந்த நூலில் இல்லை. கதைப் போக்கில் பாத்திரங்களின் உணர்ச்சியுடன் கலந்து இத்தகைய செயல்கள் கூட கதைப்பாத்திரம் ஒன்று போல படிப்பவர்களுக்குத் தோன்ற செய்யும் ஒரு படைப்புத் திறன் என்பது இந்த நாவலில் தொட்ட இடமெல்லாம் துலங்குகிறது. இந்த நாவலில் உலகின் மற்ற மொழிகளில் மொழிபெயர்த்தால் இதுவரை தமிழகம் பற்றி அறியாத அரிய பல விசயங்களைப் படைப்பினூடாக நுகர்ந்து இன்புறும் வாய்ப்பு அவர்களுக்குக் கிட்டும். தமிழக வரலாறு, பண்பாடு பற்றிய பல செய்திகளை மேல்நாட்டவர்கள் ஏற்கனவே ஏராளமாக எழுதிவிட்டார்கள். அவர்கள் கண்ணிலும் படாத பல்வேறு தமிழ்ச் சமூக நிகழ்வுகளை ஒரு படைப்பாக மாற்றி அதிசயம் புரிந்த ”சுளுந்தீ” வருங்காலத்தில் ஒரு தமிழ்ப் படைப்பாக சுடர்விட்டு ஒளிரும்.

1 comment:

  1. நிச்சயமாக இது ஒரு வரலாற்று பெட்டகம் என்று கூட சொல்லலாம்

    ReplyDelete

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...