இந்தி – ஒரு வரலாற்றுச் சுருக்கம்.
கார்த்திக் புகழேந்தி
ஏன் இந்தியைக் காலகாலமாகத் தமிழகம் எதிர்க்கிறது. தொடர்ந்து வடநாட்டவர் இந்தியை நம்மீது திணிக்கவும், அவர்களை நாம் எதிர்க்கவுமாக நிகழும் இந்தப் போராட்டத்தின் வரலாறுகளைப் பின் தொடர்வதனூடாக ‘இந்தி’ எனும் மொழியின் வரலாற்றைக் கொஞ்சம் தெரிந்துகொள்வது முக்கியம் என்று கருதுகிறேன்.
பண்டைய இந்திய நிலப்பரப்பில் வாழ்ந்த பெரும்பான்மை மக்கள் பேசிய வட்டார மொழிகளை பைசாரி, சூரசேனி, மாகதி என மேற்கிலிருந்து கிழக்காகவும், மத்திய இந்திய வட்டாரத்தில் மராட்டிரி என்றும், விந்திய மலைக்குத் தெற்கில் வாழும் மக்களால் பேசப்படும் மொழிகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து திராவிடி என்றும் ஐந்து பிராகிருத மொழிகள் இடைக்கால வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.
பிராகிருதம் என்ற சொல்லுக்கு முன் தோன்றியது; இயல்பாக உருவானது என்று பொருள். அதன் உறவுநிலைச் சொல்லான சமஸ்கிருதம் ஒருங்கு செய்யப்பட்ட அல்லது ஒன்று சேர்த்த என்று பொருள் கொண்டது. (ஸ்ம்-ஒன்றாக; க்ருத- செய்யப்பெற்ற)
பிராகிருத மொழிகளை வடமண்டலம் மற்றும் தென் மண்டலம் என்று இருவகையாகப் பிரித்தால், வடமண்டலத்தின் முதல்நிலை பிராகிருத மொழிகளாக சூரசேனியும் மாகதியும் பைசாரியும் கருதப்படுகின்றன. அவற்றிலிருந்து வழிநிலையாக அதாவது எழுத்திலக்கியம் உருவான, இலக்கிய பிராகிருதமாக பாளி மொழியைச் சொல்ல முடியும். (புத்த மதத்தின் நிழலில் வளர்ந்ததால் பாளி இலக்கியச் செழுமை பெற்ற மொழியானது.)
இந்த வழிநிலை மொழிகள் போல வட பிராகிருதத்தில் இருந்து ‘சார்பு நிலை’யிலும்
‘சிதைந்த நிலை’யிலும் வேறுசில மொழிகள் தோன்றின. இந்தி அப்படியான ஒரு சார்பு நிலை மொழியே. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அதற்கு வரலாறு கிடையாது. 500 ஆண்டுகளுக்கு முன் அதற்கு இலக்கியம் கிடையாது. ஏன்?
இந்தி என்பது ஓர் ஒழுங்கு நிலை கொண்ட தனி மொழி அல்ல. பஞ்சாப், சிந்துவுக்கு கிழக்கிலும், வங்கம், ஒடிசாவுக்கு மேற்கிலும், குஜராத், மராட்டியத்திற்கு வடக்கிலும் நேபாளத்திற்குத் தெற்கிலும் பேசப்பட்ட பல்வேறு உட்பிரிவுகளையும் கிளைத் தன்மைகளையும் நடைவழக்குகளையும் கொண்ட மொழியாக இந்தி உருவெடுத்தது.
உதாரணமாக, பங்காரு, பிரஜ்பாஷா, கன்னோஜ், பந்தேலி, ஆகிய அதன் மேல்நாட்டு வழக்குகள் கடிபோலி என்றும், அவதி, பகேலி, சத்தீஸ்கரி ஆகிய கீழ்நாட்டு வழக்குகள் கோசலி என்றும், போஜ்புரி, மைதிலி, மககி மூன்றும் பீகாரி எனவும், மால்வி, மார்வாரி, மேவதி, ஜைபுரி நான்கும் ராஜஸ்தானி எனவும் நான்கு பெரிய கிளைகளையும், ஐந்தாவதாக கர்வாலி, குமாயூனி, நேபாளி ஆகிய மூன்றும் சேர்ந்து பகாடி என்கிற கிளையும் கொண்டடங்கியது இந்தி.
