Search This Blog

Monday 30 November 2020

எஸ்.டியிருந்து எஸ்.சியாக....,புலம்பும் புலயர்கள்

 

                        எஸ்.டியிருந்து எஸ்.சியாக....,புலம்பும் புலயர்கள்

         முற்பட்ட வகுப்பினருக்கு பத்து விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டம் இந்தியளவில் விவாதப்பொருளாக மாறிவரும் நிலையில் எங்கள் கோரிக்கையை காதுகொடுத்துக்கேட்க நாதியில்லையே என ஒரு புலம்பல் கேட்கிறது.

தமிழ்திருநாட்டில் ஒரு சமூகத்தை ‘வாய்யில்லா பூச்சி’ என துணிந்து சொல்லாம் என்றால் அவர்கள் பழங்குடி மக்கள் மட்டுமே. இவர்கள் நம்மைப்போல் மாடி வீடு கட்டி காரில் போக வேண்டும் என ஆசைப்பட்டதே கிடையாது. தானுண்டு தான் வேலையுண்டு என மலையை கொடையாக நினைத்து வாழ்பவர்கள். இந்த மக்களே கோரிக்கை வைத்து போராடுகிறார்கள். கேட்பதற்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ‘பழங்குடியினராக (ST) இருந்த புலயர் சமூகத்தை 1976ல் தாழ்த்தப்பட்டோர் (SC) பட்டியிலில் சேர்த்து விட்டார்கள். ‘எங்களை பழங்குடியினராக மாற்றுங்கள்’ என நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக மத்திய மாநில அரசுகளிடம் இவர்களின் கோரிக்கையை அரசு ஏறேடுத்து பார்க்க மறுக்கிறது’ என்பதே வேதனையிலும் வேதனை. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்த பல சாதிகளை கோரிக்கை வைக்காமலே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதியினர் என அறிவித்த அரசு இவர்களின் நியாமான கோரிக்கையை செவி மடுத்துக்கூட கேட்க மறுப்பதே கொடுமை.

               தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்ட மலைகளில் புலயர் என்ற மலைவாழ் தோராயமாக 30 ஆயிரம் மக்கள் வாழ்கிறார்கள். இந்த மக்கள் அதிகமாக வாழும் தாண்டிக்குடி அருகே உள்ள புலயன் கால்வாய் என்ற மலைக்கிராமத்தில் உள்ளனர். இந்த ஊரைச்சேர்ந்த மாதி என்பவர் பகுதி நேர அஞ்சலக ஊழியராக பணி செய்து ஓய்வு பெற்றவர். இவர் நம்மிடம் ‘‘காமராஜர் ஆட்சி காலத்தில் உண்டு உறைவிட பள்ளிக்கூடம் கட்டிக் கொடுத்தாங்க. ஒரு சிலர் படித்தோம். அப்போது பள்ளிக்கூடத்திற்கு வந்த எஸ்.சி/எஸ்.டி அமைப்பை சேர்ந்தவங்க ‘மத்திய அரசு வேலையில் பழங்குடியினர் ஒதுக்கீட்டை நிரப்ப ஆளில்லை. எட்டாவது படித்தால் போதும் வேலை உறுதி’ என சொல்லி வேலைக்கான அப்ளிகேசனைக் கொடுத்து விட்டுப்போனாங்க. எட்டு வயதில் ஒன்னாவதில் சேர்ந்து இரண்டு வருசம் பள்ளிக்கூடத்திற்கு போனால் எட்டாம் வகுப்பு பாஸ் சார்டிபிகேட் கொடுத்தாங்க. இதனால் கொடைக்கானல் மலையில் பலருக்கும் ரயில்வேயில் கடைநிலை பணியாளர் வேலை கிடத்தது. எனக்கு அஞ்சல் துறையில் பகுதி நேர பணியாளர் வேலை கிடைத்தது. எஸ்.டி பிரிவினருக்கு கல்வி தகுதி இருந்தால் புரொமோசனில் முன்னுரிமை கொடுப்பார்கள். 1980ல் நான் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி பாஸ் ஆனேன். தற்போதைய தேதியில் சாதி சான்று வாங்கிக் கொடுத்தால் புரோமோசன் கொடுப்பதாக மேல் அதிகாரிகள் சொன்னார்கள். கொடைக்கானல் தாசில்தாரிடம் 1984ல் சாதி சர்டிபிகேட் கேட்டு விண்ணப்பித்தேன். எனக்கு தாழ்த்தப்பட்டோர் (SC) என சான்று கொடுத்தார்கள். ‘நான் எஸ்.டி எனக்கு எஸ்.சி சர்டிபிகேட் கொடுத்திருக்கீங்க. எனது பழைய சான்றில் எஸ்டி (ST) என உள்ளதை காட்டி கேள்வி கேட்டேன். 1974 முதல் புலயர்களை எஸ்.சியாக மத்திய அரசு மாற்றி விட்டது’ என சொன்னாங்க. பழங்குடி சான்று கிடைக்காததால் எனக்கு கிடைக்க வேண்டிய புரமோசன் கிடைக்கவில்லை. புலயர்களை என்ன காரணங்கள் அடிப்படையில்  எஸ்.டியிருந்து எஸ்.சியாக மாத்திருக்கிருக்கீங்க என, அரசிடம் மனு மேல் மனு கொடுத்தும் பதில் இல்லை. இப்ப கூட தகவல் பெறும் உரிமை சட்டத்தில் மனு கொடுத்தேன் ஆண்டுக்கணக்காகியும் பதில் இல்லை. நாங்கள் மக்கள் தொகையில் குறைவானவங்க. அதனால் எங்களது கோரிக்கையை அரசு கவனிக்க மாறுக்குது. ஆனால் நக்ஸ்லைட் தடுப்பு போலீஸ்சார் மட்டும் தினமும் வந்து ஒவ்வொருத்தர் வீடா சோதனை போடுது’’ எனச்சொல்லி தனக்கு அரசு கொடுத்த எஸ்.டி மற்றும் எஸ்.சி  சர்டிபிகேட்களை காட்டினார்.

