Search This Blog

Tuesday 11 June 2019

சௌபா என்ற சமூக வரலாறு


                                    




                                                சௌபா என்ற சமூக வரலாறு
                                       **************************************
         பத்திரிக்கை வாசிப்பாளர்களுக்கு சௌபா, என்ற பெயரைக் கேட்டவுடன் ஜூவியில் தொடராக வந்த 'சீவலப்பேரி பாண்டி' என்ற கதையே நினைவுக்கு வரும். சௌபா ஒரு சாமானிய வேளாண் உழுகுடி குலத்தில் பிறந்து தனது எழுத்து வல்லமையால் 1985 கால கட்டத்தில் விகடன் பத்திரிக்கையில் மாணவ நிருபராக உள்ளே புகுந்து தனது இடத்தைத் தக்க வைத்தவன்.

விஸ்காஸ் என்ற பன்னாட்டு நிறுவனம், டானிரி இந்தியா என்ற பெயரில் மைய அரசு மலைகளில் மரங்களை வெட்ட, மரம் வளர்க்க அனுமதி பெற்றது. இவர்கள் இலங்கையிலிருந்து நாடு திரும்பியவர்களை (ரீ- பேட்டியாட்ஸ்) வைத்து கொடைக்கானல் மலையில் மர வளப்பும், மரம் வெட்டும் தொழிலை செய்தனர். காலப்போக்கில் இந்த நிறுவனம் இந்த மக்களை கொத்தடிமைகளாகக் கையாண்டது. இதை கண்டறிந்து இந்த மக்களை விகடன் நிறுவன உதவியோடு வெளியேற்றி இவர்களுக்கு நிலம் கிடைக்க வழிவகை செய்தான் சௌபா. அந்த இடமே இன்றைய குண்டுப்படியும், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள எல்லைப்பட்டி கிராமமும். 

விகடனில் இவன் எழுதிய முக்கியமான செய்தி சாயல்குடி ஜமீன்தாரைத் தவிர மற்றவர்கள் தரையிலே உட்கார்ந்து முகச்சவரம் செய்ய வேண்டும் என்ற சமூக சட்டத்தை அம்பலப்படுதியது. அடுத்து சிசுக்கொலை இந்தச் செய்தியை எல்லோரும் பெரிதாக சொல்லுவார்கள். இந்த செய்தியை மைய அரசே சொல்லி பிரபலப்படுத்தியது என்றே ஆய்வாளர்கள் சொல்லுகிறார்கள். காரணம் அந்த கால கட்டத்தில் பொதுவுடமை சிந்தனையாளர்களும், தமிழ் தேசிய சிந்தனையாளர்களும் முளைத்தனர். இவர்களை அரசு எந்திரம் ஒடுக்கி அழித்தது. இந்த செய்தி முதன்மை பெறக் கூடாது என்பதற்காக சிசுக்கொலை என்ற ஆயுதத்தை கையில் எடுத்து மக்களை மடைமாற்றம் செய்தது அரசு. இருப்பினும் இந்த செய்தியும் சௌபாவுக்கு பெரும் புகழை கொடுத்தது. 

இந்த சூழலில் விகடன் முதலாளி திரு. பாலசுப்பிரமணியம் அவர்கள், மதுரை அருகில் நிலம் வாங்கினார். அந்த நிலத்தை தனது மாணவ நிருபரான சௌபா பெயரிலே வாங்கியதே சிறப்பு. அதனைக் கவனித்து விகடன் நிருபராக இருந்த சௌபா எழுத்துப் பணியிலிருந்து விடுபட்டு விகடனின் பத்திரிக்கை முகவராக வலம் வந்தார். அந்த காலத்திலே இவருக்கு உதவிய நண்பர்கள் நட்பும், அதன் வழியில் ஏற்பட்ட காதல் திருமணமும் நடந்தது. 

இக் காதல் மனைவியின் சொந்த ஊர் அருகில் சீவலப்பேரி பாண்டி என்பவரின் வாழ்வை ஜுவியில் தொடராக எழுதினான் செளபா. இது இவனுக்கு பெரும் புகழையும் பெரும் நட்பையும் தேடிக் கொடுத்தது.

