நூலதிகாரம்
நூல் ; பாண்டிச்சி
ஆசிரியர் ; அல்லி பாத்திமா
பதிப்பகம்; தமிழ் அலை
விலை ; 150
கிண்டில்
இணைப்பு இருந்தால் விலையில்லாமல் படிக்கலாம்.
- பழங்குடி மக்கள் குறித்து பழங்குடிகள் ஆய்வகம் மானிடவியல் ஆய்வாக பல ஆயிரம் நூல்கள், ஆய்வறிக்கைகள் கொண்டு வந்துள்ளது. வந்தவண்ணமும் உள்ளது. ஆனால் அவைகள் வாசகர் மையத்தில் பேசப்படுவதில்லை. ஆனால் புனைவு கதையாக எழுதும் போது வாசகர்கள் கொண்டாடுகிறார்கள்.பழங்குடி மக்கள் குறித்து தமிழில் வந்த முதல் கதை குறிஞ்சி தேன். கன்னட மொழியிலிருந்து மொழிபெயர்ப்பாக வந்தது *சிக்கவீரஇராஜேந்திரன்*. இந்நூல் குடகு அரசாட்சி வீழ்ந்த வரலாறே மைய கருவாக இருக்கும். அக்கதையில் குடகு மலை பழங்குடிகள் சில பாத்திரங்களில் பங்காற்றுவதாக கதை ஓட்டம் அமைந்திருக்கும். சோளகர் தொட்டி கருநாடக தமிழக எல்லையோர பழங்குடி மக்கள் குறித்த பதிவு. மைய அரசின் இளம் எழுத்தாளருக்கான விருது பெற்ற *கானகன்* கதை பளியர் இன குழுவையை மையமாக வைத்து எழுதப்பட்டது. சுளுந்தீ கதையில் பழங்குடி மக்களின் பதிவுகள் ஓர் அங்கமாக வந்து செல்லும்.கேரள தமிழக எல்லையில் வாழும் காணி, முதுவா, பளியர், புலையர் குறிப்பிட்ட பதிவாக அல்லாமல் எந்த குழுவையும் குறிப்பிடாமல் பொத்தாம் பொதுவாக கதைகளம் அமைத்துள்ளது பாண்டிச்சி. கேரள (தமிழக எல்லையோரம்) உள்ள தேவிகுளம், பீர்மேடு, உடுமன்சோலை மலைப்பகுதியில் உள்ள பொன்னிவளக்காடு என்ற புனைப்பெயரில் அமைந்த பழங்குடி கிராமமே கதையின் களம். இக்கதையில் சொல்லப்பட்டுள்ள இளந்தாரிகள், காணி, மூப்பன், ராஜா, மந்திரி போன்ற பழங்குடி மக்களின் குடி அமைப்பு முறையை வைத்து இது முதுவா குடி என வாசகர்கள் முடிவெடுத்துக்கொள்ளலாம். மொத்தத்தில் பாண்டிச்சி நூல் பழங்குடிகளை முழு மைய பாத்திரமாக வைத்து எழுதப்பட்டது என்பதே சிறப்பு.கதை கரு; வனத்துறை கட்டுப்பாட்டுக்குள் பழமையை கட்டிகாத்து வாழும் மக்களின் வாழ்வியலை கட்டுரையாக எழுத செல்லும் நிருபர் செல்வன் அக்குடிகளின் இராசாவான மூப்பன் மகள் பாண்டிச்சி காதலிப்பதும் அக்காதலை அவள் ஏற்காமல் இருப்பதும் பின்னர் மனதளவில் ஏற்பதுமே கதையில் மைய கரு. பொத்தாம் பொதுவாக பார்த்தால் இது ஒரு காதல் கதை போலவே தெரியும். இக்காதல் மூலமாக அப்பழங்குடிகளின் வரலாற்றை, வாழும், வாழ்ந்து வரும் முறையை பிசிறாமல் கதாபாத்திரங்கள் மூலம் வடித்துள்ளார் நூலாசிரியர் அல்லி பாத்திமா.''பழங்குடி மக்களை நல்வழிப்படுத்துகிறோம், என்ற பெயரில் அவர்களை நம்பிக்கைகள் கலந்த அறிவியலை பிரிட்டன் கல்விமுறையால் சிதைத்து விட்டோம்'' என்பதை கதை துவங்கும் போது கதாநாயகி பாத்திரமான பாண்டிச்சி மூலம் 'ஆய்வு என்ற பெயரில் இங்கு வரும் வெளிநாட்டினர் எங்கள் மருத்துவமுறையை திருடி விட்டார்கள். எங்களை பழக்க வழக்கங்களை கிண்டலடித்து எழுதியுள்ளார்கள்' என்று சுட்டிக்காட்டி 'நாட்டில் வாழும் மனிதர்களை விட பண்பாடு மிக்கவர்கள்' என்று பேசும் வார்த்தைகளில் வாசகனை சுண்டி இழுக்கிறது.