Search This Blog

Monday 30 November 2020

திராவிடர் - தமிழர்

 

                                          திராவிடர் - தமிழர்                                                             

மறைபொருளாக பேசப்பட்ட திராவிடர் - தமிழர் என்ற சொல்லாடல்கள் சில ஆண்டுகளாக 'வந்து குடியேறியவர்கள்' என்ற சொல்லாட்சியால் அதிகம் கையாளப்படுகிறது. 

யார் தமிழர்

             ம.பொ.சி, ஆதித்தனார், பெருஞ்சித்திரனார் போன்றவர்களின் எழுத்துகளால் கையாளப்பட்ட தமிழ் தேசியம், மொழியை மையாமாக வைத்து நாம் தமிழர் என வளர்க்கப்பட்டது. இது தமிழ் இயக்கமாக, திராவிட நாடு என்றும் தனித்தமிழ் நாடு கோரிக்கையாகவும் ஒருபக்கம் வளர்ந்தது. இதில் திராவிடர் இயக்க கொள்கையாளர்களையும், தனித்தமிழ் இயக்கவாதிகளையும் உள்ளடக்கி தனித்தமிழ்நாடு கோரிக்கையும் வலுப்பெற்றது. அதன் போக்கு தீவிரவாதமாக இருந்ததால், துவங்கிய சில ஆண்டுகளில் மக்களின் செல்வாக்கை பெறாமல் அரசு எந்திரத்தால் நசுக்கப்பட்டது.  

          இந்த இடைவெளியில் குல தாக்கத்தோடு எழுதி வந்த பெங்களூரு குணா, குருசாமி சித்தர் போன்றவர்கள் ''திராவிடத்தால் வீழ்ந்தோம், திராவிட மாயை'' போன்ற நூல்களை எழுதி வெளியிட்டு பரப்புரையும் செய்தார்கள். இந்தக்கருத்தாக்கத்தத்தை முன்னிருத்தி கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  திரு. சீமான், 'தமிழர் அல்லாத வேட்பாளர்களை எதிர்த்து' பரப்புரை நடத்தினார். இதனால் தமிழர், தமிழர் அல்லாதவர் என்ற கருத்தாக்கம் பொதுவெளியில் பேசுபொருளாக மாறிவிட்டது. இந்த வீச்சு ஆதித்தனார், ம.பொ.சி போன்றவர்களின் செயல்பாடுகளைப் போல் நீர்த்து விடுமா ? அல்லது நீடித்து நிலைக்குமா என்பதை காலம் தான் பதில் சொல்லவேண்டும்.  

அதற்கு முன் திராவிடம் என்ற சொல்லின் தோற்றம் குறித்துப்பார்த்தாக வேண்டியுள்ளது. திராவிடம் என்ற சொல் உள்ள கல்வெட்டுகள் இலக்கியங்கள் எவை எவை.

1) பொது ஆண்டுக்கு முன்பு (கி.மு) மன்னன் அசோகனை அடுத்து ஆச்சி செழுத்திய காரவேளன் என்பவர் பெயரில் உள்ள ஹத்திகும்பா கல்வெட்டு தமிழ்நாட்டை "திரமிகா (Dramica) என்று குறிப்பிடுகிறது.   

2)பொது ஆண்டிற்கு பின்பு  (கி.பி) பின்பு 5ஆம்  நூற்றாண்டில் கங்க மன்னன் துர்வினீதன் கொங்கு தேச ராசாக்களின் சரித்திரத்தில் "காஞ்சி உள்ளிட்ட திராவிடத்தை வென்றான்" எனக்குறிப்பிடுகிறது. 

3) பொ.ஆ. பி 642 காஞ்சி வந்த சீனயாத்ரீகர் இயூன்சங் (யூவாங்சஸ்சுவாங்) அவரது குறிப்பில் காஞ்சியை சுற்றியுள்ள பகுதியை திராவிடம் என்று குறிப்பிட்டுள்ளார்.

4) செந்தமிழ்அகராதி.

