Search This Blog

Tuesday 23 March 2021

சாகித்ய அக்காதமி இரகசியம் Nainar M Ananthapuri

 

                            சாகித்ய அக்காதமி இரகசியம் - Nainar M Ananthapuri
************************************************************************************
 
எந்த இரகசியத்தையும் எவ்வளவு காலத்திற்கும் பாதுகாக்கும் மன உறுதி எனக்குண்டு. குடும்பம் தொடர்பானதும் அல்லாததுமான பல இரகசியங்களை ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக மனதுக்குள் உறையப் போட்டிருக்கிறேன். ஓராண்டுக்கும் மேலாக இந்த நிமிடம்வரை இந்த இரகசியத்தையும் இரகசியமாகவே வைத்திருந்தேன். சமீபத்தில் வந்த சில பதிவுகளும் செய்திகளும் இதெல்லாம் பெரிய இரகசியம் அல்ல என்பதை உணர்த்தியதால் இப்போது வெளிப்படுத்துகிறேன். மன்னிக்கவும்.
 
2020 ஆம் ஆண்டு சாகித்ய அக்காதமி விருது வழங்குவதற்கான எழுத்தாளர்களின் பட்டியலொன்று (Ground list) தயாரிப்பதற்கான ஒரு வாய்ப்பு எனக்கும் தரப்பட்டது. மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன்.
 
ழுத்தாளர்கள் எழுத்துலகில் தடம் பதித்தவர்களாக இருக்கவேண்டும்; ஆண்-பெண் இருபாலரும் இருக்க வேண்டும்;நாவல், சிறுகதை, கவிதை, விமரிசனம் என எல்லாத் துறைகள் சார்ந்த எழுத்தாளர்களும் உட்பட வேண்டும்; புனைவில் புதுமையைக் கையாள்பவர்களாக இருக்கவேண்டும்...என்றிவ்வாறு எனக்குள் சில விதிமுறைகளை வகுத்துக் கொண்டு படைப்பாளிகளையும் படைப்புகளையும் தேடினேன். யாருடைய உதவியையும் நாடவில்லை...இரகசியம் என்பதால்.
 
பதினைந்து எழுத்தாளர் நூல்களின் பட்டியல் தயாரானது. இதனைப் பத்தாகச் சுருக்கினேன். எந்தவிதமான வேண்டுதல் வேண்டாமையும் காட்டவில்லை என்பது உண்மை.
 
பெருமாள்முருகன், இமையம், சல்மா, இரா முருகன், யுவன் சந்திரசேகர், அழகிய பெரியவன் இவர்களெல்லாம் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். நான் வகுத்த விதிமுறைகளிலிருந்து சற்று விலகி இன்னொருவரையும் சேர்த்துக் கொண்டேன்... திரு. இரா. முத்துநாகு.
முத்துநாகுவின் சுளுந்தீ, இருள் மூடிக்கிடந்த ஒரு காலகட்ட வரலாற்றின், பண்பாட்டின் மீது ஒளிவீசுவதாக இருந்தது. எனக்குள் அசாந்தத்தின் ஓர் அலையை எழுப்பியது. அற்புதமான ஒரு படைப்பாகவே தோன்றியது. பத்து பேருடைய பட்டியலில் முத்துநாகுவை முதலில் வைத்தேன்.
 
பட்டியலில் இடம்பெற்ற பலரையும் நேரடியாகவும் அல்லாமலும் அறிவேன். ஆனால் முத்துநாகு எனக்கு முற்றிலும் புதியவராகவே இருந்தார் என்பதும் உண்மை மட்டுமே.

 
இப்போது இறுதிச் சுற்றுக்கு வந்த ஐந்து எழுத்தாளர்களின் பட்டியலைப் பார்த்தேன். எனது கணிப்பில் முதலில் வந்தவர் இறுதிப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில்கூட வரவில்லை என்பது வருத்தத்தைத் தந்தது. ஒரு சிறந்த படைப்பைத் தேர்ந்தெடுக்கும் தகுதியற்றவன் ஆகிவிட்டேனே என்ற வருத்தம்...எனது 'ஜட்ஜ்மென்ட்' தவறாகிவிட்டதே என்ற வருத்தம்.
எல்லா ரசனைகளும் ஒரேபோல் இருக்கவேண்டுமென்றில்லையே என அமைதிகொள்கிறேன்.

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...