Search This Blog

Monday 19 April 2021

வே. ஆனைமுத்து கருத்துக்கள்

 

 

Chandra Mohan 

_ஆனைமுத்து_நினைவுகள்_சொல்லப்படாத_சில_செய்திகள்

 

 

*பொதுவாக பலராலும் சொல்லப்படும் அஞ்சலி குறிப்புகள்:*

 

1) ஆனைமுத்து பெரியார் சிந்தனை தொகுப்புகளின் பதிப்பாசிரியர். அவரது பல்வேறு பேச்சு & எழுத்துகளின் பதிப்பாளர்,

2) பிற்படுத்தப்பட்டவர் இடஒதுக்கீடு போராளி.

 

மத்தியில் மண்டல் கமிஷன் வாயிலாக 27% பிற்படுத்தப்பட்டவர் இட ஒதுக்கீடு கிடைப்பதற்காகவும், தமிழகத்தில் பிற்பட்ட வகுப்பினர் இட ஒதுக்கீட்டு அளவு மட்டும் 50% வரை உயர பணியாற்றியவர். இவை மிகச்சரியான கருத்துக்களே! காவிப் பாசிச அச்சுறுத்தலுக்கு எதிரான கேடயமாக நமது கைகளில் பெரியார் சிந்தனைகள் தொகுப்பு நூல்களாக இருப்பதற்கு ஆனைமுத்து தான் காரணம். பிற்பட்ட வகுப்பினர் OBC மத்திய வேலை வாய்ப்பு & கல்வியில் குறைந்தபட்ச பங்கு 27% பெறுவதற்கும், தமிழ்நாட்டில் 50% இன்று நிலவுவதற்கும் காத்திரமான பணியை செய்தவர், அய்யா ஆனைமுத்து அவர்கள். இந்தியாவில் பிற்படுத்தப்பட்டவர் உரிமை போராட்ட வரலாறு அவர் பற்றி இல்லாமல் எழுதவே முடியாது.

 

*சொல்லப்படாத சில முக்கிய செய்திகள்:-*

 

1) வன்னியர் விவசாய நிலங்கள் அபகரிப்பு பற்றிய ஆவணம்: 19 ம் நூற்றாண்டின் தமிழகத்தில் வெளியான வேறுசில முக்கியமான ஆவணங்களையும் தோழர். ஆனைமுத்து தொகுத்தார்.

 

19 ம் நூற்றாண்டில், பிரிட்டிஷ் ஆட்சியில், பார்ப்பன- வேளாளர் நிலப்பிரபு்களால் விவசாய நிலங்களை இழந்த பல்லாயிரக்கணக்கான வன்னியர் விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர் அத்திப்பாக்கம் வேங்கடாசல நாயகர் ஆவார். பிரிட்டிஷ் ஆட்சியரிடம் அவரது முறையீடுகள் கடிதங்களாக இருந்தன. விஜயநகர ஆட்சி காலம் மற்றும் நவாப் ஆட்சி காலம் வரை தொண்டை மண்டலத்தில் / காலனிய ஆட்சியின் செங்கல்பட்டு ஜில்லாவில் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட அக்ரஹாரம், வேளாளர்களுக்கு வழங்கப்பட்ட நத்தம் போல, வன்னியர்களுக்கு மன்னர்வீடு ஊர்கள் என முத்திரை பொறிக்கப்பட்ட கற்கள் வைத்து பிரித்து அடையாளப் படுத்தி உள்ளனர். வன்னியர் விவசாயிகள் சாகுபடி செய்த நிலங்களுக்கு அவர்களிடமிருந்தே நேரடியாக வரியும் வசூலிக்கப்பட்டு வந்துள்ளது.