தமிழ்நாடு, ஆந்திரம், கருநாடகம், மகாராசுட்டம், கூர்சரம் (ஒரியாவில் சில பகுதிகள் உள்ளடக்கியது) இவைகளை பஞ்ச திராவிடத் தேசங்கள் என்று குறிக்கிறது.

திராவிடத்திற்கு சிங்காரவேலு முதலியார் தரும் விளக்கம்;

கன்னடம், தெலுங்கு, மகாராசுட்டம்,, கருநாடகம், கூர்சரம் என்னும் தேசத்துப் பிராமணர்களை திராவிடர் என்கிறார். கன்னடம், மைசூர் முதல் கோல்கொண்டா வரையிலும், தெலுங்கு, காளகசுத்தி முதல் கஞ்சம் வரையிலும், மகராஷ்டிரம், கோல்கொண்டா முதல் மேற்குக் கடல் வரைலும், கருநாடகம் (தமிழ்), கன்யாகுமரி முதல் காளகசுத்தி வரைலும், கூர்ச்சரம், குசராத், முதல் டில்லி வரையிலுள்ள தேசங்களை திராவிடம் எனக்குறிப்பிடுகிறார்.   

அபிதான சிந்தாமணி வழங்கும் விளக்கம்;

 

01) அ. திராவிடாசாரி என்பவர் ஆதி சங்கரருக்கும் முன்னதாக அத்வைத கொள்கையைப் பரப்பியவர். இவர் ஒரு பார்ப்பனர். இவர் வேதாந்த சூத்திரத்துக்குப் எழுதிய உரையில் திராவிடபூபதி என்பவன் அகத்தியர் கால திராவிட அரசன். திரவிடன் என்பவன் சூர்ய வம்சத்து அரசன். திவ்யப் ப்ரபந்தத்தை திராவிட வேதம் என்று தனது உரையில் எழுதியுள்ளார். மேலும் தெலுங்கு பார்ப்பனர்களின் ஒரு பிரிவினருக்கு ''திராவிட'' என்ற ஜாதிப் பெயர் உண்டு. திராவிடம் என்பது பூகோளப் பெயரும் அதில் வாழும் மனிதர்களை குறிக்கும். தெற்கே பேசிய மொழியை திராவிட மொழி என்று அழைத்தனர். அது தமிழாகவும் இருக்கலாம், தெலுங்காகவும் இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.  

5) பொ.ஆ.பி. 1246 - 1279 மூன்றாம் ராசராசன் மகன் இராசேந்திரன் "திராவிட மண்டலத்து (பல்லவநாடு) குலோத்துங்க ராசேந்திரனை வென்று  கப்பம் வாங்கினான் என்று (Epind volm. 27 no35. நயனப்பள்ளி கல்வெட்டு சான்றளிக்கிறது.

6)ஆந்திரதேசத்து பித்தர்புரத்தில் உள்ள மல்லப்பதேவனின் கல்வெட்டு (E.i.i V எண் 33;செ.22-4 "அபூர்வ புருஷனான குலோத்துங்கன் ஆந்திரநாடு உட்பட ஐந்து திராவிடப் பகுதிகளையும் ஐம்பது ஆண்டுகள் ஆண்டான்" என்கிறது.

7) வரலாற்று ஆய்வாளர் பி.வி.ஜகதீஸ் அய்யங்கார்  "பழங்கால பாரததேசத்தில் 56 தேசங்கள் இருந்தன. கிருஷ்ணாநதியின் தென்பகுதியும், காவிரியாற்றின் வடபகுதியும், கருநாடகமும் இணைந்த பகுதியே திராவிட நாடு என்று  தனது தேச வரலாறு நூலில் குறிப்பிடுகிறார்.

8) திராவிடர் குறித்து பல்லவ செப்பேடுகள் 30 நூலின் ஆசிரியர் குழுவின் பார்வை.

"திராவிட (அல்லது) திரமிள என்ற சொல் காஞ்சியை தலைநகராகக்கொண்ட தொண்டை மண்டலத்தையே குறித்தது என குறிப்பிடுகிறார்கள்.

