Search This Blog

Wednesday 10 April 2019

காடுகளை அழித்தது யார்?


                                                                      

                                         காடுகளை அழித்தது யார்?



 



  
காடு அழிப்பின் துவக்கம்


சுற்றுச்சூழல், காட்டுநெருப்பு (தீ), வனம் காக்கப்படவேண்டும் இது தான் இன்று முகநூல், பத்திரிக்கை, தொலைகாட்சி, தேநீர் கடைகள் என அனைத்து இடங்களில் பேச்சுபொருளாக உள்ளது. கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக சூழல் மாற்றம் நிகழ்ந்து விட்டதாக உலகளவில் பிரச்சாரம் தொடங்கப்பட்டது. சுற்றுச்சூழல் காப்போம் என பேசுபவர்கள் கவனிக்க மறுப்பதை நாம் பார்த்தாக வேண்டும்.

                                                                   வனம் என்றால் என்ன 

        பாறை, புல்வெளி, மொட்டைப் பாறை, சோங்கான அடந்த மரம், புல், பூண்டு இவைகள் கூட முளைக்காத பூமி இவைகளெல்லாம் சேர்ந்ததே வனம். இந்த வனத்தை மூன்று அடுக்கலாக மலைவாழ் மக்கள் பிரிக்கிறார்கள். அ. கருங்காடு ஆ. ஒரக்காடு இ. தரைக்காடு . இதை 1893 காலங்களில் பிரிட்டீஷ் ஆட்சியில் core zone, territorial zone, bufferzone என பிரித்தார்கள். 

கருங்காடு ; இங்குதான் விலங்குகள் தங்களது இனப்பெருக்கத்தை துவக்கும். இனப்பெருக்க காலத்தில் கொலை வெறி தாக்குதல் நடத்தும். இதனால் இந்தக் காட்டுக்குள் மலைவாழ் மக்கள் செல்ல மாட்டார்கள். அதே போல் வனத்துறையினரும் அங்கு செல்ல மாட்டார்கள். அந்தக் காட்டினை அப்படியே காக்க வேண்டும் என்பதே வனத்துறை சட்டம் சொல்லுகிறது. 
காடு அழித்து நடப்பட்ட வாட்டில் மரங்களை வெட்டப்பட்ட இடம்

ஒரக்காடு ;  இனப்பெருக்க காலம் முடிந்த பின்பு விலங்குகள் வேட்டையாட உணவு சேகரிக்கும் இடம் ஓரக்காடு.

தரைக்காடு ; இனப்பெருக்கத்திற்கு தகுதியை இழந்த விலங்குகளை மற்ற விலங்குகள் விரட்டி அடிக்கும் அவைகள் தங்கும் இடமே தரைக்காடு. இந்தத் தரைக்காடு மலையின் உயரத்தில் கால் பங்கு இருக்க வேண்டும் என்பதை இந்திய வனச்சட்டம் வழியுறுத்துகிறது. ஆனால் அவை நடைமுறைப்படுத்தவில்லை. 

தனிமனிதர்கள், குழுக்கள் வனத்தை அழித்தார்கள், அழிக்கிறார்கள் என்பதே தற்போதுள்ள சுற்றுசூழல் ஆர்வலர்கள் ? வைக்கும் வாதம். இவர்களால் வனத்தை அழிக்க முடியுமா ? அழித்தார்களா?. வனங்கள் எப்போது அழியத் துவங்கியது.