        பழனி மலை ஆதிவாசிகள் கூட்டமைப்பின் தலைவர் மன்றவயல் (ஊரின் பெயர்) சேகர் ‘‘எனது தாத்தா, காந்தி ரயில்வேயில் வேலை பார்த்தவர். எங்களை எஸ்.சியாக மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி நீதி மன்றத்தில் வழக்கு போட்டார். உரிமையியல், மற்றும் மாவட்ட நீதிமன்றத்தில் ‘புலயர்களை எஸ்.சியாக அறிவித்தது தவறு’ என தீர்ப்பு சொன்னாங்க. அரசாங்கம் உயர் நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ‘தகுதி ஆய்வு செய்யப்பட்டு புலயர்களை எஸ்.சியாக அரசு அறிவித்துள்ளது. ஒரு சமூகத்தை எஸ்.சியாகவும் எஸ்.டியாகவோ, பி.சியாகவோ அறிவிக்க அரசுக்கு அதிகாரம் உண்டு. அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது’ என நீதிமன்றம் தீர்ப்புச் சொன்னது. அதற்கு மேல் நீதிமன்ற போராட்டம் நடத்த எங்களால் முடியவில்லை. புலயர்களை எஸ்.டியாக அறிவிக்க வேண்டும் என எம்.எல்.ஏ,எம்.பி தேர்தலை புறக்கணித்தோம். அதுக்கும் எதுவும் நடக்கவில்லை’’ என சொல்லி நீதி மன்ற தீர்ப்பு நகல்களை நம்மிடம் காட்டியவர் ‘எங்களில் யாருக்கும் சொந்தமாக நிலம் கிடையாது. எங்கள் பிள்ளைகள் படிப்பை பாதியில் விட்டு விட்டு ஓடி விடுவார்கள். இந்த தலைமுறையில் அரசாங்கம் பழங்குடியினருக்காக நடத்தும் உண்டு உறைவிட பள்ளியில் படிக்கிறாங்க. எஸ்.டி சான்று கிடைத்தால் ஏதாவது அரசாங்க வேலை கிடைக்கும். 2006ஆம் ஆண்டு வனச்சட்டத்தின் படி மூன்று தலைமுறையாக வனத்தினுள் வாழும் மக்களுக்கு பத்து ஏக்கர் நிலமும், வீடு கட்ட பத்து சென்டு நிலமும், வன விளைபொருள்கள் சேகரிக்கும் உரிமைகள் உண்டு. ஆனால் பளியர் இன மக்களுக்கு இந்த உரிமையை அங்கீகரித்த அரசு எங்களுக்கு மறுக்கிறது. நாங்கள் தலைமுறை தலைமுறையாக காட்டுக்குள்ளே வாழ்கிறோம்' எனப்பேசினார்.