9) திருவாய்மொழி  - நாதமுனி தனியன்கள். "நமாம யஹம் 'த்ராவிட' வேத சாகரம்,

10) சபாபதிநாவலர் எழுதிய நூலின் பெயர் "திராவிட பிரகாசிகை.  (1845 -1903)

11) தாயுமான சுவாமிகள் தம் பாடலில் "வல்லான் ஒருவன் வரவுந்திராவிடத்திலே" என்கிறார்.

13) கவிமணி தேசியவினாயகம்பிள்ளை தமிழ் நாட்டை "திராவிடநல் திருநாடு"என்கிறார்.

14) ரவீந்திரநாத்தாகூர் தமது தேசியக்கீதத்தில்"திராவிடநாடு"என்கிறார்.

15) வேதாந்த தேசிகர் "திராவிடோ உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி" என்ற நூலினிய வார்த்துள்ளார்.

 16) ராமாயணத்தில் 'திராவிட்'' என்ற சொல் உள்ளது.

17) ரிக் வேத காலத்திலேயே 'திராவிடாச்சார்யா' என்ற நூல் குறித்து மாண்டூக்கிய உபநிடதம் மற்றும் ப்ரு பாஷ்யமும் குறிப்பிடுகிறது. 

18) திராவிட சிசு 

                  திருஞான சம்பந்தரை திராவிட சிசு என அழைக்கப்பட்டதன் காரணம் என்ன. திராவிட சிசு என்பது “தென்பகுதியின் குழந்தை” எனப்பொருளாகும்.

19) ஸெளந்தர்ய லஹரி என்ற சுலோகத்தில் ''த்ரவிட சிசு' என்னும் வார்த்தை காணப்படுகிறது.

 

 

மலையாள மொழியின் வரலாறு கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டதே. அதன் முன்னர் சேர, சோழ, பாண்டியர் காலங்களில் சேர நாட்டிலும் தமிழே மொழியாக இருந்தது புலனாகிறது. ஆதிசங்கரரும் தமிழ்க்குடும்பத்தைச் சேர்ந்தவராகவே கருதலாமா? என்ற கேள்வியும் எழுகிறது.

 ''தவ ஸ்தன்யம் மன்யே தரணிதரகன்யே ஹ்ருதயத பய பாராவார பரிவஹதி ஸாரஸ்வதமிவதயாவத்யா தத்தம் ''த்ரவிடசிசு'' -ராஸ்வாத்யதவயத் கவீனாம் ப்ரெளடானா மஜனீ கமனீய கவயிதா'' என திராவிட சிசுவுக்கான சான்று சமற்கிருத பாடல்களில் உள்ளது.

20) தேவநேயாப்பாவணன் பார்வையில் திராவிடம் குறித்து = நூல் தமிழர் வரலாறு கலவு நிலைக்காண்டம் பக்கம் 195, சிந்து என்னும் பெயர் தலைப்பில் எழுதப்பட்டது

''ஆரியர் வருக்கைக்கு முன் தமிழரே வடநாட்டிற் குடியேறி இருந்தமையாலும், குமரி மலை முழுகி அரபிக்கடல் தோன்றிய பின், சிந்துவெளி வழியாகவே தமிழர் அல்லது திராவிட மேலை ஆசியாவிற்கும் அதன் பின் அய்ரோப்பாவிற்கும் சென்றமையாளும், சிந்து என்னும் ஆற்றுபெயர் தமிழர் இட்ட தமிழ்பெயராகவே இருக்கலாம்'' என தமிழர் என்றும் சொல்லாமல் திராவிடர் என்றும் சொல்லாமல் ஊசாலாடி உள்ளார்.  

21) கே.கே.பிள்ளை 

“பூச்சிய பாதர் என்பவரின் மாணவரான வச்சிர நந்தி என்பவர் மதுரையில் திராவிடச் சங்கம் ஒன்றை நிறுவினார் (கி.பி-470) நீலகேசி, குண்டலகேசி, யசோதர காபியம், சீவக சிந்தாமணி ஆகிய காவியங்கள் தமிழில் தோன்றுவதற்கு இந்த திராவிடச் சங்கத்தின் தொண்டே காரணமாகும்" என்று கூறுகிறார். 

