Search This Blog

Tuesday, 4 June 2019

நாஞ்சில் நாடனின் இலக்கியப் பயணம்

 ‘படைப்பாளி’யில் இன்று: ‘வீரநாராயணமங்கலம் - கோவை, வழி: மும்பை..!’
எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் இலக்கியப் பயணம் . ''இந்து தமிழ்திசை''

--------------------------------------------------------------------------------------------------------------------
பேசிக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரிவதில்லை. எம்.எஸ்.சி., ‘மேத்ஸ்’ படித்தவருக்குள் இத்தனை தமிழ் இலக்கிய, இலக்கணப் புலமையா? சொற் தேடலா? தமிழ் பண்டிதர்களை மிஞ்சும் ஆற்றல், யதார்த்தக் கூறுகளிலிருந்து எங்கிருந்துதான் வெளிப்படுகிறதோ என வியக்கத்தக்க மனிதராகவே தோற்றம் கொள்கிறார் நாஞ்சில் நாடன்.

பிறந்தது நாகர்கோயில் வீரநாராயண மங்கலம் கிராமம். புலம்பெயர்ந்தது மும்பை. அங்கிருந்து வந்து முப்பது ஆண்டுகளாக கோவையில் வசித்து கொங்கு மண்டலவாசியாகவே மாறிவிட்டார். அந்த நன்றியை பறைசாற்றும் முகமாகவோ என்னவோ, இங்குள்ள சிறுவாணி இலக்கிய வட்டம் என்ற அமைப்பு ‘நாஞ்சில் நாடன் விருது’ என்ற இரண்டாண்டுகளாக இலக்கிய அன்பர்களுக்கு வழங்கி வருகிறது. கோவை புதூர் பேரூர் சாலையில் வ.உ.சி தெருவில்தான் நாஞ்சில் நாடனின் வீடு. இளமைக்காலம் பற்றி கேட்டவுடன் குழந்தை போல் பேச ஆரம்பித்து விடுகிறார்.

‘‘அஞ்சாம் வகுப்பு வரை எங்க கிராமத்து பள்ளி. 8வது வரை எறச்சகுளம் நடுநிலைப் பள்ளி. எஸ்.எஸ்,எல்.சி தாழக்குடி உயர்நிலைப் பள்ளி. எறச்சகுளம், தாழக்குடி ரெண்டுமே ஒன்றரை மைல். நடந்தேதான் போகணும். அப்பவெல்லாம் பள்ளிக்கூடத்துல படிக்கிற பசி எனக்கு சுத்தமா இல்லை. வயித்துப் பசிதான் அதிகம். எங்க அப்பா கணபதியாப்பிள்ளை. எனக்கு சுப்பிரமணியப் பிள்ளைன்னுதான் சர்டிபிகேட்டுலயே பேரு. பின்னாலதான் அதை கெஜட்ல போட்டு ரேசன்கார்டு முதல் பாஸ்போர்ட் வரை மாத்தினேன். கல்லூரி படிப்பு கன்னியாகுமரியில பிஎஸ்சி மேத்ஸ், திருவனந்தபுரத்துல எம்எஸ்சி மேத்ஸ்.

‘‘1970ல் படிப்பு முடிச்சு டிஎன்பிஎஸ்சியில எத்தனை வகை தேர்வுகள் உண்டோ அத்தனையும் எழுதி முடிச்சேன். பலனில்லை. எனக்கு தெரிஞ்சவர் நேவியில வேலை பார்த்துட்டு மும்பையில் இருந்தார். அவர் கூப்பிட்டார். 2 சட்டை, பேண்ட், 2 லுங்கி, 2 உள்ளாடைகள்னு எடுத்துட்டு போனவன் அங்கே கலெக்ட்ரேட்ல தினக்கூலியில பார்த்தேன். அப்ப எங்க ஊர்ல குத்தகை நிலம் பார்த்தவர் கிடைச்சார். அவர் மூலமா டபிள்யு எச் பிராடி நிறுவனத்தில் சேர்ந்தேன். அதுவும் ரூ. 7 தினக்கூலிதான். அப்ப மார்க்கெட்ல கிடைக்கிற பழைய ஆங்கிலப் புத்தகங்கள் குறைஞ்ச விலைக்கு வாங்கிப் படிக்கிறது வழக்கம். என் சாப்பாட்டு நேரத்துல அப்படி ஒரு ஆங்கிலப் புத்தகத்தை படிச்சுட்டு இருக்கேன்.

