Search This Blog

Wednesday 7 August 2019

சுளுந்தீ மதிப்புரை - நக்கீரன்

         சுளுந்தீ பற்ற வைக்கும் – ‘தீ’


                                                 எழுத்தாளர் நக்கீரன்


 

''சனாதனப் பண்பாட்டுக்கு ஆதரவாகக் கட்டமைக்கப்பட்ட கதையாடல்களைத் தலைகீழாகக் கவிழ்த்து எழுதப்பட்டுள்ள எதிர்வரலாறே ‘சுளுந்தீ’. ‘பண்டிதர்’ நிலையிலிருந்து ‘முண்டிதர்’ நிலைக்குத் தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றிய இந்த அரிய ‘ஆவண நாவல்’ தமிழுக்குக் கொடை. இரா.முத்துநாகு ஒரு ‘தீக்கொளுத்தி’யாய் நின்று ‘சுளுந்தீ’யைத் தந்துள்ளார். இது பற்றவைக்கப் போகும் நெருப்பு தமிழக வரலாற்றின் பிற இருண்ட பக்கங்களையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வரட்டும்! ''  - நக்கீரன்

ஆனைமலையின் கேரளப்பகுதி காட்டுக்குள் மலைப்புலையர் பழங்குடிகளுடன் கலந்துரையாடும்போது போர்னியோ காட்டு வாழ்வைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். ’குருவிங்’ மரத்தின் எண்ணெய்யில் உருவாக்கும் தீப்பந்தம் பற்றிப் பேச்சு வந்தபோது பழங்குடிகளுள் ஒருவர் எங்கோ எழுந்து சென்றார். திரும்புகையில் அவருடைய கையில் ஒரு குச்சி இருந்தது. தன் நண்பரிடம் தீப்பெட்டியை வாங்கி அதைப் பற்ற வைக்க, அது தீப்பந்தம் போல எரியத் தொடங்கியது. வியப்பு மேலிட விசாரித்தேன். அவர் அம்மரம் இருந்த இடத்துக்கு அழைத்துச் சென்று காட்டினார். அதன் பெயர் ‘நெய் சுளுந்தி’. அந்தச் சுளுந்திக்கு அடுத்து. என்னை வியக்க வைத்தது இரா.முத்துநாகு எழுதியுள்ள ‘சுளுந்தீ’ நாவல்.

அந்த நாவலைப் பற்றிப் பேசும் முன்பாகச் சில வரலாற்றுப் பின்னணியை அறிந்து கொண்டு நாவலுக்குள் நுழைந்தால் சிறப்பாக இருக்கும். அதன் அடிப்படையில் தெனாலிராமன் கதையான ‘அம்பட்டரும் பட்டரும்’ என்ற கதையிலிருந்து தொடங்குதல் மேலும் பொருத்தமாக இருக்கும். அரண்மனையில் அரசருக்கு வழக்கமாகச் சவரம் செய்யும் நாவிதர் வருகிறார். அப்போது அரசர் தூங்கிக்கொண்டிருந்தார். உறக்கத்தைக் கலைக்க விரும்பாத நாவிதர். அவர் தூங்கும்போதே சவரம் செய்துவிட்டு சென்றுவிடுகிறார். விழித்தெழுந்த அரசர் சவரம் செய்யப்பட்டது கண்டு வியப்படைந்தார். நாவிதரை அழைத்து அவருடைய திறமைக்குப் பரிசாக எதை வேண்டும் என்றாலும் கேட்க சொன்னார். அதற்கு நாவிதர், அம்பட்டரான தான் ‘பட்டர்’ ஆக வேண்டும் என்றார். பட்டர் என்பவர் பார்ப்பன வகுப்பினர்.

அரசரும் சம்மதித்துத் தனது அரண்மனை புரோகிதர்களை அழைத்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி கட்டளையிட்டார். அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே தெனாலிராமனிடம் அவர்கள் தஞ்சமடைந்தனர். தெனாலிராமனும் ஒரு சூழ்ச்சி செய்தான். அரசர் கண்ணில் படுமாறு ஒரு கருப்பு நாயைக் கட்டிவைத்து கத்தியால் அதன் தோலைத் தேய்க்க தொடங்கினான். வலி பொறுக்காது நாய்க் கத்தியது. அரசர் அந்தச் செயலைக் கண்டித்தபோது, தெனாலிராமன் தான் நாயைத் துன்புறுத்தவில்லை என்றும், கருப்பு நாயை வெள்ளை நாயாக்க முயல்வதாகவும் பதில் சொன்னான். அதற்கு அரசர் பிறப்பிலேயே கருப்பாக இருக்கும் நாயை எப்படி வெள்ளையாக்க முடியும் என்று வினவினார். உடனே தெனாலிராமன், ‘அம்பட்டனைப் பட்டனாக’ மாற்ற முயலும்போது கருப்பு நாயை வெள்ளை நாயாக்க முடியாதா என்று கேள்வி எழுப்பினான். அதைகேட்டு அரசர் மனம் திருந்தியதாகக் கதை முடியும்.