சித்த மருத்துவத்தில் நாடி அறிந்து உடல் நோயினை கணிக்கும் முறை இன்று இல்லாமல் போய்விட்டது என்றே சொல்லவேண்டும். இந்த நாடி சாத்திரத்தில் நோய் குறி அறிவதற்கு எழுதப்பட்ட கவிகளை விட சாவின் குறி அறியும் சாத்திர கவிகள் அதிகமாக இருக்கும். இந்த நாடி அறிவதை நாடி சாத்திரமாக அறிவியலுக்கு அப்பாற்பட்டதாக நாம் கற்ற கல்வி அறிவிக்கும் முன்பே இதை ஆன்மீக உலகம் விழுங்கி விட்டதால், நாடி ஜோசியமாக தற்போது கேலி கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்டது என்பது சித்தமருத்துவம் அறிந்தவர்கள் அறிவார்கள். நாடி அறிதல் என்ற அறிவை இன்றும் உயிர்புடன் கட்டிக்காத்து வருபவர்கள் பழங்குடி மக்கள் மட்டுமே.பழங்குடி மக்களில் முதுவா, காணி இனகுழுவினரில் யாருக்காவது சாவு குறி தென்பட்டால் அவர் காட்டு ஈச்சம் இலைமாறினை வெட்டி வந்து அதில் பாய் பின்னி அதில் படுத்துவிடுவார்கள். பாயில் படுத்த எட்டு நாளில் அவர் இறந்து விடுவார். பாயில் படுத்த காலத்தில் அவர்கள் பச்சத்தண்ணீர் கூட குடிப்பதில்லை. இந்த அறிவினை, அறிவியலை கதையின் ஓட்டத்தில் பயன்படுத்தி வாசகர்களை பிரம்பிக்க வைத்துள்ளார் அல்லி பாத்திமா.'கதையில் வரும் பொன்னிவளக்காடு என்ற நாட்டில் சித்திரை பௌணர்மி திருவிழா துவங்குவதற்கு நாள் குறிக்கப்படும். இந்த விழாவில் மூப்பன் தேர்வு செய்யப்படுவது, திருமணம் ஆகாதவர்கள் தங்கள் விரும்பிய இணையர்களுடன் வந்து மன்னர் முன்பு நின்று அவர் இணையர்கள் கை பிடித்து மூப்பன் சேர்த்து வைப்பதும், குற்றம் செய்தவர்கள் தங்களாக முன் வந்து குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்பதும், தண்டனை பெறும் நிகழ்வும் நடக்கும் என்பதால் காட்டுக்குள் இருக்கும் குடி என்ற கிராமங்கள் அனைத்திலும் பரப்பரப்பு தொற்றியிருக்கும். விழாவுக்கு கெடு வைத்த நாள் நெருங்கும் காலத்தில் கூவிலான் குருவி ஓலமிடும். இக்குருவி ஓலமிட்டால் யாரோ பாயில் படுக்கப்போகிறார் என்று அம்மக்களின் நம்பிக்கை போலவே இறப்பு சம்பவிக்கும். (நமது கிராமங்களில் பௌணர்மி நாள்களில் நாய் ஊழையிட்டால் ஆண்கள் இறப்பார்கள். அமாவாசை நாளில் ஊழை சத்தமிட்டால் பெண்கள் இறப்பார்கள் என்ற நம்பிக்கை போலவே நடக்கும்) விழாவிற்கான நாள் நெருங்க கூவிலான் குருவி ஓலமிட்டது. அனைவரும் யார் இந்த காலத்தில் பாய் முடைகிறார்கள் என்று மனதாலும் கண்களாலும் தேடிக்கொண்டிக்க மூப்பனே பாய் முடைவார்.'' இச்செய்தியை பாண்டிச்சி பாத்திரம் மூலம் கதை சொல்லப்பட்டிருக்கும். இச்செய்தி அறிவியல் கலந்த செய்தி என்பதால் இன்னும் விலாவாரியாக கொடுத்திருந்தால் பழங்குடி மக்களை அறியாத வாசர்களுக்கு எளிதாக புரிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்திருக்கும்.