Search This Blog

Monday 21 February 2022

மொழி என்ற அறிவு

 

                                                            மொழி  என்ற அறிவு

                                                       

மொழி என்பது மனிதர்களை இணைக்கும் ஒலிப்பு மட்டுமல்ல, பண்பாடு, கலாச்சாரம், அறிவியல், அழகியல்களை உள்ளடக்கியது. ஒரு மொழியை உலகவளவில் பேச்சு எழுத்து வடிவமாக கொண்டு செல்லும் போது அதில் வியாபாரம் அடங்கி விடும். எ.கா - ஜப்பானில் பிறந்த நடிகர் ஜாக்கிஜான் படங்கள் ஆங்கிலத்தில் வெளியாகும் போது அந்த மொழி பரவலாக்கப்பட்டதால் படத்தின் குறுந்தகடுகள் விற்பனையாகும் அல்லது இணையத்தில் வெளியானால் விளம்பரம் அதிகமாக கிடைக்கும். இதே போல் ஒரு நூலினை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து விட்டால் அதன் விற்பனை அதிகரிக்கும். இன்றைய மருத்துவ நூல்கள் ஆங்கிலத்தில் தானே கிடைக்கிறது. இதன் கிரிடிட் யாருக்கு போகிறது என பார்த்தீர்களா?.

 

ஒரு மொழி அழியும் போது அதில் உள்ள விஞ்ஞானம் அழிந்து விடும். எளிதாக சொல்லுவதென்றால் தமிழில் உள்ள மருத்துவம் பண்டுவம். பண்டுவம் (வைத்தியம் - சமற்கிருதம்) அழிந்து விட்டது. அதே போல் பொறியியல், இசை அறிவு.

 

பொறியியல்

 உலகிலே முதன் முதலாக கட்டப்பட்ட அணை கல்லணை என பிரிட்டீஷ் இந்தியாவில் பொறியியல் தந்தை என அழைக்கப்படும் பிரிகேடியர் ஆதர்குட்டன் சொல்லி அந்த கல்லணையின் தொழில் நுட்பத்தைதே கண்டறிந்து அத்தொழில் நுட்பத்தில் பிரிட்டீஷ் அரசு ஆண்ட பகுதியில் கட்டிய அணைகளிலும் பயன்படுத்தப்பட்டது. (கடுக்காய் காசிகட்டி, சுண்ணாம்பு, பதனீர், மணல், கல்,) என ஆதர்குட்டன் பெருமையாக தனது "இந்தியன் இர்கேசன் சிஸ்டம்' என்ற நூலில் பதிவிட்டுள்ளார். ஆனால் தமிழ் பின்னுக்கு போனதால் அதன் நுட்பம் பின்னுக்கும் போகவில்லை அழிந்தே விட்டது சொல்ல வேண்டும். 

 

 

விஜய நகர அரசர்கள் அவர்கள் வழி வந்த நாயக்கர் மன்னர்கள் கட்டிய கட்டிடங்கள் அனைத்தும் மேலுள்ள பொறியலியல் தொழில் நுட்பத்திலே. இவர்கள் காலத்தில் மேல் பூச்சிற்காக கடலில் கிடைக்கும் பவளப்புற்றுகள், முத்து சிற்பிகள், சங்குகள் , கோழி முட்டையும் கலவையில் சேர்க்கப்பட்டு வழவழப்பான மேல்பூச்சிற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொழில் நுட்பங்கள் நாயக்கர் கால அம்மானை பாடல்களிலும் பிள்ளைத்தமிழில் பாடல்களிலும் தனிப்பாடல்களிலும் கிடைக்கிறது. இவைகள் மொழியின் உள் புதைந்துள்ள நுட்பம் என்பதை அறிந்திட நமது பகுத்தறிவுக்கு எட்டாததால் வெள்ளைக்காரன் வியாபாரத்திற்கு இளகுவாக கண்டுபிடித்தவைகளை நாம் கொண்டாடிக்கொண்டுள்ளது நமது பகுத்தறிவின் அளவுகோலாக பார்க்கமோ ? என நினைக்கிறேன். 

 

இந்த கட்டிடங்கள் இன்னும் திடமாகவும் அழியா புகழை கொண்டுள்ளது தமிழ் மொழியில் அறிவு என்பது பகுத்தறிவாளர்கள் மூளை (லை)க்குள் எட்டாதது திட்டமிட்ட செயலே என்பதை நாம் உணர வேண்டியுள்ளது.  