கிடைத்த வரலாற்று சான்றுகள் அடைப்படையில் ராசராசசோழன், அவனை அடுத்து வந்த ராசேந்திரசோழன் காலத்தில் காடு அழித்து களனியாக்கப்பட்டதாக கல்வெட்டு செய்திகளை ஔவை. துரைச்சாமிபிள்ளையும், பன்மொழி புலவர் அப்பாத்துரையார் சோழ வரலாற்று நூலில் குறிப்பிடுகிறார்கள். இவர்கள் குறிப்பிடும் இடங்கள் எல்லாம் காவிரி படுகை ஓரமே. கோவை மாவட்டத்திலும் சில பகுதிகள் அடங்கும். பாண்டியர் வரலாற்றில் காடுகளை அழித்த வரலாறு மிக சொற்பமாகவே பதிவாகியுள்ளது. பாண்டியர், சோழர் ஆட்சிக்கு அடுத்து வந்த இசுலாமிய ஆட்சியில் ஏற்றுமதி தொடர்பான வரலாற்று குறிப்புகள் உள்ளதே தவிர காடுகள் அழிப்பு இல்லை. இவர்களை அடுத்து தமிழகத்தில் துள்ளிதமாக 306 ஆண்டுகள் ஆண்ட விஜயநகர, நாயக்கர் ஆட்சியில் கருநாடக, ஆந்திர பகுதியிலிருந்து வந்த மக்களுக்கு வாழ்வாதாரத்தை கொடுக்கவும், 1680 ல் துவங்கிய ஆனந்த வருட கடும் பஞ்சத்தை எதிர்கொள்ளவும் மலைகளில் ஓரக்காடுகள் வரை அழித்து பண்ணைகளாக்கினார்கள். இதனால் மேற்கு தொடர்ச்சி மலையில் பெரும்பகுதி நிலங்கள் தெழுங்கு பேசும் பேரி செட்டி, நாயக்கர் குல மக்களும், கண்டம் பேசும் தேவாங்கு செட்டி, ஒக்கலிய கவுண்டர் குல மக்களுக்கு சொந்தமாக இருப்பதை அறியலாம். நாயக்கர் ஆட்சியில் பல்லாயிரக்கணக்கான வனங்கள் விளைநிலமாக்கப்பட்டதால் காடுகளின் பரப்பளவு குறுகியது. 

நாயக்கர் ஆட்சிக்கு முன்பு காடுகளை அழிக்காமல் மிளகு மட்டுமே வேளாண்மை செய்யப்பட்டு ஏற்றுமதியானதை இலக்கியம் வரலாறும் சான்று அளிக்கிறது. நாயக்கர் ஆட்சியில் இவை மாற்றம் செய்யப்பட்டு நேரடியாக உண்ணும் வேளாண்மை துவங்கப்பட்டுள்ளதை வரலாறுகள் மெய்பிக்கிறது.

நாயக்கர் ஆட்சியில் தரைக்காடு, ஓரக்காடு அழிக்கப்பட்டது. இவர்களை அடுத்து ஆட்சியை பிடித்தனர் பிரிட்டீஷார். இவர்கள் காலத்தில் 1890ல் மீண்டும் பஞ்சம் அதை தாது வருடப்பஞ்சம் என்றும் பிரமபுத்திரா நதியே காய்ந்ததால் வங்கதேசப்பஞ்சம் என்றும் கூறுவார்கள். இப்பஞ்சம் பல்லாண்டுகள் நீடித்தது. இதனை எதிர்கொள்ள நாயக்கர் ஆட்சியை போல கருங்காடுகளை அழித்து டாடா, ஏ.வி தாமஸ் போன்ற நிறுவனங்களுக்கு சுமார் 40லட்சம் ஹெக்டர் நிலத்தை 999 ஆண்டுகளுக்கு தேயிலை, காப்பி பயிரிட குத்தகைக்கு விட்டுள்ளார்கள். அதன் பின்னர் மிட்டா, மிராசு, ஜமீன்களுக்கும் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டார்கள். ஆக வனங்கள் ஆட்சியில் அதிகாரத்தில் இருந்தவர்கள் மக்களின் நிலை அறிந்தே வனங்களை அழித்துள்ளார்கள் என்பதை உணர முடிகிறது. இந்த வன அழிவில் எத்தனை ஆயிரம் மரங்கள் அழிக்கப்பட்டது என்பதை உணர்ந்து புரிந்து கொண்டால் தனி மனிதனாலும் வனத்தை ஒட்டியுள்ள மனித குழுக்கள் வனத்தில் ஒரு சுள்ளியைத்தான் அழிக்க முடியும் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