 22. வரலாற்று அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி

 வச்சிர நந்தி கி.பி. 470 –ல் தக்கிண மதுரையில் (பாண்டிய நாடு) திரமிள சங்கத்தை (திராவிடச் சங்கத்தை) நிறுவினார் என்றே அறுதியிடுகின்றார். திராவிடம் என்ற சொல்லாட்சி தமிழுக்கு புதிதன்று. இங்கே திராவிடம் என்ற சொல்லாட்சி விளிம்புநிலை தமிழ் மக்களைக் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் இச்சங்கங்கள் அமைக்கப்பட்ட காலத்தில் தமிழகத்தில் களப்பிரர் ஆட்சி எனப்படும் சமண சமயத்தாரின் ஆட்சி நடைபெற்றது. திராவிடர்களின் ஒரு பிரிவினர் தங்களை நிலவுடைமையாளர்களாகவும் பார்ப்பனர்களின் துணையுடன் சாதி மேல்நிலையாக்கமும் செய்து கொண்டனர். இவர்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த சிறு சாகுபடி செய்யும் மக்களே களப்பிரர்கள் ஆவார்கள். அவர்கள் பின்பற்றிய சமயம் சமணம் ஆகும். ஏனெனில் சமண, பௌத்த சமயங்களே அன்று நால்வருண பாகுபாடுகளுக்கு எதிராக கடுமையாக போராடியவை என்று தனது சமணம் குறித்த நூலில் குறிப்பிட்டுள்ளார்.

21.சி.பா.ஆதித்தனார் பார்வையில் 

திராவிடர்கள் யார்? - ''திராவிடர்கள் என்போர் தெலுங்கர்கள். தமிழர்கள் திராவிடர்கள் அல்ல. ஆந்திரம், கலிங்கம், தெலுங்கானம் ஆகிய மூன்று தெலுங்கு நாடுகளில் வாழ்ந்தவர்களான திரி- வடுகர்களே திராவிடர்கள். திராவிடர் என்ற சொல்லை தமிழர்களுக்குப் பயன்படுத்துவது பொருந்தவே பொருந்தாது. 1875ஆம் ஆண்டிற்கு முன் திராவிடர் என்ற சொல் தெலுங்கர்களை மட்டுமே குறித்து வந்தது. அந்த ஆண்டில் கால்டுவெல் என்ற வெள்ளைக்காரர் அவர் எழுதிய புத்தகத்தில் அதுவரை ஆந்திரர்களை மட்டுமே குறிப்பிட்டு வந்த திராவிடர் என்ற சொல்லைத் தமிழர்களைக் குறிப்பதற்கும் பயன்படுத்தப் போவதாகத் முட்டாள்தனமாக தெரிவித்து அதன்படியும் எழுதினார். குழப்பமும் செய்தார்.'' என ஆதித்தனார் சொல்லுகிறார்.

23.) பண்டிதர் அயோத்திதாசனார் பார்வையில்  

ஜான் ரத்தினம் என்பவர் 1885 ஆம் ஆண்டு திராவிட பாண்டியன்' என்ற இதழைத் தொடங்கினார். அயோத்திதாசர் அந்த இதழின் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.

