Search This Blog

Monday 21 February 2022

குப்பமுனி அனுபவ வைத்திய முறை

 

                                 
குப்பமுனி அனுபவ வைத்திய முறை       
           
                              

 

  சித்த மருத்துவர் மு.அருண் B.S.M.S.,

 

தமிழர்தம் உணவிலும் உணர்விலும் இன்றுவரை சித்த மருத்துவம் கலந்து நிற்பதற்கு பெரும் பங்குவகிப்பது பரம்பரை சித்த மருத்துவர்களுக்கு உண்டு என்று உறுதிபடக் கூறலாம். சித்த மருத்துவத்திற்கென்று கல்லூரி அமைத்து பட்டதாரி சித்த மருத்துவர்கள் வரத்தொடங்கி அறுபதாண்டு காலம் கடந்து விட்டாலும் பரம்பரை சித்த மருத்துவர்களின் பங்களிப்பு இன்று வரை தொடர்கிறது. இன்னும் உண்மையை உடைத்துக் கூறினால் இன்றளவும் பெருவாரியான மக்களின் நம்பகத்தன்மையைப் பெற்று இருப்பதில் பரம்பரை மருத்துவர்களுக்கே முதலிடம்!. இதற்கான காரணம் என்னவெனில் சித்த மருத்துவத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள ஆழமான நம்பிக்கையும், தொடர்ச்சியான வாசிப்பும் ஆகும்.  சித்த மருத்துவ கல்லூரியில் படித்துவரும் பட்டதாரிகளில் பெரும்பாலானோருக்கு  பாடத்திட்டத்தில் உள்ள குழப்பங்களும், கல்வி கற்றுக்கொடுப்பதில் உள்ள சுணக்கமும் சித்த  மருத்துவத்தின் மீது உள்ள பற்று குறையக்காரணமாகின்றன!. கல்லூரியில் படித்து முடித்த பின் அவர்களது சித்த மருத்துவ நூற்கள் வாசிப்பும், தேடலும்  அறவே குறைந்து விடுவதும் கூடுதல் காரணமாகிறது.பரம்பரை மருத்துவர்கள் அவர்கள் மருத்துவப் பயிற்சிக்கான மருந்துகளை அவர்களே செய்வதால் மருந்து தயாரிப்பில் ஏற்படும் ஐயங்களை களைவதற்கும் புதிதாக மருந்துகள் தயாரிக்கவும் தொடர்ச்சியான வாசிப்பில் ஈடுபட்டுள்ளனர். கல்லூரியில் படித்து முடித்து பயிற்சிக்கு வரும் பட்டதாரி சித்த மருத்துவர்கள் பலரும்  மருந்துகளை மருந்துச்சீட்டில் எழுதியே பழகிவிட்டனர்!. தங்களுக்கு வேண்டிய மருந்துகளை தயாரிக்கும் முறையை கல்லூரியில் கற்றிருப்பினும் மருந்து செய்து நோயருக்கு வழங்கும் பழக்கம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. பரம்பரை மருத்துவர்கள் பெரும்பாலும் மருந்து தாமே தயாரித்து வழங்கி வருகின்றனர்.

 