சனாதனப் பண்பாட்டுக்கு ஆதரவாகக் கட்டமைக்கப்பட்ட இதுபோன்ற கதைகளைத் தலைகீழாகக் கவிழ்த்து எழுதப்பட்டுள்ள எதிர்வரலாறே ‘சுளுந்தீ’. ‘பண்டிதர்’ நிலையிலிருந்து ‘முண்டிதர்’ நிலைக்குத் தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றிய இந்த அரிய ‘ஆவண நாவல்’ தமிழுக்குக் கொடை. தமிழில் அம்+பட்டர் என்பதே ‘அம்பட்டர்’ ஆனது என ஒரு விளக்கம் உண்டு. உயர் சாதியினருக்கு மருத்துவம் பார்க்கையில் தீட்டினைத் தவிர்க்கும் பொருட்டு ‘அழகிய பட்டுத் துணியினை அவர்கள் கைமேல் அணிவித்து நாடி பார்த்ததால் இப்பெயர் வந்தது என்பர். ‘அம் பட்டு’ என்றால் அழகிய பட்டு. ஆனால் இவ்விளக்கம் பொருத்தமானதாகத் தோன்றவில்லை. இரணசிகிச்சை மற்றும் பிரசவத்தை எப்படி அணுகியிருப்பார்கள் என்கிற கேள்வி பிறக்கிறது.

இன்று இழிசொல்லாக மாறியுள்ள ’அம்பட்டர்’ என்ற சொல்லின் உண்மைப் பொருளே வேறு. அது ‘அம்பா’ (பக்கம்), ஸ்தா (இருப்பவர்) ஆகிய இரு வடமொழி வேர்ச்சொற்கள் இணைந்து தன்னிடம் சவரம் செய்து கொள்பவர் அருகிலோ, மருத்துவர் பார்த்துக் கொள்பவர் அருகிலோ இருப்பவர் என்ற பொருளைத் தருவதாகும். மலையாள சவரத் தொழிலாளியான ‘காவுதியன்’ அருகிலிருப்பவர் எனும் பொருளில் ‘அடுத்தோன்’ என்று அழைக்கப்படுவது சான்று.

வேதியர் தொழிலை உயர்வான தொழிலாக நிலைநிறுத்த இதரத் தொழில்களைக் கீழ்மைப்படுத்த வேண்டிய அவசியம் சனாதனத்துக்கு நேரிட்டது. எனவே அதற்குப் பிறப்பு சார்ந்த கருத்தியலை உருவாக்கினர். அம்பட்டர் குலமும் அதற்கு விதிவிலக்கல்ல. மனு கூறுகிறார்: ‘ப்ராஹ்மணாத் வைஷ்ய கந்யாயி மம்பஷ்டோ நாமஜயதே’ (10.8) – பிராஹ்மண்னுக்கு வைசிய மனைவியிடத்துப் பிறந்தவரே ‘அம்பஷ்டன்’. இதுபோல் ‘நாவிதர்’ என்கிற சொல்லுக்கு, ‘பண்டிதம், முண்டிதம், சங்கீதம், புரோகிதம்’ முதலிய நால்வகைத் தொழிலையும் செய்தவராகையால் ‘நானாவிதர்’ என்றழைக்கப்பட்டு ‘நாவிதர்’ ஆனதாகக் கூறுவர். இக்குலத்தினர் மேற்கண்ட தொழில்களைச் செய்தது உண்மையே. ஆனால் நாவிதர் என்கிற சொல்லும் சமஸ்கிருத மூலமாகக் கருதப்படுகிறது. ‘நாசியிலிருந்து பிறந்தவர்’ எனும் பொருளில் ‘நாசுவன்’ என்று பிரிட்டிசார் காலக் கணக்கெடுப்புப் பதிவில் பதியப்பட்டுள்ளதை எட்கர் தர்ஸ்டன் சுட்டுவார். தெலுங்கில் ‘நாசியன்’ என்றும், மலையாளத்தில் சிலவிடங்களில் ‘நாவிதன்’ என்றும் அழைக்கப்படுகின்றனர்.

