Search This Blog

Monday 8 June 2020

சுளுந்தீ''யை பற்ற வைத்த கன்னிவாடி அரண்மனை (ஜமீன் = பாளையப்பட்டு)



''சுளுந்தீ''யை பற்ற வைத்த கன்னிவாடி அரண்மனை (ஜமீன் = பாளையப்பட்டு)
********************************************************************************


கன்னிவாடி அரண்மனை எனது ''சுளுந்தீ'' பெருங்கதைக்களத்தைத் தூக்கி நிறுத்திய இடம்.

மதுரை நாயக்கர் அரசின் படைத்தளம் இயங்கிய தளம் என்பதால் அரசின் அதிகார மையமாக மட்டுமல்லாது வைகை ஆற்றுக்கு வடக்கே தனி அரசு போல் செயல்பட்டது கன்னிவாடி அரண்மனை.

பிரிட்டீஷ் ஆட்சியை எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மனின் படைத்தளபதி ஊமத்துரை மற்றும் சிவகங்கை சீனை மன்னர்களான மருது சகோதர்களுக்கு அடைக்களம் கொடுத்த குற்றத்திற்காக முதலில் காவு வாங்கப்பட்டது கன்னிவாடி பாளையப்பட்டு. இந்தப்பாளைப்பட்டு மீது வழக்கு தொடுத்த பிரிட்டீஷ் அரசு இதன் சொத்துக்கள் அனைத்தையும் கையகப்படுத்தி ஏசு சபையினருக்கு தானமாக வழங்கியது.பாளையப்பட்டு தலைவரான கதிரியப்பநாயக்கன் அவரது படைத்தளபதி தேவதானப்பட்டி கோடாங்கி பூசாரி நாயக்கன் ஆகியோரை தூக்கில் போட்டது.

ஜமீன்தார் குடியிருந்த அரண்மனையும் வழக்கில் சிக்க வைத்தனர். இதனால் அரண்மனை இருந்தும் அதில் வசிக்க முடியாமல் தனது முன்னோர்கள் கட்டிய அங்காளபரமேஸ்வரி கோயிலில் தங்கி இருந்தார் கடைசி அரண்மனையாரான அப்பயநாயக்கர். அக்கோயிலும் ஏலம் எடுக்கப்பட்ட வரைபட எல்லையில் போனதால் அதையும் இழந்தார்கள். ஏலம் எடுத்தவர்கள் அரண்மனையும் கோயிலையும் தரைமட்டமாக்கினார்கள். அதில் உள்ள அனைத்துகோப்புகளும் மண்ணோடு மண்ணாகிப்போனது.

எம்.ஜி.ஆர் மலைத்த அரண்மனையார்
*******************************************************
மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் திமுகவில் எம்.எல்.ஏவாக இருந்த காலத்தில் திண்டுக்கல் வந்தார். அப்பயநாயக்கரின் கதையை தெரிந்து இவரை சந்தித்தித்துள்ளார். ''உங்களுக்கு நிதி அளிக்கவும் சுதந்தர போராட்ட தியாகிக்கான ஊதியம் வழங்கிட உதவுவதாக'' சொல்லியுள்ளார். இதை மறுத்த அப்பயநாயக்கர் ''அரண்மனையார் கொடுத்துப் பழக்கப்பட்டவர்கள் கை நீட்டி வாங்கமாட்டார்கள்'' எனச்சொல்ல ''உங்கள் கதையையாவது சொல்லுங்கள் திரைப்படமாக எடுக்கிறேன். அதன் மூலம் கிடைக்கும் நிதியை முழுமையாக தங்களுக்கு வழங்குகிறேன்'' என்றும் கேட்டுள்ளார் எம்.ஜி.ஆர். ''கதையை சொல்லுகிறேன் சினிமா வேண்டுமானால் எடுங்கள் நிதியை ஏழை மக்களுக்கு வழங்குங்கள்'' என்று சொல்லியுள்ளார். இப்படிப்பட்ட குணம் கொண்ட அரண்மனையாரை சுமார் 2006ல் ஆனந்த விகடன் இதழுக்காகப் பேட்டி எடுக்கப்போனேன். அந்தச்சந்திப்பு தான் ''சுளுந்தீ'' என்ற கதைக்கு நெருப்பு மூட்டியது.