                                                செயற்கை பட்டு

 
         விடுதலை? இந்தியாவில் மறைந்த பிரதமர் திருமதி. இந்திராக்காந்தி ஆட்சியில் விஸ்காஸ் என்ற நிறுவனம் இந்தியாவில் செயற்கை பட்டு (ரேயான்) உற்பத்தியை துவக்க ஒப்பந்தம் போட்டார்கள். இவர்கள் வனத்தை அழித்து வாட்டில், யூக்லிப்டஸ், பைன், சைப்ரஸ்  மரங்கள் நடவு செய்து வெட்டிக்கொள்ள 30 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்ததிட்டத்திற்கு ''இடைபடு காடுகள் திட்டம்' (INTER SPACE FOREST DIVISON) என்ற பெயரிடப்பட்டது. ஏற்கனவே நாயக்கர், பிரிட்டீஷ் ஆட்சியில் காடுகl அழித்ததை விட கூடுதலாக இந்நிறுவனம் காடுகளை அழித்தது. இந்த விஸ்காஸ் நிறுவனம் சாயப்பட்டரைக்களுக்காக வளர்த்து  வெட்டிய மரங்களை சிறுமுகை ஆற்றங்கரையில் சாயம் காய்ச்சி ஆற்றில் விடப்பட்ட கழிவு ஆற்று நீரை பாதிப்படைய வைத்தது. 
 
      பாதிப்பில் கடும் பாதிப்பு என்றால் விஸ்காஸ் செய்த அழிவுதான். '1972ம் ஆண்டுவாக்கில் ரேயான் செயற்கை பட்டு நூல் தயாரிக்க, தோல் பதனிடும் சாய தொழில்சாலைகளுக்கு தேவைக்காக வனத்திற்குள் வாட்டில், பைன், சைப்ரஸ் மரங்களை வளர்த்து வெட்டிட அனுமதி அளித்தது இந்திரா அரசு. தண்ணீர் ஓட்டம் உள்ள ஓடை ஆற்று படுகை புல்வெளிகளில் இந்த மரங்கள் நடவு செய்து வளர்த்து மரம் பெரிதானவுடன் வெட்டினார்கள். இந்த ரேயான் ஆலைக்கழிவால் சிறுமுகை பாதித்தது. 1996ல் தமிழக அரசு ஆலைகளை மூட அரசு  உத்தரவிட்டது. இதனால் கொடைக்கானல், நிலகிரி வனத்திற்குள் வைக்கப்பட்ட மரங்கள் வெட்டாமல் வளர்ந்து பெரியதானது. இந்த மரங்களில் விதைகள் காற்றில் பரவும் தன்மை கொண்டது. இதனால் வனம் முழுக்க பரவி இருந்த புல்வெளிகளில் இவ்விதைகள் முளைத்து புல்வெளிகள் இல்லாமல் செய்து விட்டது. கொடைக்கானலில் பச்சையாக தெரிவது இந்த வாட்டில், யூக்லிப்டஸ், பைன், சைப்ரஸ் மரங்களே. இந்த மரங்கள் முளைத்துள்ள தூர் பகுதியில் புல் முளைக்காமல் இருப்பதையும் மற்ற மரங்கள் இருக்கும் இடங்களில் புல்வெளிகள் உள்ளதையும் அங்கு போனால் பார்க்கலாம்.

                                                  புல்வெளிகளின் தன்மை

        ''புல்வெளிகள் நீர்சதுப்பு தன்மையை பல மாதங்கள் நிலைநிறுத்தும் தன்மை கொண்டவை. ஆனி, ஆடி, ஐப்பசி, கார்த்திகை மாதம், மழைக்காலம் முடிந்த பின்பும் கோடை காலத்தில் புற்கள் வேர்பகுதியில் தேக்கி பிடித்து சேமித்து வைத்த நீரினை கசிய செய்திடும். இதனால் கோடையிலும் ஓடைகளில் தண்ணீர் வலிந்து ஓடும். புல்வெளிகளை அழித்ததால் நீர் வரத்து ஓடைகளில் மழை காலம் முடிந்து மாசி மாதத் துவக்கத்திலே வறண்டு விடுகிறது. தமிழகத்தில் ஓர் ஆண்டு முழுவதிலும் அதிகப்பட்டமாக 23நாள்கள் மட்டுமே மழை பெய்திடும். இதன் அளவு சுமார் 850 மி.மீ மட்டுமே. மற்ற நாள்களில் வனத்தில் உள்ள ஓடைகள் வறண்டு போகாமல் காப்பது இந்தப் புல்வெளிகள். புல்வெளிகள் குறைந்ததால் வனவிலங்குகள் இரை தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பிற்குள் நுழைகிறது. ரேயான் சாய நிறுவனங்களுக்காக வைத்துள்ள இந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினால் தானாக புல்வெளிகள் உருவாகும் தொலைநோக்கு திட்டத்தை செயல்படுத்தினால் மட்டுமே வனவிலங்குள் மட்டும் அல்ல மனிதர்களை காத்திட முடியும்.
                    நீலகிரி