தெளிவாகச் சொன்னால், கடிபோலி வழக்குகள் முதல்நிலைப் பிராகிருதமான சூரசேனியில் இருந்தும், கோசலி, பீகாரி இரண்டும் மாகதியின் இரு பிரிவுகளில் இருந்தும் ராஜஸ்தானி சிதைநிலை பிராகிருதமான அவபிரஞ்சத்திலிருந்தும் பிற்காலத்தில் கிளைத்த மொழிகள். திராவிட மொழிகளின் முதல் மொழியில் இருந்து வழிநிலை மொழிகள் பிற்காலத்தில் வளர்ச்சியடைந்தது போல இந்தப் பிரிவுகள் ஏற்பட்டிருந்தன.
வட மண்டலத்தின் பேசப்படும் இந்த தனித்த இனமொழிகளையே, தன்னகத்தே இணைத்து, அல்லது அந்தந்த மொழிகளின் தனித் தன்மையைச் செரித்து இந்தி உருவானது. “எல்லாவற்றையும் ஒன்றாக்கு. ஒரே நாடு ஒரே மொழி.” என்கிற கோஷங்களின் முன்னோடி இந்தி மொழியின் உருவாக்கம்.
ஆனால், திட்டவட்டமாக இந்தி, இந்தக் காலகட்டத்தில் தான் உருவானது என்று சான்றான வரலாறு கிடையாது. ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தி உருவானது என்று வரலாற்றாய்வாளர்கள் கருதினாலும் அதன் இலக்கிய வளம் 15ம் நூற்றாண்டில் ராமானந்தன் என்பவர் பாடிய இராமகதைப் பாடல்களில் இருந்தே தொடங்குகிறது. அதனாலே, ‘ஆதிகிரந்தம்’ என்று அவரது பாடல்கள் குறிப்பிடப்படுகின்றன.
ராமானந்தனுக்குப் பிறகு கபீர்தாசர் ‘வீப்பிரமதீசி’ என்கிற செய்யுள்களை இந்தியில் எழுதுகிறார். அவரது மாணவர் குருநானக் சீக்கிய மதத்தைத் தோற்றுவித்து பஞ்சாபியும் இந்தியும் கலந்து தம் பாடல்களை எழுதினார். இவர்களெல்லோருக்கும் பிறகு இந்தி இலக்கிய முதன்மை கர்த்தராகக் கருதப்படும் துளசிதாசர் எழுதிய ‘ராம சரித மானசம்’ 17ம் நூற்றாண்டில் எழுதினார்.
இவர்கள் கையாண்ட இலக்கண மரபு வடமண்டல மொழிகளில் கையாளப்பட்ட பொது வழக்கிலிருந்தே பெறப்பட்டது. உண்மையில், இந்தியில், பவநந்தியின் நன்னூல் போல ஓர் இலக்கண நூல் இல்லை. ஏன், வடமொழிகளிலே தொல்காப்பியம் போல் ஒரு தொன்னூல் இல்லை.
ஈராயிரம் ஆண்டு வரலாறு கொண்ட தமிழரின் குறள், செய்யுள், அடி, யாப்பு, அணி, இலக்கண இலக்கியங்கள் எதுவும் இந்தி மொழிக்குக் கிடையாது. இன்னும் சொல்லப்போனால், தமிழ் போல சொற்றொடர் அமைப்பு முறையோ, தன்னிலை படர்க்கை வேறுபாடுகளோ பால் விதிகள், ஒருங்கும் திட்டமும் அதற்கென தனித்து உருவாக்கப்பட்டிருக்கவில்லை.
மாறாக, இவை அனைத்தையும் அது வட மண்டலத்துப் பிராகிருத மொழிகளை விழுங்கிப் பெற்றுக்கொண்டு அவை எல்லாவற்றுக்கும் தகப்பன் தான் என உலகுக்கு அறிவித்துவிட்டது. (இந்தியின் இன்றைய செவ்விய நடை வழக்கு கடந்த நூற்றாண்டில் சீர்திருத்தம் பண்ணப்பட்டவையே.)