இடிந்த அரண்மனையை மட்டும் வழக்கில் விடுபட இடிந்த அரண்மனையை வாழ்ந்த இடத்தை பார்த்துப்பார்த்து நொந்து இத்து இருக்க இடமில்லாமல் அங்காளபரமேசுவரி கோவிலில் தங்கி இருந்தார். எம்.ஜி.ஆர் உதவுவதாக சொன்னதை கேட்டவுடன் ''அரண்மனையார் என்பது தனிப்பட்ட அதிகாரப் பதவி அல்ல மக்களின் தலைவர். மக்கள் சொத்துக்களைக் காப்பவன். இப்படித்தான் நான் அரண்மனை பட்டம் ஏற்பத்தற்கு முன்பு எனது வாத்தியாரான வள்ளுவன் பெரிய கருப்பணன், புலவன் பெரிய குப்புச்சாமி ஆகியோர் எனக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தார்கள். மக்கள் சொத்தைக் காத்தவன் கஞ்சிக்கு இல்லாமல் செத்தான். இருக்க இடமில்லாமல் கிடக்கிறான் என்ற அவச்சொல், அவகீர்த்தியை நான் கையேந்தி வாங்குவதன் மூலம் எனது முன்னோர்களுக்கு வந்து விடும். இதனால் எம்.ஜி.ஆர் மட்டுமல்ல பிறர் செய்திட வந்த உதவியை மறுத்தேன். நான் மநுதர்மத்தை மதித்து அரசாட்சி செய்வேன் என பட்டம் ஏற்றவன். எனது சிறுவயதிலே சொத்துக்கள் அனைத்தையும் பிரிட்டீஷார் கையப்படுத்தினார்கள். எனது முன்னோர்கள் பிரிட்டீஷாரை எதிர்த்தது இந்த மக்களுக்கு தெரியவில்லை என்பது மக்களின் குற்றம் இல்லை'' என பேட்டிகொடுத்தார். அவருக்கு நான் வாங்கிச்சென்ற பிஸ்கட் பாக்கெட்டை கொடுத்தேன். அதை வாங்க மறுத்து விட்டு மெல்ல எழுந்து கோவில் கிணற்றில் தண்ணீரை இறைத்து, ஒரு குவளையில் எடுத்து வந்து 'இதை மட்டுமே இந்த அரண்மனையார் கொடுக்கும் நிலையில் உள்ளேன்'' என நீட்டினார். இதுவே அவரின் தன்மானத்தின் அளவுகோள் என்பதைப் புரிந்து கொண்டேன்.

அப்போது அங்கு தனது மனைவுடன் வந்த சேர்வைகாரர் ஒருவர் அப்பயநாயக்கரை வணங்கி 'வீடுகட்டிக்கிருக்கேன் மரம் வேணும் அய்யா'' எனக்கேட்க இடிந்து கிடக்கும் அரண்மனையை கையைக்காட்டி சரக்கட்டைகளை எடுத்துக்கொண்டுபோ நல்லா இரு என சொல்லி அவரை வணங்கி இவர் அனுப்பி வைத்தார்.

கோபமாக முகத்தை வைத்திருந்தவர் நம்மை அழைத்து அரண்மனை அருகில் உள்ள ஒரு மாடத்தைக்காட்டி இது என்ன எனக்கேட்டார். சிறுகோவில் போல் தெரிந்ததால் கோவில் என்றோம். ''கோவில் இல்லை அரண்மனையார்களின் சவரம் செய்திடும் நாவித மாடம்' என அவர் சொல்ல விக்கிப்போனோம். நாவித மாடத்தில் உட்காந்தபடியே நாவிதம் செய்திடவே மாடம் அமைத்து வாழ்ந்த எனக்கு யாரிடமாவது கை நீட்ட மனம் வருமா ? என, எதிர் கேள்வி வைத்தார். நம்மிடம் அவருக்கான பதில் இல்லாமல் மௌனமானோம்.
ஆனந்த விகடன் பத்திரிக்கை மூலம் கிடைத்த நட்பில் சுளுந்தீ பெருங்கதைக்களத்தில் நான் சேகரித்த தகவல்களை அவ்வப்போது சொல்லி பதில் கேட்டேன். (நான் அவரைச் சந்திக்க துவங்கிய போது அவருக்கு எழுபத்தி ஒன்பது வயது ) மறுப்பதை மறுத்து பல அரண்மனை ரகசியங்களை மறுக்காமல் சொல்லி, அரண்மனையார்களுக்கு நாவிதர்களின் பங்கு என்ன என்னபதை சொல்லி உதவினார்.