       கொடைக்கானலுக்கு அடுத்து பெரும்பரப்பளவை கொண்டுள்ள நிலகிரி என்று அழைக்கப்படும் ஊட்டி மலை ''உலகின் 'முதன்மையான உயிர்சூழல் மண்டலம்' என ஐக்கிய நாடுகள் சபை 1979ல் அறிவித்தது. 5520 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள இந்த மலையில் 29875 ஏக்கர் புல்வெளி இருந்தது. தற்போது 4700 ஏக்கராக குறைந்து விட்டது. வனத்தின் நீர்பிடிப்பை அதிகரிக்கும் புல்வெளிக்கு அடுத்துபடியாக இதே வேலையை செய்வது மூங்கில். இதுவும் புல் வகையை சேர்ந்தது. மூங்கிலினை அழித்து தேக்கு, பைன், யூக்கலிப்டஸ் மரங்களை வனதுறையினரே நடவு செய்தனர். நாற்பது வருடம் வரை உயிர்வாழும் மூங்கிலினை வெட்டினால் மட்டுமே மீண்டும் தூர் தளைக்கும். இல்லை என்றால் பூத்தவுடன் தானாக செத்துவிடும். கோடிக்கணக்கான விதைகளை உற்பத்தி செய்திடும் மூங்கில் விதையில் சில விதைகள் மட்டுமே இயற்கையாக முளைக்கும் தன்மை கொண்டது. இதனை அறிந்து வைத்திருக்கும் மலைக்குள் வாழும் பழங்குடி மக்கள் மூங்கிலை வெட்டி வெட்டி மூங்கிலை தளைத்திட செய்தனர். தற்போது வனத்துறை மூங்கில் வெட்ட தடை போட்டதுடன் புதிய வனசட்டத்தின் மூலம் பழங்குடி மக்களை வனத்தை விட்டு வெளியேற்றதால் மூங்கில்கள் பரவாமல் குறைந்து விட்டது. நீதி மன்றமும் பழங்குடி மக்கள் வனத்திற்கு இருக்க வழிவகை செய்வதை தடுக்கும் முகமாக புழுத்துப்போன தீர்ப்பை வழங்கி தனது கோர முகத்தைக் காட்டியுள்ளது. 

     மூங்கில் இலைகளை யானைகளுக்கு விரும்பிய உணவு இவை கிடைக்கததால் வனத்தை விட்டு வெளியேறுகிறது. கேரள, தமிழக, கர்நாடக மாநிலங்களின் பெரும்பாலான ஆறுகள் நிலகிரி மலையிலே உற்பத்தியாகிறது. (காவிரி ஆற்றின் பிறப்பிடம்) மலைகளில் உள்ள புல்வெளிகளை அழித்தால் மலைகளில் பெய்திடும் அவ்வளவு மழை நீரும் ஒரே நாளில் அணைகளுக்கு வந்தடைகிறது. கோடை காலங்களில் நீர்வரத்து ஓடைகள் வற்றி விடுவதால் நீர் மீன்சாரம் தடைபடுவது, குடிநீர் தட்டுப்பாடு என அடுத்தடுத்தச் சிக்களை மனித குலம் சந்திக்க வேண்டியுள்ளது. நீலகிரி, கொடைக்கானல் மலைகளில் உற்பத்தியாகும் ஆறுகளை நம்பி 18 அணைகள் உள்ளது. இதன் நீர் ஆதாரங்ளை சிதைக்கும் வேலையை தனியார் முதலாளிகளுக்காக மக்களால் தேர்வு செய்த அரசுகளே செய்துள்ளது என்பது தான் வேதனை. ஆக காடுகளை அழித்தது தனி மனிதனாலும் மனித குழுக்களாலும் இல்லை என்பதை நாம் அறிந்துணர்வோம்.






No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...