புரோகிதர் தொழிலில் இவர்கள் ஈடுபட்டதற்குச் சான்றுகள் ஏராளம். புகழ்பெற்ற பூரி ஜகன்னாதர் கோயிலின் பூசாரியும் அதிகாரபூர்வ புரோகிதரும் இக்குலத்தினரே. இவர்கள் சமைக்கும் உணவு ஒருசில ஸ்மார்த்தர்களைத் தவிர மற்ற பார்ப்பன இனத்தவர்களால் உண்ணப்படும். தமிழகத்திலும் சேலம் மாவட்ட கொங்கு வேளாளர் திருமணச் சடங்குகளைச் செய்பவராக இக்குலத்தினர் இருந்துள்ளனர். கூடியிருப்பவர்களுக்குத் தாலிக் கட்டப்போவதாக அறிவித்துப் பின்னர்த் தாலியைக் கட்டுபவராகவும் இவர்களே இருந்துள்ளனர். சேர, சோழ, பாண்டியர் ஆட்சியில் ஒரு பார்ப்பனரும் ஓர் அம்பட்டரும் திருமணத்துக்கு அழைக்கப்பட்டிருந்ததாகவும், திருமணத்துக்கு வந்த பார்ப்பனர் இறந்ததால் கூடியிருந்தவர் அதைக் கெட்ட சகுனமாகக் கருதி அம்பட்டரையே குருவாக ஏற்றதாகவும் இந்த வழக்கத்துக்குக் காரணம் என்று ‘தென்னிந்திய குலங்களும் குடிகளும்’ நூல் விளக்கும். திருமணச் சடங்கில் ‘நாசுவன்’ என்றழைப்பது அபசகுனமாகக் கருதப்பட்டதால் அவர்களை ‘குடிமகன்’ என்று மரியாதையாக அழைத்தனர். இதே மரியாதை திருவாங்கூர் பகுதியிலும் கிடைத்துள்ளது. ‘ப்ரோபகார்’ என்று விரிவாகவும், ‘பிராணு’ எனச் சுருக்கமாகவும் அவர்கள் அழைக்கப்பட்டனர். வட திருவாங்கூரில் சிலர் ‘பணிக்கர்’ பட்டமும் ஏற்றுள்ளனர். ‘வைத்தியன்’ பட்டமும் இருந்துள்ளது. இக்குலத்துப் பெண்கள் தென் திருவாங்கூரில் நாயர் சாதி பெண்கள் அணியும் அணிமணிகளைப் பின்பற்றினர். தமிழகத்திலும் இவர்கள் வலங்கைப் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.

மருத்துவத் தொழில் காரணமாக ’பண்டிதர்’ என்றும், ‘பரியாரி’ என்றும் இவர்கள் அழைக்கப்பட்டனர். அம்பஷ்டர்கள் மருத்துவர்களாக விளங்கியதை மனுசாஸ்திரம் குறிப்பிடுகிறது. ’அம்பஷ்டாநாம் சிகித்ஸநம்’ (10.36) ’அம்பஷ்டர்களுடைய ஜீவனத் தொழில் வைத்தியம் செய்தல்’. மகாபாரத்தின் தொன்மவியலில் இரட்டை அஸ்வின்களான கடவுளின் மருத்துவர்கள் சூத்திரராகக் கருதப்பட்டனர் என்கிறார் ஆர்.எஸ்.சர்மா.

உடல் காயங்களுக்கு மருத்துவம் செய்கையில் சிலவிடங்களில் மயிர்நீக்க வேண்டியிருந்ததால் சவரத் தொழிலும் இவர்கள் வசப்பட, பின்னர் அதுவே இழிநிலைக்குத் தள்ளியது என்கின்றன ஆய்வுகள். பழங்காலத்திலேயே நாவிதர் தொழில் இழிநிலைக்கு ஆளானதைப் புத்த ஜாதகக் கதைகள் தெரிவிக்கின்றன. புத்த துறவியான உபாலி பிறப்பால் ஒரு நாவிதர் என்பதால் சங்கத்தின் இதர கன்னித் துறவிகளால் தாழ்ந்த பிறப்புள்ள ஒருவராய் அவர் கடிந்துக் கொள்ளப்படுவதை வினயபிடகம் தெரிவிக்கிறது. புத்த சமயத்திலேயே நிலைமை இவ்வாறு எனில் சனாதனவாதிகளிடம் என்ன பாடுபட்டிருப்பர்? ஆனால் இத்தகைய தம் தாழ்நிலைக்கு ‘சுரபி’ பசுவின் சாபம்தான் காரணம் என்ற நம்பிக்கை கேரளத்தைச் சேர்ந்த நாவிதர்களிடையே நிலவுகிறது. கற்பனையை நம்ப வைப்பதே சனாதனத்தின் வெற்றி என்றால் அத்தகைய பல கற்பனை சதிகளை விரிவாக உடைத்து காட்டியுள்ளதே சுளுந்தீ நாவலின் வெற்றி.