                புலயர் சமூகத்தை பற்றி ஆய்வு மேற்கொண்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் ‘தமிழகத்தில் பழங்குடியினர் பட்டியலில் பளியர், புதர வண்ணான், இருளர், காட்டுநாயக்கர், முதுவாகுடி என 18 பட்டியலில் சாதியில் புலயரும் இருந்தனர். 1974ல் பழங்குடியினர் பட்டியலை மறு சீரமைப்பு செய்திட இந்திய அரசு குழு அமைத்தது. இந்த குழுவினர் கேரளத்தை மையமாக வைத்து ஆய்வு மேற்கொண்டு ‘கேரளத்தில் உள்ள சேரமார் புலயர் தரை பகுதியில் வாழ்கிறார்கள். நில உடமையாளர்களாக இருக்கிறார்கள். பொருளாதரத்திலும் இவர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். இதனால் புலயர்களை பழங்குடி பட்டியலிருந்து நீக்கலாம்’ என அரசுக்கு பரிந்துரைத்தது. இதனை ஏற்ற அரசு புலயர்களிய எஸ்.சி பட்டியலிலுக்கு மாற்றப்பட்டனர். ‘இடம் பெயர்தல், மலைகளில் வாழ்தல், பிற சமூகத்தினரிடம் ஒன்றி வாழாதிருத்தால், யாரையும் எளித்தில் நம்பாமை, தனித்த பழக்க வழக்கமும், தங்களுகென்ற மொழிநடையும், தனித்த இசைக்கருவி, நடனம் இவை அனைத்தும் பழங்குடி மக்களுக்குறிய பண்பு. பழங்குடியினருக்கான அரசு வரையரையில் சொல்லப்பட்டுள்ள பண்பாட்டு கூறுகள், வாழ்க்கை முறைகள்’ அனைத்தும் புலயர்களிடம் இருப்பதை நான் மேற்கொண்ட கள ஆய்வில் கண்டேன். எனது முப்பது பக்க ஆய்வை புத்தகமாக தொகுத்து 15 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் கட்சியின் மூலம் சமூகம் மற்றும் அதிகாரம் வழங்கும் மத்திய அமைச்சகத்திடன் நேரடியாக கொடுத்தோம். அரசு பரிசீலிப்பதாக கடிதம் அனுப்பியதே தவிர எந்த நடவடிக்கையும் இல்லை’’ என சொன்னார்.

                    இந்தக் கோரிக்கையை பரிசீலிக்க மானுவியல் ஆய்வாளர் முனைவர் மகேஸ்வரன் தலைமையிலான குழுவை மத்திய அரசு அமைத்தது. அக்ககுழு ''சங்க இலக்கியங்களில் உள்ள சொற்களை இம்மக்கள் புழக்க சொற்களாக பயன்படுத்துகிறார்கள். இவர்களின் பழக்க வழக்கங்கள் பொருளாதர நிலையைப்பார்க்கும் போது எஸ்.டியாக அங்கீகரிக்கலாம்' என தனது அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை அரசு பரிசீலிக்கும் முன் 2006 வனச்சட்டத்தின் படி இம்மக்களை வனத்துறை காட்டுக்குள்ளிருந்து வெளியேற்றி அகதிலாக்கும் என்பது மட்டும் உண்மை. அரசினை எதிர்த்து போராடினால் நக்சலைட்டுகளுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டில் உள்ளே தள்ளுவார்கள் எனப்து மட்டும் உண்மை. ‘இனி பறையருக்கும் புலயருக்கும் விடுதலை’ என பாரதி பாடி அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகி விட்டது.இவர்களுக்கு எப்போது விடுதலை...? 

                                                       இரா.முத்துநாகு

  

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...