சீவலப்பேரி பாண்டி திரைப்படத்தை தெலுங்கு மொழியில் இவரது அனுமதியில்லாமல் வெளியிட்டனர். இதை விகடன் நிறுவனமே வழக்கு நடத்தி அன்றைய காலத்தில் சுமார் 5 லட்சம் சன்மானமாக பெற்றுகொடுத்தது. இந்த தொகையை மூலதானமாக வைத்து சிறுமலை அடிவாரத்தில் சுமார் 15 ஏக்கார் பரப்பளவில் காடு வாங்கி அதில் மரங்களை நட்டு தனது வாசத்தைத் துவங்கினான் சௌபா.

விகடன் நிறுவனம் இவரை முழுமையாக கலட்டி விட்டது. தனது உயரிய நண்பர்கள் உதவியோடு பத்திரிக்கையாளராக சமூக பார்வையாளராக வலம் வந்த சௌபாவை ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தினார்கள் உயர் காவல் துறை அலுவர்கள். 2001 தேர்தலில் சௌபாவை, ஜெய தொலைகாட்சி நிறுவனம் முழுமையான இவனது மூலையைப் பயன்படுத்தியது. 2001 தேர்தல் வெற்றிக்கு இவரது கமுக்க (விடுதலைபுலிகளுக்கு திமுக சதி வேலை செய்ததாகவும், வேதாரயத்தில் விவசாயி தற்கொலைக்கும் திமுகவே காரணம் என்ற தேர்தல் விளம்பர படம், அதே போல் காயித ஓடம் கடலை மேலே மூவரும் போவோம் என்ற கருணாநிதி அவரது மனைவிகள் ஓடத்தில் போவது போன்று கட்சி அமைக்கப்பட்ட கேலி சித்திர வேலைப்பாடு படம் இவரின் மூலையே. இவனை நம்பிய செல்வி - ஜெயலலிதா ஜெய தொலைக்காட்சியில் பணி செய்யாத பணியாளராக நியமித்து மாதந்தரமாக 50000 வழங்கினார். இந்த சம்பளத்திற்கு 'இன்று' என்ற தொகுப்பு இவரை இன்னும் ஜெய நிறுவனத்தில் முதலாளி நிலையில் இருந்த தினகரனுக்கு நெருக்கத்தை கொண்டு சென்றது. இதனை முழுமையாக பயன்படுத்திய சௌபா தென் மாவட்டங்களில் வேட்பாளர் தேர்வு செய்தது இவரே என்பது அவரை அறிந்த நண்பர்கள் அறிவார்கள். இதன் ஏற்கனவே விகடன் மூலம் கிடைத்த திரைவுலக நண்பர்களை வைத்து படம் எடுக்க அல்லது படத்திற்கு கதை கரு மாற்றம் உள்பட பணிகளை செய்து வந்ததுடன் அதிமுக அரசின் அறிவிக்கப்படாதா மாநிலம் தழுவிய பி.ஆர்.ஓவாக வலம் வந்தார். இதானால் இவருக்கு பல கோடிகள் கிடைத்தது. கடைசியாக நடந்த ஆர்.கே நகர் தொகுதியில் ஆளும் கட்சியை தோற்றகடித்த 'உசசாரய்யா உசாரு' என்ற பாடலை ஒளிப்பதிவு செய்து திகனரனுக்கு வெற்றியை ஈட்டிக்கொடுத்தார் என்பது அவரை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும்.

இந்த நிலையில் தனது மனைவியுடன் பிரிந்து இருந்தாலும் மகனை திரைத்துறை நட்சத்திரமாக்க முயற்சித்தார். அதன் விளைவு தான் அவன் கொலையாளியாக வலம் வந்ததும் இவரை கொலையாளி சூழலுக்கு தள்ளியதுமே. சௌபா 54 ஆண்டு கால வாழ்க்கையில் அவர் தன்னைத்தானே கொலையாண்டார் என்றே சொல்ல வேண்டும்.