         'ஆதித்தமிழர்கள் இம்மண்ணின் மைந்தர்கள், அவர்கள் இந்துக்கள் அல்ல' என பிரகடனப்படுத்தி எழுதினார். 1890 ஆம் ஆண்டு “திராவிட மகாஜன சபை'' என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கி, அதில் பட்டியல் குலத்தினரை ஒருங்கிணைத்தார். பிரம்ம ஞான சபையின் செய்லாளர்களின் ஒருவரான ஆல்காட் என்பவரின் உதவியுடன் சென்னையில் ஐந்து  பள்ளிக் கூடங்களை நிறுவி பட்டியல் குலத்தினரை கல்வி கற்க வழிவகுத்தார். 1902 ஆம் ஆண்டு தென்னிந்திய பவுத்த சாக்கி சங்கத்தை ஏற்படுத்தியவர், 1907 ஆம் ஆண்டு ஜுன் திங்கள் 19 ஆம் நாள் “ஒரு பைசாத் தமிழன்'' என்ற வார இதழை நடத்தினார். 1908 ஆம் ஆண்டு இதழின் பெயரைத்”தமிழன்'' என்று பெயர் மாற்றம் செய்தார். தமிழகத்தில் தமிழர்களுக்கென்று எந்த இயக்கமும் தோன்றாத காலத்தில் ''தமிழன்'' இதழ் மூலம் பார்பன எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பகுத்தறிவு, மூடநம்பிக்கை, மொழிப்பற்று, இன உணர்வு, சமூக நீதி மற்றும் சுயமரியாதை இவற்றை மையமாகக் கொண்டு இதழை நடத்தினார். குறிப்பாக மண்ணின் மைந்தர்களே இம்மண்ணை ஆள வேண்டும் என்று எழுதினார்.

23.) தமிழர்கள் திராவிடர்கள் என்ற குழப்பத்திற்கு மானுடவியல் ஆய்வாளரான முனைவர் பக்தவச்சலபாரதி பண்பாட்டு ரீதியாக தமிழர்களுக்கும் தெலுங்கு கன்னட மொழியினருக்கும் உள்ள ஒற்றுமைகளை வகைப்படுத்தியுள்ளார்.

24) அனுபவங்களின் நிழல் பாதை நூலில் திராவிடர்களே தமிழர்கள் என்று தனது இந்தியத்துணைக்கண்டம் முழுவதும் ஆய்வு செய்து நிலைநிறுத்தியுள்ளார் நூலின் ஆசிரியர் அரங்கையா முருகன்.

24.) சென்னை, மதுரை போன்ற பெரு நகரங்களிலும் 'வடுக தெரு' என்ற பெயரில் தெருக்கள் உள்ளதை கூர்ந்து கவனித்தாக வேண்டும்.    இதிலிருந்து திராவிடம் என்பது 'மாயச் சொல்' எனச்சொல்ல முடியாது.

25) பஃறுளி யாற்றுடன் பன்மொழி அடுக்கத்து எனத்துவங்கும் சிலப்பதிகார அடிகள் பழம் பாண்டிய நாடு இந்திய துணைக்கண்டம் முழுவதும் பரவியிருந்தது என்பதை காட்டுகிறது.  இதனால் தான் தமிழ் புலவன் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று எழுதினானோ என்னவோ. காலப்போக்கில் இந்தியா முழுவதும் இருந்த தனித்தனி இன குழுக்கள் பிரிந்து தன்னாட்சி செழுத்தியிருக்கலாம். காலமாற்றத்தால் இவைகள் திரிந்து புதிய புதிய மொழிகளும் பண்பாடுகளும் உருவானது எனக்கொள்ளலாம்.  

 தமிழர்  

       சைவ சித்தாந்தத்தை உள்ளடக்கியும் சைவத்தமிழ் என்று பேசி தமிழ் மொழி உணர்வை தூக்கிப்பிடித்தவர்களின் மூலம் சைவமடங்களாகும். ஆனால் இந்த சைவ மடத்தில் அறியப்படும் திருப்பானந்தாள் மடத்தில் சமற்கிருதமே இன்னும் பூசை மொழியாக உள்ளது. இந்த சைவ பற்றார்களே மடத்திற்கு வெளியே தனித்தமிழ் எனப்பேசினார்கள் என்பதை கவனப்படுத்த வேண்டும். இவர்களின் சமற்கிருத கலப்பு என்பது விஜயநகர நாயக்கர் ஆட்சியில் ஏற்பட்டதல்ல அதற்கு முன்பாகவே இந்த மடங்கள் சமற்கிருதத்தை ஏற்றதற்கான சான்றுகள் அம்மடத்திலே உள்ளது.

         அதே நேரத்தில் தமிழர்கள் தமிழகத்தை ஆளவேண்டும் என்ற கோரிக்கையையும் மறுத்திடவும் கூடாது என்பதை விட, முடியாது என்பதே நமது வாதமும்.