கதை முழுக்க முழுக்க, காதலை இயம்பும். அதற்கான காரணம் பழங்குடி மக்களின் நம்பிக்கையை எடுத்து நூலாசிரியர் கையாண்ட விதம் வெகு சிறப்பு. மாதம் தோறும் அமாவாசை அன்று இறந்த முன்னோர்களுக்கு அவர்களின் வாரிசான பெண்களே விளக்கு ஏற்றும் சடங்கு நடக்கும். அந்த சடங்கின் போது மனதில் எந்த எண்ணமும் இல்லாமல் வெற்று உடல் போல், வெற்று சிந்தனையாக விளக்கு ஏற்றுவது அவர்களின் நம்பிக்கை. மனதில் ஒருவனை நினைத்து அவனுடன் வாழாமல் இருந்தால் விளக்கு ஏற்றமாட்டார்களாம். காதல் கொண்ட அல்லது விரும்பியவர்களுடன் வாழ்வதற்கு வாய்ப்பு இருக்கும் என்றால் அவர்கள் விளக்கு ஏற்றுவார்கள். (இந்த செய்திகள் குறித்து ஸ்டெல்லா ஸ்சீபன் என்ற ஜெர்மன் பேராசிரியர் மூணாறு அருகே உள்ள செம்பராந்தொழு என்ற முதுவா குடியில் ஆய்வு செய்து பல்கலை கழக ஆய்வறிக்கையாக வந்துள்ளது). மனதில் யாரையாவது நினைத்தாலோ அல்லது வேறு கெட்ட எண்ணமோ இருந்தாலோ அவர்கள் அழுது விட்டு விளக்கேற்றாமல் இருந்து, அந்த கெட்ட எண்ணத்தை மாற்றி விட்டு விளக்கு ஏற்றுவார்கள். இந்த நம்பிக்கையை கதையின் துவக்கத்தில் நீலி பாத்திரம் அழுது புலம்பி விளக்கேற்றாமல் நிற்பதும் அவரை தேற்றும் விதமாக பாண்டிச்சி மூலம் வாசகர்களுக்கு விளக்கிறது நூல்.பழங்குடிகள் கணவனை பிடிக்கவில்லை என்றால் அவனை தீர்க்கும் அதிகாரம் பெண்களுக்கு மட்டுமே உள்ளது ஆண்களுக்கு இல்லை என்ற செய்தி, ஆண் என்பவன் பிள்ளையை கொடுக்கும் உயிர் அணுவை சுமப்பவன் என்பதால் மட்டுமே அவன் மதிக்கப்படுகிறான்' என மறைந்திருக்கும் உண்மையை ஆழமாக இலகுவாக புரியும் பதிவிட்டுள்ளார் அல்லி பாத்திமா. பழங்குடிகளில் அதிகாரமிக்கவர்கள் பெண்களே என்பதை தெளிவுபடுத்த் பாண்டிச்சி பாத்திரமும் ராமி, நீலி பாத்திரமும் மெய்த்தன்மை குறையாமல் எழுதப்பட்டுள்ளது மெச்சுபடியானது.அதே போல் மூங்கில் பூப்பது பழங்குடி மக்களிடம் மட்டும் அல்லது முல்லை மருத நிலத்திலும் நல்ல சகுணமாக பார்ப்பதில்லை. இது பஞ்சத்திற்கான அறிகுறி என்றே பலரும் பதிவிட்டுள்ளார்கள். காரணம் மூங்கில் பூத்தால் செத்துவிடும். மூங்கில் செத்து விட்டால் யானைகளுக்கு தீவனம் இருக்காது. மலைகள் மண்ணின் பிடிப்பை இழந்து நீரினை சேமிக்கும் வைக்கும் தன்மையை இழந்துவிடும். இதனால் அவை பூக்கும் காலத்திற்கு முன்பே மூங்கிலை வெட்டி விட்டு தளைய வைப்பார்கள். இதற்கு திருவிழாவை நடத்துவார்கள். பழங்குடிகளின் தலைவன் துவக்கி வைக்க பழங்குடிகள் வாழும் நாடு (குடி)கள் முழுக்க