 

பிரிட்டிஷ் ஆட்சியில் ரயத்துவாரி முறை கொண்டு வரப்பட்ட போது, ஏற்கெனவே அக்ரஹாரம், நத்தம் பகுதியில் நிலவுடமையாளர்களாக, மிராசுதார்களாக இருந்த பார்ப்பனர், வேளாளர்கள், பாசன வசதிமிக்க நிலங்களில் ரயத்துகளாக (நேரடியாக விவசாயம் செய்தவர்களாக) இருந்த வன்னியர் விவசாயிகளுக்கு நில உரிமை சென்று விடாமல் இருக்க, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள்/ பிரதிநிதிகளை தங்கள் கைக்குள் போட்டுக் கொண்ட பார்ப்பன அதிகாரிகள் வழியாக சதிகள் பலவும் செய்து அபகரித்து கொள்கின்றனர். இவற்றை பற்றி, கிராமங்கள், தாலுக்காக்கள் வாரியாக புள்ளிவிவர ரீதியாக வேங்கடாசல நாயகர் முறையீடுகள் செய்கிறார். பார்ப்பனர்கள், தொண்டை மண்டல வேளாளர்கள், ரெட்டி & கம்மாக்கள் என அபகரித்தவர்கள் எவரெவர் எனவும் பட்டியல் தருகிறார்.

 

*பார்ப்பாரும், வேளாளரும் வன்னியரிடம் இருந்து அபகரித்த மன்னவேடு ஊர்கள்* என்பதாக பிரச்சினையை முன்வைக்கிறார். தாங்கள் விவசாயம் செய்த தங்களுக்கு பாரம்பரியமாகச் சொந்தமான நிலங்களின் மீதான உரிமை இழந்து, மிராசுதார்களுக்கு படியாட்களாக/ கொத்தடிமைகளாக மற்றும் பாயாக்காரர்களாக/ ஏஜெண்டுகளாக மாறிவிடும் அவலத்தையும் விவரிக்கிறார்.

இவை பற்றிய அறிக்கைகள் 1880 களுக்கு பிந்தைய காலத்தில் தமிழ் / ஆங்கிலத்தில் ஆவணங்கள் ஆகியுள்ளன. பெரியார், இந்த கடிதங்கள் பற்றி குடி அரசில் எழுதுகிறார். ஆனைமுத்து அய்யா அவர்கள் இதை 80 களில் சிறுசிறு பிரசுரங்களாகவும், 1992 ல் தொகுப்பான ஆவணமாகவும் முன் வைக்கிறார்.

 

"மன்னவேடு ஊர்கள்" வன்னியர் விவசாயிகளின் ஒரு மிக முக்கியமான வாழ்வாதாரப் பிரச்சினை ஆகும். இது சரியான முறையில், இயக்கமாக்கப் பட்டிருந்தால் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு விவசாயிகள் கிளர்ச்சி/ எழுச்சியாக மாறியிருக்கும். பறையர் சமூகம் இழந்த பஞ்சமி நிலப் பிரச்சினைக்கு கொடுக்கப்பட்ட கவனம் கூட இதற்கு தரப்படவில்லை. மன்னவேடு நிலங்கள் பிரச்சினை ஆவணப்படுத்தப் பட்டது. ஆனால், எவராலும் இயக்கமாக கட்டமைக்கப் படவில்லை.

 

பார்ப்பனர் எதிர்ப்பில் பெரியாரோடு குரல் எழுப்பிய திமுக இப்பிரச்சினை பற்றி ஒருபோதும் பேசவில்லை; பேசாது. ஏனெனில், அதுதான் தொண்டை மண்டல வேளாளரின் நலனுக்கானக் கட்சியாகும். 80 களில், வலுவான அரசியல் சக்தியாக எழுந்த பா.ம.கவும் கூட இப் பிரச்சினை குறித்து எதுவும் செய்யவில்லை. பிற்பட்ட வகுப்பினர் இட ஒதுக்கீடு அரசியல் தேசிய, மாநில அரசியலில் தீவிரமாக உருவெடுத்த காலத்தில் பா.ம.க தன்னை தனி இடஒதுக்கீடு கோரிக்கைக்குள் உட்படுத்தியதே தவிர, வன்னியர் இழந்து விட்ட மன்னவேடு நிலங்கள் பற்றி எதுவும் பேசவில்லை.