இன்றைய நவீன மருத்துவ உலகம் தனிநபர் சார் மருத்துவம் (personalised medicine) நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது! சித்த மருத்துவம் இதனை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்பாட்டில் கொண்டுள்ளது!. ஆம் சித்த மருத்துவத்தில் ஒவ்வொரு நபருக்கும் அவரது பாதிப்பைப் பொறுத்து மருந்துகள் மாறுபடும். காய்ச்சலாக இருந்தாலும் கழிச்சலாக இருந்தாலும் அனைவருக்கும் ஒரே வகையான மருந்துகள் வழங்கப்படுவதில்லை. அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப மருந்துகள் வழங்கப்படும். ஆகையால்தான் சித்த மருத்துவத்தில் ஒரே நோய்க்கு பல மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. எனவே மருந்துகள் தயாரிப்பு முறைகளும் ஏராளம், அந்தந்த நிலத்திற்கு ஏற்ப கிடைக்கும் மூலிகைகள், மருந்துப் பொருட்களுக்கு ஏற்ப, வரும் நோய்களின் உடல் திடத்தை பொறுத்து மருந்து தயாரிக்கும் முறைகள் மாறுபடும். நோயாளிகளுக்கு ஏற்ப மருந்துகளும் மாறுபாடுவதால் ஒவ்வொருவருடமிருந்தும் தனி அனுபவம் மருத்துவர்களுக்கு கிட்டும். அதனை மருத்துவர் குறிப்புகளாக பதிவு செய்யத் தொடங்கினால்  பிற்காலத்தில் அஃது நூலாக மாறும் அளவிற்கு வளர்ந்து நிற்கும். அவ்வாறு தாம் கற்ற, பெற்ற, அனுபவங்களை குறிப்புகளாக எழுதி வைத்த  சித்த மருத்துவர்  குப்பமுனி அவர்களின் மருத்துவ முறைகளை அவர்தம் வழிவந்த முத்துநாகு தமிழ்ச் சமூகத்திற்கு பயன்படும் வகையில் நூலாக்கி இருப்பது அரும்பணி ஆகும்.

 

இந்நூலில் கருத்தரிப்பு முதல் (அதிலும் ஆண் குழந்தை வேண்டுமா பெண்குழந்தை வேண்டுமா என்று முடிவு செய்யும் அளவிற்கு) முதியோர் நலம் வரை அனைத்துக்கும் மருந்துகள் தயாரிப்பு முறையோடு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது சிறப்பாகும். மனிதருக்கு மட்டுமல்ல மனிதருடன் ஒன்றாக வாழும் மாடுகளுக்கு வரும் நோய்களுக்கும் பண்டுவம் இந்நூலில் உள்ளது தனிச்சிறப்பு. சித்த மருத்துவத்தின் சிறப்பு மருந்துகளான தாது மருந்துகள் தயாரிப்பு முறைகள் எளிமையாக அனைவருக்கும் புரியும் வகையில் அதேவேளையில் தனித்துவமாக உள்ளன என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். பெரு மருந்துகளுக்கான துணை மருந்துகளும் அனுபானமும் விரிவாக வழங்க நூலின் தொகுப்பு ஆசிரியர் எடுத்த முயற்சி நூலில் வெளிப்படுகிறது.

மருத்துவம் படித்தவர்களுக்கு மட்டுமின்றி மருத்துவ ஆர்வலர்கள் விரும்பும் மூலிகைகளின் பயன்பாடுகள், சிற்சில நோய்களுக்கு தாமே செய்துகொள்ளக்கூடிய மருத்துவ வழக்குகள் போன்ற பகுதிகளும் நூலில் இடம்பெற்றுள்ளது சிறப்பு. நாய்க்கடி முதல் தேள்கடி பாம்புக்கடி வரை அனைத்து விடக்கடிகளுக்கும் மருத்துவக் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. கண், காது, முடி உதிரல் என அனைத்து விதமான நோய்களுக்கும் தெளிவாக மருந்து செய்முறையுடன் விளக்கப்பட்டுள்ளது. இந்நூலை ஒருவர்  படித்து  உள்வாங்கி, அதனை பின்பற்றி மருந்து தயாரித்து வழங்கவே ஒரு ஆயுள் போதாது என்னும் அளவிற்கு தகவல்கள் நிரம்பி வழிகின்றன! சித்த மருத்துவர் இல்லத்தில்  மட்டுமல்ல  தமிழர் ஒவ்வொருவர் இல்லங்களிலும் இருக்க வேண்டிய நூல் என்றால் அது மிகை இல்லை. நோய்களைப் பற்றிய பார்வை குறித்து முத்துநாகு அடுத்த நூலினைப் படைக்க வேண்டும் என்று வேண்டுகோளையும்  இங்கணம் வைக்கிறேன்.           வாழ்க தமிழ் மருத்துவம்!

 

                                                                                                                                    இவண்

                                                                                                                சித்த மருத்துவர் மு.அருண் B.S.M.S.,

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...