வனத்தில் மூங்கில் வெட்டுவார்கள். (இவ்விழா பிரிட்டீஷ் ஆட்சி காலத்திலே தடைபோட்டதால் அங்கொன்றும் இங்கொன்றுமாக கமுக்க விழாவாக இது நடக்கிறது) இதை பல மானுட ஆய்வாளர்கள் பதிவிட்டுள்ளார்கள். ஆனால் பாண்டிச்சி கதையில் மூங்கில் பூப்பது நல்ல சகுணமாக கணக்கிட்டு காதலின் குறியீடாகவே காட்டியுள்ளார். கதையின் முடிவிலும் மூங்கில் பூப்பதும் கதாநாயகி மனதில் மூங்கிலாக காதலை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது வியப்பாக உள்ளது. ஆனாலும் அக்கதை ஓட்டத்தில் இப்பதிவு சிக்கலை தரவில்லை என்றாலும் மூங்கில் பூப்பது நல்ல சகுணம் இல்லை என சங்க இலக்கியம் முதல் தற்கால நம்பிக்கை, அறிவியல் கலந்ததாக உள்ளது என்பது கதையின் பெரும்பாலும் மெய்தன்மையிருக்க இது மட்டுமே கேள்வியை கொடுக்கிறது.கதையில் உள்ள பழங்குடிகள் பாண்டிய வம்சாவழியினர் என்ற அம்மக்களின் வாய்மொழி வரலாற்றை மையமாக வைத்துள்ளார் ஆசிரியர். இது குறித்தும் பல ஆய்வுகள் மெய்பிக்கும் விதமாக பல்கலைகழங்களில் நூலாக்கம் பெற்றுள்ளது. அதே போல் அழகிய தமிழ் பெயர்களை பழங்குடி மக்கள் சூட்டு வருவதும், கண்ணகி கோவலன் கதையை இன்றும் நாடகமாக கதைப் பாடலாக படிப்பதையும் பதிவிட்டு இடிக்கி மாவட்டத்தில் உள்ள பழங்குடிகள் தமிழ் குடிகள் என்ற சான்றுக்கும் மேலும் கெட்டியம் கட்டியுள்ளார் கதையாசிரியர்.கதையின் நடையைப்பொறுத்தவரை கவித்துவமாக, படிப்பவர்களை மனதோடு இழுத்தும் செல்லும் விதமாக எழுதப்பட்டுள்ளது பாரட்டுதலுக்குறியது. ''பாண்டிச்சி பேசிவிட்டு சென்றது அந்த இடமே வெற்றிடமாக இருந்தது' , 'பாஞ்சான் சென்று நீண்ட நேரம் ஆனாலும் அந்த இடத்தில் அவர் நின்று உறுமி கண்களால் மிரட்டுவது போல் தெரிகிறது'', 'ஆயிரம் புல்லாங்குழலை வைத்திருக்கு மரங்களுக்கு இடையில் அவர் சிறுமிபோல் அழுதாள்;' 'காலில் விழுந்தவன் ஓணான் போல தலையை தூக்கிப்பார்த்தான்'' போன்ற பல நூறு வரிகள் எழுதப்பட்டுள்ளது இனிமையை கூட்டுகிறது.கதையில் வரும் எதிரி (வில்லன்) பாத்திரமான பாஞ்சான், கதாநாயகி பாண்டிச்சி, மூப்பன், குட்டிப்பெண் நீலி, கதநாயகன் செல்வம் என அனைத்து பாத்திரங்களும் மனதில் நிற்கும் படியான நேர்த்தியாக படைப்பாகவே படைத்துள்ளார். இதை விட மையமானது ஒரு பத்திரிக்கை எப்படி இருக்க வேண்டும் ஆசிரியர் எப்படி இருப்பார் என்ற இலக்கணத்தையும் கொடுத்துள்ளார்.ராமு என்ற முதியவர் மூங்கிலில் மணியோசை எழுப்பும் கருவிகளை செய்திடுவார். அந்த மூங்கில் தெகப்பு மூங்கில் என பதிவில் வரும். மூங்கிலில் ஆணுமில்லாத பெண்ணும் இல்லாத மூங்கிலை பழங்குடிமக்கள் தெகப்பு என்றும் இருபிறவி என்றும் சொல்லுவதை எனது பயணத்தின் போது கேட்டுள்ளேன். இந்த மூங்கில் பூக்காது என்றும் அருந்தலாகவே இவை கிடைக்கும் என்று சொல்லியுள்ளார்கள். தெகப்பு என்ற சொல்லை பயன்படுத்திய பெருமை அல்லி பாத்திமா அவர்களை சேரும் என்றே நம்புகிறேன். இந்த மூங்கில் மணியோசையை எழுத்தில் படிப்பதை விட பழங்குடி வாழ்விடத்திற்கு சென்று கேட்டாலே உணர முடியும் என்று நம்புகிறேன்.