  பண்டுவம்

ஒரு மொழியின் வளத்தை அதன் அறிவியல் தொழில் நுட்பத்திலிருந்தே கணக்கிட முடியும். ''இந்திய மொழிகளில் தமிழுக்கு மட்டுமே தனியான மருத்துவ அறிவு இருக்கிறது. அதனால் தான் தமிழகத்தில் பல அரசுகள் நிலைத்து இருந்துள்ளது. உலக அரங்கில் தமிழ் மொழிக்கான தனி மதிப்பு உள்ளதை உலகப்பயணிகள் பனுவல்களில் அறிய முடிகிறது. இப்படிப்பட்ட நமது அறிவை இழந்தோம் என்பதை விட இழக்க வைத்திட பிரிட்டீஷாருடன் சேர்ந்த அரசியல் சமூக இயக்கங்கள் செயல்பட்டன. இந்திய மொழிகளில் தமிழ் இலக்கியத்தில் கஞ்சங்குல்லைபூ என்று அறிப்பட்டும் கஞ்சா, அரபு தேசத்தில் விளைந்திடும் போஸ்தக்காய் அதன் பிசினான அபின், தமிழகத்தின் பானமான தோப்பிக்கள், பனங்கள் இவைகள் மருந்தாக பயன்பட்டவை பயன்படுபவை. அதே போல் கடலில் விளைந்திடும் கடல்நுரை, கடல்பாசம், பவளம், பவளப்புற்று, முத்துச்சிப்பி, சங்கு இதே போல் வனத்தில் மட்டுமே விளைந்திடும் குங்கிலியம், கடுக்காய், தான்றிக்காய், மாச்சக்காய், மாசிக்காய், கழற்சிக்காய், முயல், பச்சோந்தி, மான்கொம்பு, யானையின் கடைவாய்ப்பல், பச்சக்காடை இறகு, மயில் இறகு போன்ற நூற்றுக்கு மேல்பட்ட மருந்துகளை எளிதாக பயன்படுத்த கூடாத வகையில் பிரிட்டீஷார் போட்ட வனச்சட்டம் இருநூறு ஆண்டுகாலமாக சித்த மருத்துவத்தை ஒதுக்கி வைத்தாலும் மக்கள் மருத்துவமாக இருப்பதால் இன்றும் சாகாமல் உள்ளது. இருப்பினும் மொழி குறித்த அறிதல் அதன் பார்வை குறைபாடுகள் இருப்பதாக ஆளும் அரசியல் கட்சிகளின் கொள்கை முடிவாக இருப்பதால் தமிழின் வளம் பின்னுக்கு தள்ளப்பட்டது / படுகிறது. ஆனால் இன்று ஆங்கில மருத்துவத்தில் மயக்க இயல் மருந்தாக நமது ஊரில் மட்டும் விளைந்திடும் கஞ்சம்குல்லையும், ஊமத்தம் இலையின் சாறு, அதன் விதை, அரபு தேசத்தில் விளைந்திடும் அபினிகள் மாற்று வடிவமாக மாற்றப்பட்டு கொடுப்படுவதை பகுத்தறியா நிலையிலே நமது கல்வி முறை உள்ளது. 

 வனச்சட்டத்தின் விளைவாக தமிழின் பெருமையாக விலங்கின வைத்திய நூல்களான யானை குதிரை, மாடு, ஆடு வாகட அறிவினை இழந்திருக்கிறோம். இதைப்பற்றிப்பேசவேண்டிய பகுத்தறிவு விஞ்ஞான கட்சிகளுக்கு இவை குறித்த புலப்பாட்டு குறைவு என்பதால் அல்லது திட்டமிட்டு பலருக்கு பயன்பட்டார்களா? என்பது ஆய்விற்குறியதே.

ஆச்சாரக்கோவை என்ற தமிழ் நூலில் சமைப்பது முதல் பல் துளக்குதல், கைகழுவுதல், குளித்தல், வாய் கொப்பளிக்கும் முறை, பழைய கஞ்சி எத்தனை நாள்களுக்கு வைத்திருக்க வேண்டும் என தெளிவு படுத்தி இருப்பார்கள். அரசுகளின் செயல்பாட்டால் தமிழன் "காட்டுமிரண்டி பல் துளக்காத நாற்றமெடுத்தவன்" என வெள்ளைக்காரன் குறிப்புகளை படித்துக்கொண்டிருக்கிறோம்.