                  இந்தியாவை ஆண்ட பிரிட்டீசாரை 'அன்னியர்' என்ற ஒற்றைச்சொல்லால் நமது தலைவர்கள் இந்தியதுணியக்கண்டம் முழுவதும் உள்ள மக்களை ஒன்று திரட்டினார்கள். அன்னியர் என்ற சொல் சுதந்தரப்போராட்டத்திற்கு இனித்தது.

''விஜயநகர + நாயக்கர் ஆட்சியில் பெருவாரியாக வந்து குடியேறியுள்ள தெலுங்கு கன்னடம் பேசும் மக்களை தமிழகத்தில் துள்ளிதமாக 306 ஆண்டுகள் ஆண்டவர்கள் தமிழர்களின் நிலபுலங்களை பறித்துள்ளது வரலாறு. இவர்களால் பாதிக்கப்பட்டதாக நினைக்கும் தமிழ் குடிகள் அவர்களை அன்னியர் என்ற சொல்லில் அழைப்பதை எப்படி நிராகரிக்க முடியும். இப்படி பேசுபவர்களை தமிழ் பாசிசவாதிகள் அழைப்பது சரியாக இருக்குமா?. 

தெலுங்கு கன்னடம் பேசும் மக்கள் தங்களது வேர்களை இழந்து இம்மண்ணின் குடிகளாக மாறிவிட்டார்கள். இவர்களால் மொழி சிதை மொழி தேசியம் என்பது இவர்களுக்கு எதிரானதாகப் பார்க்கப்படுவதான் கருத்தாக்கம் தான் சிக்கலை உருவாக்குகிறது. 

    இறைமறுப்பு கொள்கை பிற மாநிலத்தை விட தமிழகத்தில் பரந்து விரிந்தது. இறை மறுப்பை ஏற்காத மக்கள் கூட இறைமறுப்புக்கொள்கை கொண்டத் தலைவர்களை ஏற்றார்கள் என்பதை கூர்ந்து கவனித்தாகவேண்டும். இப்படிப்பட்ட தலைவர்கள் மொழியால் இனத்தால் குலத்தால் கன்னடம் தெலுங்கு பேசுபவர்களாக இருந்தாலும் அவர்களை தமிழை தாய்மொழியாகக்கொண்ட மக்கள் தூக்கி கொண்டாடி தங்களது தலைவர்களாக ஏற்றுக்கொண்டதில் அவர்களின் நேர்மை வெளிச்சப்படுகிறது. இது போன்ற வெளிச்சக்குறைபாடு இருக்கும் இடத்தில்தான், மொழி இன குலப் பாகுபாட்டுப் பார்வை வருகிறது. இதைக் கவனிக்காது ''மொழி பாசிசம்'' என்ற ஒற்றைச்சொல்லில் நிராகரிப்பது என்பது மொழி தீவிரத்தை அதிகரிக்குமே தவிர குறுகிவிடாது என்ற வாதத்தையும் மறுதளித்திட முடியவில்லை. 

பிறமாநிலங்கள் மொழியின் தாக்கம் எப்படி

தமிழகம் அல்லாது திராவிட இனக்குழுக்கள் நிறம்பியுள்ள ஆந்திரம் கர்நாடகம், கேரளத்தில் அவர்களின் மொழிக்கே ஆட்சி மொழியில், பள்ளிப் பாடத்திட்டத்தில் முன்னுரிமை கொடுக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாக இல்லை என்பதை விட தமிழை கற்காத ஒருவர் தமிழகத்தில் அரசுப்பணியில் இருக்க முடியும் என்ற நிலைதான் உள்ளது. இதனால் தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்கள் இரண்டாம் தர மக்களாக கருத்தப்படும் நிலையுள்ளது. 