கதையில் மூங்கில் மணி செய்திடும் ராமுவிடம் கதையாநாயன் செல்வன் ''இதில் எப்படி ஓசை வருகிறது' எனக்கேட்க, அதற்குள் அப்பெரியவர் 'அவ்வோசை அதற்குள் ஒழிந்திருந்து வரும். இதை யாரும் அறியார்'' என சொல்லுவது மெய்சிலிர்க்க வைக்கும் சிலிர்ப்பூட்டும் வாக்கியம்.கதையின் வரும் பாத்திரங்கள் உடல் அமைப்பு, உடை, அணிகளண்கள், அவர்கள் வாழ்நிலை, நிலத்தின் தன்மை, அம்மக்களின் அறிவு இவைகளை நீண்ட பயணத்தின் மூலம் கவித்துவமான எழுத்தில் ஓவியமாக கொண்டு வந்துள்ளார் ஆசிரியர்.கதையில் வரும் தொழில் கணிப்பொறி, செல்லிடைபேசி, மின்னஞ்சல் போன்ற நுட்ப செய்திகளை பார்க்கும் போது கதையின் காலம் 2005 பின்னால் எழுதப்பட்டதாக எடுத்துக்கொள்ள முடிகிறது. இதனால் வனத்திற்குள் வாழும் மக்களை வனதுறை எந்தளவிற்கு அமுக்கி வீழ்த்தி வைத்துள்ளது என்பதை வனத்துறை அலுவர் பாத்திரமான முத்துவீரன் மூலமும், வனச்சட்டங்கள் காட்டுக்குள் வாழும் பழங்குடிகளிடம் செல்லுபடியாகியும் செல்லாமல் இருப்பதை மூப்பன் அதிகாரத்தின் மூலம் நாகரீகமாக விளக்கப்பட்டுள்ளதை வாசகர்கள் உள்வாங்கிக்கொள்வார்கள் என்று நம்பலாம்.மக்களாட்சி போன்ற அரசாட்சியை இன்னும் உயிர்புடன் உள்ள இடம் குடி என்று அழைக்கப்படும் பழங்குடிகளின் கிராமங்களே. அதில் உள்ள அரசியல், மன்னரான காணி அல்லது மூப்பனின் அதிகாரம், அவருக்கு மக்கள் கட்டுப்படும் விதம். தீமைகளை எதிரிகளை இவர் கையாளும் முறை எதிர்கொள்ளும் வித்தை, குற்றம் செய்தவர்களை எப்படி தண்டிப்பார் என்பதை நீலி என்ற பெண்ணை பலவந்தம் செய்த முத்துவீரன் தண்டிக்கப்பட்ட விததின் மூலம் வெகுநேர்த்தியாக கையாண்டு எழுதப்பட்டுள்ளது. இச்செய்திகள் அனைத்தும் மெய்யானவையே என்பதை நான் களத்தில் கண்டவன் என்ற முறையில் நூலாசிரியரை பாரட்டுகிறேன்.குறிப்பு;கேரள மாநிலத்தில் இசுலாமியராக பிறந்து தமிழ் மொழியை கற்று தமிழின்பால் அன்பு கொண்டு தமிழர்கள் குறித்த தரவுகளை மெய்ப்பு குறையாமல் எழுதப்பட்ட கதை பாண்டிச்சி.குட்டன் என்றால் சேர அரசன், அதே போல் பாண்டி என்றால் பாண்டிய அரசன். இதனால் கேரளத்திலுள்ள தமிழர் ஆண்களை பாண்டி என்றும் பெண்களை பாண்டிச்சி அழைத்த பெருமையுண்டு. இந்தப்பெருமை 1952 முதல் குறைந்து. பாண்டி என்றால் திருடன் என்று மலையாள மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை தற்போது பாண்டிச்சி என்ற தலைப்பில் கதை எழுதும் அளவிற்கு நாகரீகப்பட்டு வருகிறது பெருமையே.

No comments:
Post a Comment