மன்னராட்சியில் எல்லாச் சேவை சாதியினருக்கும் புஞ்சை நிலம் வழங்கப்பட்டிருக்க, நாவிதர்களுக்கு மட்டும் நஞ்சை நிலம் வழங்கப்பட்டமைக்கு வெறும் சவரத் தொழில் மட்டுமே காரணமல்ல. ‘பண்டுவம்’ எனும் மருத்துவத் தொழிலின் பின்னேயும், அந்தப்புரப் போர்கருவியான ‘சவரகத்தி’யின் பின்னேயும் ஒளிந்திருந்த ‘ராஜரகசிய’ங்களே அசல் காரணம். ஆனால் அதுவே வீழ்ச்சிக்கும் காரணமானது. செந்தூரமாக இருந்த ‘வெடி மருந்து’ வெடிப்பொருளாக மாறி நிகழும் சதிகளால் பண்டுவர்கள் அதிகார பீடத்திலிருந்த பார்ப்பனர்களிடம் தம் மருத்துவ ஓலைச்சுவடிகளைக் கொடுத்து உயிர்தப்ப அவை சமஸ்கிருதத்தில் ‘வைத்யம்’ ஆக உருவெடுத்த வரலாறு உயிரோட்டமாக அமைந்துள்ளது. இங்கிலாந்திலும் நாவிதர்களே மருத்துவர்களாக விளங்கிய காலத்தில் நவீன மருத்துவம் அறிமுகமான பிறகுதான் அவர்களது தொழில் கைநழுவியதே தவிரச் சதியின் பின்னணியில் அல்ல.

‘கல்லுபித்தான் கொடிக்குள் அடைக் காத்திருந்த கவுதாரிகள் ‘கீச்சனச்சான்’ போட்டு ரெக்கையை ‘டபடப’ அடித்துப் பறந்தோடுவது போல’ சரளமான நடையில் வழுக்கும் எழுத்துக்களில் ஆடைக்கும் கோடைக்கும் வற்றாத தண்ணீர் போலத் தகவல்கள் வற்றுவதே கிடையாது. தகவல் மட்டும் நாவலாகி விடுமா என்றால் ஆகாதுதான். நவீனப் பார்வையில் நாவலின் ‘செய்நேர்த்தி’ கொஞ்சம் குறைச்சல்தான். மூங்கிலை வெட்டியிருந்தால் நன்றாகத் தழைக்கும்தான், மறுக்கவில்லை. ஆனால் பூக்கவிட்டால் வேர் செத்திடுமே! பிறகு ஆனைகள் என்ன செய்யும்? என்று பூதகன் சொல்லும் பதில்தான் நமக்கும். சேதாரம் அதிகமிருந்தால் அரிய செய்திகள் நழுவியிருக்கலாம். 

கதையின் நாயகன் ராமன்தான். என்னதான் அனந்தவல்லி – மாடன் காதல் சுவையாக இருந்தாலும் மாடன் என்பவன் ராமன் அளவுக்கு ஈர்க்கவில்லை. எல்லா இனக்குழுவிலும் இப்படியொரு புரட்சிவீரன் கதை இருக்கவே செய்யும். ஆயுதம் ஏந்த துடிக்கும் மாடனுக்கு உடலிலுள்ள வலு மூளையில்லை. இதுவே ராமனாக இருந்திருந்தால் அதனைச் சாதுரியமாகச் செய்திருப்பார். பஞ்சம் வருவது தெரிந்தால்தான் கரடிகள் கரையான் புற்றைக் காவல் காக்கும். ஆனால் ராமன் எப்போதுமே பல ரகசியங்களைக் காத்து வந்தவர். அவரால் நெளிவுசுளிவாக நடந்திருக்க முடியும். அதனால் மாடனுக்குத் தந்த இடத்தைச் சுருக்கி ராமனுக்குத் தந்திருக்கலாம் என்கிற எண்ணம் வருவதைத் தடுக்க முடியவில்லை. குறிப்பாகக் கெந்தகச் செந்தூரம் தயாரிக்கையில் ராமன் மரணமடைவதின் சதி திட்டத்தை இன்னும் விரிவாகப் பேசியிருக்கலாம்.