‘‘அதை அலுவலக அதிகாரி பார்த்துட்டார். ‘அந்த புத்தகம் படிக்கிற அளவு என்ன படிச்சிருக்கே?’ன்னு மாற்றிக் கேட்டார். சொன்னேன். ‘அப்புறம் எதுக்கு இந்த வேலைக்கு வந்தே?’ன்னு அடுத்த கேள்வி. ‘வேற வேலை கிடைக்கலை. அதுதான்!’ என்றேன். உடனே அவர் உதவியாளரை அழைத்தார். என்னை குடோன் கிளார்க்காக ரூ.210 மாத சம்பளத்தில் அப்பாயிண்ட்மெண்ட் செய்ய உடனடியாகவே ஆர்டரை போட்டுட்டார். இப்படியாக தொடங்கியதுதான் என் பிழைப்பு வாழ்க்கை ஆபீஸ் இன்சார்ஜ், மார்க்கெட்டிங், சேல்ஸ் எக்ஸ்க்யூட்டிவ் என்றெல்லாம் நீண்டது!’’ என்றவர் அடுத்ததாக தன் இலக்கியப் பயணத்திற்கான ஆரம்ப விதை முளைத்த அனுபவத்திற்குள் புகுந்தார்.

‘‘நான் பிறந்தது 1947 டிசம்பர் 31. எனது 12-13 வயசிலேயே வாசிப்பு ஆரம்பமாயிருச்சு. காமிக்ஸ், துப்பறியும், மா யாஜாலக் கதைகளில் ஆரம்பித்து கல்கி, ஜெகசிற்பியன், நா.பா, ஜெயகாந்தன் எல்லாமே படிக்க ஆரம்பிச்சுட்டேன். 1965ல்ன்னு நினைக்கிறேன். ஒரு கவிதை எழுதி குமுதத்திற்கு அனுப்பினேன். அது வருமான்னு சொல்லி வாராவாரம் லைப்ரரியில் குமுதத்தை புரட்டிப் புரட்டிப் பார்ப்பேன். என் கவிதை வராட்டியும் அதுல வர்ற கவிதை, கதை, ஜோக்ஸ், துணுக்கு எல்லாம் எப்படியிருக்குன்னும் படிப்பேன். வேடிக்கையா இருக்கும்.

‘‘ஒரு கட்டத்துலதான் இவங்க பிரசுரிக்கிற எழுத்து நம்ம நினைக்கிற மாதிரியான வாழ்க்கையில்லைன்னு புரிஞ்சுது. எழுதறதை அப்போதைக்கு ஒத்தி வ ச்சுட்டேன்னுதான் சொல்லணும். மும்பை போன பின்பு அங்கே தமிழ்சங்கத்துடன் தொடர்பு ஏற்பட்டது.. அங்கே நிறைய புத்தகங்கள் இருக்கும். ஒரு ஆள் ரெண்டு புத்தகம் வாசிக்க எடுத்துப் போகலாம். ஞாயிறுதோறும் இலக்கிய கூட்டங்கள் நடக்கும். மாதம் ஒரு எழுத்தாளர் வெளியூரிலிருந்து வெளி மாநிலத்திலிருந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வார்கள்.

‘‘இச்சங்கம் ‘ஏடு’ன்னு 32 பக்கம் புத்தகத்தை வெளியிட்டு வந்தது. அதில் இந்த இலக்கிய நிகழ்ச்சிகள் குறித்த செய்திகள் எல்லாம் இடம் பெறும். கவிஞர் கலைக்கூத்தன் அதை கவனித்து வந்தார். அந்த இதழை சென்னை தீபம் ஆபீஸ்லாதான் அச்சடிச்சு தந்தாங்க. அதில் என்னை சங்க நிகழ்வுகள் பற்றி அரைப் பக்கம் எழுதிக் கொடுக்கச் சொல்லுவாங்க. செய்வேன். இந்த ஏடு இதழ் வரும்போது தீபம் இதழும் சென்னையிலிருந்து வரும். அதை வாசிக்கும்போது நாமும் ஏன் கதை எழுதக்கூடாது என தோணும். அப்படி ‘விரதம்’ என்ற தலைப்பில் ஒரு கதை எழுதி அனுப்பினேன். 1975ல் அது என் முதல் கதையாக பிரசுரமானது.

அப்ப அந்த கதைக்கு வண்ணதாசன் பாராட்டி ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் காலத்தில் இலக்கிய சிந்தனை அமைப்பை ப.சிதம்பரமும், ப.லட்சுமணனும் நேரடியா நிர்வகிச்சு வந்தாங்க. ப.லட்சுமணனுக்கு சொந்தமாக பஞ்சாலைகள் உண்டு. அதற்கு பஞ்சு வாங்க பாம்பே வருவார். அப்படி அந்த மாதம் வந்தவர் சங்கத் தலைவரிடம் என் கதை பற்றி பேசி, என்னை விசாரித்து வரவழைத்தார். ‘இந்த மாசம் இலக்கிய சிந்தனை சிறந்த சிறுகதை உன்னோடதுதான் !’ என்று சொல்லி பரிசுத்தொகை ரூ.50 ஐ தன் பாக்கெட்டிலிருந்து எடுத்துக் கொடுத்தார். ஆக, என் முதல் சிறுகதையே இலக்கிய சிந்தனை பரிசு பெற்றது. அதற்குப் பிறகும் 3 முறை அந்த பரிசினை வாங்கியிருக்கிறேன்!’’