ஒரு மொழி பின்னுக்கு தள்ளும் போது அதில் உள்ள வளம், விஞ்ஞானம் தானாக மறைந்து விடும். உலகத்திலே முதன் முதலாக காவிரி ஆற்றில் கல்லனை என்ற தடுப்பு அணை கட்டியது தமிழகத்திலே. இதை ஆய்வு செய்த ஆதர்குட்டன் என்ற ஆங்கிலப்பொறியாளர் சுண்ணாம்பு, காசிக்கட்டி, கருப்பட்டி, கடல்பாசிகள் போட்டு ஆட்டி சாந்துப்பூசியுள்ளார்கள். இதை கட்டி சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலிருக்கும் என தனது ஆய்வறிக்கையில் கொடுத்தார். இந்த ஆய்வறிக்கையின் அடிப்படியயிலே பிரிட்டீசார் ஆண்ட பகுதிகளில் அணைகள் கட்டப்பட்டது. இந்த தொழில் நுட்பத்தில் கட்டப்பட்ட அணைகள் ஆயுள் இன்னும் திடமாக உள்ளது என்பதை முல்லைப்பெரியாறு ஆய்வறிக்கை அறுதியிட்டுள்ளது. ஆனால் முல்லை பெரியாறு ஆய்வரிக்கையை நிராகரித்து பேசும் பொதுவுடமை கட்சியின சுண்ணாம்பு சுதை என கேலி கிண்டல் செய்ததை நினைத்துப்பார்க்க வேண்டும் என தமிழ் தேசியவாதிகள் சொல்லுவதை நாம் கேட்டாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இப்படி மொழி என்பது விஞ்ஞானத்தை, அறிவை கலையை கட்டிக்காத்தது என்பதை உள்வாங்கிட மறுப்பதே பாசிசமாகும். 

அதே போல் பண்டுவம் என்ற சித்தமருத்துவம் அதன் நுணுக்கத்தை எள்ளி நகையாடியே அன்னியப்படுத்தி விட்டோம். இது போன்று பல நூறு ஆயிரம் எடுத்துக்காட்டுக்களை அடுக்கலாம்.

இப்படி மொழியின் திடத்தை தேவையை இந்திய தேசிய, திராவிடத் தலைவர்கள் நிராகரிப்பதால் அவர்களின் குலம் இனம் மொழி குறித்த குற்றச்சாட்டுகள் எழுகிறது என்பதை பார்ப்ப மறுப்பதே பாசிசமாகும்.

மொழி இனத்தை வைத்து அரசியல் செய்வது தமிழ்நாடு மட்டுமா?

இந்திய சுதந்திரத்திற்கான முழக்கம் மொழி, இன அடிப்படையில் மகாராசுட்ராவில் துவங்கியது என்பது வரலாறு. அங்கு மொழி இன, குல வாததத்தை முன் வைத்தே அங்கு பல்நெடுங்காலமாக ஆட்சி நடக்கிறது. இதே போல் கருநாடகாவில் கடந்த 20 ஆண்டுகளாக மொழி தேசியத்தைக் கட்டமைத்தார்கள். இதை எதிர்க்க இயலாத இந்திய தேசிய கட்சிகளே அவர்கள் பின்னால் சென்று விட்டது அனைவரும் அறிந்த செய்தியே. இதன் வெளிப்பாடாகவே முல்லை பெரியாறு, காவிரியில் தண்ணீர் தரமறுக்கும் கோரிக்கைக்கும் இந்திய தேசியத்தை ஆதிரிக்கும் கட்சிகளே முன்மொழிவதை எப்படிப் பார்ப்பது. ''புழுத்த இந்திய தேசியம்'' பேசுபவர்கள் என்ற தமிழ் தேசியவாதிகளின் வாதத்தை புறம் தள்ளமுடியாத சூழல் உருவாக்கியுள்ளதை மறுக்க முடியவில்லை.