நான்கு தினக்கு முன்பு தேவேந்திர குல வேளாளர் அமைப்பு செயல்பாட்டாளர் டாக்டர் சிவமணி 'சௌபா மிகவும் மோசமான இருக்கிறார்' எனச்சொன்னார். மனதளவில் சௌபாவை சந்திக்கக்கூடாது என இருந்த எனக்கு அவரை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. மதுரை ராசாசி மருத்துவமனைக்கு இரவில் போய் வார்டு எண் 202ல் பார்த்தேன். சௌபா சிரித்தார்.
 
அவரிடன் 'அண்ணே நீ மரணத்தைத் தழுகொண்டிருக்கிறேன்ணே' என மனதில் பட்டதை பட்டென சொன்னேன். அதற்கும் சிரித்தார். இருவரும் மௌனத்தாலே பேசினோம். எனது மனதிற்குள் நான் யாதவர் கல்லூரியில் படிக்கும் (1985 - 1988) போது சந்திக்க வேண்டும் என முயற்சித்து சந்திக்க இயலாமல் போனது, 1992 மூத்த எழுத்தாளரும் அப்போதியய ஜூவி நிருபராக இருந்த எனது மதிப்பிற்குறிய அய்யா ஜே.வி நாதன் மூலமாக அறிமுகக் கடிதம் கொண்டு வந்து வடக்குமாசி வீதி சந்திப்பில் அவரது இல்லத்தில் சந்தித்தேன். அதன் பின்னர் நான் விகடனின் எழுதிய கட்டுரைகளுக்காக அவர் என்னை விமர்சிப்பதும், பாரட்டுவதுமாக தொடர்ந்த நட்பு, 'எனது சிசுக்கொலை செய்தியை விட உன்னோட 'பிள்ளைகள் கையால் பெற்றோர் பரலோகம்' என்ற முதியோர் கொலைச் செய்தி படுபிரபலம் எனப்பாராட்டியதில் நெருக்கம் கூடியது. கம்பளத்து நாயக்கர் ஆடும் தேவராட்டத்தில் கையில் துண்டு இருப்பதற்கு பதிலாக கத்தி வைத்து ஆடினால் இன்னும் அந்த ஆட்டத்திற்காக சிறப்பு கூடும் என சொல்ல அதை செயல்வடிவம் ஆக்கினான் சௌபா. இந்த நெருக்கம் ஒவ்வொரு குலத்திற்குள்ளிருக்கும் பெருமைகளை குறும்படமாக்க ஆக்கிட முயற்சித்து ஆலோசித்தது போன்ற நினைவுகள் என்னை முழுமையாக ஊமையாக்கியது. (இதுவே எனது சுளுந்தீ நாவின் அடிநாதம்) அவரது தோட்டத்திற்கு போகும் போதெல்லாம், அவர் குடித்துக்கொண்டு 'டே தம்பி நீ குடிக்கலேன்னா நல்லவன் என நினைக்காதே, குடிக்கிற நாங்களெல்லாம் கெட்டவன்னு நெனைக்காதடா'  என்ற அவருடனாக உரையாடல் நினைவுகள் என்னை கல்லாக்கியது. நான் எதற்கும் அழுகத்தெரியாவதன் என்பதால் கல்லாக மனதுடனே நினைவுகளில் இருந்தேன். இதற்கு மேல் பேசிட ஒன்றும் இல்லை என முடிவெடுத்து 'நான் விடை பெறுகிறேன்ணே' என்றேன். அதற்கும் மெல்லிதாக சிரித்தார். 'இந்தக் குற்றச்சாட்டிலும் நாம் மரணிக்காவிட்டால் சமூக குற்றவாளி பட்டியலில் சேர்க்கபடுவோம்ன்ணே'' என்றேன். அதற்கு அவர் மௌனமாகச் சிரித்தபடி என்னைப்பார்த்தார்.

'கொலையை நீ செய்யாவிட்டாலும், செய்தாலும் நான் உன்னை ஏற்கிறேன்' என்றேன் என்றேன். 'நீ பாசக்காரண்டா' எனச்சொன்னார். அதற்குமேல் பேச விடாமல் வார்டனாக இருந்த காவலர்கள் 'போகலாம்' என கண் அசைத்தார்கள். நான் அங்கிருந்து விடை பெற்றேன். இரண்டு தினங்களில் விடைபெற்றான் சௌபா.

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...