நாஞ்சில் நாடனின் முதல் நாவல் ‘தலைகீழ் விகிதங்கள்’. அது அச்சாகி பதிப்பகத்தாரிடம் சுமந்து அழைந்து தானே புத்தகம் போட்ட அனுபவத்தை அவர் விவரித்த விதமே ஒரு நாவல் போல் இருந்தது. அந்த நூல் வெளியான பிறகே, ‘தெய்வங்கள், ஓநாய்கள், ஆடுகள்’ என்ற முதல் சிறுகதைத் தொகுதி வெளிவந்திருக்கிறது. அதுவே தங்கர் பச்சனின் சினிமாவாகவும் வந்தது. நாஞ்சில் நாடன் 1989 ஆண்டு மும்பையிலிருந்து கோவைக்கு பணியிட மாறுதலாகி வந்திருக்கிறார். அப்போது வரை 2 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள் மட்டுமே வெளியாகியிருக்கிறது.

கோவைக்கு வந்த பிறகு அந்த நூல்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்திருக்கிறது. சாகித்ய அகாடமி விருது ‘சூடிய பூ சூடற்க!’ பெற்றதும், 2009ல் கலைமாமணி வாங்கியதும், 2012ல் இயல் விருது கிடைத்ததும் கோவை மண்ணில் இருந்து எழுதிய எழுத்துக்கள்தான் என்பதை நெகிழ்ச்சி ததும்ப விவரித்தார் நாஞ்சில் நாடன்.

‘‘நான் நாகர்கோயிலில் 26 வருடம், மும்பையில் 13 வருடமும், கோவையில் 30 வருடமும் வாழ்ந்திருக்கிறேன். கோவைக்கு வரும்போது எனக்கு புவியரசு, சிற்பியை தவிர யாரையும் தெரியாது. இங்கே வந்த பின்புதான் விஜயாபதிப்பகம் வேலாயுதம் அண்ணாச்சி, ஞானி, அமரநாதன், செந்தலை கெளதமன், ஆறுமுகம், வேனில் கிருஷ்ணமூர்த்தி எல்லாம் அறிமுகம் ஆனாங்க. நான் வேலை செய்த அலுவலகத்திற்கு பக்கத்திலேயே ஞானியின் வீடு. அதனால் அவரை அடிக்கடி சந்தித்து இலக்கிய பரிவர்த்தனை செய்து கொள்ள முடிந்தது. திரும்பின பக்கமெல்லாம் இலக்கிய கூட்டங்கள், நிறைய வாசிப்புகள், அதுவெல்லாம்தான் என்னைப்புடம் போட்டிருக்கின்றன. என் மகன், மகள் டாக்டர், எஞ்சினியர் என வாழ்க்கையில் செட்டில் ஆகவும் இந்த மண்ணே உதவியிருக்கிறது. இங்கே வராமல் மும்பையிலேயே இருந்திருந்தால் என் இலக்கிய பயணம் மிதவை நாவலுடனே அஸ்தமித்தும் கூட இருக்கலாம்!’’ என்றும் நெகிழ்கிறார்.

‘மேத்மேடிக்ஸ் முதுகலை படித்தவரான உங்களுக்குள் சொற்களின் மீதான கரிசனம் உட்புகுந்தது எப்படி?’’ என்று கேட்டதும் அதற்குள்ளே புகுந்து விளையாட ஆரம்பித்து விட்டார். ‘‘non fixen எழுத ஆரம்பித்தபோது கதை, நாவல் எழுதற மாதிரி அல்ல அது என்று உணர்ந்தேன். வந்த சொல்லே திரும்பத் திரும்ப வருவதில் அர்த்தமில்லை, சுவாரசியமுமில்லை என தோன்றியது. அந்த சொற்களை தேடி திருக்குறள், நாலடியார், திவ்யபிரபந்தம், சிலப்பதிகாரம், கம்பன், பத்துப்பாட்டு, எட்டுத் தொகை என எங்கே புறப்பட்டாலும் சொற்களின் கிடைத்தது. ‘ஓணான்’ என்ற சொல்லை நாகர்கோயில்காரங்க ‘ஓந்தான்’னும், கோவைக்காரங்க ‘ஒடக்காயி’ன்னும் சொல்றாங்க. இதை இலக்கியத்தில் தேடும்போது ஓந்து, ஓதி, ஒடக்கா, ஒடுக்கான்னு போயிட்டே இருக்கு. இதேபோல் உறக்கம், துயில், துஞ்சுதல் ஒரே பொருள். ‘சோறு’ நம் அசல் தமிழ் சொல். சாதம், ரைஸ், சாப்பாடு, சாவல்ன்னு சொல்றோம். புருஷ்டம் என்றால் புட்டம். அதற்கு ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒவ்வொரு தமிழ் வார்த்தைகள் உண்டு.