இசை

 இசை அறிவு தமிழில் அற்று விட்டது. மக்கள் தூக்கிபிடிக்கும் இராமாயாணம், காபாரத்தை விட சிலப்பதிகாரத்தில் அனைத்து இராகங்களுக்கும் குறிப்புகள் உள்ளது என இசை நூல் எழுதிய அப்ராம்பண்டிதர் தனது *கருணாமிதர்தசாகரம்* நூலில் குறிப்பிடுகிறார். மொழியை இழந்ததால் தமிழர்களின் இசை மரபு அழிந்தது என உறுதியாக நம்பலாம்.

 கேரளத்தில் உள்ள பழங்குடி மக்களான முதுவா, புலயர், பளியர் குல மக்கள் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள். இவர்கள் படிக்க தாய் மொழி கல்வி இல்லாத்தால் மலையாளத்தில் படிக்கிறார்கள். இந்த தலைமுறையினர் தங்களது மொழியை இழப்பார்கள் என்பதில் திண்ணம். இது போலவே உலகம் முழுவதிலும் இருக்கும்.

 

இந்தி

பனராஸ் இந்து பல்கலையை உருவாக்கிய *மதன் மோகன் மாளவியா* *ஹிந்தி சாகித்திய சம்மேளனத்தை* நிறுவினார். இதன் நோக்கம் இந்து மதம், அதன் நூல்கள் ஆகியவற்றைப் பிரபலப்படுத்தும் நோக்கம் ஒருபுறம் என்றால், பாரசீகம் -அரேபிய மொழிகளால் அசுத்தமானதாகக் கருதி இந்தியை சமற்கிருதமயத்தின் மூலம் தூய்மைப்படுத்தினர். இதனால் இந்தி - உருது சிக்கல் இந்து - முஸ்லீம் பிரச்சனையாக வடக்கில் கட்டமைக்கப்பட்டது.

 தமிழகத்தில் திராவிடர் கழகத்தின் முயற்சியால் நிலைமை வேறாக இருந்தது. இந்தியை திணித்தவர்களை அந்நியர்கள் என அடையாளப்படுத்தினோம். ஆனால் பேராயக்கட்சியினர் ‘ஒரு மொழியை ஒருவர் வெறுக்கிறேன் என்று சொன்னால் அதைப் பேசுகிறவர்களை வெறுப்பதாகவே பொருள்' என பிரச்சாரம் செய்தனர் ஆனால் அது மக்களிடன் எடுபடவில்லை.

 காந்தியின் மொழிக்கொள்கை

பிரிட்டீஷ் இந்தியாவில் மொழி கொள்கை உருவாக்கப்பட்டது. அப்போது காந்தி அவர்கள் இந்திக்கு பதிலாக இசுலாமியர்களையும் இந்து மக்களையும் இணைக்க *உருதும்* இந்தியும் கலந்த *இந்துஸ்தானி* மொழியை பரிந்துரைத்தார். அதை பேராயக் (காங்கிரஸ்) கட்சியில் இருந்த தலைவர்கள் பலர் ஏற்கவில்லை. இந்த நிலையில் இந்திய துணைக்கண்டம் முழுக்க இந்தி மொழி என ஒற்றை மொழி கொள்கை அமுலாக்கம் செய்யப்பட்டது. இதற்கு தென் இந்தியாவிலும் வங்காலத்திலும் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியது. இந்த போராட்டத்தால் பிரிட்டீஷ் அரசுக்கு சிக்கல் இல்லை என்பதால் போராட்டத்தை அரசு வேடிக்கை பார்த்தது. 'சமற்கிருத கலாசாரம் அந்நியமானது என்று போராட்டவாதிகளால் அடையாளப்படுத்தப்பட்டது' இன்று வரை தொடர்கிறது.