கேரள மாநிலத்தில் பொதுவுடமைக் கட்சியின் கூட்டணி ஆட்சியே பல்நெடுங்காலம் இருந்தது. இடுக்கி, திருவனந்தபுரம், மலப்புரம், காசர்கோடு, கொல்லம் மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் தமிழர்களை மொழி சிறுபான்மையார் என்ற அடிப்படையில் உருவான தமிழ் பள்ளிகளை மூடி வருகிறது. மலையாளம் படித்தால் மட்டுமே முன்னுரிமை எனச் சட்டம் இயற்றி தனது மொழி பிடிப்பை காட்டி விட்டது. இது போன்றவற்றை கவனிக்க மறுத்து விட்டு தமிழ் மொழியை தூக்கிப்பிடிப்பவர்கள் மீது பாசிசப்பார்வையை வீசுவதை, முனியாண்டி விலாஸ் கடை இருக்க புதிய முனியாண்டி விலாஸ் வைப்பவர்கள் ''ஒரிசினல் முனியாண்டி விலாஸ்'' என் பெயர் வைப்பது போல் உள்ளது என்ற விமர்சனப்பார்வையும் உள்ளதை புறம் தள்ள இயலாது. 

மொழியால் உருவான நாடு

வங்கதேசம் எப்படி உருவானது என்ற வரலாற்றை திருப்பிப் பாருங்கள். பாகிசுதான் தனது மொழியை வங்கதேசத்தின் மீது திணித்தது. இதை எதிர்த்தவகளை ஒடுக்கி அழித்தொழித்தது. இந்தக்கோரிக்கை ஐக்கிய நாடுகள் சபைக்கு போனது வங்கமொழி காக்கப்பட்டு, வங்காளம் என்ற நாடு உருவானது. வங்க மொழியை எதிர்த்த தலைவர்களை வங்கத்தில் உருவான அரசு தூக்கிலிட்டது. இந்த வரலாற்றை மூடி மறைத்து தமிழ் மொழிக்காக போராடுபவர்களை பாசிஸ்டுகள் எனச்சொன்னால் உங்களை ''பொதுவுடமை பாசிசவாதிகள், திராவிட பாசிசவாதிகள்'' என அவர்கள் திரும்பச் சொல்ல எவ்வளவு நேரமாகும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. வங்கம்போலவே திபெத்தும் அங்கு மத ஆட்சிக்கு எதிராக சீன பொதுவுடமை கட்சி நடவடிக்கை எடுத்தது போர் தொடுத்தது என்பது பொதுவான வரலாறு. திபெத்தியர்களின் பவுத்த கோட்டாட்டை விட எங்களது மொழியை சீனம் அழிக்கிறது என்ற கூப்பாட்டை யாரும் செவி சாய்க்கவில்லை என்பதை கவனப்படுத்த வேண்டும்.   

ஆக மொழி என்பது பேசுபொருள் மட்டுமல்ல அதில் ஒரு இனத்தின் வரலாறு. அந்த வரலாற்றை தூக்கிப்பிடிக்க அந்தந்த மொழிக்காரனுக்கு உரிமையுள்ளது. இதை மறுப்பவர்கள் அனைவரும் பாசிசவாதிகளே என்று சொல்ல தூண்டுகிறது என்ற வாதத்தை புறம் தள்ள முடியவில்லை.

சரி இதற்கும் மதுரை நாடளுமன்ற வேட்பாளரான திரு.சு.வெங்கடேசனுக்கும் என்ன தொடர்பு. இவர் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர் பொதுவுடமை கட்சியின் முழுநேரப்பணியாளர். மொழியை மய்யமாக வைத்து ஆட்சி அதிகாரத்திற்கு வந்த திராவிட கட்சிகளின் ஆட்சி ஐம்பதாண்டு காலத்தில் பள்ளிகளில் தமிழ் தவிர்த்து பிறமொழியே ஆட்சி மொழியாகவும் பயிற்று மொழியாக்கப்பட்டுள்ளது. பொதுவுடமிய கட்சியினர் ஆளும் மாநிலமான கேரளத்தில் மொழி சிறுபான்மையிருக்கான உரிய பிரதிநிதித்துவங்களை செய்திடவில்லை. மொழிவாரி சிறுபான்மையினருக்கான அரசு நடத்தப்படும் கூட்டங்கள் கமுக்கமாக நடந்து வருகிறது. அதில் விவாதித்து நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் புறம் தள்ளப்படுகிறது.

 

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...