அரண்மனை – பன்றிமலை சித்தர் – ராமன் மூவரை சுற்றியும் அமையும் ஆர்வத் தூண்டல் மாடனிடம் கிடைக்கவில்லை. மாடன் ராமனைப் போல ரகசியமாக அல்லாமல் வெளிப்படையாகவே போர்வாளை ஏந்தத் துடிக்கிறான். இந்த உரிமைக்கான ஆசை வரலாற்றிலும் எதிரொலித்திருப்பது சிறப்பு. சனாதனச் சட்டங்கள் சூத்திரர்களுக்கு ஆயுதம் வைத்துக் கொள்ளும் உரிமையை வழங்கியதில்லை. முதன்முதலில், ‘தனுர்வேத சம்ஹிதை’தான், ‘சூத்திரர்கள் ஆபத்துக் காலங்களில் மட்டும் ஆயுதம் ஏந்தலாம்’ என விதிக்கிறது. ஆனால் அந்த ஆயுதமும் ‘தடி’யாக மட்டுமே இருக்கவேண்டும் என்றது. பிற்காலத்தில்தான் எங்கே சூத்திரர்கள் முற்றிலும் தம் கைவிட்டு போய்விடுவார்களோ என்று அஞ்சியும், இனி அவர்களை அச்சுறுத்தி வைக்க வாய்ப்பில்லை என்ற நிலை ஏற்பட்டதும்தான் இறங்கி வந்தனர்.

முதன்முதலில் ‘மிருச்சக்கடிகம்’ நாடகத்தில்தான் இரண்டு படைப் பிரிவு அதிகாரிகளில் ஒருவராக ஒரு நாவிதர் சாதியை சார்ந்தவர் காட்டப்படுகிறார். முதலாம் நந்த அரசனும் ஒரு நாவிதர்தான் என்று டோனி வெண்டிகர் குறிப்பிடுகிறார். ஆனால் இத்தகைய வாய்ப்புகள் தொடராது ஏனோ பறிபோய்விடுகிறது. இந்தப் பின்னணியில் வைத்தே போர்வாள் ஏந்தும் ராமன் – மாடனின் ஆசையைப் புரிந்துக்கொள்ள வேண்டும்.

நாவலில் மிகவும் ஈர்ப்பான பாத்திரம், நாவின் சுவை, மலம் மற்றும் சிறுநீரின் நாற்றம், உடல் மற்றும் கண்களின் நிறம் இவற்றை வைத்தே இன்ன நோய் தாக்கியுள்ளது எனக் கணித்திடும் பன்றிமலைச் சித்தர்தான். உடலோடு அரசியலுக்கும் மருத்துவம் பார்க்கும் அவருடைய அறிவு திகைக்க வைக்கிறது. வேப்பமரம் இலைகளை உதிர்த்து பங்குனி உத்திரத்துக்குப் பெய்த மழையில் துளிர்ப்பது போல அவருடைய மருத்துவ அறிவு ராமனிடம் துளிர்க்கிறது. தேனீக்களின் இடப்பெயர்வு பஞ்சத்தின் அறிகுறி என்பது போல அவரது தூல உடல் பெயர்வு அரண்மனைக்குப் பஞ்சமாகிறது.

நாவலில் குலநீக்கத்துக்கு எதிரான கிளர்ச்சி வரலாறு அருமையான ஆவணம். மாங்குளம் கண்மாயை உடைத்தல், கண்மாய் நீரில் கச்சக் குமுட்டிக்காய், எட்டிக்காய், அரளிவிதை கலந்து நஞ்சூட்டல், நீர் குடித்தவர்கள் வாந்தி, பேதியாகி பண்டுவம் இல்லாது மடிதல், தரிசாக உள்ள நிலத்தில் நாய்க்கடுகை விதைத்தல் போன்ற எதிர்நடவடிக்கைகள் அருமையான நாட்டரியல் பதிவு. வறட்சிக் காலத்தில் அரண்மனைக்கும் அக்கிரகாரத்துக்கும் பாலூற்ற இடையர்களுக்கு மட்டும் ஓடையில் கிணறு தோண்ட அனுமதிக்கும் அரண்மனை மற்ற குடியான சனங்களை அரண்மனைக் கிணற்றைப் பார்க்கவே அனுமதிக்கவில்லை என்றால் புரட்சி தோன்றாமல் என்ன செய்யும்?