 இந்தியா அளவில் மொழி 2004ல் கொள்கை உருவாக்க திட்டமிட்டார்கள். அதில் தமிழிக்கு பள்ளி முதல் கல்லூரி வரை மட்டும் அல்லாமல் கணிணி வரை என திட்டமிட்டார்கள். ஆனால் அதன் முயற்சியை ஆங்கிலம் தடுத்து விட்டது. இந்த நிலையிலே ஆளும் அரசு வழக்கொழிந்த மொழியான, எழுத்து வடிவத்தை நகரி மொழியிடம் கடன் வாங்கிய சமற்கிருத மொழியை வழக்காற்று மொழியாக்கிட முயற்சித்து வருகிறது. (சமற்கிருதம் போலவே ஆங்கிலம் ரோமன் மொழியிடம் எழுத்து வடிவத்தை கடனாக பெற்றது என மொழி அறிஞர்கள் பதிவிட்டுள்ளனர்.) ஏற்கனவே இந்தி மொழியை இந்திய தலைவர்களில் சர்தார் வல்லபாய் படேல் போன்றவர்களும் தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர் பக்தவச்சலம் போன்ற தலைவர்களும் முன்மொழிந்தனர். சுதந்திர இந்திய துணைக்கண்டத்தில் இந்தியை மீண்டும் எதிர்த்தனர். இதனால் மும்மொழி கொள்கை கொண்டு வரப்பட்டது. ஆனால் மைய்ய அரசின் வழக்காற்று மொழியாக இந்தி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தி மொழியை பரப்பிட மதன்மோகன் மாளாவிய நிறுவிய இந்தி வாரியத்திற்கு (தன்னாட்சி குழுமம்) மைய்ய அரசு பல கோடிகளை வழங்கி வருகிறது. இந்த நிதியை பெற்றுள்ள சுய நிதி தனியார் பள்ளிகள் இந்தியை கட்டணம் இல்லாமல் சொல்லித்தரவேண்டும். ஆனால் மாணவர்களிடம் பணம் வசூலித்தே இந்தியை சொல்லித்தருகிறார்கள்.

 திராவிட ஆட்சியில் தமிழ் தேய்ந்தது என்ற குற்றசாட்டை அளந்து பார்க்கத்தேவையில்லை. ஆனால் இந்திய துணைக்கண்டத்தின் அயல் உறவு கொள்கையில் இருக்கும் சிக்கலே ஆங்கில மோகம் உருவாக தேவையான கருவியாக இருந்தது. அதை விட இந்தியை எதிர்ப்பு நிகழ்ந்த காலத்தில் வெள்ளைக்காரனுக்கு தொண்டூழியம் செய்தவர்கள் ஆங்கில மொழி அறிவை வைத்தே தங்களை பொருளாதரத்தை மேம்பாடு செய்து கொண்டனர். ''பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் ஆங்கிலம் கற்பதன் மூலமே முன்னேற முடியும்'' என்று அவர்கள் ஆங்கிலத்தை தேடினார்கள். இதன் தாக்கமே ஆங்கிலம் கற்ற வேண்டிய தேவை கட்டாயம் என்ற நிலை உருவாக்கி விட்டது. இதை தமிழ் தேசியம் பேசும் அறிஞர்கள் ஏற்க மறுப்பது ஏற்புடையதாக இல்லை. விஜயநகர படையெடுப்பால் மேலோங்கிய சமற்கிருத தெலுங்கு மொழியால் தமிழ் பின்னுக்கு தள்ளப்பட்டாலும் அவர்களால் தமிழுக்கு கேடு இல்லை என்பது ஆய்விற்குறியது.

பிரிட்டீஷ் ஆட்சியில் மொழிக்கொள்கை

இவர்களுக்கு மொழி கொள்கை எல்லாம் கிடையாது. காங்கிரஸாரும், நிர்வாக்கதிலிருந்த பார்ப்பன, பிற்படுத்தப்பட்ட, மநு நீதியை ஏற்ற படித்த சூத்திர பஞ்சமர்கள் பரிந்துரைத்த மொழி கொள்கையே கடைபிடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியால் தமிழ் மட்டும் அல்ல இந்திய மொழி அழிந்து அதில் உள்ள விஞ்ஞானம் அழிந்தது. இலக்கியம் பின்னுக்கு போனது. 

 

தமிழை தூக்கிப்பிடிக்கும் அல்லது கொண்டாடும் நபர்கள் அதன் அறிவியலை பேசமறுப்பதில் ஐயப்பாடுகள் இருப்பதை நாம் இத்தனை ஆண்டுகள் பார்க்க மறுத்ததில் நமது அறிவினை பரிசோதிக்க வேண்டிய காலம் இது தான் என நம்புகிறேன். 

 

1 comment:

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...