Search This Blog

Monday 21 February 2022

பண்டுவம் ; தமிழரின் அடையாளம் , பாவலர் வையவன்


 

 
 
 பாவலர் வையவன்


தமிழரின் தனித்த அடையாளங்களாக பலவற்றைச் சொல்லமுடியும். அதில் நான் முதன்மையானதாக மூன்றைக் கருதுகிறேன். தமிழரின் மொழி, மருத்துவம், வானியல் முடிவுகள். எந்த அறிவையும் மொழிவழியாகத்தான் சொல்லமுடியும் என்பதால் மொழி முதன்மையாகிறது. 
 
அதற்கடுத்து மருத்துவத்தைச் சொல்கிறேனென்றால்... மனிதரின் முக்கியத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடத்தில் உணவே முதன்மையானதாகும். உணவின் மாற்றத்தாலும், உணவுச் சிதைவாலுமே நோய்கள் ஏற்படுகின்ற காரணத்தால் நோய்களைத் தீர்க்கும் வைத்தியத்தை வரிசையில் அடுத்து வைக்கிறேன். வைத்தியத்துக்கும் வானியலுக்கும் தொடர்பிருப்பதால் வானியலின் தேவை அதனோடு அவசியமாகிறது. வானியல் தெரியாதவனும் நாடி பார்க்கத் தெரியாதவனும் சிறந்த வைத்தியன் அல்ல.
 
இன்றைய நிலைமை உங்களுக்கே தெரியும் . நாம் நமது எல்லா அடிப்படை அறிவையும் தொலைத்துவிட்டு ‘வெஸ்டர்ன் அறிவில்’ வெந்துகொண்டிருக்கிறோம். அந்நிய ஆட்சிகளால் நமது அத்தனை பண்பாட்டு மரபுகளையும் இழந்து அவற்றை குற்றுயிரும் குலையுயிருமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். நமது மருத்துவத்தைக் கூட நாம் செய்துகொள்ள அரசின் தடைகள் பல உள்ளன. பான்னாட்டு வணிக அடிப்படையிலேயே நம் மருத்துவம் நடைபெற்றுவருகிறது. இந்திய அளவில் இன்று மருத்துவம் என்பது வாணிபமே ஒழிய வைத்தியம் அல்ல.
 

 
 
“கடல்நுரை, பாசி, பாசம், பவளம், பவளப் புற்று, சங்கு, சிப்பி, ஆமை ஓடு வனத்தில் மட்டுமே விளையும் குங்குலியம், கடுக்காய், தன்றிக்காய், மாசிக்காய், கழாற்சிக்காய், பேப்பீர்க்கை, முயல், பச்சோந்தி, மான்கொம்பு, யானையின் கடைவாய்ப் பல், பச்சக்காடை இறகு, மயிலிறகு போன்ற நூற்றுக்கணக்கான மருந்துகளை நாம் எளிதாகப் பயன்படுத்தக் கூடாத வகையில் இருநூறு ஆண்டுகளுக்குமுன் பிரிட்டிஷார் போட்ட வனச்சட்டம் இன்றும் அப்படியே உள்ளதே சித்த மருத்துவ சிதைவுக்குக் காரணம்” என்னும் முத்துநாகுவின் கவலையில் நியாயம் இருக்கிறது. எல்லாவற்றிலும் தமிழ் மரபையும், பண்பாட்டையும் மீட்க முனைவோர் முதலில் மருத்துவத்தைதான் மீட்கவேண்டும் என்னும் உண்மையை விளங்கிக்கொள்ளவேண்டும்.
 
 
தொகுப்பாசிரியர் முத்துநாகுவின் தாத்தா பண்டுவர் குப்புசாமியின் தந்தை நாகப்பன். அவருக்கு ஒரு இயற்கை வைத்திய சாமியார் அறிமுகமாகிறார். நாகப்பனின் கோரிக்கையை ஏற்று அந்த சாமியார் அந்த ஊரிலேயே தங்கி பண்டுவம் பார்க்கிறார். அவருக்கு உதவியாக நாகப்பனின் மகன் ரங்கப்பன் பணிக்கப்படுகிறார். ரங்கப்பன் மருத்துவத்தில் நல்ல தேர்ச்சிபெற்றதால் சாமியார் அவனை அகத்தியரின் பெயர்களுள் ஒன்றான ‘குப்பன்’ என்னும் பெயரால் அழைக்கிறார். அவரும் ‘குப்ப முனி’ என்னும் சிறப்புப் பெயர் பெறுகிறார். அவர் எழுதிவைத்த அனுபவ மருத்துவக் குறிப்புகளைத்தான் அவரது மரபுவழிப் பெயரனான தோழர் முத்துநாகு அற்புதமான நூலாகக் கொண்டுவந்திருக்கிறார். இதில் குப்பமுனி எழுதிவைத்த 481 நோய்களுக்கான மருந்துசெய்யும் முறைகளும், பத்தியமும், நாடியும், சொல்லப்பட்டிருக்கிறது. சில செய்முறை படங்களும் உள்ளன.
தோழர் முத்துநாகு ‘சுளுந்தீ’ என்னும் அற்புதமான மருத்துவ நாவலை தமிழ்ச் சமூகத்துக்கு முன்னமே அளித்துள்ளார். இது சித்த மருத்துவத்திற்கான அவரின் இரண்டாவது கொடை. இதன் தொடர்ச்சியாக அவர் இன்னும் பல பணிகளைச் செய்தாகவேண்டும். அவருக்கு என் தமிழார்ந்த
வாழ்த்துகள்

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...