 

*பிற்பட்டவர்கள் இட ஒதுக்கீட்டுக்கு வித்திட்டது யார்?*

 

BC இட ஒதுக்கீடு விஷயத்தில், அனைவரும் ஆனைமுத்து அய்யாவின் பங்கை உயர்த்திப் பிடித்த அனைத்து தருணங்களிலும், அவரோ அம்பேத்கரை தான் முன்னிறுத்தி உள்ளார். பின் வருமாறு திரும்பத்திரும்ப சொன்னார் :இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதலாம் வரைவில், [தற்போதைய விதி 16(4) விதி] "எந்தவொரு வகுப்பு / சாதி குடிமக்களுக்கும் இட ஒதுக்கீடு செய்யலாம் " என்று தான் பார்ப்பன உறுப்பினர்கள் எழுதி வைத்தனர். அம்பேத்கர் தான், தனது இறுதி வரைவில், "பிற்படுத்தப்பட்ட வகுப்பு குடிமக்களுக்கும் மற்றும் பட்டியல் சாதி & பட்டியல் பழங்குடி மக்களுக்கும்" என்ற சொற்றொடரை உருவாக்கியதோடு, விவாதத்திலும் தெளிவுபடுத்தி அதை நிலைநிறுத்தினார். இந்தவகையில் பார்ப்பனர் சதியை முறியடித்தவர் அம்பேத்காரே! அதைத் தொடர்ந்து, பிற்பட்ட சமூக நிலைகளை ஆய்வு செய்ய 1953ல் காகா கலேல்கர் ஆணையம் அமைக்கவும் போராடியவர் அம்பேத்கர் தான்-- என ஆனைமுத்து அய்யா பல இடங்களிலும் தெளிவுபடுத்தியுள்ளார். "அதற்குப் பிறகு, பிற்பட்டவர் ஒதுக்கீட்டை அமலாக்க, விகிதாச்சார இடப் பங்கீடு பெற நாம் இயக்கம் தொடர்ந்து கொண்டு இருக்கிறோம். "எனத் தன்னடக்கத்தோடு பதிவு செய்தவர் ஆனைமுத்து அவர்கள்.

 

*தனிநாடு ஏற்படையது அல்ல!*

 

திராவிட இயக்கத்தின் சில பிரிவுகள், தமிழ் தேசிய அமைப்புகள், சில மார்லெ குழுக்கள் தனித் தமிழ்நாடு என்ற அரசியல் வழியில் செயல்பட்ட போதும், ஆனைமுத்து அவர்கள் ஒருபோதும் ஏற்றுக் கொண்டாரில்லை. இந்திய அரசியலமைப்பின் எல்லைக்குள், தன்னுரிமை கொண்ட மாநிலங்களின் கூட்டாட்சி என்பதே அவர் நிலைப்பாடு ஆகும். அனைத்து மொழிகளும் ஆட்சி மொழிகள் ஆக்கப்படுவது (மாநில மொழி அந்தந்த மாநிலத்திற்குள் உள்ள நடுவண் அரசு அலுவலகங்களிலும் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்.) இந்தியாவை கூட்டாட்சியாக மறுகட்டமைப்பு செய்வதற்கு முதல் அடியெடுப்பு எனக் கருதினார். இரட்டை குடியுரிமை கொண்ட தன்னாட்சி மாநிலம், தனி அரசமைப்புச் சட்டம் என்பதாக, கூட்டமைப்பை மறுகட்டமைப்பு செய்வது அவரது கொள்கையாக இருந்தது.

 

(மார்க்சிய பெரியாரிய பொதுவுடமை கட்சி - சேலம் 2021 ஏப்ரல் 17 மாலையில் ஏற்பாடு செய்திருந்த அய்யா ஆனைமுத்து நினைவு நிகழ்ச்சியில் பேசிய சில கருத்துக்களை இங்கு பதிவு செய்கிறேன்.)

 

 

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...