இந்நிலையில், தென்மண்டலப் பிராகிருத மொழிகளுள் (திராவிடி) மூல மொழியான தமிழில் இருந்து ஏனைய பிறமொழிகள் தோன்றி அதற்கென தனித்த இலக்கியச் செழுமையும் உண்டானது. வெகு குறைந்த காலம் முன்பு தோன்றிய மலையாள மொழியையும் (12ம் நூற்றாண்டு) அதன் இலக்கிய வளத்தையும் அணுகும்போது இந்த உண்மை புலப்படும்.
வடமண்டலப் பிராகிருத வழிநிலை மொழிகள் ஏன் இந்தியின் ஆக்கிரமிப்புக்குள் ஒடுங்கின?
எந்த ஒரு மொழியைப் பேசும் மக்களும் இட வேறுபாட்டாலும், மக்களிடையே கூட்டுறவு இல்லாதபோதும், எழுத்தும் இலக்கியங்களும் உருவாகாமல் போகும் போதும் தன்னுடைய தனித்தன்மையை இழந்து பிறமொழி ஆக்கிரமிப்பிற்குள் ஒடுங்கும். அதேசமயம் அந்தந்த வட்டார மொழிகளை ஆக்கிரமிக்கும் பெருமொழியும் ஒரே தனித்தன்மையில் இல்லாது சிதைந்தும் சீராகவும் பரவும். இந்தியின் நிலையும் இதுவே. (1955ல் இந்தியப் பாராளுமன்றத்தில் ஒரு சான்று வழங்கப்பட்டது. அதில், உத்திரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் வசிக்கும் மக்கள் பேசும் இந்தி மேற்குப் பகுதிகளில் வசிப்பவர்களுக்குப் புரிவதில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.)
ஒரு பிரதேசத்திற்குள் நிலவிய இந்த மொழி முரண்பாடுகளை வட்டார வழக்கு என்ற போர்வைக்குள் சுருட்டிவிடலாம். ஆனால், இந்தி தன் மொழியாதிக்கக் கரங்களை விரித்த அத்தனை தனித்த சிறுகுடி மொழியினங்கள் இன்று தம் அடையாளங்களை இழந்து போய் ஒற்றைக் குடைக்குள் அகப்பட்டுக் கொண்டன. அவ்வாறு தம் மொழியை இழந்தவர்களைக் கணக்கில் காட்டியே இன்றுவரை ‘பெரும்பான்மையான மக்கள் பேசுகிற மொழி இந்தி’ என்ற பிரசாரம் வடக்கிலும் தெற்கிலும் ஓங்கி ஒலிக்கிறது.
நீண்ட பண்பாட்டுப் பாரம்பரியமும், நெடிய மொழி இலக்கிய, இலக்கணத் தொடர்ச்சியும் கொண்ட பெருங்குடிகளான தமிழர் தம் மொழியை அவ்வாறு இழப்பதற்கு எவ்வித நியாயங்களையும் இந்தி, இந்தியா முன்வைப்பதில்லை எனும்போது, இந்தித் திணிப்பை எதிர்க்கத்தான் வேண்டும். காலகாலமாக அவர்களுக்கான சிறந்த எதிரி தமிழர்களே! எனவே தான் சுதந்தர இந்தியாவின் அரசியல் சாசனச் சட்டம் எழுதப்படும் முன்பே, முதன் முதலாகத் ‘தமிழ்நாட்டில் மட்டும்’ இந்தி கட்டாயப் பாடம் என அறிவித்து பிறகு தீவிர மொழிப் போராட்டத்தினால் சூடுபட்டுக் கொண்டது. இப்போதும் படுகிறது. சுட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
ஆனால், மறைமுகமாக அடுக்களையில் பூனை படுத்துறங்கிக் கொண்டே இருக்கிறது. யாப்புக்கும் அணிக்கும் வித்தியாசம் தெரியாத இங்கிருக்கும் புத்திசீவிகளும் தமிழிலக்கியங்கள் அனைத்தும் வடமொழியில் இருந்து வந்தவை. தமிழர்களின் நாகரிகம் வேத நாகரிகமே என்று மொட்டைக் கடுதாசிபோல சான்றில்லாத பொய்களைப் புத்தகங்களாக எழுதிப் போட்டுவிட்டு பத்மபூஷணங்களைத் தங்கள் மார்பில் சூடிக் கொண்டு தமிழ்த்துறைகளின் தலைமை பீடங்களில் வாலாட்டிக் கொண்டு அமர்ந்திருக்கிறர்கள்.
No comments:
Post a Comment