நாவலில் சில பகுதிகளை ‘எடிட்’ செய்திருந்தால் கச்சித வடிவத்துக்குச் சென்றிருக்கும். குறிப்பாக இராமேஸ்வரத்திலிருந்து திருக்கோட்டியூர் வழியாகச் செஞ்சிவரை நீளும் பயணம். நிறையத் தகவல்களை வாரி வழங்கினாலும் கதையின் கருப்பொருளுக்கு அவை பெரிய நியாயம் வழங்கவில்லை. இதற்குப் பதிலாக ராமனிடமிருந்து மேலும் பல செய்திகளைக் கறந்திருக்கலாம். எடுத்துக்காட்டாகத் தமிழ்குடிகளைக் குலநீக்கம் செய்து முற்றிலும் ’தெலுங்குமயமாக்கும் நாயக்கர்கள் ஏன் தெலுங்கு நாவிதர்களை வைத்துக் கொள்ளவில்லை? தமிழகத்தில் வசித்த தெலுங்கு நாவிதர்கள் இடுப்புக்கு மேல் மட்டுமே சவரம் செய்வார்கள் என்கிற தகவலால் இந்தக் கேள்வி எழுகிறது. இதுபோல் தமிழ் நாவிதர்கள் ஐரோப்பியருக்குச் சவரம் செய்வதில்லை என்றும், முகமதிய சவரத் தொழிலாளியோ அல்லது வேறு சாதியைச் சேர்ந்த சவரத்தொழிலாளியோதான் அப்பணியை மேற்கொள்வர் என்கிற எட்கர் தர்ஸ்டனின் குறிப்பு இதுபற்றிய உண்மைகளை அறிய தூண்டுகிறது.
குடி நாவிதர்கள் பறையர்களுக்கு முடி நீக்குவதில்லை என்கிற குறிப்பும் உள்ளதால் அக்காலத்தில் அவர்களுக்கு அச்சேவையைச் செய்தவர் எவர்? அவர்களுக்குத் துணி வெளுக்கும் வேலையைப் புதிரை வண்ணார் செய்தது போல வேறு எவரேனும் இருந்தார்களா அல்லது அவர்களே செய்து கொண்டார்களா போன்றவை விடையற்ற கேள்விகளாக உள்ளன. சாணார்களுக்கு நாவிதம் செய்பவர்கள் மற்றவர்களுக்கு நாவிதம் செய்வதில்லை என்பதை விளக்கும் முத்துநாகு இதையும் விளக்க மாட்டாரா என்கிற ஆசை எழுவது இயல்புதானே?

சாலைகளில் புளியமரங்கள் வைக்கப்பட்ட வரலாறு, உவர்நீரினைப் புகையிலை சாகுபடிக்குப் பயன்படுத்தியமை, கோவில்களில் பூசாரி, கோடங்கி, பண்டாரத்தின் அரசியல் பங்கு, பூம்பூம் மாட்டுக்காரர்கள் ஒற்றர்களாகப் பணியாற்றியமை, துணிகளுக்குச் சாயமிடப் பயன்படுத்திய சேங்கொட்டை, வண்ணார் குறி இரகசியம், வெள்ளாவி அடுப்பில் சாதிவாரியாகத் துணி அடுக்கும் முறை, பெண்களுக்குக் காது வளர்த்து தண்டத்திப் போட்டுவிடும் குறத்திகளின் தொழில்நுட்பம், சிகை திருத்த அடையாளத்தை வைத்து சாதியைக் கண்டுப்பிடித்தல், கிணறு வெட்ட கிளம்பும் பூதம் எது? பெண்களுக்குச் சவரம் செய்யும் முறை, பிணத்தைப் புணரும் வெங்கப்பயல் என அனைத்தையும் விரித்துப் பேசினால் நாவல் வாசிப்பவர்களுக்குச் செய்யும் துரோகம் என்பதால் அவற்றை விளக்கவில்லை.

இரா.முத்துநாகு ஒரு ‘தீக்கொளுத்தி’யாய் நின்று ‘சுளுந்தீ’யைத் தந்துள்ளார். இது பற்றவைக்கப் போகும் நெருப்பு தமிழக வரலாற்றின் பிற இருண்ட பக்கங்களையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வரட்டும்

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...