‘‘இதையெல்லாம் பேராசிரியர்கள் வட்டார வழக்கு என கொச்சைப் படுத்தி ஒதுக்கித் தள்ளுகிறார்கள். அந்த சொற்கள் எல்லாம் நம் மொழிக்கு பாமர மக்கள் எழுப்பிய கட்டுமான பொருட்கள். அதை நாம் தவற விடக்கூடாது. தொலைக்கக்கூடாது. பொது மொழி என்பதும், அதன் சொற்களும் அழகுபடுத்தப்பட்ட கட்டிடம் அல்லது சுவர் என்றால் அதற்குள் இருக்கும் மண், மணல், செங்கல் எல்லாம் வட்டார வழக்கு சொற்களே. செங்கல் இல்லாமல் கட்டிடம் ஆகுமா? எனவே பேராசிரியர்கள் தமிழ் பண்டிதர்கள் அந்த செங்கற்களை காப்பது என்பது நம் மொழியையும் காப்பது என்கிறேன். அதில் கொங்குமொழி, நாஞ்சில் மொழி, மதுரை மொழி எல்லாமே கட்டுமானக்களஞ்சியம்தானே?’’

‘‘இந்த அளவு தமிழ் சொற்களை தேடும் உங்களுக்குள் கல்லூரிப் படிப்பான ‘மேத்தமெடிக்ஸ்’ இருக்கிறதா?’’

‘‘இல்லாமல்? இப்பவும் கூட ஒரு சீதாபழத்தை சாப்பிட்டால் அதில் உள்ள கொட்டைகளை 68, 70 என எண்ணி விடுகிறேன். பழாப்பழக் கொட்டைகளையும் எண்ணுகிறேன். இந்த பழங்களின் கொட்டைகள் அத்தனைக்கும் இங்கே விதைந்து முளைக்கும் உரிமை இருக்கிறதுதானே? நாம் சாப்பிட்டு விட்டு வெளியே எறிந்த பின், அதில் சில முளைத்தால் கூட அவற்றில் எத்தனை மரங்களை வளர அனுமதிக்கிறோம். அப்படி மட்டும் விட்டிருந்தால் இந்த உலகு காடு சூழ் உலகாக இருந்திருக்குமே. அதற்கான அந்த உரிமையை மறுத்தது யார், அபகரித்தது யார்? என கேள்வி எழும்பும்போது கணிதம் இலக்கிய அறிவாக, சமூக அறிவாக வெளிப்படத்தானே செய்கிறது?’’ என்று சுவாரஸ்யத்துடன் சொல்லும் நாஞ்சில் நாடனின் புனைப் பெயர் பற்றி கேட்டபோதும் சுவாரஸ்யம் மாறாமலே அதையும் விளக்கினார்.

‘‘நான் எழுத வரும்போது க.நா. சுப்பிரமணியம், சுகி.சுப்பிரமணியம்ன்னு நிறைய சுப்பிரமணியங்கள். அதில் நானும் க.சுப்பிரமணியம் ன்னு பேர் வச்சுகிட்டா நல்லா இருக்காது . அப்ப எங்க ஊர்ப் பேரோட இருக்கிற நாஞ்சில் மனோகரன் போன்றவர்கள் மீது ஓர் ஈர்ப்பு வந்தது. இப்படி பெயருடன் ஊரை இப்படி சேர்த்துக் கொண்டால் நல்லாயிருக்குமே. அப்படி தேடியதில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை சில பல காரணத்தால் ஒரே ஒரு நூலை நாஞ்சில் நாடன் என்ற பெயரில் எழுதி வெளியிட்டு விட்டு, பிறகு அப்பெயரையே பயன்படுத்தவில்லைன்னு தெரிஞ்சுது. அந்த பேரை அப்படியே எடுத்து வச்சுட்டேன். அதுதான் இன்னெய்க்கு வரைக்கும்!’’
🙂

No comments:

Post a Comment

முரசுப்பறையர்; வரலாறு, சமூகம், பண்பாடு

  நூலதிகாரம் நூல் முரசுப்பறையர்; வரலாறு, சமூகம், பண்பாடு ஆசிரியர் ; தி. சுப்பிரமணியன் வெளியீடு ; அடையாளம்   ‘முந்தி பிறந்தவன் நா...