சுளுந்தீ 2018 டிசம்பரில் அச்சேறுவதற்கு முன் அதன் டம்மியை எடுத்துக்கொண்டு அவரைச் சந்திக்க அவரின் உறவினரும் சில்லுவார்பட்டி எட்டு ஊர் நாட்டாமையும் பேராசிரியர் முனைவர் மனோகரனுடன் போனோம். அவரால் முழுமையாக என்னை நினைவுபடுத்தி அசைபோடமுடியவில்லை. நான் அவரை, அரண்மனையை எடுத்த படங்களை அவருக்கு கொடுத்த பின்பு ஓரளவுக்கு நினைவு நினைவு வந்தது. அவரின் வாழ்த்தினை பெற்று நூல் வந்த பின்னால் அவரிடம் கொடுக்கலாம் முடிவு செய்திருந்தோம். ஆனால் அவர் 14.02.2019 அன்று மாலை மறைந்து விட்டார்.

அரண்மனையாருக்கு மரியாதை செழுத்தி விட்டு, சுளுந்தீ நாவலை தளுகையாக அவரது உடலில் வைத்தோம். 'சுளுந்தீ' நூலிலின் அட்டைப்படத்தில் கன்னிவாடி அரண்மனையின் படத்தைப் பார்த்த அவரு உறவினர்கள் ''வாழ்ந்த இடம் சுவடு இல்லாமல் போனது' எனத்தெலுங்கில் சொல்லி அழுத அழுகை நம்மை இறுக்கமாக்கியது.

''அரண்மனையார் இறந்து விட்டால் அவர் ஊர் பிணம். அதை தூக்கி எறியூட்டும் வரை ஊராரே செய்வார்கள். எந்த சாத்திர சம்பிரதாயம் இல்லை. உறவுகள் பெயர் அளவுக்கு அழுது விளகி நிற்பார்கள். பிணத்தை பல்லக்கில் வைத்து அரண்மனை எல்லைக்கு கட்டுப்பட்ட ஊரார் மாற்றி மாற்றி தூக்கி செல்வார்கள். சுடுகாட்டில் எரிக்கும் பழக்கம் இல்லை . ஊரார் எங்கு சொல்லுகிறார்களோ அங்கு தான் புதைப்பார்கள்'' என அரண்மனையார் இறந்தால் என்ன செய்வீர்கள் என அவரிடம் பேட்டி எடுத்தது நினைவுக்கு வர அப்பயநாயக்கர் பிணமாக இருந்தாலும் நான் நடைபிணமாய் நடந்தேன்.

குறிப்பு
***********
கன்னிவாடி அரண்மனையாரின் உறவினரான தேவதானப்பட்டி சின்ன அரண்மனையாரான மூங்கிலாறு காமாட்சி அம்மன் கோவில் கோடாங்கி நாயக்கர் என்ற கோடாங்கி காமாட்சி நாயக்கர் மருது சகோதர்கள் மற்றும் திப்பு சுல்தான் படைக்கு வெடி தயாரித்த குற்றத்திற்காக இவரை மூங்கிலாறு காமாட்சி அம்மன் கோவில் முன்பாக இவர் நட்டு வளர்த்த புளியமரத்திலே பிரிட்டிஷ் அரசு தூக்கில் போட்டது. இவரைப்போன்றவர்களை சுதந்திரப்போராட்ட தியாகிகளாக அறிவிக்க அரசிடன் கோரிக்கை வைத்தார் பேராசிரியர் இராசயன். அது எடுபடாததால் வழக்கு தொடுத்துத்துள்ளார். அவர் உடல் மிகவும் நலமில்லாமல் உள்ளார். அவர் தொடுத்த வழக்கும் அவரது உடல் நலம் போலவே உள்ளது வருத்தமாகவுள்ளது.



[30/08, 8:58 pm] Muthu Nagu: http://kungumam.co.in/Articalinnerdetail.aspx…
இந்து ஆங்கிலம்
****************
[31/08, 6:13 am] Muthu Nagu: From the hotbed of conflict https://www.thehindu.com/…/r-muthunagu…/article29301111.ece…
இந்து தமிழ்
***********
https://www.hindutamil.in/news/literature/165551-.html

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...